November 24, 2017

ஷங்கர் vs ஷர்மாஸ்- வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தமிழக வீரர் - யார் இந்த விஜய் ஷங்கர்?

இன்றைய நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தெரிவு தமிழக சகலதுறை வீரர் விஜய் ஷங்கரா? இல்லை இரு ஷர்மாக்களில் ஒருவரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருந்த நேரம் இந்தியா மூன்று மாற்றங்களை செய்தும் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைக்கவில்லை.

புவனேஷ் குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா - ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகம் என்பதால் நேரடித் தெரிவாக இருந்தார்.

இந்தியா மேலதிகத் துடுப்பாட்ட வீரரை விரும்பி, ஒருநாள் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள, டெஸ்டில் தனக்கான நிரந்தர இடம் தேடும் ரோஹித் ஷர்மாவையும் உள்ளீர்த்துக்கொண்டது. 
லேசான தசைப்பிடிப்பினால் அவதியுற்ற மொஹமட் ஷமியின் இடத்தை ரோஹித் ஷர்மா தனதாக்கிக்கொண்டார்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் என்று கருதப்பட்ட ஆடுகளத்தில் இந்தியா வெறுமனே இரண்டு வேகப்பந்துவீச்சாளரோடு களமிறங்குவதா என்று எல்லோரும் சிந்தித்துக்கொண்டிருக்க, அதிலும் இவ்விருவருமே இப்போதைய நிலையில் இந்தியாவின் முதற் தெரிவுகள் இல்லை, ஆனால் நாணய சுழற்சியில் வென்றும் இலங்கை அணி எந்தவொரு ஆதிக்கத்தையும் செலுத்தாமல் 205 ஓட்டங்களுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.


மீள்வருகை தந்துள்ள இஷாந்துக்கு 3 விக்கெட்டுக்கள். மிகச் சிறப்பாகப் பந்துவீசி தேர்வாளர்கள் தமது தெரிவில் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளார்.

சுழல் இரட்டையர்கள் அஷ்வினும் ஜடேஜாவும் சேர்த்து 7 விக்கெட்டுக்கள்.
அஷ்வின் இப்போது 296 விக்கெட்டுக்கள். இன்னும் 4 விக்கெட்டுக்களை அவர் எப்போது எடுப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளார்கள், உலகில் மிகக் குறைவான போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுக்களைப் பெற்ற சாதனையை நிகழ்த்துவதற்கு.

எனினும் நீண்ட கால நோக்கில் இன்னொரு மிதவேக சகலதுறை வீரரை அடையாளப்படுத்த இப்படியொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் உள்ளூர்ப் போட்டிகள், இந்திய A அணியில் சகலதுறையாளராக சிறப்பாக மிளிர்ந்து நல்ல form யிலுள்ள ஷங்கரை இன்று இந்தியா அறிமுகப்படுத்தவேண்டும் என்று அனைவரும் எண்ணியிருந்தது இன்று நிறைவேறவில்லை.

நேற்றைய எனது பதிவில் இவரைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்திருந்தேன்..
இவ்வாறு விஜய் ஷங்கர் இன்று அறிமுகமாகியிருந்தால் 61 ஆண்டுகளில் முதல் தடவையாக இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாடும் அபூர்வ சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.
(அஷ்வின், முரளி விஜய் & விஜய் ஷங்கர்)

இறுதியாக 1956இல் - தமிழக வீரர்கள் மூவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியிருந்தனர்.
Brabourne Stadium v England Nov 1961 
AG Kripal Singh, AG Milka Singh and VV Kumar.

சிங் சகோதரர்களில் ஒருவரான மில்கா சிங் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் காலமானார்.

யார் இந்த விஜய் ஷங்கர்?
இவரது பெறுபேறுகளும் சகலதுறைத் திறமைகளும் என்ன?


 
தமிழ்நாட்டை சேர்ந்த​ 26 வயது நிரம்பிய​ விஜய் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி உள்ளார். 

கடந்த IPL இல் டேவிட் வோர்னரோடு  போட்டியில் சத இணைப்பாட்டம் புரிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.


ஆனால், உள்ளூர் போட்டிகள், ஜூனியர் இந்திய அணி ​, இந்திய A அணி​
என படிப்படியாக தான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.2016-2017 பருவகாலத்தில் தமிழ்நாட்டு அணிக்கு விஜய் ஹசாரே கிண்ணப் போட்டிகளில் தலைமை தாங்கி கிண்ணம் வென்று கொடுத்திருந்தார்.


இதன் மூலம் தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையையும் காட்டி நிற்கும் ஷங்கர், அண்மையில் நியூ சீலாந்து A அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியிருந்தார்.

இறுதி ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 61.


தென் ஆபிரிக்காவில் நடந்த முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு இவரது 72 ஓட்டங்கள் மூலமாகக் கிடைத்தது.


காணொளிகள் சிலவற்றில் பார்த்தவரை மிக ஆற்றல் கொண்ட ஒரு சிறப்பான வீரராகத் தெரிகிறார்.இணையத்தில் தேடியெடுத்த இவரது பெறுபேறுகள்..​
1671 runs (ave 49.14, 5 centuries) and 27 wickets (medium pace) from 32 first class matches

Since 2012-13, Vijay is one of six cricketers who has scored over 1500 runs and taken more than 25 wickets. His first-class batting average is an impressive 49.14 after 32 matches, while his bowling average is 42.81.

​இம்முறை ரஞ்சி கிண்ணத் தொடரிலும் இதுவரை 3 போட்டிகளில் ஒரு சதம் ​பெற்றுள்ளதோடு ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

​வாழ்த்துக்களோடு இந்த தமிழ் வீரரை வரவேற்போம்..
'ஆளப்போறான் தமிழன் கிரிக்கெட் ​உலகை'


​விரைவில் இவருக்கான சரியான வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்.
நம் அணிக்கு இப்படியானதொரு முறையான வீரர் கிடைக்கவில்லையே என்று ஏங்கவேண்டியும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சகலதுறை வீரராக உருவாகி வந்த அஞ்செலோ மத்தியூஸ் இப்போது உபாதையினால் பந்து வீசுவதில்லை.
தசுன் ஷானக கொல்கத்தாவில் சிறப்பாக பந்துவீசினாலும் இன்னும் துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகிறார்.
திஸர பெரேரா டெஸ்ட் பக்கத்தை மறந்து வருடங்களாகின்றன.
ஹ்ம்ம்ம்...

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பது பற்றி இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டோமென்றிருக்கிறது நாக்பூர் நிலைமை.


இன்றைய நாளில் இரண்டு ஆறுதல்கள்..

டிமுத் கருணாரத்ன இந்த வருடத்தில் 1000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரரானார்.
முதலாமவர் தென் ஆபிரிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர்.


இலங்கையின் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தனது 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார். 
தன்னுடைய அரைச்சதத்துடன் 3000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 13வது இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆகியுள்ளார்.
No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner