நாக்பூர் டெஸ்ட் போட்டி - இந்தியாவின் ஆதிக்கத்துக்கு இடையில் இலங்கைக்கு வாய்ப்புக்கள் ??

ARV Loshan
0
ஐந்து வரிகளில் ஒரு செய்தியைத் தரும் புது முயற்சியில் இறங்கியுள்ள 'ஐவரி' தளத்துக்காக வழங்கிய தொலைபேசி மூலமான பேட்டியின் கட்டுரை வடிவமான

ஏ.ஆர்.வி.லோஷன்/ இந்திய எதிர் டெஸ்ட்: இலங்கைக்கு இருக்கும் சாதகங்கள்

இன் மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட்ட  விரிவான அலசல் இது.

(இயல்பிலேயே கொஞ்சம் சோம்பலுள்ள, நேரமும் இறுகிப்போகிற என் போன்றவர்களுக்கு இப்படியான வசதிகளை ஏனையோரும் தருவது பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது? ;) நான் பேசிக்கொண்டே இருக்க தட்டச்சி ஏற்றித் தருபவர்களுக்கு சன்மானங்கள் பற்றி பேசித் தீர்மானிக்கலாம் )


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 பருவகால டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்திய சில தொடர்களை பொறுத்த வரையில் இலங்கையின் ஆதிக்கம் போட்டியின் முதல் இன்னிங்ஸில்; எப்போதும் மேலோங்கியதாக இருக்கும். 

2009 இல் முதலாம் இன்னிங்சில் 32/4 என்றிருந்தது இறுதி இரண்டு நாட்கள் வரையிருந்த இலங்கையின் ஆதிக்கம் வீணாய்ப்போன கதை பற்றி கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்.
அதேபோல் 2005 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி இந்தியாவை 167 ஓட்டங்களுக்கு உருட்டியிருந்தது, எனினும் இடைவிடாத மழை..
இலங்கை 168/4 என்றிருந்த பலமான நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சும் முதலாம் இன்னிங்ஸ்களில் மிகச் சிறந்ததாக இருந்து வந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுப்பதும், பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதுமாக இருக்கும்.

ஆனால் இந்த நிலைமை தற்போது வேறுவிதமாக மாற்றம் அடைந்துள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது பாரிய உத்வேகத்துடன் விளையாட ஆரம்பிக்கும்.

அது படிப்படியாக குறைவடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்காலம்.

இதற்கு பிரதான காரணம் இலங்கை அணி வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஒன்றின் முதல் 3 நாட்கள் வெளிப்படுத்தும் திறமையின் அளவிற்கு இறுதி இருநாட்களில் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகும். 

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் பின்னர் இந்தியாவின் மனநிலையில் ஒரு தனி உற்சாகம் கிட்டியிருப்பது என்னவோ உண்மை. 
நாளைய நாக்பூர் போட்டியிலும் அதே உத்வேகத்தோடு இறங்கப் போகிறார்கள். குறிப்பாக கடைசி நேர இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றமும், இலங்கை அணியால் எடுக்க முடியாமல் போன கோலி + இந்திய வீரர்களின் விக்கெட்டுக்கள் கோலி போன்ற form இலுள்ள ஆக்ரோஷமான வீரர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்க மனப்பாங்கைக் கொடுத்திருக்கும்.

எனினும் சுரங்க லக்மால் எடுத்துள்ள விஸ்வரூபம் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்தும் ஐயத்தையும் தடுமாற்றத்தையும் தரும் என்பது உறுதி.

இரண்டாம் இன்னிங்ஸின் நம்பிக்கை வீரர்கள்

குறிப்பாக தற்போதைய வீரர்களில் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய முன்று வீரர்கள் மாத்திரமே இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

மற்றைய வீரர்களிடம் ஆற்றல் குறைவு அல்லது அனுபவக்குறைவு போன்ற காரணங்களால், அவர்களின் போராட்டத்திறன் குறைவாக உள்ளது.

இந்த காரணத்தினால் இலங்கை அணியினால் இறுதிவரையில் போரடமுடியாதுள்ளது.

முன்னர் அர்ஜூன ரணதுங்க, மஹேலஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற வீரர்கள் அணியி ல் இருந்த போதும் இவர்கள் தலைவர்களாக இருந்தபோதும் இதுபோன்ற நிலை இருந்ததில்லை.

அந்த காலத்தில் அணியில் ஒருவர் 'நின்றுபிடித்து' தமது அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தும் வகையில் செயற்படுவார்.அல்லது காப்பாற்றவாவது போராடுவார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறான ஒரு வீரர் இலங்கை அணியில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.


வேகப்பந்தும் - சுழற்பந்தும்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நம்பிக்கை அளிக்க கூடிய விடயமாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சளைக்காது பந்து வீசியமையைக்  கூறலாம்.

இந்திய அணியினருக்கு எதிரான அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்களையும் இதன் போது அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய  சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இருப்பினும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான நம்பிக்கை நிறைவடைந்த போட்டியில் கிடைக்காமை, அடுத்த போட்டியில் இலங்கை அணிக்கு அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக மற்றைய அணிகளுக்கு எதிராக தனது ஆதிக்க வல்லமையைக் காட்டும் ரங்கன ஹேரத் இந்திய அணியுடன் அண்மைக்காலமாக சறுக்கி வருவது இலங்கையைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விடயமில்லை.
கொல்கத்தாவிலும் ஹேரத்துக்கு முதலாம் இன்னிங்சில் போதிய ஓவர்கள் கிடைக்காமை மற்றும் இரண்டாம் இன்னிங்சில் விக்கெட்டுக்கள் கிடைக்காமை அவரது மனதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ, இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு மனத்திடத்தை வழங்கியிருக்கும்.

எனினும் இந்தியா, தென்னாபிரிக்காவின் தொடரை கருத்திற்கொண்டு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்குகிறது.

இது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒப்பீட்டளவில் சற்று சாதகமாக அமையும்.

காரணம், கடந்த இந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது இலங்கை அணி சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன இலங்கை அணிக்கு, இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள வருத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் பவுன்ஸர் பந்துகள் வீசப்படுவது சற்று குறைவு.

இது இலங்கைக்கு சற்று சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வேகம் இலங்கை அணியினரை விட சற்று அதிகமாகவே இருந்தது. அத்தோடு இரண்டாம் இன்னிங்சில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் காட்டிய துல்லியம் அற்புதம்.இலங்கை அணி இந்த வேளையில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நுவான் பிரதீப்பை நிச்சயம் எண்ணிக் கவலைப்படும். லஹிரு கமகே சிலவேளைகளில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும் இன்னும் துல்லியம் எதிர்பார்க்கப்படுகிறது. இடது காய் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ பற்றியும் தேர்வாளர்கள் யோசிக்க இடமுள்ளது.

நாளைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ் குமார் இல்லாமையும் இலங்கை அணிக்கு கிடைக்கும் மற்றுமொரு சாதக வாய்ப்பாகும்.
இந்தியா தென் ஆபிரிக்கத் தொடருக்கு தயாராவது பற்றி பகிரங்கமாகவே அறிவித்துள்ள நிலையில் புவனேஷ்குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இணைத்துக்கொள்ளப் போகிறதா? இல்லை புதிதாக குழாமில் இணைக்கப்பட்டுள்ள தமிழக சகலதுறை வீரரான விஜய் ஷங்கரை அறிமுகப்படுத்துமா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.

ஹர்டிக் பாண்டியாவின் வெற்றிகரப் பிரவேசம் இந்தியாவுக்கு மீண்டும் மிதவேக, வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்களின் மீது பார்வையை செலுத்த வைத்துள்ளது. ஷங்கரும் தமிழக ரஞ்சி அணிக்கும், இந்திய A அணிக்கும் தான் விளையாடிய போதெல்லாம் சகலதுறை வீரராக அற்புதமாக ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாண்டியாவுக்கும் போட்டிக்கு ஒருவர் தேவைப்படுவதை இந்தியா உணர்ந்துள்ளது.
விராட் கோலியும் விஜய் ஷங்கரை சிலாகித்திருப்பதோடு பாண்டியா போன்ற இன்னொருவரை கூடவே வைத்துக்கொள்வதும் அவசியப்படுகிறது.

இப்போதிருக்கும் நிலையில் இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பை வழங்குவதை விட புதியவர் ஷங்கரை முயற்சிப்பது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.
அத்துடன் விக்கெட்டின்றிப் போன அஷ்வின் பற்றியும் தேர்வாளர்கள் சந்திக்கக்கூடும்.

மத்தியூஸ் மற்றும் திரிமான்னே ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இலங்கைக்கு தற்போது வாய்ப்பாக உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர், ஏனையோரின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி அடைய முடியவில்லை. எதிர்பார்க்க்கப்பட்ட திமுத், சதீர, சந்திமால் ஆகியோரின் சொதப்பல்கள் நாக்பூரில் தீர்க்கப்படுமா என்பதே கேள்வி.

ஆனால் நம்பி இருக்கக்கூடிய ஒருவராக மாறிவரும் நிரோஷன் டிக்வெல்ல பற்றித் தான் இப்போது பேச்சு.

அடுத்த அணித் தலைவர் உருவாகிறாரா?

நிரோஷன் திக்வெல்லவின் வடிவில் குமார் சங்கக்காரவை ஒத்த ஆக்ரோசமான விக்கட் காப்பாளர் ஒருவரை பார்க்க முடிகிறது. சங்காவின் அதே கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் ஆச்சரிய ஒற்றுமை தான்.

அதேநேரம் அவர் மிகவும் அவதானிப்பு மிக்கவராகவும், போட்டி விதிமுறைகள், ஆட்டமிழப்புகள் குறித்த மேலதிக அறிவினை உடையவராகவும் இருக்கிறார். 


கோலி, மொஹமட் ஷமி  ஆகியோருடனான அவரது மோதல்கள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, சாதுரியமாகப் போட்டி நேரத்தை எதிரணியின் வீண் பேச்சுக்கள் மூலமாகவே வீணாக்கியது பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார் டிக்கா.

அணிக்காக மோதல் குணங்களும், துணிச்சலும் கூடவே மனத்திடமும் கொண்ட  இவரிடம் எதிர்கால அணித் தலைவருக்கான தகுதிகளைக் காணக்கூடியதாக உள்ளது. 

அவர் குறித்து அணித் தேர்வாளர்கள் உரிய அவதானத்தை செலுத்தினால், இலங்கை அணிக்கு எதிர்காலத் தலைவர் ஒருவரை இப்போதிருந்தே செதுக்க முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. 
ஒருநாள் அல்லது T20 போட்டிகளில் இருந்து இதனை ஆரம்பித்துப் பார்க்கலாம்.



இலங்கை அணியின் அணித்தேர்வு குழு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்த போட்டிக்கான அணித்தெரிவில் என்னென்ன வலுசேர்க்க முடியும் என்பதில் தெரிவுக் குழு அவதானம் செலுத்த வேண்டும்.

தனஞ்யச டி சில்வாவிற்கு அணியில் இடமளிக்கப்படுமா? லஹிரு கமகேவிற்கான வாய்ப்பு தொடருமா? அல்லது தசுன் சானக்கவை முழுநேர பந்துவீச்சாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக பயன்படுத்துவதா? அல்லது சகலதுறை வீரராக பயன்படுத்துவதா? போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டும்.



மத்தியூஸின் பந்து வீச்சும் இலங்கை அணிக்கு அவசியப்படுகிறது. 

அவர் பந்துவீசுவாராக இருந்தால், அணியின் பந்து வீச்சு பிரிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
அவர் பந்து வீசாமை இலங்கை அணியின் சமவலுவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.
இருந்தாலும், அவர் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதும், இலங்கை அணிக்கு தற்போதைக்கு வாய்ப்பாக இருக்கிறது. இலங்கையின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக அவரிடமிருந்து அதிகளவான ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் அவர் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்காமை இலங்கை அணிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். நாக்பூரில் இந்தக் குறையும் தீருமா இருந்தால் இலங்கை ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இன்னும் சில மைல் கற்களும் எதிர்பார்க்கப்படும் சாதனைகளும் பற்றி கடந்த பதிவை மீண்டும் வாசித்து அறிந்திடுங்கள்..

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?


ஆசியாவின் சகோதர மோதல் இது ஒருபுறமிருக்க, உலகமே ஆவலுடன் பார்த்திருக்கும் கிரிக்கெட்டின் மிகப் புராதனமான பரம வைரிகளின் முதலான ஆஷஸ் - Ashes பற்றி தமிழ் நியூஸில் நான் எழுதியுள்ள கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*