March 31, 2016

கறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை சிங்கங்கள் & கெயில் - கோலி மும்பாய் மோதல் - உலக T20

ரோய் அதிரடியாக நேற்றைய நாள்..
மும்பாயில் இன்று கோலி - கெயில் மோதலா..
கெயில் - அஷ்வின் மோதலா என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, 

ரோயின் அதிரடியினால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து என்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டனுக்கு எழுதியுள்ள கட்டுரையில் சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இந்த இடுகை.

---------------

ஆப்கானிஸ்தானுடன் தடுமாறி, ஒரே ஒரு ஓவரில் விளாசப்பட்ட ஓட்டங்களினால் மயிரிழையில் வென்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்றும், 

இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளையே வீழ்த்தியிருந்த நியூ சீலாந்து அணி இங்கிலாந்திடம் இப்படி தோற்றுப் போகும் என்றும் யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

இது தான் கிரிக்கெட்டினது, அதை விட T20 கிரிக்கெட்டின் ஆச்சரியமான விடயம்.

நேற்றைய இடுகையில் அளவுக்கதிகமாக போற்றிப் புகழ்ந்தே கேன் வில்லியம்சனின் மாயாஜால தலைமைத்துவத்தை அப்படியே இல்லாமல் செய்துவிட்டேனோ?
(நியூ சீலாந்துமற்றும் வில்லியம்சனின் ரசிகர்கள் பலர் எனக்கு வசவுகளை அனுப்பியிருந்தனர். மன்னிச்சூ)


தொட்டது எல்லாம் துலங்கி வந்த வில்லியம்சனின் பந்துவீச்சு மாற்ற மாயாஜாலங்களை எல்லாம் நேற்று ஜேசன் ரோய் வெளுத்து வாங்கி நியூ சீலாந்தின் உலக T20 கனவைத் தகர்த்து எறிந்திருந்தார்.

இது ஜேசன் ரோயின் கன்னி அரைச் சதம் என்பது பலருக்கும் ஆச்சரியம் தந்த ஒரு விடயமாக இருக்கும்.
இவரது strike rate உயர்வானது. ஆட்டமிழப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அடித்தாட ஆரம்பத்தில் அனுப்பப்படும் அதிரடி வீரர்.

25 வயதான ரோய்  பற்றி அவர் விளையாடும் சரே பிறந்தியத்துக்காக விளையாடும் இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் குமார் சங்கக்கார மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் சிலாகித்து சிபாரிசு செய்திருந்தனர்.
தொடர்ச்சியாகத் தனது ஆற்றலை வெளிப்படுத்திவந்த ரோய், நேற்று முக்கியமான போட்டியில் தன்னை நிரூபித்துக்கொண்டார்.

உலக T20 சுற்றின் முதற்சுற்றுத் தவிர்ந்து அடுத்த knockout சுற்றுக்களில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை இதுவே.
2009 உலக T20போட்டித் தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கையின் டில்ஷான் பெற்ற ஆட்டமிழக்காத 96 தான் அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கை.

2012 இறுதிப் போட்டியில் சாமுவேல்ஸும் இலங்கை அணிக்கு எதிராக 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

ஆனால் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவான ரோய் சொன்னதைப் போல இங்கிலாந்தின் கடைசி நேரப் பந்துவீச்சுக் கட்டுப்பாடு தான் போட்டியை இங்கிலாந்துப் பக்கம் திருப்பியது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்களை எடுத்திருந்த நியூ சீலாந்து, கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிலும் கடைசி 4 ஓவர்களில் வெறும் 20 ஓவர்களை மட்டுமே பெற முடிந்தது.

தனது முதல் இரு ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த இரு ஓவர்களில் 6 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
Death overs என்று சொல்லப்படும் கடைசி ஓவர்களில் ஸ்டோக்ஸ் இப்போது கலக்கி வருகிறார்.

அடுத்த Flintoff  என்று வர்ணிக்கப்பட்ட ஸ்டோக்ஸ், இங்கிலாந்துக்கு ஒரு மிகச்சிறந்த சகலதுறை வீரர் உருவாகியுள்ளார்.

ஏற்கெனவே நான் சொன்னது போல, இந்த இங்கிலாந்து அணியை இவ்வகை துரித கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று செதுக்கி செதுக்கி செய்துள்ளார்கள்.
அத்தனை பேரும் T20 சிறப்புத் தேர்ச்சி பெற்ற வீரர்கள்.


பெரிய அணிகளை அசத்திய நியூ சீலாந்தின் ஆரம்பம் கப்டில், வில்லியம்சன், மன்றோ ஆகியோரினால் வேகம் எடுத்தபோதும், இவர்கள் மூவரின் ஆட்டமிழப்புடன் இங்கிலாந்து அடக்கிவிட்டது.

இங்கிலாந்தில் ரோய், 44 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்த பிறகு ஒரு பக்கம் ரூட் நிதானமாக நின்றுகொண்டிருக்க, அதிரடியாய் வந்து பட்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தை கொல்கத்தாவில் இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஏனைய அணிகள் எல்லாவற்றினதும் பெரிய துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்த சன்ட்னர், சோதி இருவரும் 7.1 ஓவர்களில் நேற்று 70 ஓட்டங்களைக் கொடுத்தனர்.

நியூ சீலாந்தின் அரையிறுதி தோல்வி சாபம் மீண்டும்.
இது ICC தொடர்களில் நியூ சீலாந்தின் 9வது தோல்வி.
தென் ஆபிரிக்கா, பாகிஸ்தானும் இதேயளவு தோல்விகளைக் கண்டுள்ளன.

ஆனால், இந்த இளம் அணியை இன்னும் கட்டமைத்து எதிர்காலத்தில் ஒரு உறுதியான அணியாக உருவாக்கும் திடத்தை இந்த உலக T20 வழங்கி இருக்கிறது.

இப்போது எஞ்சியுள்ள 3 அணிகளுமே தங்களது இரண்டாவது உலக T20 கிண்ணத்தைக் குறிவைத்துள்ளன.

-----------------
இங்கிலாந்தை எதிர்வரும் 3ஆம் திகதி இறுதிப் போட்டியில் சந்திக்கும் அணி எது என்பதை தீர்மானிக்கும் பலப்பரீட்சை இன்றிரவு மும்பையில்.

நேற்றைய இடுகையில் இன்றைய போட்டி பற்றியும் விவரமாக அலசியுள்ளேன்.
அதையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


கெயிலை சமாளிக்கு வழிவகை பற்றி இந்தியா சிந்திக்கும் அதேவேளை, யுவ்ராஜுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயா, அஜியன்கே ரஹானேயா என்பது பற்றி தோனி முடிவு செய்தாலும் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் இன்னும் குழப்பமே.
தொடர்ந்து சறுக்கி வரும் இந்தியாவின் மூவர் (தவான்,ரோஹித் ஷர்மா, ரெய்னா) இன்றாவது formக்குத் திரும்புவார்களா என்பது பெரிய ஒரு கேள்வி.

வழமையாகவே அணியில் மாற்றங்களை விரும்பாத தோனி, யுவராஜின் உபாதை காரணமாக கட்டாயமாக மாற்றம் ஒன்றை செய்தே ஆகவேண்டிய நிலையில், form இல் இல்லாத மூவரில் யாரையும் மாற்ற விரும்பமாட்டார் என்பது உறுதி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அன்ட்ரே ப்ளட்ச்சரின் காயம் காரணமாக பேரிழப்பு.
இவருக்குப் பதிலாக குழுவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள லென்டில் சிமன்ஸ் இன்று அணியில் இனைக்கப்படுவார் என்று நம்பலாம்.
காரணம் ஏற்கெனவே IPL போட்டிகளில் மும்பாய் அணிக்காக ஆடிய அனுபவம் அவருக்குக் கை கொடுக்கும்.


கெயிலுக்கு ஒரு சாதனை மைல் கல்லுக்கு இன்னும் 2 சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன.
சர்வதேச T20 போட்டிகளில் இதுவரை 100 சிக்சர்களை யாரும் பெற்றதில்லை.

பிரெண்டன் மக்கலம் 91 சிக்சர்கள்.
அண்மையில் ஓய்வுபெற்ற ஷேன் வொட்சன் 83 சிக்சர்கள்.

இதுவரை இந்தத் தொடரில் மும்பாயில்  பெறப்பட்ட குறைவான ஓட்ட எண்ணிக்கையே 172 என்பதால் இன்றும் துடுப்புக்களின் போராக இருக்கும்.
எனவே பந்துவீச்சாளரின் அனுபவத் திறன் இரு பக்க அணித் தலைவர்களுக்கும் முக்கியமானது.

அஷ்வினை வைத்து கெயிலை IPL போட்டிகளில் மடக்குவது போல தோனி திட்டம் வைத்திருப்பதாக பலர் சொல்கிறார்கள்.
ஆனால் சர்வதேச T20 போட்டிகளில் இந்தியாவுடன் கெயிலின் சராசரி 50க்கு மேல்.


ஆனால் எல்லோரும் ஆடுகளம் பற்றி நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் டரன் சமியிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது 
"22 யார் நீளமும், 6 யார் அகலமும் கொண்ட ஆடுகளம் போதும். அதிலே துடுப்பாடலாம்"


இந்த மனிதர் சமியைப் பற்றி நான் அடிக்கடி சிலாகித்துள்ளேன். மனிதர் ஒரு கூலான ஆள்.
எதையும் ரொம்ப சிம்பிளாக எடுத்துக் கொள்வார்.
ஆனால் அணிக்காக விளையாடுவதில் அர்ப்பணிப்பு கொண்டவர்.
இறுதிவரை போராடும் இயல்புள்ள ஒரு தலைவர்.

கோலி பற்றி மேற்கிந்தியத்தீவுகள் பயப்படுகிறதா என்று கேட்டதற்கு இல்லை என்றவர், "கிறிஸ் கெயில் என்று ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா?" என்று பதில் கேள்வி கேட்டு இருந்தார். 

இது தான் கிரிக்கெட்டுக்கு தேவை.

சவால்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் சந்திக்கும் அணி சாதிக்கும்.
தமது இரண்டாவது உலக T20 கிண்ணத்துக்கு குறிவைக்கும் இரு அணிகளில் எந்த அணி தடைதாண்டி கொல்கத்தா போகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கோலி- கெயில் பற்றி எல்லோரும் பரபரப்பதை பார்த்தால், இன்று இவ்விருவரும் சொதப்ப, யாரோ இன்னொரு புதியவர் அல்லது எதிர்பாராத ஒருவர் புகுந்து விளையாடப் போகிறார் போலத் தெரிகிறதே..
(இது விக்கிரமாதித்தன் டிசைன் மக்கள்ஸ்)

இதேவேளை, இன்று மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்தால் அது நிறைய சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பும் என்பது இன்னொரு முக்கிய விடயம்.
IPL தொடர்புகள், இந்திய விளம்பர மற்றும் அனுசரணை விடயங்கள், அத்துடன் கடந்த வருட கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு எழுந்த முரண்பாடுகளும், இந்த வருட இறுதியில் இடம்பெறும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்று பல விடயங்கள் பற்றி சந்தேகங்கள் பின்னப்படும்.

ஊடங்கள், அதிலும் இந்திய ஊடகங்கள் சும்மாவா இருக்கும்?

--------------

நேற்று மகளிர் உலக T20 கிண்ணத்துக்கான அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி பெற்ற 5 ஓட்டங்களாலான விறுவிறுப்பான வெற்றி, அவர்களை 4வது தொடர்ச்சியான T20 கிண்ண அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

3 தடவைகள் கிண்ணம் வென்று நடப்புச் சம்பியனாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சள் மகளிர் 4வது கிண்ணத்துக்கு இப்போதே உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் போலத் தெரிகிறது.

கடந்த மாதம் தான் தங்கள் சொந்த நாட்டில் வைத்து இந்தியாவின் மகளிரினால் T 20 தொடரில் படுமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது உங்களுக்கும் ஞாபகம் இருக்கலாம்.


No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner