March 30, 2016

உலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதிரடிகளின் எதிரடிகளும்

மீண்டும் தொடர்ச்சியாக எழுதும் ஒரு உத்வேகம் கிடைத்திருப்பதால் உலக T 20 - அரையிறுதிகளுக்கு முன்பாக... என்ற தலைப்பில் ஒரு வருட இடைவெளியின் பின் மீண்டும் தமிழ் மிரருக்கும், தமிழ் விஸ்டனுக்கும்  எழுதியுள்ள கட்டுரையின் சற்று விரிவுபடுத்தப்பட்ட இடுகை.


போட்டிகளை நடாத்தும் நாடாகவும், இம்முறை உலக T20 கிண்ணத்தை வெல்லக்கூடிய வாய்ப்பை அதிகளவில் கொண்ட நாடாகவும் கருதப்படும் இந்தியாவுடன், தத்தம் பிரிவுகளில் ஏனைய அணிகளை விட ஆதிக்கம் செலுத்திய நியூ சீலாந்து,இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன.

இவற்றில் நியூ சீலாந்தைத் தவிர ஏனைய மூன்று அணிகளும் முன்னர் ஒவ்வொரு தடவை உலக T20 கிண்ண வெற்றியை சுவை பார்த்திருக்கின்றன.
இந்தியா - 2007
இங்கிலாந்து -2010
மேற்கிந்தியத் தீவுகள் - 2012

நியூ சீலாந்து இதுவரை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றதில்லை.

அத்துடன் 2007இல் நடைபெற்ற முதலாவது உலக T20க்குப் பிறகு இப்போது தான் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நியூ சீலாந்துக்கும் உலகக்கிண்ண அரையிறுதிகளுக்கும்  இருந்து வந்த மாற்றமுடியாத சாபம், கடந்த 2015 உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத் தெரிவானதோடு நீங்கியது என்று ஆறுதல்பட்டு, உறுதிப்பட இன்று இங்கிலாந்து அணியை வெல்லுமா பார்க்கலாம்.

2010இல் உலக T20 கிண்ணத்தை வென்ற பிறகு, அதேபோன்ற கட்டமைப்புக் கொண்ட நம்பிக்கையான அணியோடு களம் புகுகிறது இங்கிலாந்து.
அடுத்துவந்த இரண்டு உலக T20 தொடர்களிலும் அரையிறுதியைக் கூட எட்டவில்லை இங்கிலாந்து.

இந்தியா கடந்த முறை இலங்கையுடன் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றிருந்தது.

2012இல் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் கடந்த முறையும் அரையிறுதியை எட்டிய அணி.

இவற்றுள் நியூ சீலாந்து மட்டுமே எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாமல் தொடர்ச்சியாக வெற்றிகளுடன் வலம் வரும் ஒரே அணி.
ஏனைய அணிகள் தலா ஒவ்வொரு தோல்விகளைக் கண்டுள்ளன.

ஆசிய அணிகளின் ஆதிக்கம் ஆசிய ஆடுகளங்களில் குறைந்து செல்லும் என்று எனது முன்னைய இடுகைகளில் எதிர்வுகூறியதைப் போலவே, இந்தியா மட்டுமே எஞ்சியிருக்கிறது.
துரித வேக கிரிக்கெட் போட்டிகள், IPL போன்ற போட்டிகளில் விளையாடிய அனுபவங்கள் என்று பல காரணிகளோடு, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மிக மோசமாக விளையாடியதும் முக்கியமான காரணங்கள்.


முதலாவது அரையிறுதி - இங்கிலாந்து எதிர் நியூ சீலாந்து 
சிவப்புச் சட்டை எதிர் கறுப்புத் தொப்பி கேன் வில்லியம்சனின் சாதுரியமான வழிநடத்தலில் எந்த அணியாக இருந்தாலும், எந்த ஆடுகளமாக இருந்தாலும் அடித்தாடி வரும் நியூ சீலாந்து அணி தான் இந்த உலக T20 தொடரின் அசத்தல் அணி.

இங்கிலாந்துக்கு இன்றைய டெல்லி ஆடுகளம் ஏற்கெனவே இலங்கை அணியுடன் வெற்றிபெற்ற போட்டி மூலம் பரிச்சயமாக இருந்தாலும், நியூ சீலாந்து ஆடுகளங்கள் பற்றி இந்தத் தொடரில் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.

சொந்த நாடான இந்தியாவை விட ஒவ்வொரு ஆடுகளத்தையும் சரியாக வாசித்தறிந்து ஒரு ஜோசியக்காரர் போல முன்னதாகவே நடப்பதை உய்த்தறிந்த லாவகத்தோடு புதிய தலைவர் கேன் வில்லியம்சன் அணியை ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றது போல - குறிப்பாக பந்துவீச்சாளரை மாற்றி மாற்றி வெற்றிகளை சுவைத்தது ஒரு ரசனையான ஆச்சரியம்.
நான் இப்போது இவரது தலைமைத்துவ அணுகுமுறையின் ரசிகனாகி விட்டேன். (இந்த திருஷ்டி இன்று வில்லியம்சனை சொதப்பினால் மன்னித்துவிடுங்கள் கிவி ரசிகர்களே.)

அவரது மாற்றங்கள் ஒவ்வொரு முறையுமே வெற்றிக்கான ரகசியமாக மாறியிருந்தது. தலைமைப் பொறுப்பில் மிகத் துல்லியமாக செயற்படும் வில்லியம்சனுக்குத் துணையாக கப்டில்லின் அதிரடி இருக்கிறது.

தேவையான நேரங்களில் மன்றோ, அண்டர்சன், அனுபவம் வாய்ந்த ரொஸ் டெய்லர் மற்றும் எலியட் என்று திடமான துடுப்பாட்ட வரிசை.
கடைசி நேர அதிரடிக்கு சகலதுறை வீரர் சன்ட்னர், விக்கெட் காப்பாளர் லூக் ரொங்க்கி.
எனினும் இன்னும் துரத்தியடிப்பதில் நியூ சீலாந்து இந்த தொடரில் ஆடவில்லை என்பது சிக்கலைத் தரலாம்.

இதுவரை தங்கள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சௌதீ, ட்ரேன்ட் போல்ட் ஆகியோரைப் பயன்படுத்தாமலே ஆச்சரியத்தை அளித்துவரும் நியூ சீலாந்து, இன்று எந்தெந்தப் பந்துவீச்சாளரை அணிக்குள் அழைக்குமென்று எதிர்பார்க்க வைக்கிறது.
சோதி, சன்ட்னர்,அண்டர்சன், எலியட் (பகுதி நேரம்)  ஆகிய பந்துவீச்சாளர்கள் மட்டுமே நான்கு போட்டிகளிலும் விளையாடிய பந்துவீச்சாளர்கள். 
எப்போதும் உயர்தரத்தில் இருக்கும் களத்தடுப்பு இவர்களது கூடிய பலம்.

இன்னொரு சாதுரியமான அணித் தலைவர் ஒயின் மோர்கனின் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்தும் சகலதுறைத் திறமையும், T20 போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டது போன்ற கட்டமைப்புக் கொண்ட அணி தான்.

ஹேல்ஸ், ரோய், பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அசத்தல் அதிரடி வீரர்களுடன், எந்தப் போட்டிகளிலும் நம்பியிருக்கக்கூடிய மோர்கன், ரூட் போன்ற துடுப்பாட்ட வீரர்களும், கூடவே மொயின் அலியும் இருப்பதால், இந்த அணியும் துடுப்பாட்டத்தில் பலமான ஒரு அணியே.

பந்துவீச்சில் நியூ சீலாந்து அளவுக்கு பலமான அணியாகத் தெரியாவிட்டாலும் (குறிப்பாக கெயிலின் அதிரடியில் சிக்கியதும், மத்தியூஸ் தனித்து நின்று வெளுத்து வாங்கியதும் சில உதாரணங்கள்) தேவையான சந்தர்ப்பங்களில் விக்கெட்டுக்களை உடைக்கக் கூடிய ஜோர்டான், வில்லி, சுழல்பந்து வீச்சாளர் அடில் ரஷிட் ஆகியோர் எப்போதும் ஆபத்தானவர்களே.

கூடவே துரித வேகக் களத்தடுப்பு.
நல்ல உதாரணம் அன்றைய ரூட்டின் பிடிஎடுப்பு.

சுழல்பந்துக்கு சாதகம் தரக்கூடிய, கொஞ்சம் மந்தமான டெல்லி ஆடுகளத்தில் இன்று நாணய சுழற்சியின் ஆதிக்கம் எவ்வளவாக இருக்கும் என்பது ஊகிக்க முடியாத ஒன்று.

அதிரடி வீரர்களின் மோதல் மட்டுமன்றி, அணித் தலைவர்களின் வியூக மோதலாகவும் இருக்கப் போகிறது.

-------------------------

இரண்டாவது அரையிறுதி - இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 

சொந்த நாட்டின் சூரர்கள் எதிர் துரித அடி மன்னர்கள் 

கெயில் என்னும் புயலுக்கும் கோலி என்ற இந்தியாவின் புதிய புயலுக்கும் இடையிலான மோதலாகத் தெரிகிறது.
முதலாவது போட்டியில் இங்கிலாந்தை அடித்து விரட்டிய பின் காயம் காரணமாக சற்று ஓய்ந்து காணப்படும் கிறிஸ் கெயில் நாளைய மும்பாய் போட்டியில் சதம் அடிக்க ஆசைப்படுவதாக சொல்லியிருப்பது இந்திய ரசிகர்களுக்குக் கொஞ்சம் கிலி தரும் ஒரு விடயமாக இருக்கலாம்.
அதேவேளை சத்தமில்லாமல் வெளுத்து வாங்கி, தனியொருவராக கடைசிப் போட்டியை  வென்று கொடுத்த  கோலியின் form இந்தியாவுக்குப் பெரியதொரு உற்சாகம்.ஆனால்  இவ்விருவரை விட இந்தியாவின் ஆஷிஷ் நெஹ்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின், மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி ஆகியோரின் அனுபவத்துடன் கூடிய பந்துவீச்சு ஆற்றல் தான் இவ்விரு அணிகளின் அடிப்படை என்று சொன்னால் அதில் ஐயமில்லை.

இந்த மூவரும் தங்கள் பந்துவீச்சில் காட்டும் தனித் திறமையும், தங்கள் அனுபவத்தை ஏனைய பந்துவீச்சாளரோடு பகிரும் விதமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு கூடுதல் பலத்தைத் தொடர்ச்சியாக வழங்கி வருவதை ஒவ்வொரு போட்டியிலும் இவர்களது பந்துவீச்சுப் பெறுபேறுகளை அவதானித்தால் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் சர்ச்சைகள் இல்லாதவர் என்பதால் பெரிய விளம்பர வட்டம் இவர் மீது இல்லை.
அஷ்வின் மூன்றாம் இடத்தில்.
இந்தியாவின் இன்னொரு சுழல் துரும்புச் சீட்டான ஜடேஜா 7 ஆம் இடத்தில்.

மேற்கிந்தியத் தீவுகளை விட இந்தியாவின் பந்துவீச்சு உறுதியானதாகத் தெரிகிறது.
ஐந்து நிச்சயமான பந்து வீச்சாளரோடு, தேவையேற்பட்டால் ரெய்னா, யுவராஜும் இருக்கிறார்கள்.
கெயிலை மடக்க அஷ்வினை தோனி பயன்படுத்தக் கூடும்.
பாண்டியா இந்தியாவுக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த பயன்மிக்க சகலதுறை வீரர்.

மறுபக்கம் மேற்கிந்தியத் தீவுகளில் சற்றே தொய்ந்துள்ள பந்துவீச்சை சமி  சாதுரியமாக மாற்றிப்போடும் மாற்றங்கள் மூலமாக சமாளித்து வருகிறார்.

ஆனால், இந்தியாவின் துடுப்பாட்டம் கோலியையே மையமாக வைத்திருக்க, அவரைச் சுற்றியுள்ள ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் தக்க நேரத்தில் துணைக்கு வரவேண்டும்.
குறிப்பாக முதல் மூவரும்.
தோனியும், யுவ்ராஜூம் தங்கள் பங்களிப்புக்களை இணைப்பாட்டங்கள் மூலமாக வழங்கிவருகின்றனர் - ஓர் அளவுக்காவது.

யுவராஜ் சிங்கின் கால் உபாதை அவருக்குப் பதிலாக இந்தியக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள மனிஷ் பாண்டே விளையாடக்கூடிய வாய்ப்பு இருக்கலாம் என்று பேசப்படும் நிலை, இந்தியாவுக்கு பாதகமா, அல்லது அதிக சாதகமா என்று சொல்ல முடியாது.
ஆனால் இப்போது குழுவுக்குள் வந்துள்ள பாண்டேயா, இல்லாவிட்டால் முன்பே குழுவில் இருக்கும் ரஹானேயா நாளை விளையாடுவார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

ஆனால் யுவராஜின் இன்மை அணியின் சமபலத்தை  சற்று தடுமாறவைக்கும் என்பது உறுதி.

மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டப் பலம் ஆப்கானிஸ்தான் அணியினால் சோதிக்கப்பட்டது.
ஆனால் அசுர அடிகளுக்குப் பழக்கப்பட்ட கரீபியன் அதிரடி வீரர்கள் IPL மூலமாகப் பழகிய மும்பாய் ஆடுகளங்களை வசப்படுத்திக்கொள்ள சொற்ப நேரமே எடுக்கும்.

கெயில், சாமுவேல்ஸ், ப்ராவோ, ரசல், சமி , போதாக்குறைக்கு இலங்கை அணியை சிதறடித்த ப்ளட்ச்சர் வேறு.

இரு அணிகளும் துரத்தி அடிப்பதில் ஆர்வம் காட்டும்; அத்துடன் கோலியின் அண்மைக்கால துரத்தியடித்தல்கள் நாணய சுழற்சியில் மேலும் முக்கியத்தைத் தரும்.

மும்பாய் ஆடுகளம் மட்டும் துடுப்பாட்ட சாதகமாக இருந்தால் ஓட்டங்கள் மலையாகக் குவியும் கோலாகலத் திருவிழாவாக இருக்கும்.No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner