March 17, 2016

மீண்டும் பழைய அப்ரிடி அதிரடி & இங்கிலாந்துக்கு கெயில் அடித்த மரண அடி !!!


T20 போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் துரித வேக ஆட்டம் என்பதாலும், ஓட்டக் குவிப்புக்கள், உடன் விக்கெட் எடுக்கும் தேவைகள், களத்தடுப்பில் மேலதிக உற்சாகம் போன்ற காரணிகளால் இவை இளையவருக்கான ஆட்டமாகக் கருதப்பட்டன.

ஆனால் IPL , Big Bash League, CPL என்று எல்லாவிதமான லீக் போட்டிகளிலும் ஓய்வுபெற்ற 'முன்னாள்' வீரர்கள் தான் ஆரம்பமுதல் கலக்கி இந்த எண்ணக் கருத்தே தவறானது என்று நிரூபித்து வந்திருந்தார்கள்.

இதையடுத்து லீக் போட்டிகள் மட்டுமில்லாமல் சர்வதேச அணிகளும், 32,33 வயதைக் கடந்த வீரர்களை வயதேறிவிட்டது என்று டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இருந்து நீக்கிய, ஒதுக்கிய மூத்த வீரர்களை எல்லாம் மீண்டும் அணிக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

40 வயதைத் தாண்டிய ப்ரட் ஹொட்ஜ், ப்ரட் ஹொக் ஆகியோரை அவுஸ்திரேலிய கடந்த உலக T20 போட்டி அணியில் இணைத்தது மிக முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய ஒன்று.

இளவயது வீரர்கள் என்ற 'கொள்கையில்' மிகத் தீவிரமாக இருக்கும் ஏனைய அணிகளும் ஓய்வு  பெற்ற, பெரும் நிலையிலுள்ள வீரர்களை மீள அழைக்கவும் தயாரான வரலாறுகளையும் அண்மைக்காலமாகக் கண்டு வருகிறோம்.

அண்மையில் கூட இந்தியா நீண்ட காலம் ஒதுக்கப்பட்டிருந்த ஆசிஷ் நேஹ்ராவை மீண்டும் அழைத்தது.
வந்தார் கலக்கினார்.
(யுவராஜ் சிங், ஹர்பஜன் ஆகியோரையும் இந்த வரிசையில் சேர்க்கலாம்)

இலங்கை அணி இன்னமும் டில்ஷானை நம்பி அணியில் வைத்துள்ளது.
அண்மைக்காலம் வரை மிஸ்பாவை நம்பியிருந்த பாகிஸ்தான், கைல் மில்ஸை வைத்திருந்த நியூ சீலாந்து, சர்வதேச ஓய்வுக்குப் பிறகும் உலகமெங்கும் லீக் போட்டிகளில் கலக்கிவரும் இலங்கையின் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, அவுஸ்திரேலியாவின் மைக் ஹசி என்று உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதையெல்லாம் இன்று ஞாபகப்படுத்தவேண்டிய காரணம் என்னவென்றால், நேற்று தத்தமது அதிரடி ஆட்டங்கள் மூலமாக அணிகளுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்த 36 வயது இளைஞர்கள் இருவரைப் பற்றி இந்த இடுகையில் பேசவிருப்பதால்.


-------------------------

ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோற்று, அணியின் கட்டமைப்பில் தடுமாறிக் கொண்டிருந்த, இதைவிட தலைவராக தனது தனிப்பட்ட பெறுபேறுகளிலேயே தடுமாறிக் கொண்டிருக்க தனக்குள் நீண்ட காலம் காணாமல் போயிருந்த பழைய அப்ரிடியை மீண்டும் கொண்டு வந்து பங்களாதேஷை வெளுத்து வாங்கிய அப்ரிடி..
19 பந்துகளில் 49 ஓட்டங்கள். 4 சிக்சர், 4 நான்கு ஓட்டங்கள்.

தொடர்ந்து உபாதைகள், முன்னைப் போல தொடர்ச்சியான பெறுபேறுகள் இல்லை, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதை விட கழகங்கள், பணம் கொடுக்கும் லீக் அணிகளுக்காகத் தான் விளையாடுகிறார், அணியில் ஒற்றுமையாக இல்லை என்று எழுந்த விமர்சனங்களை எல்லாம் இங்கிலாந்தின் பாவப்பட்ட பந்துவீச்சாளர்கள் மேல் காட்டிய 'World Boss' என்று தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட கிறிஸ்  கெயில்..

47 பந்துகளில் ஆட்டமிழக்காத சதம்.. 11 சிக்சர்கள், 5 நான்கு ஓட்டங்கள்.

இருவருக்கும் இதுவே இறுதி உலகக் கிண்ணமாக அமையலாம் என்று வயதை வைத்துக் கணிக்கும் நேரத்தில் புயலாக மாறி நேற்று வெளுத்து வாங்கியிருந்தார்கள்.

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இரண்டின் வெற்றியுமே அந்த அணிகளுக்கு நேற்று நிச்சயமானதாக இருந்திருக்கவில்லை.

இந்த சிரேஷ்ட வீரர்கள் மூலமாகக் கிடைத்துள்ள வெற்றிகள், மற்றும் தூங்கிக் கொண்டிருந்த இந்த ராட்சதர்கள் துயில் எழும்பியது அடுத்து இவ்விரு அணிகளையும் சந்திக்கவுள்ள இந்திய, இலங்கை அணிகளுக்கு நிச்சயமாக கிலி கொள்ள வைக்கும் விடயமாக அமையும் என்பதில் ஐயம் தேவையில்லை.
------------------------


உத்வேகமாக எழுந்துவந்த பங்களாதேஷ் அணியை நேற்று ஒடித்துப் போட்டது பாகிஸ்தானின் துடுப்பாட்டம்.
நீண்ட காலத்துக்குப் பிறகு பாகிஸ்தானின் துடுப்பாட்ட வரிசை மிகச் சிறப்பான ஆட்டத்தைக் காட்டியிருந்தது.

கடைசி நேரத்தில் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்ட அஹ்மட்  ஷெசாட், அண்மைக்காலமாக பாகிஸ்தானின் துடுப்பாட்ட நம்பிக்கைகளில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருகும் மொஹமட்  ஹபீஸ் ஆகியோரின் அரைச் சதங்கள் கொடுத்த உறுதியான அடித்தளத்தின் பின் ஆரம்பமானது அப்ரிடியின் தாண்டவம்.

அந்த சிக்சர்கள் பழைய பயங்கர அப்ரிடியைக் கண் முன் கொண்டுவந்தன.
முஷ்டபிசூர் இல்லாமல் பாதி பலம் குறைந்த பங்களாதேஷ் இந்த அதிரடியில் சின்னாபின்னமாகிப் போனது.

துடுப்பாட்டத்திலும் அரைச்சதம் பெற்ற ஷகிப் அல் ஹசனைத் தவிர வேறு யாரிடமும் திடத்தைக் காணவில்லை.
ஷகிப் நேற்று 1000 T20 சர்வதேச ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரரானார்.இதற்கு முந்தைய போட்டியில் தமீம் இக்பால் இந்த மைல்கல்லை எட்டிப் பிடித்திருந்தார்.

ஆரம்ப ஓவரிலேயே சௌம்ய  சர்க்காரின் ஸ்டம்பை உடைத்துப்போட்ட அமீர் எடுத்துக்கொடுத்த ஆரம்பம், அப்ரிடி கைப்பற்றிய இரு விக்கெட்டுக்கள் என்று பாகிஸ்தானின் வெற்றி பாதி வழியிலேயே உறுதியானது.

நேற்று அப்ரிடி நாள் தான்.
இதே கொல்கத்தாவில் 19ஆம் திகதி இந்தியாவை சந்திக்கும் மனத்திடத்தை இந்த அபார வெற்றியும் அப்ரிடியின் அதிரடியும் சேர்த்து வழங்கியிருக்கும்.
உலகக்கிண்ணப் போட்டிகள் எவற்றிலுமே இந்தியாவை வெல்லாத பாகிஸ்தானின் சாபம் அப்ரிடியினால் இம்முறையாவது மாறுமா என்று காத்திருக்கிறார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள்.

ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பின் தனது முதலாவது T20 சர்வதேச அரைச் சதத்துக்காக இன்னும் காத்திருக்கிறார் அப்ரிடி.

--------------------

அனுபவம் எதிர் இளமை என்று அமைந்த மும்பாய் போட்டியில் நேற்று நின்று ஆடியதும் வென்றதும் ஒரேயொருவர் தான்..
கிறிஸ் கெயில்.

இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சைத் துவம்சம் செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் கோர்த்த 182 ஓட்டங்களை உப்  என்று ஊதித் தள்ளிவிட்டார் கெயில்.

182 என்பது எந்தவொரு ஆடுகளத்திலுமே சவாலான ஒரு இலக்கு தான்.

ஆரம்பத்திலே மிக நிதானமாக ஆடிய கெயில், அரைச் சதம் கடந்த பிறகு தான் புயலாக மாறியிருந்தார்.
ஆரம்பத்திலே சாமுவேல்சுடன் சேர்ந்து பெற்ற அரைச்சத இணைப்பாட்டத்தில் கெயில் மிக அடக்கி வாசித்திருந்தார்.

அரைச்சதம் கடக்க, 27 பந்துகள்..
ஆனால் மீதி ஐம்பது ஓட்டங்களும் வெறும் 20 பந்துகளில்.

இது தென் ஆபிரிக்கர்களான ரிச்சர்ட் லீவி (45 பந்துகள்), ஃபஃப் டூ ப்லெசி (46 பந்துகள்) ஆகியோருக்குப் பிறகு கெயில் நேற்றுப் பெற்றது தான் T20 சர்வதேசப் போட்டிகளில் 3வது வேகமான சதம்.
(அவுஸ்திரேலியாவின் ஏரொன் ஃபிஞ்சும் 47 பந்துகளில் சதம் பெற்றிருந்தார்)

இது கெயிலின் இரண்டாவது T20 சர்வதேச சதம்.
இதிலே சுவாரஸ்யம், இவ்விரண்டுமே உலக T20 போட்டிகளில் பெறப்பட்டவையே.
முதலாவது உலக T20யின் முதல் போட்டியையே தனது சதத்தொடு ஆரம்பித்து வைத்திருந்தார்.

உலக T20 போட்டிகளில் இரண்டு சதங்களைப் பெற்ற ஒரேயொரு வீரரும் கெயில் மட்டும் தான்.

இந்தப் போட்டிக்குப் பிறகு வழங்கிய பேட்டியில் 'தனது சொந்த ஊர் மைதானம் பெங்களூரில் - IPL இல் கெயிலின் அணி ரோயல் சலேஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் மைதானம்- அடுத்து இலங்கை அணியை சந்திக்க மகிழ்ச்சியுடன்' காத்திருப்பதாக சொல்லியிருப்பது இலங்கை ரசிகர்களுக்கு இப்பொழுதே வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


---------------------------

அதற்கு முதல் நடப்பு சம்பியன்களான நாம், இன்று ஆப்கானிஸ்தான் என்ற ஆபத்தைக் கடக்கவேண்டி இருக்கிறது.

நேற்று பயிற்சிகளில் இலங்கை அணி 


என்னடா இது ஆப்கான் மாதிரி அணிக்கு எல்லாம் பயப்படவேண்டிய காலமாகிப் போச்சே என்று நினைக்கும் அளவுக்கு இலங்கை அணியின் தற்போதைய மோசமான நிலை.

கடைசியாக இலங்கை அணி விளையாடியுள்ள 10 T20 சர்வதேசப் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது.
அதேநேரம் ஆப்கன் தான் விளையாடியுள்ள  10 T20 சர்வதேசப் போட்டிகளில் 9இல் வெற்றி.

ஆனால் இவ்விரண்டு அணிகளும் விளையாடிய எதிரணிகளின் தரங்கள் நேரெதிர்.

இலங்கை அணி இதுவரை ஆப்கானிஸ்தான் அணியை இதுவரை  T20 சர்வதேசப் போட்டி எதிலும் சந்தித்ததில்லை.

இவ்விரு அணிகளைப் பற்றிய சற்றே விரிவான பார்வை : 

50 ஓவர்கள் கொண்ட போட்டி என்றால் இலங்கை அணி இலகுவாக ஜமாய்க்கும்.
ஆனால் 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஆப்கானிஸ்தான் ஊறித் திளைத்திருக்கிறது. எந்தப் பெரிய அணியாக இருந்தாலும் கொஞ்சம் அசந்தாலும் தூக்கி அடித்துவிட்டுப் போய்விடும்.

அப்படியிருந்தும் இறுதியாக இலங்கை ஆப்கானிஸ்தானை சந்தித்த 2015 உலககிண்ணப் போட்டியின் போது, மிக சிரமபட்டே வெற்றிபெற்றமை இங்கே கவனிக்கவேண்டிய ஒரு விடயமே..
அதுவும் மஹேல, சங்கா இருந்த அணி.
ஆப்கானிஸ்தான் அணியின் வீறுகொண்ட விளையாட்டு அப்படியானது.
(இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் விளையாடாத நேரம் இந்த AfGUNs தங்களது போராட்ட குணத்தினால் எனது மணங்கவர்ந்தவர்கள்)


ஆனால், இதுவரை டெஸ்ட் விளையாடும் அணிகளில் சிம்பாப்வே தவிர வேறு எந்தவொரு அணியையும் வீழ்த்தாத குறையுடன் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி பெரிய அணி ஒன்றை வீழ்த்தும் வெறியுடன் விளையாடக்கூடும்.

இலங்கை அணி முழுமையான திறமையுடன், நடப்பு சம்பியன் என்ற கம்பீரத்துடன் விளையாடவேண்டும்.
அதிலும் இன்றைய நாளில் - 1996 உலகக்கிண்ணம் வென்ற 20வது ஆண்டுப் பூர்த்தி நாளில் எந்தத் தடுமாற்றமும் இருந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

உபாதையிலிருந்து மீண்டுள்ள லசித் மாலிங்க விளையாடினால் அணி உற்சாகம் பெறும். ஆனால், இன்று அவருக்கு ஓய்வை வழங்கி பெரிய அணிகளோடு விளையாட வைக்கும் எண்ணமுண்டா தெரியவில்லை.

இலங்கை ரசிகனாக இன்று இலங்கையின் துடுப்பாட்டம் மீண்டும் நேர்த்தியான form க்குத் திரும்பவேண்டும் என்று விரும்புகிறேன்.

குறிப்பாக தலைவர் மத்தியூஸ் மற்றும் டில்ஷான்.

நேற்று கெயில் & அப்ரிடி போல, இன்று ஒருவேளை டில்ஷானின் நாளாக அமையுமோ?

காத்திருப்போம்.

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner