நாக்பூரில் நேற்று நடந்தது என்ன?
தாம் விரிக்கும் வலையில் தாமே மாட்டிக் கொள்வது அடிக்கடி நடப்பதைக் கண்டு வந்திருக்கிறோம்.
தத்தமக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்து வைத்தும் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு அதே பொறியில் சிக்கி சொந்த செலவில் சூனியம் வைத்த வரலாறுகள் கண்டுள்ளோம்.
நாக்பூரில் நேற்று சுழல்பந்து வீச்சு வியூகத்தால் நேற்று இந்தியாவை நியூ சீலாந்து சுருட்டியதும் இவ்வாறான ஒன்று தான்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் போட்டித் தொடர் ஒன்றில் இந்திய அணி ஆடுகளத்தைத் தனக்காக தயார் செய்தது என்று சொல்வது பொருந்தாது. எனினும் சொந்த நாட்டின் ஆடுகளத்தின் தன்மையை அறியாத, நீண்ட கால அனுபவம் வாய்ந்த தலைமையுடன் கூடிய சுழல்பந்தில் வித்துவம் மிக்க ஒரு அணி மோசமாகத் தோற்பது என்பது மிகவும் வெட்கக்கேடான ஒரு விடயமே.
79 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்டது.
இது இந்திய மண்ணில் சர்வதேச T 20 போட்டியொன்றில் எந்த அணியினாலும் பெறப்பட்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை.
இந்தியாவின் இரண்டாவது குறைவான சர்வதேச T 20 ஓட்ட எண்ணிக்கை.
ஆகக் குறைவாக 74 ஓட்டங்களுக்கு 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சுருண்டு இருந்தது.
இந்தியாவே இரண்டு சுழல்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியபோது, உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இருவரான சௌதீ, போல்ட் எல்லாம் இருக்கிற நேரம், எல்லோருமே அதிர்ச்சியடையும் விதமாக அவர்களை அணியைவிட்டு நீக்கிவிட்டு, சோதி, நேதன் மக்கலம்,சன்ட்னரை வைத்து சுழட்டுவாங்க என்று யார் நினைத்தார்?
இது தனியே புதிய அணித் தலைவரான கேன் வில்லியம்சனின் மதியூகமாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. பிரெண்டன் மக்கலம் தலைவராக இருந்தபோதும் அவருக்கு பின்புலமாக செயற்பட்டு வந்த பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசனுக்கும் இந்த யுக்தியில் பங்கிருக்கும் என்றே நம்புகிறேன்.
மற்ற அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் போல அதிகம் வெளியே தலைகாட்டாத இவர் நியூ சீலாந்தின் புதிய எழுச்சியின் முக்கிய பின்னணிக் காரணிகளில் ஒருவர்.
எனினும் நேற்று போட்டியின் முன்னதாக நினைவுகூரப்பட்ட முன்னாள் நியூ சீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ 1992 உலகக்கிண்ணத்தில் சுழல்பந்தையும் களத்தடுப்பு, மிதவேகப் பந்துவீச்சையும் வைத்து செய்த புதுமை போல வில்லியம்சனும் ஆரம்பித்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமே.
நான் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை எதிரியே முடிவு செய்கிறான் என்று சே சொன்னது போல,
இந்திய ஆடுகளம் கறுப்புத் தொப்பிக்களை இந்தியாவின் ஆஸ்தான ஆயுதத்தை தூக்க வைத்தது.
இந்திய ஆடுகளம் கறுப்புத் தொப்பிக்களை இந்தியாவின் ஆஸ்தான ஆயுதத்தை தூக்க வைத்தது.
ஆனால் அஷ்வின், ஜடேஜா ஆடவேண்டிய அசுர சுழல் ஆட்டத்தை கிவியின் முச்சுழல் சுருட்டியது தான் விதி !!!
சொந்த மண்ணின் சூரர்கள் சுழலில் சுருண்டு போனார்கள்.
Horses for the causes - the Spin Trio risk paid off for Blackcaps
நியூ சீலாந்தின் வியூகம் & மதியூகத்துக்கு வாழ்த்துக்கள்.
Horses for the causes - the Spin Trio risk paid off for Blackcaps
நியூ சீலாந்தின் வியூகம் & மதியூகத்துக்கு வாழ்த்துக்கள்.
கடந்த சில மாதங்களாகவே குறுகிய வகைப் போட்டிகளில், குறிப்பாக T 20 போட்டிகளில் எல்லா பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசை ஒன்று
(கடந்த ஆண்டின் இறுதியில் கட்டாக்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 92, கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக பூனேயில் 101ஐத் தவிர)
- அதிலும் இந்திய ஆடுகளங்களில் மலையளவு ஓட்டங்களைக் குவித்த இந்திய வரிசை அடுக்கி வைத்த சீட்டுக்கட்டு போல பொலபொலவென்று சரிந்து விழுந்தது அவர்களது கவனக் குறைவா அல்லது அளவு கடந்த தன்னம்பிக்கையா?
தலைவர் தோனியும் உப தலைவர் கோலியும் கொஞ்சமாவது பொறுப்புணர்ந்து ஆட முயன்றார்கள்.
ஆனால் இத்தனை ஆண்டுகாலம் தலைமைத்துவ அனுபவம் உடைய தோனி எப்படி நாக்பூர் ஆடுகளத்தை சரியாக உணர்ந்துகொள்ளாமல் போனார் என்பதே பெரிய ஆச்சரியம்.
பலமாக எல்லோரும் பயந்து நடுங்கிய இந்தியத் துடுப்பாட்டவரிசையை எவ்வாறு தடுமாற வைக்கலாம் (ஆடுகளத்தின் அனுசரணை இல்லாமல்) என்பதை நேற்றைய போட்டியின் அனுபவத்தில் இருந்து மற்ற அணிகள் குறிப்பெடுத்திருக்கக் கூடும்.
குறிப்பாக அடுத்தபோட்டியில் இந்தியாவை சந்திக்கக் காத்திருக்கும் 'பரம வைரிகள்' பாகிஸ்தான்.
இந்திய - பாகிஸ்தான் மோதல் வரும் 19ஆம் திகதி.
முதல் போட்டியே அதிர்ச்சி !!!
தலைவர்கள் இந்தப் போட்டியின் பாடத்தை மதியில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் ஆடுகளங்களில் எதுவும் சாத்தியம்.
தலைவர்கள் இந்தப் போட்டியின் பாடத்தை மதியில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் ஆடுகளங்களில் எதுவும் சாத்தியம்.
-------
இந்த வேளையில் தான் பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு விடயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இந்த நாக்பூர் ஆடுகளம்..
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, கடந்த நவம்பர் மாதம் இந்தியா தென் ஆபிரிக்க அணியை இதே நாக்பூரில் சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து 3 நாட்களுக்குள் உருட்டி ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது?
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய அந்த 3 நாள் 'டெஸ்ட்'டில் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களையும் (அஷ்வின் மட்டும் 12 விக்கெட்டுக்கள்), தென் ஆபிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர்கள் 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இருந்தார்கள்.
போட்டித் தீர்ப்பாளர்கள், நடுவர்கள் , ஏன் விமர்சகர்கள் என்று எல்லோருமே கடுமையான அதிருப்தியை நாக்பூர் ஆடுகளம் பற்றி வெளிப்படுத்தியிருந்தனர்.
இதையடுத்து சர்வதேசத் தரத்துக்கு உகந்ததல்ல இந்த மைதானம் என்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவை கண்டனத்தையும் எச்சரிக்கையையும் இந்திய கிரிக்கெட் சபை மூலமாக, நாக்பூர் ஆடுகளப் பராமரிப்பாளருக்கு வழங்கியிருந்தது.
15000 $ தண்டப்பண அறவீடு பற்றிய எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
இதற்கான பதிலை சரியான முறையில் BCCI வழங்கியிருக்கவில்லை.
அப்படியான ஒரு ஆடுகளம் எப்படி இந்த சர்வதேச ரீதியில் முக்கியமான ஒரு உலகக்கிண்ணத் தொடரின் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது? இதைப் பற்றி ஏன் யாரும் அவதானம் செலுத்தவில்லை?
இப்போது இந்தியாவின் தோல்வியை அடுத்து, அதிலும் சுழல்பந்து வீச்சில் சுருண்டு வீழ்ந்ததை அடுத்து மீண்டும் இந்த நாக்பூர் விவகாரம் தோண்டப்படும் என்று நான் நினைக்கிறேன்..
பார்ப்போம்..
இப்போதே இவ்வகையான ஆடுகளங்கள் இந்தியாவின் அதிரடித் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகாது என்றும், துடுப்பாட்ட சாதகமான ஆடுகளங்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு உகந்தவை என்றும் இந்தியாவின் முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை மழையினால் பாதிக்கப்பட்ட தரம்சாலா போட்டிகளினால் வெற்றி பெறவேண்டிய போட்டிகள் மழையினால் கழுவப்பட்டு முதற்சுற்றோடு வெளியேறிய பரிதாபத்துக்குரிய நெதர்லாந்து அணியின் விக்கெட் காப்பாளர் வெஸ்லி பறேசி ICC யையும் இந்திய கிரிக்கெட் சபையையும் கிண்டலடித்து ட்வீட்டியுள்ளார்.
"Besides pitch preparation in favor of India @BCCI I think you would of been better off playing in Dharamsala? Least you share a point! @ICC"
இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பதை விட (அமைத்து நேற்றுப் போல மூக்கு உடைபடுவதை விட) தரம்சாலாவில் இந்தியா விளையாடியிருக்கலாம். (மழையினால் போட்டி தடைப்பட்டு) ஒரு புள்ளியாவது கிடைத்திருக்கும்.
இந்த மைந்தானத்தில் முதற்சுற்றுப் போட்டிகளும் சில மிகக் குறைவான ஓட்டக் குவிப்புப் போட்டிகளாகவே அமைந்திருந்தன.
இதேவேளையில் இந்த சுற்றின் மேலும் இரண்டு போட்டிகள் நாக்பூரில் நடைபெறவுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் எதிர் தென் ஆபிரிக்கா
ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்
இவற்றின் பெறுபேறுகளையும் ஆர்வத்துடன் அவதானிப்போம்.