March 16, 2016

இந்தியாவின் தோல்வி தந்த அதிர்ச்சி !! உண்மையில் பிரிவு 2இன் பலமான அணி எது? - உலக T20 முன்னோட்டம் - பாகம் 2


ஒரு அணியின் தோல்வி ஒரே நேரத்தில் கோடிக் கணக்கானோரை கவலை கொள்ளவும், அதேவேளையில் அதேயளவு கணக்கானோரை காத்திருந்து பழிவாங்கிய ஒரு குதூகாலத்தையும் வழங்கியிருக்கின்றதென்றால் அது நேற்றைய நாக்பூர் போட்டி தான்.

இறுதியாகத் தான் விளையாடிய 11 T20 சர்வதேசப் போட்டிகளில் 10இல் வென்றிருந்த இந்தியா சொந்த மண்ணில் அதுவும் நியூ சீலாந்திடம் அதிலும் அதிகமாக அறியப்படாத அவர்களது சுழல்பந்தில் சிக்கி சின்னா பின்னமாகிப் போனது தான் மிகப் பெரும் அதிர்ச்சி..

இந்தப் பிரிவில் எல்லாப் போட்டிகளையும் வென்று மிக இலகுவாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி, கிண்ணத்தையும் வெல்லும் என்று எதிர்பார்த்த அணி இப்படி சறுக்கியதில் ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் கேலி, கிண்டல்களுடன் பொங்கி வந்து விழுந்த மீம்கள் (memes ) எனப்படும் கலாய்த்தல் படப் பதிவுகள் ஏராளம்.





நேற்றைய போட்டி பற்றிய சில முக்கிய விடயங்களை அடுத்த இடுகையில் விரிவாகத் தருகிறேன்.

அதற்கு முதல் பிரிவு 2 அணிகள் பற்றிய முன்னோட்டம் இந்தப் பதிவில்...

விளையாட்டு தளத்திற்கு எழுதிய இரண்டாவது கட்டுரையின் சற்று விரிவான பதிவு இது..


இந்தியாவின் தோல்வி இந்தப் பிரிவின் நிலைகளில் ஆரம்பத்தில் பலரும் கணித்திருந்த கணிப்புக்களை முற்றாக மாற்றிப் போடும் என்று நான் நம்புகிறேன்.


2014இல் பங்களாதேஷில் இடம்பெற்ற உலக T20 போட்டிகளைப் போலவே இம்முறையும் அதே வடிவத்தில் இந்த உலக T20 போட்டித்தொடர் நடைபெறுகிறது.

எனவே ஒவ்வொரு அணிக்கும் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக அமைகிறது. ஒரு சறுக்கல் கூட அரையிறுதி வாய்ப்பை இல்லாமல் செய்துவிடும்.

கால்பந்துப் போட்டிகள் போல, இம்முறை உலக T20 போட்டிகளிலும் இரு வகை சீருடைகள் (Home and away) அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது கிரிக்கெட்டைப் பொறுத்தவரை  புதுமையானது என்பதை விட தேவையற்றது எனலாம்.

இலங்கை (வழமையான நீலம், மற்றும் மஞ்சள் நிறம் அதிகமான நீல சீருடை), பங்களாதேஷ் (வழமையான பச்சை, மற்றும் சிவப்பு அதிகளவில் சேர்ந்த பச்சை கலந்த சீருடை) ஆகியன மட்டுமே இரு சீருடைகளைப் பயன்படுத்தும் அணிகளாக இருக்கின்றன.

ஆசிய ஆடுகளங்கள் ஆசிய அணிகளுக்கு மட்டுமே சாதகமானவை என்ற 'மாயை' - இப்படியான குறுகிய வகை கிரிக்கெட் போட்டிகளில் - எப்போதோ உடைக்கப்பட்டுவிட்டிருக்கும் நிலையில் தனியே சுழல்பந்து வீச்சு மட்டும் எதிரணிகளை சுருட்டிவைக்கும் அஸ்திரமாக இருக்கும் என்ற எண்ணம் சாத்தியமில்லை.

எனினும் சில ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சும், அதை சரியான முறையில் அடித்தாடக்கூடிய துடுப்பாட்டமும் போட்டியின் போக்குகளில் தாக்கம் செலுத்தக் கூடியனவாக இருக்கும் என்பதை அழுத்தமாகக் கூறி வைக்கவேண்டும்.
நல்ல உதாரணம் நேற்றைய நாக்பூர் ஆடுகளமும், மைதானம் பற்றி நன்றாக அறிந்திருந்த இந்திய அணியையே அதிர்ச்சி அடைய வைத்த நியூ சீலாந்தின் வியூகமும்.

இந்தியாவின் தட்டை ஆடுகளங்கள் புதிய T20 சாதனைகளை நிகழ்த்தக் கூடிய வாய்ப்புக்களையும் வீரர்களுக்கு வழங்கும்.
(2015 உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னரும் இவ்வாறே எதிர்வு கூறியிருந்தேன். அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து ஆடுகளங்களிலேயே அத்தனை ஓட்டங்கள் குவிக்கப்பட்டது, IPL இல் மலையாக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட ஆடுகளங்களில் இன்னும் என்னென்ன நிகழுமோ?)

எவ்வாறெனினும், முதலாவது உலக T20யில் இலங்கை அணி பெற்றுள்ள 260 ஓட்டங்கள் என்ற மொத்த ஓட்ட சாதனையும், 2013இல் அவுஸ்திரேலியாவின் ஏரொன் ஃபிஞ்சின் 156 ஓட்டங்கள் என்ற தனி நபர் ஓட்ட எண்ணிக்கையும் இம்முறை விஞ்சப்படாது என்றே நம்புகிறேன்.

காரணம், அணிகளின் துடுப்பாட்ட வலிமைகளைப் போலவே T20 போட்டிகளுக்கு ஏற்றவகையில் தங்களை இசைவாக்கப் படுத்தியுள்ள பந்துவீச்சாளர்களும் இந்தப் 10 அணிகளிலும் இருக்கிறார்கள் என்பது உறுதி.
(எனினும் யார் கண்டார், ஏதாவது ஒரு நாள், ஒரு ஆடுகளம், ஒரு துடுப்பாட்ட வீரர் அசுர பலம் கொண்டால் எதுவும் நடக்கலாம்)



பிரிவு 2 அணிகளைப் பார்க்கு முன்...

இன்று இரண்டு போட்டிகள்..
பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் - ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ் இன்று கொல்கத்தாவில் அதே போன்ற ஆடுகள சாதகத் தன்மையை எதிர்பார்க்க முடியாது.
இப்போதைக்கு பாகிஸ்தான் மிக நிதானமாக ஆடிக் கொண்டிருக்கிறது.
மிகக் கவனமாக ஆடும் பாகிஸ்தான் மிக ஆபத்தானது.

இரண்டாவது போட்டி பிரிவு 1 இன் முதல் போட்டி..

2010 சம்பியன்  இங்கிலாந்து 2012 சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது.
2012இல் இலங்கையில் வைத்துக் கிண்ணம் வென்ற மே .இ அணியிலிருந்த 8 வீரர்கள் இந்தக் குழுவில் இருப்பது அனுபவத்துடன் கூடிய பலமாகும்.
ஆனால் 2010இல் கிண்ணம் வென்ற மோர்கன் மட்டுமே இங்கிலாந்து அணியில் இருந்தாலும் முன்னைய முன்னோட்டத்தில் சொன்னது போல T20 விசேடத்துவ வீரர்களுடன் களமிறங்கும் இளமைத் துடிப்பான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளின் அனுபவ ராட்சதர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்று நம்பலாம்.

என்னைப் பொறுத்தவரை இந்த உலக T20 தொடரின் மிக விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக அமையும்.

------------------

இனி பிரிவு 2 அணிகளின் அலசல் 


அவுஸ்திரேலியா

இதுவரை கிண்ணம் வெல்லாத நடப்பு 50 ஓவர்கள் சம்பியன்கள், இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவே தெரிகிறது.

எனினும் கடந்த ஐந்து உலக T20 போட்டிகளிலும் பதறியடித்து அவுஸ்திரேலியா செய்த அதே மாதிரியான மாற்றங்களை இம்முறையும் உலக T20 போட்டித் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது.

தலைவரை மாற்றி, விக்கெட் காப்பாளராக T20 அனுபவமில்லாத நெவிலை  உள்ளே கொண்டு வந்து, சுழல்பந்து வீச்சாளர்களை மாற்றி, போதாக்குறைக்கு இன்னமும் நிச்சயமில்லாத ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியுடன் களம் காண்கிறது ஸ்மித்தின் அணி.
அத்துடன் வழமையான அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் இப்போது மத்திய வரிசையில் துடுப்பாடத் தொடங்கியுள்ளார். 

இத்தனை மாற்றங்கள் வெற்றிகளைப் பெற்றுத் தந்தால்  எந்தக் கேள்வியும் வராது. ஆனால் அணியின் நிலை இன்னமும் உறுதிப்படாமல் இருப்பதால் போட்டிகளின் முடிவுகளே இந்த முடிவுகளின் பொருத்தப்பாடு பற்றி சொல்லும்.

ஸ்டார்க் காயம் காரணமாக விளையாடாதது அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைப் பலவீனப்படுத்தி அனுபவமற்ற ஒன்றாகக் காட்டுகிறது.
எனவே ஏனைய அணிகளோடு ஒப்பிடும்போது அதிரடி துடுப்பாட்ட வீரர்களும் அடித்தாடும் நீண்ட வரிசையும் கொண்ட துடுப்பாட்டம் தான் அவுஸ்திரேலிய அணியைக் கரைசேர்க்க உதவும்.


இந்தியா 

கடைசியாக விளையாடியுள்ள 11 போட்டிகளில் 10 போட்டிகளை வென்ற உற்சாகத்துடனும், உறுதியுடனும் காணப்பட்ட அணியை நேற்று யாரென்றே அறியப்படாத மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் சிதைத்ததில் அதிர்ந்து போயிருக்கிறது கிரிக்கெட் உலகம்.

சொந்த மண், உள்ளூர் ரசிகர்களின் அபரிதமான ஆதரவும் சேர்ந்துகொள்ள இந்த உலக T20யை வெல்லும் வாய்ப்பு அதிகமான அணியாக நிமிர்ந்து நிற்கிறது.

அணியில் சிறு பலவீனம் எது என்பதையே கணிக்க முடியாத அளவுக்கு உறுதியான அணியாகத் தெரியும் இந்தியா, நேற்றைப் போல தானாக ஏதாவது தவறு விட்டு சறுக்கினால் ஒழிய 2007இல் வென்ற கிண்ணம் மீண்டும் இந்தியா வ்சமாவதைத் தடுப்பது சிரமமே.

தவான், ரோஹித் ஷர்மா, கோலி, ரெய்னா, யுவராஜ், தோனி என்று நீண்டு காணப்படும் உறுதியான துடுப்பாட்ட வரிசை மற்றும் சகலதுறை வீரர்களாக ஜொலிக்கும் பாண்டியா, ஜடேஜா என்று இந்தியாவின் பலம் துடுப்பாட்ட வரிசையில் மட்டுமன்றி,  நேர்த்தியான,நிறைவு பெற்ற பந்துவீச்சு வரிசையிலும் இருக்கிறது.

அஷ்வின், நெஹ்ரா ஆகியோரைத் துரும்புச் சீட்டுக்களாகக் கொண்ட பந்துவீச்சு வரிசை எந்த அணியையும் இந்தியாவின் சொந்த ஆடுகளங்களில் சுருட்டக் கூடியது.

தோனி, நேஹ்ரா, யுவராஜ் சிங் போன்றோரின் இறுதி சர்வதேசத் தொடராக இது கருதப்படும் நிலையில் கிண்ணத்தை வெற்றிகொள்வது ஒரே குறியாகவும் வெறியாகவும்  இருக்கும்.

கிண்ணம் வெல்வதை விட வேறு எந்தக் குறைந்த முடிவுமே இந்தியாவுக்கும் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாக அமையும்.

நேற்றைய தோல்வி இனி வரும் ஒவ்வொரு போட்டிகளையும் அழுத்தத்துடனே சந்திக்க வைக்கப் போவது நிச்சயம்.


பங்களாதேஷ் 

தகுதிகாண் சுற்றின் மூலமாக உள்ளே வந்தாலும், உறுதியான அணியாகவும் வெற்றிபெறக் கூடிய ஒரு கட்டுக்கோப்பான அணியாகத் தெரிகிறது.

இளமைத் துடிப்புடன் கூடிய துடுப்பாட்ட வரிசை, சர்வதேச தரத்திலான களத்தடுப்பு, சகலவிதமான கூறுகளும் அடங்கிய சிறப்பான பந்துவீச்சு வரிசை என்று ஒரு முழு நிறைவான அணி.

சிறப்பான ஓட்டக் குவிப்பின் மத்தியில் விளங்கிக் கொண்டிருக்கும் தமீம் இக்பால், சௌம்ய  சர்க்கார், சப்பிர் ரஹ்மான், மஹ்மதுல்லா ஆகியோர் ஒரு பக்கம்..
இவர்களோடு ஏலவே தம்மை சர்வதேச மட்டத்தில் நிரூபித்த ஷகிப் அல் ஹசனும், முஷ்பிக்குர் ரஹீமும் சேர்ந்துகொண்டால் வங்கப் புலிகள் ஒரு பயங்கரமான அணியாகவே தெரிவார்கள்.

பந்துவீச்சும் அண்மையில் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் கண்டதைப் போலவே எந்த அணிக்கும் சவால் விடுக்கக் கூடியளவு வேகமும், சுழலும் கலந்த நேர்த்தியான ஒரு கலவை.

முக்கியமாக அண்மைக்காலமாக எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் முஷ்டபிசூர் மற்றும் டஸ்கின்.

பந்துவீச்சுப் பாணி சந்தேகத்துக்கு இடமானது என்று முறையிடப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள டஸ்கின் மற்றும் சனி ஆகியோரது பரிசோதனை முடிவுகள் (வரும்வரை அவர்கள் பந்துவீசலாம்) அணிக்கு பாதகமாக அமையுமா என்பது தான் முக்கிய கேள்வி.
அத்துடன் முஷ்டபிசூரின் உபாதையும் அணிக்கு இப்போதைக்கு இழப்பே.

ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் தீட்டப்பட்ட கூர்வாளாகத் தெரியும் பங்களாதேஷ் இம்முறை உலகக் கிண்ணத்தில் கவனிக்கவேண்டிய அணி.

(முந்தைய கட்டுரையில் இவர்கள் பற்றி எழுதியதையும் வாசிக்க)


நியூ சீலாந்து 

அதிரடித் துடுப்பாட்ட வீரராகவும், ஆக்ரோஷமான தலைவராகவும் இருந்து அணியை வழிநடத்திவந்த பிரெண்டன் மக்கலமின்  ஒய்வு அணியை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் ஒரு சிறந்த உறுதியான அணி இப்போதும் களம் புகுகிறது.

இப்படித் தான் ஆரம்பித்து 'விளையாட்டு'க்கு நியூ சீலாந்து அணி பற்றி எழுதியிருந்தேன்.
அதேபோல கலக்கி இருந்தார்கள் நேற்று.
போதாக்குறைக்கு மக்கலமின் ஆக்ரோஷமான தலைமைத்துவத்தைத் தாண்டி முன்னைய மார்ட்டின் க்ரோவின் மதிநுட்பத்தையும் சேர்த்ததாக அமைந்திருந்தது இந்தப் புதிய நியூ சீலாந்தின் வியூகம்.

இது தொடர்ந்தால் முதல் தடவையாக நியூ சீலாந்து வசம் ஒரு உலகக்கிண்ணம்.

கப்டில், வில்லியம்சன், ரொஸ் டெய்லர், லூக் ரொங்கி, கோரி அண்டர்சன், எலியட்  இவர்களோடு புதிய புயல் கொலின் மன்றோவும் சேர்ந்துகொள்ள ஓட்டக் குவிப்பில் மற்ற அணிகளை பயமுறுத்தும் நியூ சீலாந்தின் பந்துவீச்சும் பக்குவமானது.

சௌதீ, போல்ட் , மில்னே, மக்லேனகன் என்று உறுதியான, நிரூபிக்கப்பட்ட பந்துவீச்சாளர்கள்.
எப்போதுமே உயர்தரத்தில் இருக்கும் நியூ சீலாந்து தர முத்திரை கொண்ட களத்தடுப்பு.

இந்த அணியும் எப்போதுமே கனவாகிப் போய்க்கொண்டிருக்கும் உலகக்கிண்ணம் ஒன்றை இம்முறையாவது வசப்படுத்திக்கொள்ள இம்முறை தங்கள் இளமையும் அனுபவமும் சேர்ந்த அணியுடன் களம் காண்கிறது.

நேற்றிரவு போட்டி இவர்களின் துல்லியமான சுழல்பந்து வீச்சின் துடிப்பின் சாராம்சமும் காட்டிப் போயுள்ளது.


பாகிஸ்தான் 

திறமையும் அனுபவமும் ஆக்ரோஷமும் இருந்தும் எப்படியோ கவிழ்ந்து விடும் ஆச்சரியமான அணி இது.
இழுபறிகளுடன் கூடிய அணித்  தெரிவுகள், தலைவர் அப்ரிடியின் அண்மைக்கால தடுமாற்றங்கள் என்பவற்றோடு இந்தியப் பயணம் பற்றி இருந்த பாதுகாப்பு கெடுபிடி சர்ச்சைகளும் அணியைக் கொஞ்சமாவது நிலைகுலைய செய்துள்ளன எனலாம்.

அப்ரிடி, ஹபீஸ், வஹாப் ரியாஸ், ஷோயிப்  மாலிக் ஆகிய வயதேறும் வீரர்கள் அணிக்கு அனுபவமா பாரமா என்பதை சரியாகத் தீர்மானிக்க முடியாதளவு ஏற்றமும் இறக்கமுமாக இவர்களது பெறுபேறுகள்.

பார்க்கப்போனால் மீள்வருகை  புரிந்துள்ள மொஹம்மத் அமீரின் துல்லியப் பந்துவீச்சு மட்டுமே இப்போது இவர்களது துரும்புச் சீட்டுப் போலத் தெரிகிறது.

சுழல் பந்து வீசும் சகலதுறை வீரர் இமாட் வசீமும், விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர் (இவரை பாகிஸ்தானிய ஏபி எனலாமா?) சர்ப்ராஸ் அஹ்மத், நெடிதுயர்ந்த முஹமட் இர்பான் ஆகியோர் பாகிஸ்தானின் இன்னும் மூன்று நம்பிக்கை நட்சத்திரங்கள்.

ஒற்றுமையும், சர்ச்சைகள் இல்லாத அணியும், மூத்த வீரர்களின் திடமான தொடர்ச்சியான பெறுபேறுகளும், அப்ரிடியின் மீள் எழுச்சியுமே பாகிஸ்தானை அரையிறுதி வரை அழைத்துச் செல்லக் கூடியவை.

அத்துடன் இந்தியாவை வெற்றிகொள்ள வேண்டியிருப்பதும்  இவர்கள் மீதான மேலதிக அழுத்தமாக மாறியுள்ளது.

இன்று பாகிஸ்தானின் துடுப்பாட்டம் மீண்டும் formக்குத் திரும்பியிருப்பதும், குறிப்பாக அப்ரிடியின் அதிரடி சரியாக அமைந்ததும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய உற்சாக மாத்திரை.

-----------------------------

கணிப்புக்கள் என்று இல்லாமல் அணிகளின் மீதான முன்னோட்டப் பார்வையாக இவற்றை வழங்கியிருக்கிறேன்.

 துரித கிரிக்கெட் திருவிழாவை .ரசிப்போம்.

புதிய சாதனைகள், புத்தம்புதிய சுவாரஸ்யங்கள், இன்னும் முக்கிய விடயங்கள் வருகையில் இடையிடையே சந்திப்போம்.
ஒவ்வொரு நாள் போட்டி பற்றியுமே சிறு குறிப்புகளாக இடுகைகள் தர விழைகிறேன்.
பார்க்கலாம்.

இன்று கொஞ்சம் தாமதமாக நேற்றைய நாக்பூர் போட்டி - நியூ சீலாந்து வெற்றி பற்றி பதிவு ஒன்றை எதிர்பாருங்கள்.

உங்கள் கருத்துக்கள் + காத்திரமான விமர்சனங்கள் பின்னூட்டங்களாக எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner