March 16, 2016

இந்தியாவில் அரங்கேறும் துரித கிரிக்கெட் திருவிழா !!!- 6வது உலக T20 – WT20

இதுவரை இறுதியாக 2015 இறுதிப் போட்டிக்கான முன்னோட்டம் எழுதிய பின்,

கங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா? அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா?


சோம்பல் காரணமாக எந்தவொரு விளையாட்டுக் கட்டுரையும் எழுதாமல் இருந்த எனக்கு அன்புத் தம்பி ஒருவர் புதிதாக ஆரம்பித்துள்ள தனது விளையாட்டு தளத்துக்கு உலக T20 கிண்ணம் பற்றி எழுதித் தருமாறு கேட்ட வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை

எனினும் T20 போட்டிகள் பற்றி கணிப்பு செய்வது என்பது பவர் ப்ளே நேரம் பவுன்சருக்கு ஸ்வீப் செய்வது போல ரிஸ்க்கானது.
ஆனாலும் ஏதோ இத்தனை காலம் கிரிக்கெட் பார்க்கும் அனுபவமும், ரசிகனாக அறிந்த விடயங்களையும் வைத்து இந்த முன்னோட்டம்

இந்தியாவில் அரங்கேறும் துரித கிரிக்கெட் திருவிழா !!!- 6வது உலக T20 – WT20 

-------------------------

"துரித வேகப் போட்டிகளாகவும், ஒரு சில பந்துகளிலேயே போட்டியின் போக்கு மாறிவிடக் கூடிய இயல்புடையதுமான இவ்வகைப் போட்டிகளில் கணிப்புகள், ஊகங்கள் செய்வது என்பது மிக மிக சிரமமானதும், அதிர்ஷ்டத்தையே நம்பக் கூடியதுமானது.

2007 முதல் நடந்து வரும் உலக T20 போட்டித் தொடர்களில் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புடைய அணியாக ஒவ்வொரு முறையும் வல்லுனர்களால் முத்திரை குத்தப்பட்ட அணியும் கிண்ணம் வெல்லாமலேயே போயுள்ளன (2014 மட்டும் விதிவிலக்கு) .

எனினும் வீரர்கள்,அணிகள் அண்மைக்காலமாக விளையாடும் பாங்குகளின் அடிப்படையில் 2016 உலக T20 கிண்ணம் பற்றிய சுருக்கமான பார்வை."

----------------------
 விளையாட்டு தளத்துக்கு எழுதிய கட்டுரையில் சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இந்தப் பதிவு...


இதோ  அதோ  என்று பார்த்திருந்த உலக T20 நேற்று ஆரம்பமாகியிருக்கிறது.
முன்னதாகவே இம்மாதம் 8ஆம் திகதியன்று ஆரம்பித்து ஆறு நாடுகள் வெளியேறிய பிறகும் இன்னும் 'ஆரம்பிக்கவே இல்லை' எனுமாறு தோன்றுவது தான் இரண்டு பகுதிகளாக இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படும் ICCயின் கைங்கர்யம்.

நேற்று ஆரம்பித்த  முக்கியமான Super 10 சுற்றின் முதல் போட்டியில், போட்டிகளை நடத்தும் நாடும், இம்முறை கிண்ணத்தை வென்றெடுக்கும் வாய்ப்பை அதிகமாகக் கொண்டதுமாகக் கருதப்படும் இந்தியா - இன்னொரு பலம் வாய்ந்த T20 அணியான நியூ சீலாந்து அணியிடம் அதிர்ச்சிகரத் தோல்வியை சந்தித்தது இந்த உலக T20 இப்படியான தொடர் அதிர்ச்சிகளைத் தரப்போகிறதா என்ற கேள்வியையும், இது சுழலால் ஆதிக்கம் செலுத்தப்படப் போகிற தொடராக அமையப் போகிறதா என்ற வினாவையும் எழுப்பிவிட்டுப் போயுள்ளது.


சரியான வியூகமும், மதியூகத்துடன் கூடிய நம்பிக்கையும் இருந்தால் எந்தப் பெரிய கொம்பனையும் வீழ்த்தலாம் என்று காட்டியிருக்கிறது கேன்  வில்லியம்சனின் கறுப்புத் தொப்பி அணி.

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே காலஞ்சென்ற மார்ட்டின் க்ரோவுக்கு அஞ்சலி செலுத்தியதும், க்ரோ போலவே தந்திரோபாயத்தை வில்லியம்சன் பயன்படுத்தியதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.

இந்தியாவின் பலத்தையும், மூலோபாயத்தையும் பயன்படுத்தியே இந்தியாவை சுருட்டியடித்த நியூ சீலாந்து எல்லா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அவர்களது கனவான் தன்மையான ஆட்டம் மூலமாக எல்லா நாட்டு ரசிகர் மத்தியிலும் ஆதரவைப் பெற்றுள்ள நியூ சீலாந்து, நேற்றைய வெற்றிக்குப் பிறகு இந்திய அணியைப் பிடிக்காத அனைத்து ரசிகரினதும் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ள 5 T20 சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் வென்றுள்ளது நியூ சீலாந்து.

----------------------------------

இனி ஒவ்வொரு நாளும் இரவு கிரிக்கெட் திருவிழா தான்.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் நடந்த உலகக்கிண்ணக் கிரிக்கெட் திருவிழாவைத் தொடர்ந்து இப்போது இந்த இருபது ஓவர் துரித கிரிக்கெட் கோலாகலம்.

16 நாடுகள் பங்குபற்றும் தொடரில், முதல் பகுதியாக இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில் டெஸ்ட் அந்தஸ்துடைய சிம்பாப்வேயுடன் சேர்த்து ஆறு அணிகள் வெளியேறியிருக்க, 
அண்மைக்காலமாக உறுதியான அணியாக முன்னேறிவரும் பங்களாதேஷும், டெஸ்ட் அந்தஸ்துக் கேட்பதற்கு தகுதியான அணியாகத் தன்னை மாற்றி வரும் - சகலவிதமான உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்றுவரும் ஆப்கானிஸ்தானும் 'பெரிய' அணிகளுடன் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.

 முதற்சுற்றின்  ஆட்டங்களில் ஒரு பிரிவின் போட்டிகள் இமாலயப் பிரதேச காலநிலை சீர்கேட்டில் குழம்பியும் கழுவியும் பட்டுப்போக, ஓமான் அயர்லாந்து அணிக்கு வழங்கிய அதிர்ச்சித் தோல்வி, ஆப்கானிஸ்தான் சிம்பாப்வே அணிக்கு எதிராகப் பெற்ற அபாரமான பெரு  வெற்றி ஆகியவை தவிர ஏனைய முடிவுகள் எதிர்பார்த்தனவாகவே அமைந்தன.

டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக முன்னேற்றம் கண்டுவந்த அயர்லாந்து அணி எந்தவொரு போட்டியிலும் வெல்லாமல் (பங்களாதேஷுக்கு எதிரான போட்டி மழையினால் கைவிடப்பட்டது) வெளியேறியதைப் போலவே, இளைய வீரர்களுடன் நம்பிக்கை தரும் அணியாக முன்னேறி வரும் சிம்பாப்வே அணியும் முதற்சுற்றோடு வெளியேறியது ரசிகர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமே.

எனினும் ஆப்கானிஸ்தானும் (பிரிவு 1இல்), அண்மையில் ஆசியக் கிண்ண T 20 போட்டிகளில் இறுதிப் போட்டிவரை வந்து அசத்திய பங்களாதேஷும் (பிரிவு 2இல்) ஏனைய அணிகளுக்கு சவால் விடக் கூடியவை என்பதில் ஐயமில்லை.

இதுவரை 5 தடவை நடந்துள்ள உலக T20 போட்டித் தொடர்களில் எந்தவொரு அணியுமே இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றதில்லை.
அத்துடன் போட்டிகளை நடத்திய நாடும் இதுவரை கிண்ணம் வென்ற வரலாறு இல்லை.

 இதுவரையில் உலக T20 போட்டித் தொடரை நடத்திய நாடுகளில் இலங்கை மட்டுமே இறுதிப் போட்டி வரையாவது முன்னேறியுள்ளது.

 இது வரை வென்ற அணிகள்.

போட்டிகளை நடத்திய நாடுகளின் பெறுபேறுகள்..இலங்கை அணி மூன்று தடவை இறுதிப் போட்டிகளிலும் (ஒரு தடவை வெற்றியாளர் - 2014 - நடப்பு சம்பியன்கள்), இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரு தடவைகள் இறுதிப்போட்டிகளில் (தலா ஒரு தடவை சம்பியன்) விளையாடியும் உள்ளன.

இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் ஒவ்வொரு தடவை வெற்றியாளர்கள்.

எல்லாவிதமான சர்வதேசக் கிண்ணங்கள், உலகக்கின்ணங்களையும் வென்று வசப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு வசப்படாத ஒரேயொரு கிண்ணமும் இதுவே தான்.

தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து ஆகிய அணிகள் 50 ஓவர் உலகக்கிண்ணம் வெல்லாததைப்  போலவே இந்த Tஉலக 20 கிண்ணங்களையும் இதுவரை வெல்ல முடியவில்லை.

T 20 போட்டிகளில் மன்னர்களாக விளங்கி வரும் இந்தியாவில் முதன்முறையாக உலக T 20 கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

2007இல் முதன்முறையாக விளையாடப்பட்ட உலக T 20 போட்டிகளில் இந்தியா சம்பியனான  பிறகே IPLஇன் ஆரம்பம் என்று கிரிக்கெட் உலகில் ஒரு புது யுகப் புரட்சியாக T 20 போட்டிகள் பிரம்மாண்டமாகி கிரிக்கெட் உலகையே மாற்றிப்போட்டன.

இம்முறை நடைபெறும் உலக T20 திருவிழாவும் கிரிக்கெட்டில் மிக வெற்றிகரமான ஒரு தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011இல் உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷில் நடந்தபோது, சொந்த மண்ணில் வைத்து உலகக்கிண்ணம் வென்ற முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா உலக T20 வரலாற்றையும் மாற்றி எழுதுமா என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வியுடன் காத்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 3 வரை இந்தியாவின் சென்னை தவிர்ந்த ஏனைய முக்கிய மைதானங்களில் எல்லாம் நடைபெறும் T20 திருவிழாவில் 
இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மிகப் பலம் வாய்ந்த , கிண்ணம் வெல்லக்கூடிய அணிகளாகக் கருதப்படுகின்றன.

இவை இரண்டுக்கும் சவால் விடுக்கக்கூடிய அணிகளாக அண்மைய காலங்களில் இளையவர்களை மையப்படுத்தி துரித வேகக் கிரிக்கெட் போட்டிகளுக்காகக் கட்டியமைக்கப்பட்ட அணிகளான நியூசீலாந்தும், இங்கிலாந்தும் காணப்படுகின்றன.

ஆனால், தனிப்பட்ட முறையில் தன்னம்பிக்கையும் வெற்றிபெறும் வேகமும் கொண்டு முன்னேறி வரும் பங்களாதேஷ் அணியும் இம்முறை பெரிய அணிகளுக்கு சவால் விடக் கூடியதாகத் தெரிகிறது.

இந்த சுவாரஸ்ய கோலம் கடந்த உலக T20 நடந்த நேரம் அரையிறுதிக்கான அணிகள் தெரிவாக முதல் நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது..
2009 முதல்...
2009இல் வெற்றியாளர் - பாகிஸ்தான் நடத்திய நாடு - இங்கிலாந்து
2010இல் வெற்றியாளர் - இங்கிலாந்து நடத்திய நாடு - மேற்கிந்தியத்தீவுகள்
2012இல் வெற்றியாளர் - மேற்கிந்தியத்தீவுகள் நடத்திய நாடு - இலங்கை
2014இல் வெற்றியாளர் - ?? நடத்திய நாடு - பங்களாதேஷ்.
அதே கோலத்தில், 2012இல் போட்டிகளை நடத்திய இலங்கை அணி சம்பியனானது.
எனவே இம்முறை, கடந்த 2014இல் போட்டிகளை நடத்திய பங்களாதேஷ் சம்பியனாகுமோ?
இப்போதைய புலிகளின் formஐப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.
அதிலும் அவர்களது முதலாவது T20 சர்வதேச சதத்தையும் தமிம் இக்பால் ஓமான் அணிக்கு எதிராகப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
(இக்பாலின் இப்போதைய #WT20 சராசரி 233)துரித வேகப் போட்டிகளாகவும், ஒரு சில பந்துகளிலேயே போட்டியின் போக்கு மாறிவிடக் கூடிய இயல்புடையதுமான இவ்வகைப் போட்டிகளில் கணிப்புகள், ஊகங்கள் செய்வது என்பது மிக மிக சிரமமானதும், அதிர்ஷ்டத்தையே நம்பக் கூடியதுமானது.
2007 முதல் நடந்து வரும் உலக T20 போட்டித் தொடர்களில் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புடைய அணியாக ஒவ்வொரு முறையும் வல்லுனர்களால் முத்திரை குத்தப்பட்ட அணியும் கிண்ணம் வெல்லாமலேயே போயுள்ளன (2014 மட்டும் விதிவிலக்கு) .
எனினும் வீரர்கள்,அணிகள் அண்மைக்காலமாக விளையாடும் பாங்குகளின் அடிப்படையில் 2016 உலக T20 கிண்ணம் பற்றிய சுருக்கமான பார்வை.


பிரிவு 1 

நடப்பு சம்பியன்கள்  - இலங்கை 

நடப்பு வெற்றியாளர்கள் என்ற மகுடம் இருந்தும், அதற்கேற்ற எந்தவொரு குணாம்சமும் இல்லாமல், மிகத் தடுமாற்றம், நம்பிக்கையீனம், அணியில் பலவீனம் என்று கைவசம் இருக்கும் கிண்ணத்தை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்புக்கள்  மிகக் குறைந்த ஒரு அணியாகவே தெரிகிறது.
இறுதி நேரத் தலைமை மாற்றம், அணித் தெரிவில் ஏராளமான சிக்கல்கள், துடுப்பாட்ட வரிசையில் தளம்பல், அனுபவம் வாய்ந்த வீரர்களின் தடுமாற்றம் - விளையாடும் திறன் (form ) இழப்பு என்று பல்வேறு காரணிகளால் இலங்கை அணி அரையிறுதிக்கு செல்லக் கூடிய வாய்ப்புக்கள் மிகக் குறைந்த ஒரு அணியாகவே இம்முறை தெரிகிறது.

வழமையாகவே உலகக்கிண்ணம் என்று வந்தாலே உறுதியான அணியாக எழுந்து நிற்கும் இலங்கை அணி, 1996ஆம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் 1999இல் முதற்சுற்றோடு  வெளியேறியதைப் போல இம்முறையும் நடந்துவிடுமோ என்று ரசிகர்கள் கலங்கிப் போயுள்ளார்கள்.
முக்கிய துரும்புச் சீட்டான லசித் மாலிங்கவின் காயமும், தொடர்ச்சியாக சறுக்கி வரும் டில்ஷானும் இலங்கை அணிக்கு முக்கியமான பாதகமான விடயங்கள்.
அணித் தலைவர் அன்ஜெலோ மத்தியூஸ் வீறுகொண்டு எழுந்தால் வாய்ப்புண்டு.
ஆடுகளத் தன்மைகள் ஆதரவாக இருந்தாலும் அணியின் தடுமாற்றம் இலங்கை அணியைப் பற்றி பெரிய வினாக்குறியையே தொங்கவிட்டுள்ளது.
இலங்கை ரசிகர்கள் முதலில் நாளை ஆப்கானிஸ்தானை வெல்லட்டும், அதற்குப் பிறகு அடுத்த சுற்ற்றைப் பற்றி யோசிக்கலாம் என்னும் நிலையில் இருக்கிறார்கள்.


இங்கிலாந்து 

T20 விசேடத்துவம் பெற்ற வீரர்களால் கட்டியமைக்கப்பட்ட இந்த இளைய அணி எந்த ஆடுகளம், எப்படியான சூழலையும் வெற்றிகொள்ளக் கூடிய நம்பிக்கை கொண்ட அணியாகத் தெரிகிறது.
இந்தக் குழாமில் வயது கூடிய வீரருக்கே (லயம் ப்ளங்கெட் ) 30 வயது தான்.
மோர்கனின் தலைமையிலான இந்த அணியில் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்கள் அண்டர்சன், ப்ரோட் ஆகியோருக்கே இடம் இல்லை என்னும் அளவுக்கு போட்டித் தன்மையும் பெறுபேறுகளும் காட்டும் திறமையான வீரர்கள் நிறைந்துள்ளார்கள்.
வழமையாக இங்கிலாந்தின் பலவீனமாக இருக்கும் சுழல்பந்துவீச்சும் இம்முறை ரஷிட், மொயீன் அலி ஆகியோரால் உறுதியானதாகத் தெரிகிறது.

ஆரம்ப வரிசை ரோய் - ஹேல்ஸ் முதல், ரூட், மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ்  என்று அடித்து ஆட அதிரடி வீரர்கள் மற்றும் துல்லியமான வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட இங்கிலாந்து இம்முறை கவனிக்கப்படக்கூடிய அணி.

2010இல் யாரும் எதிர்பாராமல் போல் கொலிங்க்வூட்  தலைமையில் வெற்றிக்கிண்ணம் பெற்றது போல, இம்முறை மோர்கனின் தலைமையில் கிண்ணம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


தென் ஆபிரிக்கா 

எப்போதும் திறமையான, முழு நிறைவு பெற்ற அணி, ஆனாலும் எப்போதுமே உலகக்கிண்ணம் வெல்லாத துரதிர்ஷ்ட அணி இது.
தொடர்ச்சியாக வெற்றி வலம் வந்துகொண்டிருந்த தென் ஆபிரிக்க அணிக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த சில தோல்விகள் அணியின் கட்டமைப்பைக் கொஞ்சமாவது கேள்விக்குரியதாக மாற்றியுள்ளன.

டூ ப்லெசி தலைமையிலான அணி உறுதியாகத் தெரியும்போதும், ஒருநாள் போட்டிகளில் எல்லாம் அடித்தாடிக் கலக்கும் டீ வில்லியர்ஸ் T20 போட்டிகளில் தடுமாறுவது பெரும் ஆச்சரியத்தை ஒரு பக்கம் வழங்க, மீண்டும் அணிக்குள் விக்கெட் காப்பாளராக வந்துள்ள டீ கொக்குடன் ஆரம்ப வீரராகக் களமிறங்குவது ஏபியா அம்லாவா என்ற கேள்வி மறுபக்கம் தொக்கி நிற்கிறது.
ஏபி  அநேகமாக நான்காம் இலக்க வீரராக துடுப்பாடக் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறேன்.

வேகப்புயல் ஸ்டெயின் மற்றும் சகலதுறை வீரர் டுமினி ஆகியோரின் சமீப காலத் தடுமாற்றங்கள் அணிக்கு சின்ன சலனத்தைக் கொடுத்துள்ளன.

ஆனாலும் களத்தடுப்பும், சகலதுறைத்  திறமையும் கொண்ட தென் ஆபிரிக்கா இந்திய ஆடுகளங்களில் இம்ரான் தாஹீரையும் , எந்த ஆடுகளங்களிலும் தனது வேகத்தால் அசரடிக்கக் கூடிய புதிய புயல் ரபடாவையும் நம்பியுள்ளது.

வெற்றிக் கிண்ணம் ஒன்றைப் பெறவேண்டும் என்ற வெறி தென் ஆபிரிக்காவை உத்வேகம் பெறச் செய்யும்.


மேற்கிந்தியத் தீவுகள் 

உலகம் முழுவதும் உள்ள T20 லீக்குகளில் அதிக விலைமதிப்புடைய நட்சத்திரங்கள் கொண்ட இந்த அசகாயசூர அணி, உள்வீட்டு அரசியல்கள், ஊதிய, ஒப்பந்த சிக்கல்கள் காரணமாகப் பாதிப் பலத்துடனேயே பயணிக்கிறது.

அதிரடி வீரர் கிறிஸ் கெயில், அசத்தல் சகலதுறை நட்சத்திரம் ட்வெயின் பிராவோ, போட்டிகளை துரிதமாக மாற்றக்கூடிய சகலதுறை நட்சத்திரங்கள் டரன் சமி, அன்றே ரசல், அதிரடி துடுப்பாட்ட வீரர் மார்லன் சாமுவேல்ஸ் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் இல்லாத ஒன்று ஒற்றுமையும், சேர்ந்து வெல்லவேண்டும் என்ற உத்வேகமும்.

இவையும் சேர்கையில் 2012இல் வென்றது போல மேற்கிந்தியத் தீவுகள் உற்சாகமாக வெற்றிகள் குவிக்கும்.
அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சுனில் நரைன், பொல்லார்ட், லென்டில்  சிமன்ஸ், டரன் பிராவோ போன்றோர் விலகியது பெரும் இழப்பு.

இன்னும் அணையா தீ போல அணிக்குள்ளே பல்வேறு பிரச்சினைகள் நிழலாடிக் கொண்டு இருந்தாலும், அணித் தலைவர் சமி இந்த உலக T20 தொடர் முடியும் வரையாவது சமாளித்துக் கொண்டுசெல்வார் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

நட்சத்திரங்கள் ஜொலிக்கும் போட்டிகளில் எந்தப் பெரிய அணியாக இருந்தாலும் துவம்சம் செய்துவிடும் இந்தக் கொண்டாட்ட அணியை யாருமே குறைத்து மதிப்பிட முடியாது.


ஆப்கானிஸ்தான் 

எல்லா கிரிக்கெட் ரசிகர்களதும் மனம் கவர்ந்த , ஆசியாவின் இளைய அசத்தல் அணி.
திறமை கொட்டிக் கிடக்கிறது.
அதேபோல அசுர பலமும், பயிற்சிகள் மூலமாக உறுதியும் சேர்ந்த ஒரு உத்வேகமான அணி.
இதன் அசுர வளர்ச்சி ஆச்சரியமானது.
'சின்ன' அணிகளில் மிகப்பலமானதாகத் தெரிகிற ஆப்கானிஸ்தான் உலகக்கிண்ணப் போட்டிகள் போன்ற சர்வதேச அரங்கில் பெரிய அணிகளுக்கு சவால் விடுவதில் சற்றுப் பின்னேயே நிற்கிறது.
அதை இம்முறை மாற்ற முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

திறமையான சகலதுறை வீரர் அஸ்கர் ஸ்டனிக்சாயின் வழிநடத்தலில் அதிரடியாகக் கலக்குமாரம்பத் துடுப்பாடும் விக்கெட் காப்பாளர் மொஹமட் ஷசாத், ஒவ்வொரு போட்டியிலும் கலக்கும் சகலதுறை வீரர் - முன்னாள் தலைவர் மொஹமட்  நபி, வேகப்பந்து வீச்சாளர்கள் சட்றான் மற்றும் ஹமீட் ஹசன் என்று சர்வதேசத் தரம் வாய்ந்த நட்சத்திரங்கள் கொண்ட அணி.

இன்னும் இளைய வீரர்கள் அணியில் சர்வதேச அரங்கில் முத்திரை பதிக்கக்  காத்துள்ளார்கள்.
எந்தத் தரமான அணியும் கொஞ்சம் சறுக்கினாலும் சாய்த்துவிடும் இந்த ஆப்கன் அணி.

------

பிரிவு 2 அணிகள் பற்றிய பார்வையும் இன்னும் சில சுவாரஸ்ய விடயங்களும் அடுத்த இடுகையில்..

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner