November 26, 2014

உலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி !!! - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது.
7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்..

சொந்த மண்ணில் வைத்தே இலங்கை அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றுப்போன இங்கிலாந்தினால், இலங்கையில் வைத்து  இலங்கை அணியை வீழ்த்துவது சிரமமானதே என்று அனைவரும் இலகுவாக ஊகிக்கக்கூடிய ஒன்று தான்.

ஆனால் 2007இல் இங்கிலாந்து இறுதியாக ஒரு முழுமையான ஒருநாள் தொடருக்கு இலங்கை வந்திருந்த நேரம் இலங்கை 3 - 2 என தொடரை இழந்திருந்தது.

அப்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்துக்கு தலைவர் போல் கொல்லிங்வூட்.

அப்போது விளையாடிய அணிகள் இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள்.
அத்தோடு இலங்கையின் தற்போதைய அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து அணியின் அனுபவக் குறைவு மற்றும் ஆசிய ஆடுகளங்களில் தம்மை நிரூபித்த வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் கொலிங்வூட் ஆகியோர் மற்றும் 2007ஆம் ஆண்டு தொடரில் பிரகாசித்த ஓவைஸ் ஷா ஆகியோரும், ஸ்வான், ப்ரோட் ஆகியோரும் இப்போது அணியில் இல்லை.

எனினும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செய்து வரும் இளைய இங்கிலாந்து வீரர்களான ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ரவி போப்பரா, ஜோ ரூட் என்று பலர் இங்கிலாந்துக்கு உலகக்கிண்ண எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் ஆசிய ஆடுகளங்கள் இவர்களுக்கான பரீட்சைகளாக இருக்கும்.
அத்துடன் அணித் தலைவர் அலிஸ்டயார் குக்கின் தலைமை மற்றும் துடுப்பாட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதால், இங்கேயும் ஓட்டங்கள் வராவிட்டால் அழுத்தம் அதிகரிக்கும்.பதவி மோர்கனிடம் போனாலும் ஆச்சரியம் இல்லை.

இங்கிலாந்து இலங்கையுடன் இலங்கை மண்ணில் விளையாடியுள்ள 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கே நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
10 தோல்விகள், இரு போட்டிகள் மழையினால் குழம்பியுள்ளன.

இம்முறையும் இதிலிருந்து மாற்றம் வருவதாக இல்லை.
7 போட்டிகள் கொண்ட நீளமான  தொடராக இருப்பதால் இலங்கை அணி வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி விளையாடும்போது இலங்கை அணி பலவீனப்பட்டால் ஒழிய, இங்கிலாந்து அணியினால் போட்டிகளை வெல்வது அபூர்வம்.

மழையும் தனது விளையாட்டை பெரும்பாலான போட்டிகளில் காட்டும் என்றே காலநிலையைப் பார்த்தால் தோன்றுகிறது.
ஆனாலும் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளுக்கு மேலதிக நாள் (Reserve Day) இருப்பதால் மழையையும் மீறி போட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

------------------
எனினும் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தது போல குகைக்குள்ளே வரும் அப்பாவி மான்களை வேட்டையாட நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கும் கம்பீர சிங்கமாக இலங்கை அணி இல்லை.

ஒரு இந்திய சுற்றுலாவும் அங்கே தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட 5 -0 என்ற படுதோல்வியும் இலங்கை அணியை நொண்டச் செய்திருக்கிறது.
அணித் தலைவர் மத்தியூஸ் சொல்வது போல ஒரு தொடர் தோல்வியானது ஒரேயடியாக ஒரு அணியை மோசமான அணியாக மாற்றிவிடாது தான்.
ஆனால் ஐந்து போட்டிகளிலும் கண்ட இப்படியான தோல்வி இலங்கை அணியின் மூன்று மிகப் பலவீனமான பகுதிகளைக் காட்டியுள்ளது.1. டில்ஷானுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கும் அடுத்த வீரர் யார் என்ற மிகப் பெரிய கேள்வி 
இந்தியாவில் மூன்று பேரை டில்ஷானுடன் தேர்வாளர்கள் இறக்கிப் பார்த்தார்கள்.
தரங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல
மூவரில் உபுல் தரங்க, அனுபவம் வாய்ந்தவர். நிதானம் மிக்கவர். ஆரம்பத்தில் ஓட்டவேகம் குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பின்னர் வேகமாகக் குவிக்கும் ஓட்டங்கள் மூலமாக அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்.

இலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் 8ஆம் இடத்திலும் சதங்கள் குவித்தோர் வரிசையில் 5 ஆம் இடத்திலும் இருக்கிறார்.
Strike Rate - 73.69 - சதங்கள் 13

இலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தோர்
அட்டவணை 1


அண்மைக்காலத்திலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடிவருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பெரிதாக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லையே.

இவரை விட இன்னொரு சிறப்பான தெரிவு என்றால் அது தானாக விரும்பி ஆரம்ப வீரராகக் களமிறங்குகிறேன் என்று முன்வரும் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே.
ஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாடும்போதெல்லாம் ஓட்டங்களைக் குவித்துள்ள ஒருவர்.

32 இன்னிங்க்சில் நான்கு சதங்கள், 7 அரைச் சதங்கள். strike rate இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவை விட மட்டுமே குறைவு.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இலங்கை வீரர்களில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றோர்
அட்டவணை 2


இப்படிப்பட்ட ஒருவரை, இலங்கைக்கு இந்த வேளையில் அத்தியாவசியத் தேவையான ஆரம்பத் தூணை, மத்திய வரிசைக்கு அனுபவம் தேவை என்று தேர்வாளர்கள் தடை போட்டு வைத்திருப்பது உலகக்கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் எவ்வளவு பெரிய இழப்பு.

சங்கக்காரவுடன், மத்தியூஸ், திரிமன்னே, சந்திமால் போன்றவர்களும் இப்போது போதிய அனுபவம் பெற்றிருப்பதால் மஹேலவை ஆரம்பத்துக்கு அனுப்புவதில் இன்னும் என்ன சிக்கல்?

இந்தத் தொடரிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையையை இலங்கை இன்னும் பரீட்சிக்கப் போவதாகவும், இதைத் தொடர்ந்து இலங்கை செல்லவுள்ள நியூ சீலாந்து தொடருக்கு ஒரு உறுதியான அணி தயாராகிவிடும் என்று இந்தத் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் மத்தியூஸ் சொன்னதும், அறிவிக்கப்பட்ட அணியில் குசல் இருந்து, தரங்கவோ வேறு எந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரோ இல்லாமல் போயிருப்பது டில்ஷான் & குசல் ஆரம்ப ஜோடி என்பதை உறுதி செய்கிறது.

எனக்கு என்றால் குசல் தனது பலவீனங்களைக் களைவார் என்ற நம்பிக்கை இல்லை;
(குசல் கடைசி 12 இன்னிங்க்சில் ஒரு தரமேனும் அரைச்சதம் பெறவில்லை; அதிலும் கடைசி ஐந்து இன்னிங்க்சில் இரண்டு பூஜ்ஜியங்கள், மேலும் இரு தடவைகள் பத்துக்கும் குறைவு)

எனவே மஹேல இரண்டாவது மூன்றாவது போட்டியிலேயே ஆரம்ப வீரராக அனுப்பப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
கண்டம்பி, ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முதல் 3 போட்டிகளுக்கான குழுவில் இருப்பதால் மத்திய வரிசை பற்றி பயப்படவேண்டிய தேவை இருக்காது எனலாம்.


2. மாலிங்க, ஹேரத்தை விட்டால் பந்துவீச்சாளர்கள் இல்லை ?? 
மாலிங்கவின் காயமும், ரங்கன ஹேரத்தை பாதுகாத்து, சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் முடிவும், சச்சித்திர சேனநாயக்கவின் தடையும் இலங்கை அணியில் வேறு பந்துவீச்சாளர்களே இல்லை என்னும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எல்லா பந்துவீச்சாளர்களையும் போட்டுத் துவைத்து எடுத்த நேரம், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தவோ, விக்கெட்டுக்களை அவசரத்துக்கு எடுப்பதற்கு கூட மத்தியூசுக்கு கைகொடுக்க ஒருவர் இருக்கவில்லை.
மென்டிஸ் எடுத்த விக்கெட்டுக்கள் மிக அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தன.

ஆனால் இப்போது தேர்வாளர்கள் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படையில், உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து அணியில் கடந்த ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர்கள் சீக்குகே பிரசன்ன, சதுரங்க டீ சில்வா இவர்களோடு அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக பல ஆண்டுகள் விளங்கிய நுவான் குலசெகரவும் வெளியே.
குலசேகரவின் சர்வதேச கிரிக்கெட் முடிந்தது என்றே கொள்ளவேண்டியுள்ளது - அடுத்த 4 போட்டிகளுக்கும் அழைக்கப்படாவிட்டால்.
நியூ சீலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரது ஸ்விங் உபயோகமாக இருந்தாலும் வேகம் சடுதியாகக் குறைந்துவருகிறது.

(இவர்களோடு சகலதுறை வீரர் அஷான் பிரியஞ்சனும் கூட)

இப்படி உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு நான்கு மாத காலம் இருக்கும் நிலையில் இனி புதிய பந்துவீச்சாளர்களைத் தேடுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்று தெரியவில்லை.

புதிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேயின் வேகமும் மணிக்கு 140 கிலோ மீட்டரைத்  தொடுவதாக இல்லை. அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து ஆடுகளங்களுக்கு உசிதமான வேக, அதிவேக, ஸ்விங் பந்துவீச்சாளர்களை இலங்கை தேர்வாளர்கள் இந்தத் தொடரில் இனங்கண்டு உறுதிப்படுத்துவார்களா ?

ஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் (இன்னும் உபாதை), தம்மிக்க பிரசாத் ஆகியோரோடு மாலிங்க ஆகிய நால்வரே இப்போதைக்கு உருப்படி போல தெரிகிறது.

3. இலங்கைக்கு எப்போதுமே பலமாக இருந்த களத்தடுப்பில் ஓட்டை 
இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் முதல் மிகப் பெரும் பலமாகவும், அடையாளமாகவும் விளங்கிய களத்தடுப்பு படு மோசமாகவுள்ளது.
வயதேறிய வீரர்கள் என்றால் பரவாயில்லை. இளம் வீரர்களே தடுமாறுவதும் இலகு பிடிகளைக் கோட்டைவிடுவதும் மிகக் கவலையான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற ட்ரெவர் பென்னியை களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக நியமித்திருப்பது பலன்களைக் கொண்டுவருகிறதா என்று இந்தத் தொடரில் கண்டுகொள்ளலாம்.

------------------------

திலின கண்டம்பி (32 வயது) , ஜீவன் மென்டிஸ் (31 வயது), டில்ருவான் (32 வயது) என்று அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே வயதேறிக் காணப்படும் இலங்கை அணிக்கு மேலும் வயதை ஏற்றிவிடுகிறார்கள்.

இம்மூவரும் உள்ளூர்ப் போட்டிகள், மற்றும் பங்களாதேஷ் லீக் போட்டிகளில் பிரகாசித்து நல்ல formஇல் இருப்பவர்கள். உலகக் கிண்ணம் வரை இதை இப்படியே தொடர்ந்தால் இலங்கை அணிக்கு நல்லது தான்.

ஆனால், அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் பிரட் ஹடின், க்றிஸ் ரொஜர்ஸ் போன்றோரைப் பயன்படுத்துதல் போல குறுகிய கால நோக்கத்தில் இலங்கை அணியும் இந்த 'அனுபவ' வீரர்களைப் பயன்படுத்துதல் நலமே.
வாய்ப்புக் கிடைத்த இளையவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தாத நேரம் அணிக்கு உபயோகப்படுவார்கள் என்றால் கண்டம்பி போன்றோரைப் பயன்படுத்துதல் சாலச் சிறந்ததே..

இன்னும் கப்புகெதர, பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோரும் வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்தாலும் யாரை வெளியேற்றுவது?
----------------

இந்தியத் தொடரில்  கன்னிச் சதம் பெற்ற அஞ்சேலோ மத்தியூசும், அடுத்தடுத்த அரைச் சதங்கள் பெற்ற லஹிரு திரிமன்னேயும், ஓட்டங்களை சராசரியாகப் பெற்ற டில்ஷானும் இந்தத் தொடரில் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

மஹேல, சங்கா ஓட்டங்களைப் பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
சங்கக்காரவின் இலங்கை மண்ணில் இறுதித் தொடராக இது அமையும் என்ற எண்ணமும் இத்தொடரின் மீது ஒரு மனம் கனத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

(ரோஹித் ஷர்மாவுக்குக் கொடுத்த உலக சாதனை 264ஐ நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, யாராவது பாதியாவது அடியுங்கப்பா )

முன்பிருந்தே திலின கண்டம்பி மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இவருக்கு சரியான, நீண்ட வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.
அதேபோல ஜீவன் மென்டிஸ்..

இவ்விருவருக்கும் இந்தத் தொடர் திருப்புமுனைத் தொடராக அமையட்டும்.
இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் (வாய்ப்புக் கிடைத்தால்), மொயின் அலி ஆகியோரும் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

மழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.
----------------

இலங்கையை வெள்ளை அடித்து அதே வேகம், தாகத்துடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பற்றியும் அந்த தொடர் பற்றிய பார்வையையும் அடுத்த இடுகையில் பகிரக் காத்திருக்கிறேன்.

-------------------

படங்கள் - Sri Lanka Cricket, ESPN Cricinfo
Stats - ESPN Cricinfo

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அலசல்!

Bavan said...

// மழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.//

வானிலை ஆராய்ச்சிமையக்காரர் அடிக்கடி ஆள்க்காட்டி விரலைத் தொட்டு தொலைப்பாராக! =P

Unknown said...

old stats...Already Sanga reached 12,900 Runs...But here???

ARV Loshan said...

@Mayooran

Yes, This excludes the matches played vs England in this series and Sanga played for Asian XI or World XI.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner