March 14, 2014

அவுஸ்திரேலிய எழுச்சியும் அஞ்ஜெலோவின் ஆசிய ராஜாக்களும்

அவுஸ்திரேலிய அணி தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தக் காட்டிய அந்த உத்வேகம், அணி ஒற்றுமை, சாமர்த்தியம், தங்களின் பலத்தை தக்க சமயங்களில் தக்கவாறு பயன்படுத்திய தலைமைத்துவம்...
எல்லாவற்றையும் விட இறுதி வரை நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் விளையாடிய கணங்கள் என்று டெஸ்ட் போட்டிகள் ஏன் உண்மையான கிரிக்கெட்டின் உன்னத வடிவமாக இன்றும் என்றும் கருதப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன.


என்னதான் பகல் முழுக்க பிசியாக இருந்தபோதிலும் கூட, இந்தப் போட்டிகளின் முக்கிய தருணங்களை highlightsஆக இல்லாமல் நேரலையாகவே பார்த்தது கிரிக்கெட் ரசிகனாக எனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவே கருதுகிறேன்.

உங்களில் எத்தனை பேர் இந்த முக்கிய தருணங்களைப் பார்த்தீர்கள் என்று தெரியாது..

ஆனால் பார்த்திருந்தால், தொடரைத் தீர்மானித்த இறுதி டெஸ்ட் போட்டியின் இறுதி நாளின் கடைசி நிமிடங்கள், அப்பப்பா அற்புதமானவை.

கிட்டத்தட்ட ஒற்றைக்காலில் (மறுகாலின் முழங்கால் உபாதை தரும் வேதனையுடன்) விளையாடி வரும் ரயன் ஹரிஸ் தன் வலியுடனும் முக்கிய தருணங்களில் தலைவரின் அழைப்பை மறுக்காமல் ஏற்று வந்து விக்கெட்டுக்களை எடுத்த தருணங்கள்,
மைக்கேல் கிளார்க் ஒவ்வொரு முக்கிய நேரங்களிலும் வகுத்த வியூகங்கள், பதற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் பந்துவீச்சு மாற்றங்களை செய்த விதம்,
வென்றவுடன் அவுஸ்திரேலிய அணியினர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி வெளிப்பாடு.. அது ஒரு நீண்ட தவத்தின் முடிவில் கிடைத்த வரத்தின் பெருமிதம்.
எத்தனை காலம் இப்படியான வெளிநாட்டுத் தொடர் வெற்றிக்காகக் காத்திருந்தார்கள்.


அவுஸ்திரேலிய ரசிகனாக நான் இவற்றை மெச்சினாலும், தென் ஆபிரிக்கர்கள் போராடிய விதம் எதிரிகளும் பெருமையோடு பாராட்டக் கூடியது.

ஒய்வு பெற்றுச் செல்லும் ஸ்மித் தோல்வியுடன் செல்லக் கூடாது என்பதை மனதில் நிறுத்தி, அடுத்த தலைவர் டீ வில்லியர்ஸ், இன்னுமொரு தலைவருக்குரிய அம்சங்கள் பொருந்திய டூ ப்ளேசிஸ் ஆகியோர் நின்று போராடியது மட்டுமல்ல, அதன் பின்னர் பந்துவீச்சாளராக அணிக்கான பங்களிப்பை வழங்க எதிர்பார்க்கப்பட்ட வேர்ணன் பிலாண்டர் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் உடம்பு முழுக்க ஏற்படுத்திய வலிகளையும் தாங்கிக்கொண்டு நின்று பிடித்தது டெஸ்ட் போட்டிகள் மட்டுமே தரக்கூடிய விருந்து.

அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றியும் தொடர்ச்சியான வெற்றிகளும் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க, உலகின் மிகச் சிறந்த இரு டெஸ்ட் அணிகளின் மோதல் அந்த அணிகளின் ஸ்தானங்களுக்கு ஏற்றாற்போல மிக இறுக்கமாகவே இருந்தது மேலும் திருப்தி.

(என்ன தான் அவுஸ்திரேலியா வென்ற போட்டிகளின் பெறுபேறுகள் பெரிய வித்தியாசம் தந்தாலும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய தென் ஆபிரிக்காவுக்கும் பாராட்டுக்கள் உள்ளன)

தலைவர் மைக்கல் கிளார்க், பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் ஆகியோரது இணைப்பு ஆரோக்கியமானது மட்டுமல்ல, தொடருக்குத் தொடர் அவுஸ்திரேலியாவை மீண்டும் ஒரு தரம் டெஸ்ட் போட்டிகளின் தரப்படுத்தலின் உச்ச சிகரத்தை எட்டும் தூரத்தை அண்மிக்க வைக்கிறது.

ICC ஒவ்வொரு ஆண்டிலும் தரப்படுத்தலின் அடிப்படையில் விருதுகளை வழங்கும் கால எல்லையான ஏப்ரல் முதலாம் திகதி அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலே இருக்கப்போவது உறுதியான போதும், தென் ஆபிரிக்காவை விட 12 புள்ளிகள் குறைவாக இருக்கும்போதிலும் போகிறபோக்கில் தென் ஆபிரிக்க அணியைப் பின் தள்ளிவிடும் என்பது உறுதி.

கடந்த வருடத்தில் இங்கிலாந்திடம் ஆஷசிலும், இந்தியாவிடம் இந்தியாவிலும் படு மோசமாகத் தோற்றுப்போன அவுஸ்திரேலிய அணியிடம் உறுதியில்லாமல் காணப்பட்ட அத்தனை விஷயங்களும் இப்போது உலகின் தரமிக்கவையாக மாறி இருக்கின்றன.

ஆரம்பத் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, தடுமாறாத மத்திய வரிசைத் துடுப்பாட்டம், விக்கெட் காப்பாளரிடமிருந்து முக்கிய பங்களிப்பு ...

குழப்படிகாரன் டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பு இயந்திரம்..
(வோர்னர் தொடர்ச்சியாக ஓட்டங்களை சதம், சதமாகக் குவித்து வருகிறார்)
வயது முதிர்ந்த ஹடின், ரொஜர்ஸ், ஹரிஸ் ஆகியோரின் துடிப்பும் இன்னும் எதிர்காலத்துக்கான இருப்பும்..

out of form and out of team என்று தள்ளி வைக்கப்பட்ட மிட்செல் ஜோன்சனின் தலைமையில் மீண்டும் எழுந்த அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு.
(ஆஷஸ் தொடர் போலவே தென் ஆபிரிக்காவிலும் ஜோன்சன் கொடுத்த முதல் அதிரடி தான் தொடரை அவுஸ்திரேலிய வசப்படுத்தியது.)

இலக்கம் 7இல் உறுதியான தூணாக மாறியுள்ள ஹடின்.
ஸ்மித், டூலன் ஆகியோரின் வரவு.

ஒட்டுமொத்தமாக கிளார்க்கின் அவுஸ்திரேலியா இதே பாதையில் தேவையான சிற்சில மாற்றங்களோடு பயணித்தால் டெய்லர், ஸ்டீவ் வோ ஆகியோரின் அவுஸ்திரேலியாவை நிகர்க்கும்.

----------

இறுதிப்போட்டிகள் என்று வந்தால், அதிலும் இலங்கை அணி விளையாடினால் கடந்த நான்கைந்து வருடங்களாகவே முடிவை எழுதிவைத்துவிடலாம் எனுமளவுக்கு இலங்கை எதிரணிக்கு கிண்ணத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கும் கொடையாளியாகவே இருந்து வந்த பெருமைக்குரிய அணி...

மஹேல, சங்கா, டில்ஷான் என்று அணித்தலைமைகள் மாறிய போதும் இந்த விதியை மட்டும் மாற்ற முடியாதிருந்தது.

ஆனால், இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்த இலங்கைக்கு என்ன மந்திரஜாலம் நேர்ந்தது?

எந்தவொரு போட்டியையும் தோற்காமல் மத்தியூசின் தலைமையிலான இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது.
(அத்துடன் இலங்கை அணி இப்போதைக்கு 9 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்றுள்ளது. 10 தொடர்ச்சியான வெற்றிகளே இலங்கையின் முன்னைய சாதனை)

இலங்கையின் அண்மைக்கால ஆப்பாளர் ஆன விராட் கோளியின் இந்தியா, அடிக்கடி இலங்கைக்கு அதிரடி கொடுத்து வந்த பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் வென்று இறுதிப்போட்டிக்கு இலங்கை வந்த போது, அதிலும் இந்தியாவினால் form ஆக்கப்பட்டு இறுதிக்கு வந்த பாகிஸ்தானை சந்தித்தபோது மெல்லிதாய் ஒரு சந்தேகம்....

மீண்டும் ஒரு இறுதிப் போட்டி சரணாகதியா என்று...

2007 உலகக் கிண்ண இறுதி முதல் அடிவாங்கி அடி வாங்கி பழகியவர்களாச்சே...

ஆனால் இலங்கையின் வெற்றி, அதிலும் அந்த வெற்றி பெறப்பட்ட விதமும் சூழ்நிலையும் தான் இப்போதைய இலங்கை அணியின் ஆரோக்கியமான மாற்றத்தினைக் காட்டி நிற்கிறது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய இணைப்பாட்டங்கள் இரண்டு, கடைசி ஓவர்களில் பாகிஸ்தானின் அதிரடி ஓட்டக் குவிப்பு, ஓட்டக் குவிப்பில் இலங்கை நம்பியிருந்த சங்கக்காரவின் பூஜ்யம், out of form மஹேல, பலம் வாய்ந்த பாகிஸ்தானின் பந்துவீச்சு, இவற்றைத் தாண்டி திரிமன்னே என்ற புதியவரின் சதத்துடன் வெற்றி என்பது புதிதாக எழுதவேண்டிய சரித்திரம் தானே?

அதிலும் இந்த ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கை தனது புதியவர்களின், எதிர்கால அணியின் பலத்தைப் பரீட்சிக்கும் களமாக அமைந்திருந்தது.
இலங்கை ஒருநாள் அணியின் முக்கிய மூவர் - டில்ஷான், குலசேகர, ஹேரத் ஆகியோரை உபாதைகள் காரணமாக இழந்த நிலையில் இலங்கை அணிக்குள் கொண்டுவந்த பரீட்சார்த்த முயற்சிகள் அனைத்துமே சித்தியடைந்திருந்தன.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக லஹிரு திரிமன்னே
நம்பியிருக்கக் கூடிய சுழல் பந்துவீச்சாளராக சச்சித்ர சேனநாயக்க
சகலதுறை வீரராக சத்துரங்க டீ சில்வா
நம்பக்கூடிய அணித் தலைவராக அஞ்ஜெலோ மத்தியூஸ் 

ஆனால், சறுக்கிய ஒருவர் தினேஷ் சந்திமால்.
இது இவரின் Twenty 20 அணித் தலைமையையும் காவு வாங்கும் போலத் தெரிகிறது.
நடைபெறவுள்ள உலக T20 கிண்ணப் போட்டிகளில் IPL பாணியில் சந்திமால் non playing captain ஆக மாற்றப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

மத்தியூஸ் தேவையான பொழுதுகளில் எடுத்த சாமர்த்திய முடிவுகளும், அழுத்தமான தருணங்களை இலாவகமாகக் கையாண்டதும், தானே பொறுப்பெடுத்து finisher ஆக போட்டிகளை வென்று கொடுத்ததும் அவர் மீது பெரியதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கா எப்போதும் போல 2015 வரையாவது இலங்கையின் துடுப்பாட்டப் பெரும் பொறுப்பை ஏந்திச் செல்லக் கூடியவர்.
மஹேல தன் சரிவிலிருந்து இறுதி ஆட்டத்தில் மீண்டது ஆறுதல். ஆனால் மேலும் ஒரு சறுக்கல் அவருக்கான வழியனுப்புதலாக அமையும்.

தன் வேகம், துல்லியம் ஆகியவற்றை இழந்து வருகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவந்த லசித் மாலிங்க மீண்டும் புயலாக எழுந்து வந்தது இலங்கை அணிக்குப் புத்துணர்ச்சி கொடுத்துள்ளது.
உபாதைகள் இல்லாது இது நீடிக்கவேண்டும்.
இம்முறை உலக T20 வெல்வதற்கு மாலிங்கவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையும்.


ஆனால் கேள்வி, டில்ஷான், குலசேகர, ஹேரத் ஆகிய மூவரும் வருகின்ற நிலையில் இவர்களுக்குப் பதிலாக அணிக்குள் இடம்பிடித்த இளையவரின் நிலை?

5வது தடவையாக ஆசியக் கிண்ணம் வென்று இறுதிப் போட்டியின் தொடர் சறுக்கல் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இலங்கை அணியின் திடீர் எழுச்சிக்கு காரணங்கள் யாவை?

எடுத்த எடுப்பிலே 'அவர்' செல்லவில்லை; இதனால் இலங்கை தப்பியது என்று வராதீர்கள்.
இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று அடித்தே ஆகவேண்டும் என்று இலங்கை பூண்ட சங்கல்பமாக இருக்கலாம்.
சங்கா, மஹேல, மாலிங்க போன்றோர் இதை விட்டால் இனியொரு காலம் தங்களால் வராது என்பது தானாகவே அவர்களுக்குள் இருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பி இருக்கலாம்.


அஞ்ஜெலோ தக்க முதிர்ச்சி பெற்றிருக்கிறார். பொன்டிங், ஸ்மித், கிளார்க் போன்றோரும் இப்படித் தான் சில காலம் தடுமாறி, பின் தலைமைத்துவத்தின் நுணுக்கங்கள் கற்றார்கள். இப்போது தான் மத்தியூசின் தக்க காலம் வந்துள்ளது.

இறுதியாக, ஆசியக் கிண்ணத்துக்கு முன்னதாகவே பங்களாதேஷில் கொஞ்சக் காலம் தங்கியிருந்த இலங்கை அணிக்கு காலநிலையும், களநிலையும் மற்ற அணிகளை விட (பங்களாதேஷை அணியாகவே சேர்க்க வேண்டாமே)கை கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி..

இந்த வெற்றி இலங்கை அணியை அடுத்த வருட உலகக் கிண்ணத்தின் favorites ஆக்குகிறதோ இல்லையோ, அடுத்த வாரம் ஆரம்பிக்கும் உலக Twenty 20 கிண்ணத்தில் அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மாற்றும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் வழங்கியிருக்கிறது.

----------

உலக  Twenty 20 கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கும் காலம் முதல் இப்போதெல்லாம் இடையிடையே மட்டும் எட்டிப்பார்க்கும் இடமாக இருக்கும் இந்த வலைப்பதிவை அடிக்கடி இடுகைகள் கொண்டு நிரப்பலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

கடந்த முறை இலங்கையில் இடம்பெற்ற உலக Twenty 20 கிண்ணத்தில் முடியுமானவரை தொடர்ச்சியாக இடுகைகள் இட்டிருந்தேன், மறந்திருக்க மாட்டீர்களே...

அதேவேளை இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், சிறிய இடைவெளியின் பின்னர், மீண்டும் முன்பைப்போல தமிழ் மிரரிலும் விளையாட்டுக் கட்டுரைகள் எழுதுவதாக நினைந்துள்ளேன்.
அன்பாக விசாரித்த நண்பர்களுக்கும், அழைப்பு விடுத்த மதனுக்கும் நன்றிகள்.

உலக Twenty 20 கிண்ணம் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரையோடு வார இறுதி முதல் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்.

உங்கள்  வாசிப்புக்களோடு விமர்சனங்கள், கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

5 comments:

Unknown said...

Thanks anna

Unknown said...

Thanks anna unkalathu t20 vimarsanaththai ethirparkkinren

scenecreator said...

சில காலமாக சொதப்பி வந்த இலங்கை அணி வென்றது மகிழ்ச்சி.அதுவும் எல்லா போட்டிகளிலும் வென்றது சூப்பர்.
20 ஓவர் உலக கோப்பை பொறுத்தவரை வங்கதேசத்தில் நடப்பதால் இந்திய,பாகிஸ்தான்,இலங்கை அணிகளில் ஒன்று வெல்ல வாய்ப்பு அதிகம்.அதுவும் உலக கோப்பை போட்டிகள் என்றால் பாகிஸ்தான் புது வீரியம் பெற்றதுபோல் ஆடும்.அதுவும் இறுதி போட்டி என்றால் உயிரை கொடுத்து ஆடுவார்கள்.இந்தியா பற்றி சொல்ல முடியவில்லை.இலங்கை சமீபத்திய பார்ம் தொடர்ந்தால் முயற்சிக்கலாம்.

L, Waseem Akram said...

Good

Nirosh said...

நிச்சயமாக எழுதுங்கள் அண்ணே... என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும்..! ஆவலுடன் காத்திருக்கிறேன்..!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner