உந்தன் தேசத்தின் குரல்...

ARV Loshan
5
"உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ
செவியில் விழாதா. "

2004 சுனாமியை ஞாபகப்படுத்தும் பாடல் என்பதற்காகவே 2004இன் பின்னர் இந்தப்பாடலை ஒலிபரப்புவதையும் கேட்பதையும் தவிர்த்து வந்திருக்கிறேன்.

எப்போது கேட்டாலும் வரிகளிலும் இசையிலும், இசைப்புயலின் ஆழமான ஒரு ஈர்ப்பின் அடர்வு தொனிக்கும் குரலிலும் தொலைந்திடுவேன்.

அக்காலகட்டத்தில் சூரியனில் நாங்கள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான உதவிகளை சேர்ப்பதற்கும் முன்னெடுத்த 'உதவும் கரங்கள்' திட்டத்துக்கு இப்பாடலின் ரஹ்மான் இசையையும் வாலியின் அமரத்துவ வரிகளையும் பயன்படுத்தியிருந்தோம்.
(எந்த இசை + பாடல் என்று யோசிக்கையில் உடனடியாக நானும் விமலும் பிரதீப்பும் ஏகமனதாக முடிவெடுத்தது இப்பாடலைத் தான்)

ரஹ்மானின் மெட்டின் லயிப்பிலும், இசையோடு சேர்ந்துவரும் ஒரு கடலலைத் தாளம் போன்ற தொனிப்பும், மென் சோகம் தொனிக்கும் இசைக்கருவிகளின் கோர்ப்பும் அக்காலத்தில் ஒரு வகை இயல்பான சோகத்தை எங்கள் மனதுக்குள் ஓட வைத்துக்கொண்டே இருக்கும்.


ஆண்டுகள் சுழன்று மீண்டும் இன்று Vijay TVஇன் Super Singerஇல் இசைப்புயலின் முன்னால் ஒரு இளைஞன் பாடக் கேட்டபோது, அன்றைய நினைவுகள்...

வாலி இப்போது எங்களுடன் இல்லை.
இந்த ஆண்டில் மறைந்த பல பெரியவர்களில் ஒருவர்.

வாலியை ஞாபகப்படுத்திய A.R.ரஹ்மான், வாலி இப்பாடலை எழுதியபோது இலங்கைத் தமிழர் பற்றியும் சொல்லிவைத்தார் என்றார்.
ம்ம்ம்ம்....

ஆழிப்பேரலை கடந்து 9 வருடங்களும் ஒரு நாளும்....
காலம் சுற்றும் வேகம் அதிகம் தான். அத்துடன் கற்றுத் தரும் பாடங்களும் அதிகம் தான்.



"பால் போலுள்ள வெண்ணிலவு
பார்த்தால் சிறு கறையிருக்கும்
மலர்போலுள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலியிருக்கும் "

வாழ்க்கையின் முக்கியமான மகிழ்ச்சியின் தருணங்களைத் தந்து, அத்தோடே வாழ்க்கை என்பது வட்டம் என்பதை ருசுப்படுத்துவதாக பல பாடங்களையும் வடுக்களையும் சில முக்கிய மறைவுகளையும் அந்த மறைவின் வெற்றிடங்களையும் தந்து விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2013இன் இறுதிக்கட்டத்தில் மீண்டும் கவிஞர் வாலியையும்எங்கள் வாழ்க்கையையும் நினைவூட்டிய இன்றைய இரவின் சில நிமிடங்களுக்கு நன்றிகள்.

தாய்நாடு, தமிழா, தேசம், தமிழன், அயல் நாடு, அழைப்பு இப்படி பல சொற்கள் என்ன தான், எவ்வளவு தான் வருந்தி அழைத்தாலும், வலிந்து நினைத்தாலும் வாழ்க்கையுடன் ஒட்டாவிட்டாலும் கூட அதனுடனும் ஒரு இயலாமை சோகம் வந்து இசையுடன் சேர்ந்து மனம் அழும் ஒரு ஆறுதல் சோக சுகம் கூட இந்தப் பாடல் மனதோடு ஒட்டிவிட ஒரு காரணமோ?

----------
படம் : தேசம்(2004)
பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வாலி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்



உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ
செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை நிழல் போல் வராதா.
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானமெங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய்நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?
உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது

இமயம் உனை அழைக்கிறது பல சமயம் உனை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னந்தோப்பு துறவுகள் அழைக்க
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ற நிலாச்சோறுதான் அழைக்க
உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

பால் போலுள்ள வெண்ணிலவு
பார்த்தால் சிறு கறையிருக்கும்
மலர்போலுள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலியிருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புத் தாயின் மடியுன்னை அழைக்குதே தமிழா
உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
செவியில் விழாதா….

Post a Comment

5Comments

Please Select Embedded Mode To show the Comment System.*