ஷங்கர் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட கூர் வாள், மணிரத்னத்தின் பாணியில் குத்திப் பார்த்திருக்கிறது.
கூர்வாளின் இலக்குத் தவறியதா தவறாமல் குத்தியதா என்பதை விட,வாள் வீரியமானது, விஷயமுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறது ராஜா ராணி.
ஷங்கரின் வாரிசுகளில் ஒன்று என்றவுடன் எதிர்பார்ப்பின் அழுத்தமே அவரைத் தடுமாற வைத்துவிடும்.
ஆனால் அட்லீ அதையெல்லாம் அசாதரனமாகத் தூக்கி லாவகமாக இக்கால இளைஞர்களைக் குறிவைத்துப் படமாக்கி, இந்தக் காலத்தின் Trend என்னவோ (அது சந்தோஷத்திலிருந்து சாவு வீடு வரை சரக்கடிப்பதிலிருந்து, சந்தானம், நஸ்ரியா, சர்வசாதாரணமாக வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் என்று நிறைய) அதை சரியான கலவையாகக் கொடுத்து இளைஞர்களை ராஜா ராணி பற்றி பேசச் செய்திருக்கிறார்.
அட்லீக்கு ஒரு கச்சிதமான விசிட்டிங் கார்ட் இது.
மணிரத்னம் கூட இந்தக் காலத்தில் மௌன ராகத்தை எடுத்திருந்தால் இப்படித்தான் எடுக்கவேண்டும்.
இதனால் தானோ என்னவோ அட்லீ 27 ஆண்டுகள் கழித்து மௌன ராகத்தை மெருகேற்றி இக்கால இளைய சந்ததிக்குக் கொடுத்திருக்கிறார்.
(மணிரத்தினத்தின் மௌனராகம் 1986ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது)
மனம் விரும்பாமல் மற்றவருக்காக சேர்கின்ற ஜோடியின் மணவாழ்வு தான் கதை என்றவுடன் அது 'மௌன ராகம்' தான் என்று முடிவு கட்டிவிடும் எம்மவருக்கு அதை இந்தக் காலத்துக்கு ஏற்ப கொடுக்கவேண்டும் என்பது தான் அட்லீக்கு இருந்த சவால்.
என்ன சில வித்தியாசங்கள்....
அதிலே ரேவதிக்கு மட்டும் தி.மு (திருமணத்துக்கு முன்னர்) காதல் இருந்தது.
இதிலே இருவருக்கும்.
சந்தானம் போல ஒருவர் பழைய மெளனராகத்தில் இருக்கவில்லை.
படம் முழுக்க மௌனராகம் போல மென்சோகத்தோடு நகராமல், ஆர்யா, சந்தானம், நஸ்ரியா, ஜெய், நயன்தாரா என்று அத்தனை பேருமே கலகல என்றே நகர்த்துகிறார்கள்.
இதனால் ராஜா ராணி புதிய நகைச்சுவைப் பாணி தோய்த்து எடுக்கப்பட்ட பழைய பலகாரக் கலவை.
ஆர்யா - நயன்தாராவின் 'கெமிஸ்ட்ரி'யை சமயோசிதமாகப் பயன்படுத்தியது முதல், சகல விதத் தொழிநுட்பம், ஒளிப்பதிவு நுட்பங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தித் திகட்ட வைக்காமல் அளவாக, ரசிக்கும்படி பயன்படுத்தியமை, சத்யராஜ் என்ற தமிழின் அமிதாப் பச்சனைத் தேவையான அளவு பயன்படுத்தியது என்று அட்லீ பாராட்டுக்குரியவராகிறார்.
ஆர்யா - நயன்தாரா ஜோடி
ஆர்யா - நஸ்ரியா ஜோடி
ஜெய் - நயன்தாரா ஜோடி ஆகியவற்றில்
Brother - Sister (ஆர்யா - நஸ்ரியா) ஜோடிப் பொருத்தம் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.
அந்தக் காதல் ஆரம்பிப்பதிலிருந்து accident வரை அப்படியொரு ஈர்ப்பும், ரசிப்பும்.
சந்தானம் - ஆர்யா நகைச்சுவைகளும் கலை கட்டுகின்றன அந்த இடங்களில்.
சங்கரைத் தாண்டி மணி அட்லீக்குள் புகுந்துள்ளார் இந்தக் காட்சிகளில்.
(நாய்க்குட்டி, செக் ஆகிய இரண்டும் கூட முக்கிய பாத்திரங்களாகி விடுகின்றன)
நயன்தாரா ஹீரோக்கள் இரண்டு பேருக்குமே அக்கா போலத் தெரிவது எனக்கு மட்டும் தானா?
அதிலும் நயன் கல்லூரி மாணவியாம்; ஜெய்யை போட்டு உருட்டி எடுக்கும் காட்சிகளில் ஏகனில் வந்த விரிவுரையாளர் நயன்தாரா தான் ஞாபகம் வருகிறார்.
வயது ஏறியது போல் தெரிந்தாலும் நடிப்பிலும் மெருகு ஏறியுள்ளது.
ஆனால் அழுகின்ற காட்சிகள் நிறைய இருப்பது அவரது வாழ்க்கையை நினைத்து அழுகிறாரோ என்றும் எண்ண வைக்கிறது.
ஆர்யா - smart ஆக இருக்கிறார். நடிப்பில் நேர்த்தி. நஸ்ரியாவிடம் வழியும் காட்சிகளிலும், பின்னர் குடித்துவிட்டு அலம்பல் விடும் காட்சிகளிலும் கலக்கல்.
ஆனால் எல்லோரையும் பின் தள்ளி அதிகமாக ஸ்கோர் செய்துகொள்ளும் இருவர் ஜெய் & சந்தானம்.
அப்பாவி + பயந்தாங்கொள்ளியாக வரும் ஜெய் அழுவதும், அஞ்சுவதுமாக அப்பாவி நம்பர் 1 என்று அத்தனை போரையும் ஈர்த்துவிடுகிறார்.
அந்தக் குரலும் அப்பாவி மூஞ்சியும் அவருக்கென்றே வார்த்த பாத்திரமாக்கி விடுகின்றன.
அந்தக் கெஞ்சலும் பயந்துகொண்டே பார்க்கும் பார்வையும் இன்னும் மனதில் நிற்கின்றன.
அடுத்தவர் சந்தானம்... மனிதர் படத்தில் எல்லோரையும் விட முன்னுக்கு நிற்கிறார்.
சோகக் காட்சியா, கலாய்க்கும் காட்சியா சந்தானத்தின் punch வசனங்கள் திரையரங்கைக் கலகலக்க வைக்கின்றன.
"நண்பனில் நல்ல நண்பன், கெட்ட நாண்பன் என்றெல்லாம் கிடையாது. நண்பன் என்றாலே அவன் நல்லவன் தான்."
"லவ் பெயிலியருக்கு அப்புறம் லைபே இல்லைன்னு சொன்னா, 25 வயசுக்குப் பிறகு இங்கே எவனும் உயிரோடயே இருக்க மாட்டான்"
"லவ்வுக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சான்னா அது லவ் பெயிலியர்; ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் குடிச்சான்னா லைபே பெயிலியர்"
இப்படியான வசனங்கள் எல்லாம் இனி அடிக்கடி பயன்படுத்தப்படும்.
முன்னைய படங்களில் கவுண்டமணி யாராயிருந்தாலும் கலாய்த்தே தள்ளுவது போல இப்போது சந்தானம்.
யார் வந்தாலும் போட்டுத் தாளிக்கிறார்.
ஆர்யா - நயன் வீட்டுஸ் சண்டைகள், கண்ணாடிக்கு முன்னாள் நிற்கும் காட்சிகள் நவீன யுக்திகளோடு ரசனையாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - George. C. Williams
படத்தொகுப்பு - Anthony L. Ruben (இவர் அந்தப் பிரபல எடிட்டர் அன்டனி இல்லையே?)
இருவருக்குமே வாழ்த்துக்கள்.
இரண்டாம் பாதிப் படம் நொண்டியடித்து மிக வேகம் குறைவாக நகரும்போது சந்தானத்தின் கொமெடி தான் ஒரு பெரிய ஆறுதல்.
பாடல்களிலும் "ஓடே ஓடே" & "ஹேய் பேபி" ஆகிய இரண்டும் மட்டுமே இப்போ வரை மனசில் நிற்கிறது.
இரண்டாம் பாதி இழுவையும் ஊகிக்கக் கூடிய காட்சித் திருப்பங்களும் படத்தை மொக்கை ஆக்கிவிடுகின்றன.
அத்தனை ரசனையான விடயங்களைப் பார்த்துப் பார்த்துப் படமாக்கிய அட்லீ ஜெய், நஸ்ரியா ஆகியோரின் பாத்திரங்களைப் படத்திலிருந்து 'இறந்து' போக வைத்த இடங்களிலும், மீண்டும் ஜெய்யை வரவைத்த இடத்தையும் கவனித்திருக்க வேண்டாமா?
மோகன், ரேவதி, மணியோடு ஒப்பிடாமல் கலகலப்புப் படமாக ராஜா ராணியைப் பார்த்தாலும், சந்தானத்தின் சிரிப்புக்கள் எல்லாப் படங்களிலும் பார்ப்பவையாக இருப்பதாலும், இரண்டாம் பாதி இழுவையாலும் - அந்த divorce கேட்கும் காட்சியும் சேரும் விதமும் மௌன ராகத்தை ஞாபகப்படுத்துவதாலும் ராஜா ராணி மௌன ராகத்தின் 2013 பதிப்பே தான்.
ஆனால் மௌன ராகத்தில் இளையராஜா மணி ரத்னத்துக்குக் கை கொடுத்த அளவில் G.V.பிரகாஷ் புதுமுகத்துக்குப் பெரியளவில் உதவவில்லை என்பதை சொல்லியே ஆகவேண்டும்.
இதனால் இனித் திறமையான ஒரு இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் அட்லீக்கு ஒரு வாத்சல்யமான, ஊக்கமளிக்கக் கூடிய வரவேற்பை வழங்கி வைப்போம்.
(குருநாதர் ஷங்கரின் பாதிப்பில்லாமல் - அந்த விபத்துக் காட்சி + சில ஒளிப்பதிவு கோணங்கள் தவிர - நம்பிக்கை தரும் படைப்பாளியாக வந்திருக்கிறார்)
இவரது அடுத்த படத்தை ஆவலோடு காத்திருப்போம்.
ராஜா ராணி - Remix (மௌன) ராகம்
(remix, remake எல்லாமே ஒரிஜினல் போல சுவையாக அமைவதில்லையே)
ஒரு முக்கிய குறிப்பு/ ஆதங்கம்/ புலம்பல்...
ஒரு முக்கிய குறிப்பு/ ஆதங்கம்/ புலம்பல்...
அதுசரி, இளம் இயக்குனர்கள் எல்லாருமே தங்கள் படங்களில் மதுபானக் காட்சிகளை அண்மைக்காலத்தில் இத்தனை அதிகமாகப் பயன்படுத்தும் அளவுக்கு எங்கள் இளைஞர்கள் அவ்வளவு மொடாக் குடியர்களா?
காதல் காட்சிகள், நட்பை வெளிப்படுத்தும் காட்சிகளை விட சரக்கடித்து போதையேறும், கூத்தாடும் காட்சிகள் அதிகம்.
எல்லாத்துக்கும் குவார்ட்டரும் குடியும் தானா?
குடிக்காத இளைஞர்களும் இந்தக் காட்சிகளின் சுவாரஸ்ய மோகத்திலேயே நாசமாகிப் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதைத் திறமையான அட்லீ போன்றவர்களாவது உணரக் கூடாதா?