பலநாள் பட்டினி கிடந்தவனுக்கு பந்திபோட்டு எல்லாச் சுவையும் உள்ள,பலசுவையான ஆகாரங்களை வயிறு நிறையப் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' எனக்கு..
அண்மைக்காலமாக ஏற்படுத்திய கடுப்பைப் போக்க படம் முழுக்க ரசிக்கக்கூடியதாக அமைந்த வ.வா.ச நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு கொட்டாவியாவது இல்லாமல் பார்த்த படம்.
படம் முழுக்க சிரிப்புக்குக் குறைவில்லை. சிரிப்பு மட்டுமே தான் படமே.
சிவகார்த்திகேயனுக்கு என்றே வடிவமைத்த கதையில் வீடுகட்டி சிவாவுடன் சேர்ந்தே கலக்கி சிக்சர்,பவுண்டரிகளை விளாசியுள்ள இன்னும் இருவர் சத்யராஜ் & 'பரோட்டா' சூரி.
இதே கதையைக் கொஞ்சமென்ன நிறையவே சீரியசாக முன்னைய காலகட்ட படங்களில் பார்த்திருப்போம்.
வேலை வெட்டியற்ற ஒருத்தன்,கிராமத்துத் தலைவரின் மகளைக் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் காதலித்து வெல்வது பற்றி பல படங்களில் பார்த்திருப்போம்.
ஆனால் பார்த்த விதமான காட்சிகள் இல்லாமல், தேவையற்ற அலுப்பான, இழுவைகள் இல்லாமல், சண்டைக்காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளோ இல்லாமல், உப்புச் சப்பற்ற நகைச்சுவைகள் இல்லாமல், சும்மா சுவிட்சர்லாந்துக்கும் கனடாவுக்கும் போய்க் கனவில் பாடி ஆடாமல், ஒரு கோர்வையாக சுவையாக அங்கே இங்கே திசைதிரும்பாமல் கொடுத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் பொன் ராம்.
வ.வா.ச அமோக வாக்குகளை அள்ளிக்கொள்ள முக்கியமானவர்கள் நின்று ஆடியிருக்கிறார்கள்.
சிவா, சத்யராஜ், சூரி தவிர, புதுமுக நடிகை ஸ்ரீ திவ்யா மனதில் நிற்கிறார். இன்னும் பாடசாலை போகிற சிறுமி மாதிரியான ஒரு அப்பாவித்தோற்றம். அழகாக நடிக்கிறார்.
இயக்குனர் பொன் ராமும் வசனங்களால் வயிறு வலிக்க சிரிக்கவைத்திருக்கும் இயக்குனர் (இந்தப் படதுக்கல்ல) M.ராஜேஷும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நான் வாக்குப்போடவும் தயாராக இருக்கிறேன்.
அதேபோல இசையமைப்பாளர் D.இமான்.
அண்மைக்காலத்தில் எல்லாப் பாடல்களையுமே ஜனரஞ்சகமாகக் கொடுத்துவருகிற இசையமைப்பாளர் என்றால் இமான் மட்டும் தான்.
மைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை என்று அத்தனை பாடல்களும் ஹிட்டான படங்களின் இசையமைப்பாளர்.
இவர்களோடு ஒளிப்பதிவாளர் M.பாலசுப்ரமணியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
முதல் காட்சிகளில் சத்யராஜ் வரும்போது சீரியசான பாடமாக இருக்குமோ, படம் முடியும்போது ஏதாவது 'படிப்பினை' சொல்லி பயமுறுத்தப்போறாங்களோ என்றெல்லாம் பயந்துகொண்டே பார்த்தால்....
கிடைக்கின்ற சின்ன,சின்ன இடங்களிலெல்லாம் சிறப்பாக செதுக்கி அலுப்பில்லாத நகைச்சுவைகளால் நிரப்பி குறையொன்றுமில்லாமல் கோர்த்திருக்கிறார்.
Timing comedy, இயற்கையாகவே சத்யராஜ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோருடன் காட்சிகளுக்குக் காட்சி சிரிப்பை இயல்பாய் வரவழைப்பது இலகுவாகிவிடுகிறது இயக்குனருக்கு.
கமலின் படங்களில் வருகிற மாதிரி upper class நகைச்சுவைகளாக இல்லாமல், ஒரு செக்கன் தவறவிட்டாலும் ஏன்டாப்பா மற்ற எல்லாரும் சிரிக்கிறாங்க என்று விழிக்காமல் கிடைக்கிற நேரமெல்லாம் எல்லோரும் சிரிக்கக்கூடிய (லொஜிக் எல்லாம் பார்க்கத் தேவையில்லாத) படம்.
இயக்குனரின் பொங்கிவழியும் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சிறு உதாரணம் - சிவாவுக்கு போட்டியாக சூரி போட்டிச் சங்கம் அமைக்கும் காட்சியில் சிவாவும் சூரியும் பேசுகின்ற பின்னணியில் ஒரு பெரிய விளம்பரப்பலகை.
அதிலே சங்கத் தலைவர் என்று சூரியின் பெயர் - கோடியும் பொருளாளர், செயலாளர் என்று நமீதா, TR , Power Star என்று கலாய்த்திருப்பார்கள்.
அதேபோல சத்யராஜின் துப்பாக்கி, அல்லக்கைகள் வரும் காட்சிகளில் இருக்கும் எள்ளல்களிலும், கிடைக்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் நட்சத்திரங்கள்,பிரபலங்களை எல்லாம் சாடை மாடையாகக் கலாய்த்துக் கலக்குவதும் செம ஜாலி.
வசனகர்த்தா ராஜேஷ் படம் முழுக்கத் தன் முத்திரையைப் பதித்து நிற்கிறார்.
எந்த வசனத்தைக் குறித்து சொல்லலாம் என்று மண்டையைப் பிய்க்கிற அளவுக்கு எல்லா வசனங்களிலும் சிரிப்பு வெடிகள்.
திரையரங்கம் முழுவதும் முழுநேரமும் சிரிப்பலைகளால் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
சீரியசாகப் படம் திரும்புகிறது என்று நினைக்கிற நேரமெல்லாம் எங்கேயாவது இருந்து ஒரு குபீர் சிரிப்பைக் குமுறி விடுகிறார்கள்.
சிவாவின் காதலிக்குத் திருமணம்; ஊரெல்லாம் அழைப்புக் கொடுத்துக்கொண்டிருக்க, ஒரு சிறுமி வந்து "அக்கா கூப்பிடுறா" என்று சொல்ல, சிவா கேட்கிற "உங்க அக்கா நல்லா இருக்குமா?" என்ற இடம் ஒரு உதாரணம்.
படத்தின் இன்னொரு பாராட்டக் கூடிய விஷயம், சிரிக்கவைக்கிறேன் பேர்வழி என்று கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றாமல் எடுத்துக்கொண்ட திரைக்கதை வழியாகவே படம் பயணித்திருப்பது.
வடிவேலு, விவேக் இருவரும் ஓய்ந்த பிறகு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்துகொண்டிருக்கும் சந்தானத்துக்கு நல்லதொரு போட்டியாக வந்து சேர்ந்திருக்கிறார் சூரி. அவரது அலாதியான எடுத்தெறிந்த பேச்சும் அந்த முகமும் தனித்துவமானவை.
சிவகார்த்திகேயனுக்கு ஏறுமுகம் தான். கிடைக்கிற ஆடுகளமெல்லாம் அவரது கொடி பறக்கிறது.
தனுஷ் போலவே கிடைக்கும் பாத்திரமெல்லாம் அவருக்கென்றே வார்த்தது போல ஆகிவிடுகிறது; அவரும் அந்தந்தப் பாத்திரங்களாக மாறிவிடுகிறார்.
ஒரு வழக்கமான கிராமத்து மைனர் இளைஞன் போல தோற்றம்; ஆடைகள், அந்த எகத்தாளம் என்று காட்சிகளில் போஸ் பாண்டி வந்து நின்றால் கண்ணை அங்கே,இங்கே அகற்றமுடியவில்லை.
ஆனால், சத்யராஜ் வரும் காட்சிகளில் நாயகன் சத்யராஜ் தான். சீவாவும் கூட ஏனோ கொஞ்சம் அடங்கிப்போகிறார் போல ஒரு தோற்றம்.
சிரிக்கவைக்கிறார்; சீறுகிறார்; நெகிழ்கிறார்;மொத்தத்தில் கலக்குகிறார்.
நண்பனில் ஆரம்பித்த சத்யராஜின் குணச்சித்திரப் பயணம் (தலைவா உட்பட)அவருக்கு முன்பை விட அதிகம் ரசிகர்களைப் பெற்றுத்தரும் என்பது நிச்சயம்.
சென்னை எக்ஸ்பிரஸ் கூட அவருக்கு இந்திய வாய்ப்புக்களை வழங்கலாம்.
இனி கம்பீர, கலகலப்பு மாமா என்றால் இயக்குனர்களின் தெரிவு சத்யராஜ் தான்.
கதாநாயகி புதுமுகம் ஸ்ரீ திவ்யா நல்லதொரு கண்டுபிடிப்பு.
படத்தின் இடையிடையே வரும் சில சம்பவங்கள் போலவே, இமானின் இசையில் ரசிகர்களை ஈர்த்திருந்த பாடல்களும் இயல்பாக படவோட்டத்தொடே இணைந்து பயணிப்பது படத்தின் வேகத்தையோ, நகைச்சுவையோ குறைக்காமல் இருப்பது இயக்குனரின் வெற்றியே.
படத்தொகுப்பு செய்த விவேக் ஹர்ஷனுக்கும் சொல்லலாம்.
பாடல்களின் வெற்றியென்று நான் கருதுவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கலரு,இந்தப் பொண்ணுங்களே பாடல்கள் வந்தபோதெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருந்த வாலிபவட்டங்களும் சேர்ந்தே பாடியது தான்.
இவையெல்லாம் இப்போது வானொலியில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் படம் பார்த்தது முதல் 'பார்க்காதே பார்க்காதே' மனதுக்குள் நிற்கிறது. ஏனோ ஒரு கிறக்கமும் மயக்கமும் மெட்டிலும் குரல்களிலும்.
அதுசரி, ஊதாக்கலரு ரிப்பன் பாட்டில் வரும் ரிப்பன் உண்மையாக ஊதா நிறம் தானா?
எனக்கென்னவோ இள நீலம் மாதிரியல்லவா தெரிந்தது.
ஒரு சிம்பிள் கதையை அதற்கேற்ற பாத்திரங்களை சரியாகப் பொருத்தி, சிரிப்போ சிரிப்பாகப் படம் முழுக்கக் கொட்டி சிறப்பாகக் கொடுத்ததன் மூலம் அடுத்த படம் எப்போது என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் பொன் ராம்.
நண்பர் சிவா மீண்டும் ஜெயித்திருக்கிறார். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதில் பெருமையாக இருக்கிறது. இன்னும் எதிர்பார்க்கிறோம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் - வாழ்நாள் மெம்பர்ஷிப் வேண்டும்