February 22, 2013

கிளார்க்கின் புதிய ஆஸ்திரேலியாவால் முடியுமா?


கிரிக்கெட் பற்றி எழுதிக் கொஞ்சக் காலமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்துவிட்டது.கடந்த வருடத்தில் தான் தலைமை தாங்கிய 11 போட்டிகளில் 7 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள உற்சாகத்தோடு மைக்கேல் கிளார்க் அனுபவம் குறைவான, ஆனால் ஆற்றலுள்ள இளைய அணியோடு இந்தியா வந்துள்ளார்.
மறுபக்கம் இன்னுமொரு டெஸ்ட் தொடர் தோல்வி என்ன, ஒரு டெஸ்ட் தோல்வியே தலைமைப் பதவியைப் பறித்துவிடும் அபாயத்தோடும், அணியிலிருந்து தூக்கப்படும் அச்சத்தோடும் உள்ள சில வீரர்களோடு, ஆனால் சொந்த மண்ணின் அதிக அனுகூலங்களோடு இந்திய அணித்தலைவர் தோனி.
தோனி தான் கடந்த வருடத்தில் தலைமை தாங்கிய 8 போட்டிகளில் மூன்றில் மாத்திரமே வென்றிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வியின் அழுத்தம் இத்தொடரில் பிரதிபலிக்கலாம்.

ஆனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு சாதகத்தன்மை அதிகமாகவே இருக்கிறது என்பது உண்மை.
டெண்டுல்கர், நூறாவது போட்டியில் விளையாடும் ஹர்பஜன் சிங், சேவாக் ஆகிய மூவரும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரை விட அதிக போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இஷாந்த் ஷர்மா ஆகியோரையும், கிளார்க், வொட்சன் ஆகியோரை மட்டுமே அனுபவம் வாய்ந்த டெஸ்ட் வீரர்களாகக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
அதிலும் 90 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள அணித்தலைவர் கிளார்க்குக்குப் பிறகு 39 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஷேன் வொட்சன் தான் அதிக அனுபவம் வாய்ந்தவர்.

ஆஸ்திரேலிய வீரர்களில் எட்டுப் பேர் இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட்டில் தானும் விளையாடாதவர்கள்.

இது எல்லாவற்றையும் தாண்டி இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் மோதல்கள் என்றால் இயல்பாகவே ஞாபகம் வரும் ஹெய்டன், ஹசி, பொன்டிங், கில்கிரிஸ்ட், மக்க்ரா, வோர்ன், லக்ஸ்மன், டிராவிட், கும்ப்ளே, கங்குலி என்று நட்சத்திரங்கள் பலரும் இல்லாமல் புதியவர்களுக்கான களமாக இந்தத் தொடர் இம்முறை அமைகிறது.

(சச்சின் டெண்டுல்கரும் சேவாகும் இருந்தும் கூட... சிலவேளைகளில் இருவருக்குமே இது இந்திய மண்ணில் இறுதித் தொடராகவோ, அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதித் தொடராகவோ அமையக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கிறது.. கூடவே ஹர்பஜனையும் சேர்த்துக்கொள்வோம்)
உள்ளூர் போட்டிகளில் சராசரிக்கும் குறைவாகவே பந்துவீசிய ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது முன்னைய சாதனைகளுக்காகவே (நூறாவது டெஸ்ட் போட்டி என்ற மைல் கல்லுக்காகவும்) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஹர்பஜனின் அறிமுகமும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே இடம்பெற்றது.

நூறு டெஸ்ட் போட்டிகளைக் கடந்த பத்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் இன்று பெற்றுக்கொண்டார்.

நானூறு விக்கெட்டுக்களை எடுத்த பந்துவீச்சாளர்களில் மோசமானவர் என்று வர்ணிக்கப்படும் ஹர்பஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது மட்டும் எப்போதுமே உக்கிர ரூபம் எடுப்பார். ஆனால் அண்மைய காலங்களில் ஹர்பஜனின் முன்னைய மாயாஜால வித்தைகள் தணிந்துவிட்டதாகவே தெரிகிறது.

அஷ்வின் இப்போது இந்தியாவின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் என்ற ஸ்தானத்தைப் பெற்றிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பிரகாசித்த பிரக்யான் ஒஜாவுக்கு இன்று அணியில் இடம் வழங்கப்படாதது ஆச்சரியம் தான்.

ஹர்பஜனுக்கு நூறாவது டெஸ்ட் போட்டிக்கு இடம் கொடுத்தேயாகவேண்டும் என்ற நிலையில், சென்னையின் ஆடுகளத்தின் சுழற்சி பற்றி எல்லோருக்குமே தெரியும் என்ற அடிப்படையில் புவனேஷ் குமாருக்கு அறிமுகத்தை வழங்காமல் ஒஜாவையும் விளையாடவிட்டு ஆஸ்திரேலியாவை சுழலில் உருட்டி இருக்கலாம்.
அதுசரி, தொடர்ந்து ஓட்டங்களை கிடைக்கிற வாய்ப்புக்களில் எல்லாம் குவித்து வரும் அஜியன்கே ரஹானேவுக்கே இன்னும் வாய்ப்பில்லையாம்..

இன்னொரு சுவாரஸ்யம் போர்த்துக்கல் நாட்டில் பிறந்த மொய்செஸ் ஹென்றிகேஸ் இன்று அறிமுகமாகியிருக்கிறார்.
போர்த்துக்கல் நாட்டில் பிறந்து டெஸ்ட் வீரர் ஆகியிருக்கும் இரண்டாவது வீரர் இவராம்.

இலங்கையில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணிக்கு இவர் தலைமை தாங்கியபோது நினைத்தேன் நிச்சயம் ஒருநாள் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் விளையாடுவார் என்று.
படிப்படியாக முன்னேறி டெஸ்ட் வரை வந்திருக்கிறார்; வாழ்த்துக்கள்.
இன்று பெற்ற அரைச்சதம் நல்ல ஆரம்பம்...

முன்பெல்லாம் இந்தியாவில் ஹர்பஜன் குழுவினரை எதிர்த்து சமராட ஹெய்டன் போராடும் அழகு ஒரு தனி ரசனை. அதன் பின்னர் தான் கிளார்க் & ஹசி.
இப்போது ஹெய்டன் மாதிரியே டேவிட் வோர்னர். அவரையே ஞாபகப்படுத்துகிறார். ஆனால் பெறுபேறுகளும் அப்படியே வருமா என்பது தான் முக்கிய கேள்வி.

ஆஸ்திரேலியா இத்தொடரை வெற்றி கொள்வதற்கு துடுப்பாட்ட ஆதிக்கம் தான் அதிகம் தேவைப்படும். அதற்கு இன்று ஆஸ்திரேலிய ஆரம்பத்தில் முயற்சித்தது போல கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடவேண்டி இருக்கும்.

சுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடக் கூடிய கிளார்க், வொட்சன், வோர்னர் போன்ற சிலர் இன்னும் நின்று ஆடி பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு பெரிய அழுத்தங்களை வழங்க முடியும்.

சுழல் பந்துவீச்சுப் பக்கம் இந்திய அளவுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக நேதன் லயோனும், பின்னர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் டோஹெர்ட்டியும் இல்லாவிட்டாலும், சிடில், ஸ்டார்க், பட்டின்சன் ஆகியோர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

காரணம் இங்கிலாந்தும் ஸ்வான், பனேசர் மூலமாக இந்தியாவைத் தடுமாற வைத்தாலும் அவர்களது வேகப் பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்குக் கொடுத்த அழுத்தங்களை விட ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக சிரமங்களை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களில் புஜாரா, கொஹ்லி ஆகியோர் தவிர ஏனைய அனைவருமே தங்களை நிரூபித்து ஆகவேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பான ஒரு விடயம்.

இன்று சென்னையில் ஆரம்பித்துள்ள இத்தொடரில் முதல் நாளிலேயே மைக்கேல் கிளார்க் நாணய சுழற்சியில் வென்று ஆஸ்திரேலியாவுக்காக முதலாவது காயை சரியாக நகர்த்தி, ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தாலும், சென்னைப் பையன் அஷ்வின் இதுவரை வீழ்த்திய 6 விக்கெட்டுக்களால் இந்தியாவுக்கு நிமிர்வைக் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு தமிழக வீரரான முரளி விஜய்க்கும் நீண்ட காலத்தின் பின் கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றும் நம்புகிறேன்.

சேவாக் ஏற்கெனவே தவறவிட்ட ஒரு பிடி போலவே துடுப்பாட்டமும் சொதப்பினால் ஷீக்கார் தவானின் அறிமுகத்தை அடுத்த டெஸ்ட்டில் எதிர்பார்க்கலாம்.

கடந்த 28 வருடங்களில் இந்தியா சென்னையில் பாகிஸ்தானிடம் தோற்ற ஒரேயொரு போட்டியைத் தவிர, இதுவரை தோல்வியே காணாத வரலாற்றை மைக்கேல் கிளார்க்கின் 'புதிய' & 'இளைய' அணி மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

இதை எழுதி முடிக்கிற நேரம் கிளார்க் ஏழாயிரம் டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதோடு, அருமையான தலைமைத்துவ சதத்துடன் தொடரை நம்பிக்கையோடு ஆரம்பித்துள்ளார்;
ஆனால் இன்றைய நாளின் நாயகன் அஷ்வின் தான்.. ஆறு விக்கெட்டுக்கள்.

முதல்நாள் ஆட்டமும் முடிவுக்கு வருகிறது


No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner