மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் எடுத்த அதே அமீரா இந்த அமீரின் ஆதி - பகவனை மூன்று வருஷமா முக்கி முக்கி எடுத்தார்?
இவரது முன்னைய படங்களிலேயே பல காட்சிகளும் கதாபாத்திரங்களும் ஆங்கிலப் படங்களில் பார்த்த மாதிரியே இருக்கு என்று அடித்து சொல்லிவந்தேன்.
ஆதி - பகவனிலோ அப்படியே அப்பட்டமான ஆங்கிலப் பாணிக் கதை உருவாக்கம் மட்டுமல்ல, பல ஆங்கில, ஹிந்திப் படங்களில் பார்க்கிற காட்சி மாற்றங்களும் கூட.
இயக்குனர் அமீரின் பாதை மாற்றம் யோகியில் நடிகராக ஆரம்பித்தது. இன்னும் அவர் பழைய தன் பாதைக்குப் போய்ச் சேரவில்லைப் போலும். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது முதல் தடவையாக கதாநாயகன் ஒருவரை முடிவு செய்துவிட்டுக் கதை தயார் செய்வதாக சொல்லியிருந்தார் அமீர்.
கதை, களம், பாத்திரங்கள் (கதாநாயகி உட்பட) என்று சகல விஷயங்களையும் ஒன்றுக்கு இரண்டு தடவை இயக்குனர் சரி பார்த்திருக்கலாம்.
ஆதி - பகவன் ---> பாங்காக் தாதா - மும்பை தாதா.
தமிழ் சினிமா ஆண்டாண்டு காலம் பார்த்து சலித்த ஆள்மாறாட்ட இரட்டை வேட, தாதா கதை.
களமும் அண்மைக்காலமாக பில்லா முதல் எல்லாப் படங்களிலும் விஷாலின் சமர் வரை பார்த்த தாய்லாந்தின் பாங்காக், மும்பை, ஆந்திரா என்று கொஞ்சம் பார்த்த பழைய நெடி.
அதனாலோ என்னவோ சமர் படத்தின் சில பாதிப்பையும் அமீரின் ஆதி - பகவனில் காணலாம். களம், காட்சிகள் & கதாநாயகி வரை.
இதனால் இரு படங்களுமே எங்கேயோ ஒரே இடத்திலிருந்து சுட்டவை என்பதையும் அமீர் காட்டிக் கொடுத்துவிடுகிறார்.
பஞ்சம் பிழைக்க பாங்காக் போகிற ஜெயம் ரவி தாதா ஆகிப் பணக்காரர் ஆகிறார். ஆனால் தாயார் (சுதா சந்திரன்) இவர் தீய வழியில் போவதால் கோபத்தோடு பிரிந்திருக்கிறார். காதல் வசப்படும் ரவி அதனாலேயே சதி வலையில் சிக்கி மும்பைக்குப் போய், மரண வலையில் மாட்டிக் கொள்கிறார். அப்புறம் தப்பித்துக் கொள்கிறாரா அல்லது கொல்லப்படுகிறாரா என்பதே கதை....
முதல் காட்சியில் ஆந்திராவில் நடத்தும் CBI Raid பரபரப்பு எம்மை நிமிர்ந்து உட்கார வைத்தாலும், அதன் பின் அம்மா செண்டிமெண்ட், அஜித் பாணி ரவியின் கோட்சூட் நடை, பளபள கார் பவனிகள், பணக்காரர், கடத்தல் காரர் என்று காட்டுவதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் 'சப்ப்பா' என்ற நிலைக்குக் கொண்டு போய் விடுகின்றன.
நீது சந்திராவின் பின்னணியும் இடைவேளைக்கு முன்னதான திருப்பமும் கொஞ்சம் சுவாரசியம் தந்தாலும், பகவானின் அறிமுகம் அட இது தான் அந்த டுவிஸ்ட்டா என்று மீண்டும் கொட்டாவி...
அமீர் அய்யா, இப்படி நிறைய பார்த்திட்டோம் அய்யா...
தாதா வேடமும், மீசையும் கோட்டும் ஒட்டாமல் ஒரு ரவி, பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆங்கிலப்படமான The Silence of the Lambs இல் வரும் ஒரு சைக்கோ வில்லன் போன்ற பெண்மைத் தனம் கலந்த வில்லன் பாத்திரத்தில் ஓரளவு சிறப்பாக செய்திருக்கும் ஒரு ரவி.
தமிழுக்கு இந்தப் பாத்திரம் புதுசு.. அரவாணி போல ஒரு பாத்திரம்; ஆனால் பெண்கள் மீது மையல் பட்டு, பக்கத்திலேயே ஒருத்தி இருந்தாலும் பார்க்கும் பலரையும் படுக்கைக்கு அழைக்கிற தாதா.
சில காட்சிகளில் ஓவர் அக்டிங் ஆக இருந்தாலும், பல இடங்களில் ஜொலிக்கிறார்.
ஆனால் கதாநாயகி நீது சந்திரா. யாவரும் நலத்திலும், இன்னும் பல 'படங்களிலும்' பார்த்தவர். இவர் கதாநாயகியாக ஏனோ என்ற கேள்விக்கு சில காட்சிகள் - முக்கியமாக அந்த திமிர் நடையும், சண்டைக் காட்சிகளும் பதில் சொல்கின்றன.
முதல் பாதியில் ஏற்பட்ட தொய்வை இரண்டாம் பாதியில் சில பரபர காட்சிகள் மூலமாக ஈடுகட்டுகிறார் அமீர்.
ரவியின் நடிப்பும் நீது சந்திராவும் இதற்கு உதவியுள்ளார்கள்.
பெண்தன்மை மிக்க மும்பை தாதா பாத்திரம் பற்றிய செய்திகளையோ புகைப்படத்தையோ வெளியே விடாமல் வைத்திருந்த சஸ்பென்ஸ் இயக்குனர் அமீரின் ஒரு நல்ல யுக்தி தான்.
பகவானை பயங்கரமானவர் என்று காட்ட சில காட்சிகளை இயக்குனர் வைத்தது எல்லாம் சரி. ஆனால் சாவுக்கான காரணம் தெரிந்து தான் சாகவேண்டும் என்பதற்காக பல மணிநேரம் படுக்கைக்குக் கிட்ட இருந்தே கொல்வது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
பகவான் பலருக்கும் பகையாளாக மாறிப்போக வரும் காட்சிகளும் அதற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் 'பகவான்' இசை + Rap பாடலும் கலக்கல்.
அமீரின் படமாக்கல் உத்திகள் தாய்லாந்தில் கொட்டாவி தந்தாலும் மும்பாய் காட்சிகளில் கலக்கல். கோவா பில்லா 2 ஐ ஞாபகப்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் இத்தனை வேறு மொழிகள் வந்ததும் Sub titles வந்ததும் கமலின் படங்களில் (விஸ்வரூபம் கூட ) கூடப் பார்த்ததில்லை. சில இடங்களில் ஹிந்திக்காரனும் ஆந்திர தாதாவும் தமிழ் பேசுவான்; திடீரென தங்கள் மொழியில். கீழே Sub titles. இது தான் படத்தின் பெரிய குழப்பமாக படத்தோடு ஒட்டாமல் வைக்கிறது.
ஆர்.பி.குருதேவ்/ தேவராஜின் ஒளிப்பதிவு. படத்தொகுப்பு சில இடங்களில் சூப்பர் பல இடங்களில் சப்.
யுவன் ஷங்கர் ராஜா இதே மாதிரியான 'பில்லா' படங்களுக்கு பின்னணி இசையில் கலக்குவார் என்பது தெரிந்ததே. பாங்காக் தாதா நடக்கும்போது Gangster பாணி இசையும், பகவான் நடக்கும்போது ஹிந்துஸ்தானி இசையுடன் பகவான் நாமமும் சேர்ந்து ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
ஆனால் பாடல்கள் எவையுமே மனதில் நிற்கவில்லை. அதிலும் அறிவுமதியின் பாடல் ஒன்றை உதித் நாராயணனை வைத்து சிதைத்துள்ள விதம் மன்னிக்க முடியாதது. ஆதி-பகவனில் அறிவுமதியின் அருமையான வரிகளைக் கொலை செய்த உதித் நாராயணனை விட நம்ம நாட்டு ஜனாதிபதி நல்லா தமிழ் பேசியிருப்பாரே என்று ட்விட்டரில் புலம்பியிருந்தேன்.
தந்தை இளையராஜா தமிழ் உச்சரிப்பில் காட்டிய அக்கறையில் பத்து சதவீதம் கூட மகன் யுவன் தான் பாடும்போதும் காட்டுவதில்லை என்பது முக்கியமானது.
செண்டிமெண்ட் காட்சிகளில் உருக்கத்தையோ, அல்லது அப்பாவி தாதா அநியாயமாக அகப்பட்ட காட்சிகளில் அவர் மீது அனுதாபத்தையோ ஏற்படுத்துவதில் இயக்குனர் தவறிவிடுகிறார்.
தாய்ப்பாச நியாயம், தங்கைக்கான நியாயம் என்று பல இடங்களிலும் நிறைய ஓட்டைகள்.
அதைவிட இந்தப்படத்தைத் தடை செய்யச் சொல்லி & பெயர் மாற்றச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் என்னத்துக்காக? அந்த 'பகவான்' பெயருக்காகவா? சிரிப்புத் தான் வருகிறது.
A சான்றிதழ் சரி தான்.. குபீர் என்று பாயும் ரத்தமும், ஒவ்வொரு காட்சிகளிலும் கொலை விழும்போதும் பாய்கிற ரத்தமும் சரி தான் என்கின்றன.
கடைசிக் கட்ட சண்டைகளும் கொலைகளும் சில சைக்கோ ஸ்பானிய, ஆங்கில படங்களை ஞாபகப்படுத்தி நல்ல தாதா வாழ்வான் என்று முடிக்கிறார் அமீர்.
விட்டால் காணும் என்று மூச்சு விடுகிறோம் நாம்.
இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாமே என்றும் தோன்றாவிட்டால் சராசரிக்கும் கீழே தானே. பாவம் ஜெயம் ரவி.
அவரும் நீது சந்திராவும் மட்டும் சிறப்பாக செய்தும் திரைக்கதை என்ற படகில் ஓட்டை விழுந்த பிறகு என்ன பயணம் எப்படிப் போக?
அமீரின் ஆதி - பகவன் - பாதி பகவன்