அரையிறுதிகளுக்கு மூன்று அணிகள் தெரிவாகியுள்ளன.
அரையிறுதிகளுக்குத் தெரிவான முதல் அணியாக நேற்று இலங்கை மூன்று வெற்றிகளுடன் பள்ளேக்கலையிலிருந்து கொழும்பு வருகிறது.
இலங்கையின் லசித் மாலிங்க சுருட்டிய ஐந்து விக்கெட்டுக்களால் நடப்புச் சாம்பியன்கள் இங்கிலாந்து அரையிறுதியே காணாமல் வெளியேறி, தொடர்ச்சியாக ஒரு அணி இரு உலக T20 கிண்ணங்களைத் தொடர்ச்சியாக வென்றதில்லை என்பது மீண்டும் நியதியாகி உள்ளது.
அது போல முதல் தடவையாக ஒரு உலக T20 கிண்ணத் தொடரை நடத்தும் அணி அரை இறுதிக்குத் தெரிவாகி இருக்கிறது.
சூப்பர் 8 இல் முதலாவது பிரிவில் எதிர்பார்க்கப்பட்ட இரு அணிகளுமே அ ரையிறுதிகளுக்குத் தெரிவாகியிருப்பது விசேடமானது.
கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் ஆகிய இரு ராட்சதர்கள் வழங்கும் அதிரடி சந்தோஷங்களுக்காக இல்லை, ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் சோர்ந்து கிடந்த காலப்பகுதியிலிருந்து தளராமல் அவர்களை வழிநடத்தி, விளையாட்டை மிகவும் அனுபவித்து, அணி வீரர்களை உற்சாகப்படுத்தித் தலைமை தாங்கும் டரன் சமிக்காக இவர்களது அரையிறுதி வருகையை வரவேற்கிறேன்.
ஆனால் இரு போட்டிகளில் Super Over இல் மயிரிழையில் வெற்றி வாய்ப்பைக் கைவிட்ட நியூ சீலாந்து அணி பாவம் தான்.
முடிவுகளின்படி அவர்கள் மூன்று போட்டியிலுமே தோற்றதாகத் தெரிந்தாலும், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே நியூ சீலாந்து கொடுத்த சவால்கள் அவர்கள் உண்மையில் அரையிறுதிக்கு வந்தே இருக்கவேண்டிய அணி என்று மனசு பரிதாபப்படுகிறது.
ஆனால் போராடுகையில் முழுமையாகப் போராடவேண்டும்.. ஒரு சின்ன சறுக்கலும் நாம் பட்ட கஷ்டங்களைஎல்லாம் எதிரணிக்குத் தாரைவார்த்து அப்படியே முழுக்குப் போடவேண்டியது தான். நியூ சீலாந்தும் அவ்வாறு தான். வெற்றிக்கும் வெளியேற்றத்துக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளியை நிரப்ப முடியாமல் துரதிர்ஷ்டம் பிடித்த அணியாக வெளியேறியுள்ளது.
இலங்கை அணி எதிர்பார்த்ததை விடப் பலமான அணியாக இப்போது தெரிகிறது.
மஹேல, டில்ஷான், சங்கா ஆகியோரிலேயே அதிகமாக ஓட்டங்களுக்குத் தங்கியிருந்த நிலை கொஞ்சம் மாறி இருப்பது ஆறுதல். நேற்று மத்தியூஸ், திரிமன்னே, திசர பெரேரா ஆகியோர் பெற்ற ஓட்டங்கள் இலங்கையின் அடுத்த கட்டங்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவை.
ஆனால் இதே அணியை இந்தியா அல்லது பாகிஸ்தான் அரையிறுதியில் சந்தித்தால் ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
மென்டிஸ் & மாலிங்க மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாலும் பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கு இவர்கள் இருவரையும் அடித்து நொறுக்குவது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல.
நேற்று இங்கிலாந்து கூட, அஜந்த மென்டிசைப் பலியாடு கணக்காக அறுத்துத் தீர்த்தது.
மறுபக்கப் பிரிவில் ஆஸ்திரேலியா இலகுவாகத் தெரிவாகும் என்று பார்த்தால், இன்று இப்படித் தடுமாறி இறுதியாக நிகர ஓட்ட சராசரிப் பெறுமானத்துக்குத் தேவையான 112 ஐ அடைவதில் இவ்வளவு சிக்கலை எல்லாம் சந்தித்து அரையிறுதிக்கு வந்துவிட்டது.
ஹசியும் இல்லாவிட்டால் கோவிந்தா தான்.
2007 இல் இவ்வாறு தான் தென் ஆபிரிக்கா எல்லாப் போட்டிகளிலும் வந்து முக்கியமான Super 8 போட்டியில் இந்தியாவிடம் வாங்கிக்கட்டி வெளியேறியிருந்தது.
நல்ல காலம் ஆஸ்திரேலியாவுக்கு அப்படியாகவில்லை.
ஆனால் இன்றைய பாகிஸ்தான் வெற்றியுடன் தென் ஆபிரிக்கா தனது கடைசிப் போட்டியில் விளையாடாமலே வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவின் இருப்பும் வெளியேற்றமும் தென் ஆபிரிக்காவின் மானம் காக்கும் இந்தப் போட்டியுடன் தான்.
இப்போது பாகிஸ்தானும் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளமையால், இந்தியாவின் நிலை சிக்கலில். முதலில் துடுப்பெடுத்தாடுவதால், நிகர ஓட்ட சராசரியில் பாகிஸ்தானைப் பின் தள்ள 31 ஓட்டங்களால் ஆவது இன்று வெல்லவேண்டும்.
தென் ஆபிரிக்காவும் இலேசுப்பட்ட அணி அல்ல. ஆனால் படுமோசமாகத் தோற்ற இரு போட்டிகளில் பின்னர் இன்று எப்படியாவது ரோஷத்துக்காக வெல்வார்களா அல்லது அந்தத் தோல்விகளால் மேலும் மனம் உடைந்து இன்னும் படுமோசமாகத் தோற்பார்களா என்று தெரியவில்லை.
இன்றைய முதல் போட்டியின் முடிவின் படி இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடுவது உறுதியாகி இருக்கின்றன.
இரண்டாவது அரை இறுதியில் இலங்கையை சந்திக்க இருப்பது இந்தியாவா பாகிஸ்தானா?
இப்போதைக்கு இருக்கும் நிலையில் பாகிஸ்தான் தனது தொடர்ச்சியான நான்காவது உலக T20 கிண்ண அரையிறுதிக்குத் தெரிவாவது உறுதியாகிறது.
இந்தியா முதலாவது உலக T20 கிண்ண வெற்றிக்குப் பிறகு ஒரு தடவையும் அரையிறுதிக்குத் தெரிவாகவில்லை என்ற அவப்பெயருடன் நாடு திரும்பப் போகிறது.
விரிவான அலசலை நாளை தரலாம் என்று நினைக்கிறேன்.
மறுபக்கம் மகளிர் உலக T20 கிண்ணத் தொடரில் மூன்று ஆசிய அணிகளுமே அரையிறுதிக்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்,
முதலாவது அரையிறுதியில் வியாழக்கிழமை இங்கிலாந்து - நியூ சீலாந்து மகளிரும், வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலிய- மேற்கிந்தியத் தீவுகளின் மகளிரும் மோதிக்கொள்ளப் போகிறார்கள்.
இதிலே சுவாரஸ்யம் வெள்ளி இரவு இதே நாடுகளின் ஆண் அணிகள் மோதுகின்ற அரையிறுதி இடம் பெறுகிறது.
மீதி நாளை....