மூணு - ரொம்பவே தாமதமா எழுதுறேனோ?

ARV Loshan
8


படம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன..
எனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள்.
கொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும் படம்..

அது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் இரு பெரும் நாயகர்களின் வாரிசுகள் இணைந்ததனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
அதனாலோ என்னவோ வெளிவந்த பிறகு மாறுபட்ட விமர்சனங்கள், கருத்துக்கள்..

நல்லா இருக்குமோ அல்லது நாசமறுக்குமோ என்ற குழப்பத்தோடு தான் நானும் சென்றேன்...

பெரிதாக சிக்கல் முடிச்சுக்கள் இல்லாத கதை...
கதாநாயகி பார்வையில் ஆரம்பித்து படத்தில் நெடுந்தொலைவு பயணித்து, நண்பர் பார்வையில் மீண்டும் பயணித்து, எங்களுக்கு முடிவைத் தருகிறது.

ஆரம்பமே ஒரு சாவு வீடு.. கொஞ்சம் மர்மம் + பயங்கரம் கலந்த பின்னணி..
அழுகை, கவலையுடன் கதாநாயகி தன் வாழ்க்கையில் பின்னோக்கிப் பயணிக்கிறார்.



பாடசாலைக் காலக் காதல், காதல் திருமணமாகும் போராட்டம், திருமணத்தின் பின்னரான வாழ்க்கை இந்த மூன்று பருவத்தைத் தான் இயக்குனர் 'மூணு' என்று குறிப்பிட்டாரோ?
மூணு - மூன்று பருவங்களிலான காதல் ( பள்ளி, திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப்பின்)

அல்லது கதாநாயகன், நாயகி, நாயகனின் நண்பன் இந்த மூவருக்கும் இடையிலான இழுபறிப் போரைக் கருதினாரோ?
மூவருக்கிடையிலான கதை நகர்வு, (தனுஷ், ஸ்ருதி, சுந்தர்)              
தனுஷிற்குள்ள மூன்று மனநிலை (?) (Normal, Depressed, Maniac)
இந்த மூன்றில் மூணுக்கு எதையும் அர்த்தமாகக் கொள்ளலாம் :)              
             
ஆனால், ஐஷ்வர்யா தனுஷ், ஒரு பேட்டியின் போது, மூன்று பருவங்களில் காதலைக் குறிப்பதாகத்தான் சொல்லி இருந்தார். அந்த படத்தின் tag  line கூட ''The story of Ram n Janani '' தானே? :)

பாடசாலைப் பருவத்தில் துரத்தித் துரத்தி ஸ்ருதியை லவ்வி, கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைத்து, இருவரும் மனம் உருகிக் காதலிக்கிறார்கள்.ஆனால் வீட்டில் பிரச்சினை வருகின்ற நேரம், பிரிவு வந்துவிடுமோ எனும் அளவுக்கு பிரச்சினை முற்றுகிறது. எனினும் நாயகனின் தந்தையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் நடந்து வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.இனித் தான் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை எனும்போது தான் ஒரு துர்ச்சம்பவம்.
தனுஷ் இறந்துவிடுகிறார்.

இந்த இடைக் கதையை முதல் காட்சியோடு தொடர்பு படுத்தி தனுஷின் மரணம்/ கொலை/ தற்கொலைக்கான மர்ம முடிச்சை காதல், ஊடல், நட்பு, பாசம் எனப் பல கலந்து முடிப்பதில் தான் மூணு வெற்றியா தோல்வியா எனப் பலரும் பலவாறு யோசிக்கிறார்கள்.

தனுஷ், ஸ்ருதி, சுந்தர் (மயக்கம் என்ன நண்பர்), சிவகார்த்திகேயன், பிரபு, பானுபிரியா, ரோகினி என்று மிகக் குறைவேயலவான முக்கிய பாத்திரங்கள் ..
இவர்களோடு ஸ்ருதியின் தந்தையாக வருபவரையும், அந்த வாய் பேச முடியாத் தங்கையையும் சேர்க்கலாம்...

பாத்திரங்கள் குறைவாக வருகின்ற படங்களில் நாம் அவதானிக்கும் ஒரு விடயம், கதையின் அழுத்தமும், முக்கிய கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் கனதியும்.
மூணு இலும், தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்ற இரண்டு குருவிகள் மீது இயக்குனர் ஐஸ்வர்யா வைத்துள்ள பனங்காயின் கனதி அதிகம் தான்..
ஆனால் இருவருமே தங்களால் முடிந்தளவு மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.
பள்ளிப்பராயத்துக்கும் பொருந்தும் இவர்களின் முகங்களும், உடல் தோற்றங்களும், திருமணத்துக்குப் பின்னதான காலத்துக்கும் பொருந்துவது இயக்குனருக்கும் படத்துக்கும் மட்டுமில்லை; எங்களுக்கும் அதிர்ஷ்டம் தான்.

அதே போல இவர்களது முக பாவனைகள், உடல் மொழிகள், காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே அந்தந்தப் பருவகாலத்துக்குப் பொருந்துவனவாக இருப்பது பாராட்டுக்குரியது.

தனுஷ் இப்படியான பாத்திரங்களுக்கு அச்சுக்கு வார்த்தது போலப் பொருந்திப்போகிறார். வழிவது, காதல் வயப்படுவது, உருகுவது, ஏங்குவது, பொறுமுவது, குமுறுவது, கோபப்படுவது என்று சகல உணர்ச்சிகளுக்கும் மனைவி கொடுத்த களத்தில் புகுந்து விளையாடி மீண்டும் பெயரைத் தட்டிச் செல்கிறார்.. தேசிய விருது நடிகனய்யா..

ஸ்ருதி ஹாசன்.. பெரிய கண்கள். அவை பேசுகின்றன.. முகம் முழுக்க உணர்ச்சிகள் ததும்ப

உணர்ச்சிப்பெருக்கு நிறைந்த காட்சிகளில் ஸ்ருதி உருகவைக்கிறார்.
ஆனால் வாயைத் திறந்து அழும்போது தான் கொஞ்சம் எங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது.

தனுஷ் - ஸ்ருதி நெருக்கமான காட்சிகளில் காட்டும் அந்த அன்னியோன்யம், அன்பு வெளிப்பாடுகளை எப்படித்தான் ஐஸ்வர்யா பொறுத்துக்கொண்டாரோ?
தொழில் தர்மமோ?

பிரபு , ரோஹிணி போன்றோரின் நடிப்பு பற்றி சொல்லத் தான் வேண்டுமா?
பிரபுவுக்கு இப்படியான பாத்திரங்கள் எல்லாம் அவருக்கென்றே வார்த்தது போல.. ஒரு சில வார்த்தைகளிலும், ஆழ ஊடுருவும் அந்தப் பார்வையிலுமே அசத்திவிடுகிறார்.
நடுத்தரக் குடும்பத்தில் பெண்ணைப் பெற்ற அம்மா எப்படி எல்லாம் உண்மையிலேயே பதறுவாரோ ரோஹிணி அப்படியே வாழ்கிறார் படத்தில்.

தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான நண்பன் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணம் மாறாத சிவகார்த்திகேயன் முதல் பாதி கலகலப்பைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார்; அப்பாவித்தனமாக அசடு வழிவதிலும், சில இடங்களில் கலாட்டா கமென்ட் அடிப்பதிலும் கலக்குகிறார்.

மற்ற நண்பர் சுந்தர் வழமையான தமிழ் சினிமா நண்பர்கள் போல் இல்லாமல் கொஞ்சம் கூடுதலாக திரைப்படத்தில் வருகிறார்; மூன்றாவது பெரிய பாத்திரமும் கூட. பல இடங்களில் சிறப்பாக செய்கிறார். இனிக் கொஞ்சக் காலம் நண்பனாக வருவார் என நம்பலாம்.

நடிப்பு குறிப்பாக கமெரா முகங்களை மிக நெருக்கமாகக் காட்டும் இடங்களில் முக்கியமான பாத்திரங்களின் நடிப்பு தான் படத்துடன் எம்மை இறுக்கி வைக்கிறது.
காதலும், சோகமும், பாசமும் என்றே படம் அதிகமாக நகர்வதால்



மூணு - படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே, மூன்று இணைப்புக்களால் படம் மெருகேறுகிறது.

முதலாவது - இசை + இயக்கம்

அனிருத் - கொலைவெறியாக அறிமுகமான இவரது மூணு படப் பாடல்கள் கேட்டிருந்ததை விட படத்தில் காட்சிகளோடு பார்க்கையில் அதிகமாக ஈர்க்கிறது.
இயக்குனர் - இசையமைப்பாளர் இணைப்பின் முக்கியத்துவம் இப்படியான விடயங்களில் தான் வெளிப்படுத்தப்படும்.

ஐஸ்வர்யா இந்த சின்ன,சின்னப் பாடல்களின் ஒவ்வொரு செக்கனையும் அருமையாக செதுக்கியிருக்கிறார்; அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கொலைவெறியைத் தவிர.
கண்ணழகா, இதழின் ஓரம் இரண்டும் மிக அருமை.
பின்னணி இசையிலும் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு பிரமாதமாக செய்துள்ளார்; நுணுக்கங்களை ரசிக்கலாம்.காட்சிகளின் கனதியை இசைக் கருவிகளின் சேர்க்கையில் காட்டுவது கலக்கல்.

அடுத்த படம் அனிருத்தின் திறமைகளுக்கான சவால்.

ரசூல் பூக்குட்டி தன் வித்தையெல்லாம் கட்டி ரசிக்க வைக்கிறார் - பின்னணி இசைகள் & ஓசைகளில்.. அதுவும் ஒரு வித்தியாச அனுபவம் தருகிறது.

அடுத்து ரசித்த இன்னொரு இணைப்பு - ஒளிப்பதிவாளர் & Editor
வேல் ராஜும் கோலா பாஸ்கரும் கலக்கி இருக்கிறார்கள். மூன்று கட்டமாக வாழ்க்கை மாறிப் பயணிக்கும்போதும் இவர்கள் இருவரும் காட்டியுள்ள வேறுபாடுகளும் நிறவித்தியாசங்களும் அருமை.

மூன்றாவது இணைப்பு நான் முதலிலேயே சொன்ன தனுஷ் - ஸ்ருதி
அழகான ஜோடி; அன்னியோன்னியம் அச்சொட்டாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் நடிக்கிறார்கள்.

உணர்ச்சிவயமிக்க காட்சிகளில் இருவரும் காட்டும் முகபாவங்கள் சொல்லிக் கொடுத்துப் பெற முடியாதவை.


ஒரு இயக்குனராக முதல் படத்திலேயே இப்படியான ஒரு சிக்கலான முடிவையும் மிக உணர்ச்சிவயப்பட்ட கதையையும் தெரிவு செய்து முடிவையும் இவ்வாறு அமைக்கும் துணிவு பாராட்ட வேண்டியது.
மெதுவாகக் கதை நகர்ந்தாலும் அலுப்பு இல்லாமலும், அருவியாக இல்லாமலும் திரைப்படத்தை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதிலும் ஜெயித்துள்ளார்.

அதிலும் முடிகிறது என்று தெரியாமலேயே கடைசியாக தனுஷின் தற்கொலையுடன் அழுத்தமாக சோகம் இழையோடும் இசையுடனும் ஸ்ருதியின் கதறலோடும் எங்கள் கனத்த மனது + கலங்கிய கண்களோடு படத்தை முடிப்பது நெகிழ வைக்கிறது.

ஆனால் சில கேள்விகளும் இல்லாமல் இல்லை; படம் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமைக்கு இவையே காரணம் என நினைக்கிறேன்...

BiPolar depression என்ற வியாதி திடீரென தனுஷுக்கு உருவாகிறது. சரி..
அதைக் கூட வாழும், தனுஷை நன்கு புரிந்து அவரது ஒவ்வொரு அசைவையும் அவதானிக்கும் ஸ்ருதியால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறதா?

(ஆனால் தனுஷ் தன்னை விட்டு ஏனோ விலகுகிறார் என்று உணர்ந்து அது என்னவென்று உருகி, மருகும் இடங்களும் "சொல்லு ராம் ப்ளீஸ்" எனக் கெஞ்சி அழும் இடங்களும் மனதை உருக்கும் இடங்கள் தான் )


இல்லாவிட்டால் ஒவ்வொரு முறையும் பேசவரும் போது சொல்கின்ற "Life matter பா " என்பதை வைத்தே அவரைப் பற்றி எடைபோட்டுக்கொள்ளும் பிரபுவாலும் தனுஷிற்கு உள்ள பயங்கர வியாதி பற்றிப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறதா?

கடைசியாக நண்பன் இருக்கும் சாவு நிலை பற்றி, அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த பின்பும், ஸ்ருதிக்கு அதைச் சொல்லி நண்பனைக் காப்பாற்ற ஒரு முயற்சியும் எடுக்காதது பற்றி???



ஆனால் உணர்வுகள் கொப்பளிக்கும் இடங்கள் மனதை நெருடுகின்றன; நெருக்கமான காதல் காட்சிகள் வருடுகின்றன.
பாடல்களும், பின்னணி இசையும் வேறு சேர்ந்து படத்துடன் எம்மை ஒன்றிக்கச் செய்கின்றன..
"தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ" பாடலின் வரிகள், அந்த சந்தர்ப்பத்தில் மனத்தைக் கனமாக்கி காட்சிகளுடன் ஒன்றிக்க செய்கின்றன.

குறிப்பாக

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

(இதில் விடியலை - நான் மிக நேசிக்கும் ஒரு சொல் - படுமோசமாகப்பாடியிருப்பது மட்டும் கொடுமை)
என்ற வரிகள் மனதைப் பிழிவனவாக இருக்கின்றன.

தனுஷின் இடத்தில் நாம் இருந்திருந்தால், எங்களை உயிராக நேசிக்கும் ஒரு பெண், அதுவும் தன் குடும்பத்தைத் தூக்கி எறிந்து காதலனே உலகம் என்று வாழும் ஒருத்தியைக் கஷ்டப்படுத்துகிறோமே என்ற கவலையும், அவள் தன்னோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை விட, தான் ஒரு பயங்கர நோயாளியாக, மன நோயாளியாக அவளால் பார்க்கப்படுவதையும், தனது அதீத வெறியால் அவளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளத் துணிவதும் மனதைத் தொடும் இடங்கள்..

வாழ்ந்து பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும் என்று சொல்வது இப்படியான திரைச் சிக்கல்களைத் தான்..

அதே போல ஸ்ருதியின் பாத்திரம்..
பாவமாக இருக்கிறது. தானாக தனியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு காதலால் படும் துன்பங்கள், காதலனை நேசிப்பதால் பட்டு உணரும் கஷ்டங்கள், தனியாகப் போய், இனி உழலப் போகிறாளே என என்னும்போது அதுவும் மனதைப் பிழிகிறது.

அடுத்து பிரபு போன்ற ஒரு அப்பாவும், சுந்தரின் நண்பன் பாத்திரம் போன்ற ஒரு நட்பும்.. கொடுத்து வைத்த ராம் (ஜனனியின் அளவுகடந்த காதலும் சேர்த்து) ... என்ன ஒரு சுகவாசி.. ஆனால் தீராக் கொடுமையான நோய் வந்து அத்தனையையும் இல்லாமல் செய்துவிடுகிறதே..
இது தான் வாழ்க்கை என்பதோ???

அன்று மூணு பார்த்து இன்று வரையும் கூட, மூணு பாடல்கள் கேட்கும்போதெல்லாம் ராம் - ஜனனி மனதுக்குள்ளே நிற்கிறார்கள்..
எங்கள் வாழ்க்கையின் காதலின் மறக்கமுடியாத் தருணங்களும், சில ஊடல் - கூடல் - சண்டை - நெருக்கம் ஆகிய தருணங்கள் மனதில் அலைகளை எழுப்புகின்றன...

ஆனால் சிலருக்கு இந்த மூணு பிடிக்கவில்லை என்று அறிந்தபின்னர் ஏன் என்று புரிந்தது..
கொலைவெறி பாடல் கேட்ட பிறகு 'அப்படியான' ஒரு மசாலா படத்தை எதிர்பார்த்துள்ளார்கள்.
இப்படியான உணர்ச்சிக் குவியல் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை அவர்களுக்கு.

எனக்கு பிடித்திருக்கிறது.
மிகச் சிறந்தது என்று புகழாவிட்டாலும் முழுமையான படைப்புக்கு கிட்டவாக வந்துள்ளது ஒரு புதிய இயக்குனரிடம் இருந்து..
(படம் முடிகிற நேரம் பின் வரிசையில் இருந்த ஒரு இளைஞன் - நிச்சயம் பதினெட்டு வயது தாண்டியவன் - விம்மி விம்மி அழுதான்.. என்ன கவலையோ.. பரிதாபமாக இருந்தது)

மூணு - காதல், வாழ்க்கை, உணர்ச்சி
காதல், பாசம், நட்பு 
பார்த்தேன், ரசித்தேன், உணர்ந்தேன்

Post a Comment

8Comments

Please Select Embedded Mode To show the Comment System.*