May 03, 2012

பத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் எம் வெள்ளை வான் நாடு


May 3 - இன்று உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள்..



நாம் வாழும் வெள்ளை வான் (White Van) நாட்டுக்கும் இதற்கும் நேரடிசம்பந்தம் இல்லை என்றாலும், உண்மையை சொல்லப் போய், மக்களுக்காகாகவும் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தங்கள் உயிர்களை நீத்த உண்மையான ஊடகப் போராளிகளையும், உயிரைப் பற்றி அஞ்சாமல் இன்னமும் நேரடியாகும் மறைமுகமாகவும் எழுதிவரும், பேசி வரும் பல நேர்மையான ஊடகவியலாளரையும் நாம் இன்றைய நாளில் நினைக்கவே வேண்டி இருக்கிறது.

அன்று எமது பாடசாலைக்காலத்தில் அறிந்த ரிச்சர்ட் சொய்சா முதல், பணியை நான் ஆரம்பித்த காலத்தில் பலியெடுக்கப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம்(தராகி), பழகி, பேசிய லசந்த விக்கிரமதுங்க என்று இன்னும் பலியானோர் எத்தனை பேர்.. கடத்தப்பட்டு காணாமல் போனோர் எத்தனை பேர்; கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்; கைது செய்யப்பட்டதால் வாய் மூடப்பட்டோர் எத்தனை பேர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
எனினும் இன்னும் உண்மைகள் பேசப்படுகின்றன.. எதோ ஒரு விதத்தில் வெளிவருகின்றன..

இந்த வருடத்துக்கான உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள் பற்றிய தொனிப்பொருளான "ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சரியான, தரமான தகவல்களை அறிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல்கள்/இடர்ப்பாடுகள்" பற்றிய ஒரு கலந்துரையாடல் கொழும்பு அமெரிக்கன் நிலையத்தில் - American Centre (துறைசார்ந்தோர் மற்றும் துறை சார் நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்) இடம்பெற்றது.

தகவல் அறியும் உரிமையும் ஊடக சுதந்திரத்தின் முக்கிய கூறு என்பது வலியுறுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்காவில் இருந்து நேரடியாக காணொளி உரையாடல் மூலமாக இணைந்துகொண்ட ஊடகவியலாளர்களைக் காப்பாற்றும் அமைப்பின் - Committe to Protect Journalists இணைப்பாளரான போப் டியேட்ஸ் சொல்லியிருந்த கருத்துகள் நிச்சயம் முக்கியமானவை.

ஊடக சுதந்திரத்தின் அடிப்படைகள், அரசாங்கம் ஒன்று மக்களுக்கு அவர்கள் அறிய விரும்பும் தகவல்களை ஏன் வழங்கவேண்டும், இதுகுறித்தான 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசப் பிரகடனம், இதனை ஏற்று அமுல்படுத்தியுள்ள நாடுகள் என்று பல்வேறு விடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அதிலே நாட்டு எல்லைகள் தாண்டி உலகின் அனேக மக்கள் அறிந்துகொள்ள விரும்பும் விடயங்கள் ஒரே வகையானவை என்ற விடயம் சுவாரஸ்யமானது..
அரச அதிகாரிகள்,அமைச்சர்களின் சம்பள விபரம்
தேர்தல் பற்றிய விபரங்கள்
அரச சொத்து, ஒப்பந்த விபரங்கள் போன்றவை தானாம் முதல் மூன்று விடயங்கள்..
அதன் பின் தான் விதிகள், விபரங்கள், விளக்கங்கள் தேடுகிறார்களாம்.

இந்தியாவில் எவ்வளவு தூரம் இந்தத் தகவல் அறியும் சட்ட மூலத்தால் ஊடகவியலாளர்களை விட, பொதுமக்கள் பலன் அடைந்துள்ளார்கள் என்பதை இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வியந்துரைக்க, இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் அதுபற்றி கொஞ்சம் சொன்னார்கள்.

நாம் இங்கே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது.
இப்படியான சட்ட மூலம் ஒன்றை இங்கே எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வர முயல அரசாங்கம் அதை எதிர்த்து, தாமே அப்படியான சட்ட மூலம் ஒன்றைக் கொண்டுவருவதாக அறிவித்தவர்கள் தான்.. ம்ஹூம்.. வருடங்கள் ஆகிவிட்டன..

இப்படியான கலந்துரையாடல்கள் எனக்குப் பலவேளை சலிப்பையே தரும்.. காரணம் பேசிப் பேசிப் பயனென்ன கண்டோம்?
எல்லாம் பேசுவோம்.. பலவேளை தீர்மானங்கள் கூட எடுப்போம்.. ஆனால் பலன்?

எல்லா நாடுகளிலும் விதிகள் இருந்தாலும் எமக்கு மட்டும் எல்லாம் விதிவிலக்குத் தான்.

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தகாலம் இருந்தவேளையில் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் 51ஆம் இடத்தில் இருந்த இலங்கை இப்போது 163ஆம் இடத்தில்..

இலங்கைக்கு கீழே இன்னும் 16 நாடுகள் மட்டுமே..

அவை ஈரான், சீனா, எரித்ரியா, யேமன், சூடான், சிரியா, சோமாலியா, வியட்நாம், மியான்மார், வட கொரியா போன்ற 'பெயர்' பெற்ற நாடுகள்..
இந்த இணைப்பைப் பாருங்கள்...
http://en.rsf.org/press-freedom-index-2011-2012,1043.html

ஊடகத் தொழில் பற்றி என் கவியரங்கக் கவிதை ஒன்று..

ஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை



இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஊடக சுதந்திரம் பற்றிய இடுகை..

இலங்கையில் ஊடக சுதந்திரம் ..




இலங்கையிலே ஊடகவியலாளனாக இருப்பது பெருமையாகவே இருக்கிறது.

1 comment:

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner