நண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். :)
எனக்கு மட்டும் ஏன் இப்படி .. அல்லது எம் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, முதல் நாள் முதல் காட்சி படங்களின்போது??
மங்காத்தா.. பின் நேற்று வேலாயுதம்..
ஆனால் மங்காத்தா மாதிரி actionல் நாம் சம்பந்தப்படாமல் காத்திருந்ததில் நான்கு மணி நேரம் வரை போனது மட்டுமே நேற்றைய நாளின் நாசமாக அமைந்தது.
ஆனால் புதிதாக, கம்பீரமாக எழுந்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்ட் (Cine world) திரையரங்கு சேதப்பட்டு சின்னாபின்னமாகிப் போய் நிற்கிறது.
ஒரு படத்துக்காக இப்படியா?
முன்பொரு தடவை வேட்டைக்காரன் திரையிட்ட முதல் நாள் கொழும்பு சவோய் திரையரங்கு நொறுங்கிப்போனது. இப்போது இங்கே..
விஜய் படங்களின் நேரம் மட்டும் இப்படி...
விஜய் ரசிகர்கள் மோசம் என்று உடனடியா முடிவு போட்டுறாதீங்க..
அதற்கொரு காரணமும் உண்டு..
நேற்று முதல் காட்சி 3.30க்கு என்று குறிப்பிட்டிருந்தோம்.. ஐந்து மணி வரை பட ரீலும் வரவில்லை; ரசிகர்களும் இல்லை. அதற்குப் பிறகு தான் 'விஜய்' படத்தின் முதல் காட்சி என்று தெரிந்தது போல அப்படியொரு அமளி துமளி.
முதல் காட்சியே மிகத் தாமதமாகிப் போனதால் இரண்டாவது,மூன்றாவது காட்சி ரசிகர்களின் அட்டகாசம் தான் அந்த சேதங்கள்.
கண்ணுக்கு முன்னால் நாம் பார்த்துகொண்டிருக்கும்போதே இரும்பு கேட் உலுப்பி உடைக்கப்பட்டது.
முதல் காட்சிக்கு முன்னதாக சினி வேர்ல்ட்
கடைசியாக நாம் படம் முடிந்து வெளியே வரும்போது பாதுகாப்புக்காக வெளியே காவல் நின்ற முப்பது ஆயுதம் தாங்கிய போலீசாரில் ஒருவர் என்னிடம் சிங்களத்தில் கேட்டது "இப்பிடித் தான் நீங்கள் தீபாவளி கொண்டாடுவதா? ஒரு படத்துக்காக இத்தனை கூத்தா?"
வெட்கமாகத் தான் இருந்தது.
ஆனாலும் நான்கு மணித்தியாலங்களாகப் பொறுமையுடன் உள்ளே இருந்த அந்த விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம் தான்.
வேறு எந்தவொரு நடிகரின் ரசிகராவது இப்படி இவ்வளவு நேரம் காத்திருப்பரா என்றால் ஆச்சரியம் தான்.
மீண்டும் மீண்டும் திரையில் வந்த விஜயின் முன்னைய திரைப்படங்களைப் பார்த்தும் சலிக்காமல் ஆடிக் கொண்டிருந்தவர்கள் ரீல் வந்து, காத்திருந்து வேலாயுதம் என்ற பெயர் திரையில் தோன்றும் போது தான் ஜென்ம சாபல்யம் பெற்றார்கள்.
அந்த அப்பாவிகளுக்காகவாவது வேலாயுதம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
தொடர்ந்து தெலுங்கு ஹிட் படங்களைத் தமிழில் வெற்றிப் படங்களாக தன் தம்பியைக் கதாநாயகன் ஆக்கித் தந்துகொண்டிருந்த இயக்குனர் M.ராஜாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவின் வெற்றிப் படங்களைத் தமிழில் தனது வெற்றிப் படங்களாக மாற்றித் தந்து கொண்டிருக்கும் விஜய்யும் சேர்கிறார்கள் என்றவுடனேயே நான் நினைத்தது வேலாயுதம் - தமிழில் காரமான ஒரு தெலுங்கு மசாலா என்று.
ஆனால் 2000ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படத்தைத் தூசு தட்டி இப்போ தந்திருக்கிறார் ராஜா.
Old is Gold தான். அதுக்காக இப்படியா?
(2000ஆம் ஆண்டு நாகார்ஜுனா தெலுங்கில் நடித்த ஆசாத் திரைப்படத்தின் அப்பட்ட ரீமேக் தானாம் வேலாயுதம். இயக்குனர் - காலம் சென்ற திருப்பதிசாமி )
பாகிஸ்தானிய - ஆப்கானிஸ்தான் எல்லை என்று ஆரம்பிக்கும்போதே "சப்பா" என்று எண்ணத் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.
இஸ்லாமியத் தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு என்று தொடரும்போது இது விஜய் படமா அல்லது விஜயகாந்த் படமா என்று டவுட்டும் வருகிறது.
இந்த அரதப் பழைய விஷயங்களோடு, தங்கை சென்டிமென்ட், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருவது, அப்பாவி ஒருவன் அதிரடியாக மாறுவது என்று காலாகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவரும் அதே விஷயங்கள்.
எனக்கு தமிழிலும் அதீத நாயகர்களின் (Super heroes) படங்களை எதிர்பார்ப்பதிலும் வரவேற்பதிலும் விருப்பமுண்டு என்று முன்பே கந்தசாமி திரைப்படம் பற்றிய பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.
வேலாயுதம் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளும் பின் வருகின்ற சில கதைத் திருப்பங்களும் அப்படியொரு Super hero படமாக வேலாயுதம் அமையும் என்று எதிர்பார்க்க வைத்தால் ......
தன் தங்கையே உலகம் என்று எண்ணி படு அப்பாவியாக வாழும் ஒரு கிராமத்தவன் நகரத்துக்கு வரும் வேளையில் தற்செயலாக, பத்திரிகையாளர் ஒருவரால் படைக்கப்பட்ட ஒரு கற்பனையான சாகசவீரன் பாத்திரமாக மாறிவிட, அடுத்து இடம்பெறும் மோதல்கள், அந்த அப்பாவி சாகச மனிதனாக சந்திக்கும் சவால்கள் என்று நீளும் ஒரு விறுவிறு கதை தான் வேலாயுதம்.
நம்பிக்கை என்பது தான் மாசுபடாத ஒரே விடயம் என்பதும், தனி மனிதன் ஒருவனால் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றியும் அழுத்தமாக இயக்குனர் சொல்கிறார்.
அதை விட விஜய் என்ற தனி மனிதனை அவர் சார்ந்த சமூகத்தில் ஒரு சாகச சக்தியாக எப்படிக் காட்டலாம் என்பதையும் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் நிறுவப் பார்க்கிறார்.
விஜய், சந்தானம் மற்றும் வில்லன்கள் சுவாரஸ்யமாகப் படம் செல்ல உதவுகிறார்கள்.
புதிய வில்லன்கள் என்பதால் 'புதுசாகவே' இருக்கிறது.
விஜய் என்ற வசீகர சக்தி இருப்பதால் இயக்குனர் ராஜா பழைய கதையையும் கொஞ்சம் புதுசாக்கித் தேற்றி விடலாம் என்று நினைத்தாரோ..
ஆனால் விஜய்யின் எத்தனை படங்களில் இதே போன்ற தங்கைக்காக உருகும் சென்டிமென்டையும், அப்பாவித் தனத்தையும் பார்த்துவிட்டோம்..
நல்ல சமீப உதாரணம் திருப்பாச்சி.
நகரத்துக்கு வந்து வில்லன்களுடன் மோதும்போதும் ராஜாவுக்குள் இருந்து பேரரசுவே எட்டிப் பார்க்கிறார்.
ஆனால் துரு துரு விஜய் எப்போதும் போல காட்சிகளில் வரும்போது கண்ணை அகற்ற முடியவில்லை.
சந்தானத்துடன் கலகலக்கும் சில காட்சிகள், தங்கை சரண்யா மோகனுடன் விடும் லூட்டிகள், வித விதமாக வரும் சண்டைக் காட்சிகள் என்று பல இடங்களில் கலக்குகிறார்.
தங்கை + குடும்பத்தைக் கிராமத்துக்கு ரயில் ஏற்றிவிட்டு 'வேலாயுதமாக' மாறும் இடம் சிலிர்க்க வைக்கும் ஒரு இடம்.
ஆனால் உலகின் பிரபல சாகச, இணைய, play station விளையாட்டான Assassin’s Creed இன் கெட் அப்பில் விஜய் தோன்றுவது முதலில் சுவாரஸ்யமாகவும் பின்னர் கொஞ்சம் பொருந்தாத் தன்மையுடனும் இருப்பது கவனிக்கக் கூடியது.
அதிலும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் அந்நியன் திரைப்படத்தில் அந்நியன் தரிசனம் தருவதையும் ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ராஜா, பழசைத் தூசி தட்டி பெயின்ட் அடித்தாலும் பழசு பழசு தான் ராசா..
இவர் தான் எங்கள் மன்மோகன் சிங் என்று விஜயைக் கிராமத்தவர்கள் அறிமுகப்படுத்தி, எங்கள் மனதை ஆள்பவர், இந்த மண்ணை ஆள்பவர், ஏன் இந்த மாநிலத்தையே.. என்று நிறுத்தும் இடத்தில் இங்கேயே இத்தனை கரகோஷம் என்றால் தமிழகத்தில் கேட்கவேண்டுமா?
பாடல் காட்சிகளில் விஜயின் நடனம் கேட்கவும் வேண்டுமா?
சொன்னால் புரியாது தான் top of the charts.
ரத்தத்தின் ரத்தமே வழக்கமான விஜய் டச்.
சில்லக்ஸ் அப்படியே இசையுடன் சேர்த்து வேட்டைக்காரன் 'என் உச்சிமண்டை'யின் மீள் பதிப்பு.
மாயம் செய்தாயோ விஜயின் கெட் அப்பும் உறுத்தல்; கிராபிக்ஸ் படு உறுத்தல்.
இதைவிட எங்கள் தொலைக்காட்சிப் பிரிவில் பணிபுரியும் சிங்கள இளைஞர் ஒருவர் கலக்கி இருப்பார்.
ஜெனீலியா துடிப்பான, மக்கள் நலன் நோக்கிய இளம் பத்திரிகையாளர் பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்.
ஆனாலும் சில காட்சிகளில் இதை விட இன்னும் இயல்பாக செய்திருக்கலாமோ என்று என்ன வைக்கிறார்.
ஹிந்தியில் கலக்கியும் பாவம் தமிழில் விஜய் கிடைக்கவில்லை.
'வேலாயுதத்தை' இவர் உருவாக்கும் விதம், பின்னர் அப்பாவியை ஆபத்பாந்தவனாக்க செய்யும் முயற்சிகள் ஆங்கில சாகசத் திரைப்படங்களில் வரும் பெண் பத்திரிகையாளர் பாத்திரங்களை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்க வைத்தது.
ஹன்சிகா - கிராமத்தில் வாழும் அத்தை மகள்? நம்புங்கப்பா..
வெள்ளையாய் புசுபுசுவென்று இருந்தால் எல்லாருக்கும் பிடித்துவிடுமா?
ஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் பார்த்தாலே உவ்வேக்..
சில்லாக்ஸ் பாடலில் பல இடங்களில் அசைவுகளில் குஷ்புவை ஞாபகப்படுத்துகிறார்.
(அந்தக் காலமா இந்தக் காலமா என்பது அவரவர் ரசனையில்)
சரண்யா மோகன் - பாவம்.. திருப்பாச்சியில் மல்லிகாவின் அளவு அதே வேலை.
சந்தானம் - கலக்கோ கலக்கு என்று கலக்கி இருக்கிறார். விஜயுடன் வடிவேலு நடிக்கும் நேரமே விஜய் அவரை ஓரங்கட்டி விடுவார். ஆனால் வேலாயுதத்தில் பல காட்சிகளில் சந்தானம் விஜயை over take செய்துவிடுகிறார்.
இரட்டை அர்த்தம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்.
பல காட்சிகளில் வாய் விட்டு சிரித்தேன்.
குறிப்பாக "இவ்வளவு நாளும் திருடன் என்று நானே என்னை நம்ப வைச்சேனா?" என்று புலம்பும் இடம்...
வில்லன்கள் இருவரும் வட இந்திய வரவுகள் போலும்.. மிரட்டியுள்ளனர்.
M.S.பாஸ்கர், பாண்டியராஜன், ராகவ், வின்சென்ட் அசோகன், ஷாயாஜி ஷிண்டே, இளவரசு என்போருக்கு ஓரளவு முக்கியமான பாத்திரங்கள்.
விஜய் அண்டனியின் இசை - ம்ம்ம் புதுமை எதுவும் இல்லை. அங்கே இங்கே சுட்டது பாதி, ஏற்கெனவே வந்தது மீதி என்று சமாளித்து நிரப்பி இருக்கிறார்.
ப்ரியனின் ஒளிப்பதிவு long shots இல் பிரம்மாண்டத்தைத் தருகிறது. அக்ஷன் காட்சிகளில் அசத்துகிறது. கடைசிக் காட்சிகளில் ப்ரியன் கலக்கி இருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் அசத்தல் என்று தான் சொல்லவேண்டும். மிரட்டி இருக்கிறார்கள். விஜயின் வழமையான சண்டைக் காட்சிகளே பொறி பறக்கும்.. இதில் Hollywood சண்டைக் கலைஞர் டொம் டெல்மாரும் இருப்பதால் அனல் கக்குகிறது.
இயக்குனர் ராஜாவின் படங்களில் ரசனையாக இருக்கும் சில விடயங்கள் எவ்வளவு தான் அக்ஷன் மசாலாவாக இருந்தாலும் வேலாயுதத்திலும் விடாமல் வருகின்றன.
அழகான பாசம்.. (ஆனால் இளைய தளபதி இருப்பதால் அது கொஞ்சம் பிழிய பிழியப் பாசமாகி விடுகிறது)
சிந்திக்க வைக்கும் சரேல் வசனங்கள் - பன்ச் வசனங்கள் பேசி காதில் பஞ்சடைய வைக்கவில்லை என்று ஆறுதல் இருந்தாலும், சில இடங்களில் பக்கம் பக்கமாக நீளும் வசனங்கள் கொஞ்சம் ஓவர் தான்.
ஆனாலும் விஜய் இறுதிக் காட்சியில் பேசும் நம்பிக்கை பற்றிய வசனங்கள் நச்!
வசனங்கள் - சுபா.. தனது முத்திரையை வேலாயுதத்திலும் பதித்துள்ளார்.
ஒவ்வொருவரும் மனதில் நம்பிக்கை, துணிச்சல் வைத்திருந்தால் நாம் எல்லோருமே சூப்பர் ஹீரோக்கள் தான் என்ற விடயம் இந்த சினிமா நாயகர்களைக் கடவுளாக்கும் சினி வெறியர்களுக்கும்/ரசிகர்களுக்கும் போய்ச் சேரவேண்டிய ஒரு தகவல் தான்.
ஆனால் இந்தப் பக்கம் பக்கமான வசனங்களைப் பேசிய பின், தன் ரசிகர் மன்ற/கட்சிக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டே மக்கள் வில்லனைப் பந்தாடுவதும் மக்களின் தலைகளால் விஜயின் உருவம் சிரிப்பதுமாக வசனங்களின் வலிமையை முடமாக்கி விடுகிறதே..
இன்னொரு முக்கியமான விடயம் - இத்தனை ஆண்டுகள் கடந்தும், வேலாயுதத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள், ஜிஹாத், யா அல்லா, உலக முஸ்லிம்கள் எல்லோருக்காகவும் போர்டஆகிறேன் போன்ற விடயங்கள், வில்லனும் முஸ்லிம், நேர்மையான போலீஸ் அதிகாரியும் முஸ்லிம், கதாநாயகனின் நண்பனும் முஸ்லிம் என்று இன்னுமா என்று கொட்டாவி விட வைத்தது எந்த விதத்தில் நியாயம் இயக்குனர்?
உன்னைப் போல் ஒருவனுக்குப் போர்க்கொடி தூக்கியோர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
இன்னொரு சுவாரஸ்ய விடயம்.. மங்காத்தாவில் விஜயின் காவலன் பாட்டுக் காட்சி வந்தது போல, இதில் மங்காத்தாவின் ஒரு பாடல் வருகிறது..
ஆரோக்கியமான மாற்றம்??
அதுசரி வரிக்கு வரி வேலாயுதம் ஒரு கிராமத்துப் பால்காரன் என்று சொல்றங்களே தவிர ஒரு காட்சியிலாவது விஜய் பால்காரனாகக் காணவில்லையே..
ராமராஜன் ட்ரவுசரோடு விஜயை ஒரு காட்சியிலாவது காட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ;)
பார்த்தவரை விஜய் ரசிகர்களுக்குத் திருப்தியைத் தந்துள்ளது வேலாயுதம்.
ஆனால் தங்கள் தலைவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்கள் என்பதும், பதினொரு ஆண்டுகளின் முன்னதான ஒரு படத்தின் டப்பா ரீமேக் தான் இது என்பதும் அவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கிறது என்பது சிலருடன் பேசியதில் தெரிந்தது.
வேலாயுதம் - தீபாவளி விஜய் வெடி