எங்கேயும் எப்போதும்

ARV Loshan
22


எங்கேயும் எப்போதும் படம் அண்மையில் வெளிவந்த புதிய திரைப்படங்களில் மிக அருமை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதன் திரைக்கதை அசத்தல் என்றும் அறிந்திருப்பீர்கள்...
ஆனால் அருமையான அந்தப் படம் பார்த்தும், மனம் உருகி, படத்தால் பாதிக்கப்பட்டும் கூட, விமர்சனப் பதிவு போட முடியாமல் நேரம் இடம் கொடுக்காமல் நான் ஒருத்தன் தவித்த கதை அறிந்திருக்க மாட்டீர்கள்.



திரைக் கதையும் கதை சொல்கிற விதமும் துல்லியமாகவும், பலமாகவும் இருந்தால் நட்சத்திரங்களோ, பெரிய பொருட்செலவுடைய தயாரிப்போ, என் முக்கியமான இசையமைப்பாளரோ கூடத் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு அருமையான படைப்பு 'எங்கேயும் எப்போதும்'.

A.R.முருகதாஸ் தயாரிப்பாளராக இறங்க எடுத்த சரியான முதல் அடி.
இயக்குனர் சரவணன் கதை சொல்லிய விதம் பிடித்ததாக முருகதாஸ் அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் பிடிக்கும் விதமாக வேகமாக ஆனால் நிதானமாக ஓடும் கதையை சொல்லத் தெரிந்திருக்கிறது சரவணனுக்கு.

சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்குமாக நேரெதிர் திசையில் பயணிக்கும் இரு பஸ்கள் நேருக்கு நேராக மோதிக்கொள்ள ஆரம்பிக்கிறது படம்.
பஸ்ஸினுள்ளே பயணிக்கும் நான்கு பாத்திரங்களின் இரண்டு முன்னைய கதைகள் (Flashback) பின்னோக்கி அழைத்துச் செல்வதாக படம்.

இரண்டு காதல் ஜோடிகள்..
அவர்களின் falshbackக்குகள் இடையிடையே வந்து போகின்றன.
பாடல்கள் இடைஞ்சலாக இல்லாமல் கதை சொல்லிகளாகவே வருகின்றன.

நடிகர்கள் பற்றிய விடயங்களுக்கு செல்ல முதல் இயக்குனருக்கு துணையாக உள்ள இருவரைப் பாராட்டவே வேண்டும்.
ஒளிப்பதிவாளர் - வேல்ராஜ்
எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாக உழைத்திருக்கிறார்.
சென்னையில் அனன்யாவின் நேர்முகத் தேர்வு அலைச்சல், திருச்சியில் ஜெய் - அஞ்சலி காதல் துரத்தல்கள் என்று அவர் ஒளிப்பதிவில் காட்டும் வித்தியாசங்களும், பின் பஸ் விபத்தில் காட்டும் பிரம்மாண்டமும் கலக்கல்.
இதுவரை எந்தவொரு தமிழ்த் திரைப்படத்திலும் விபத்தொன்றை இந்தளவு தத்ரூபமாகக் காட்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.
அந்த உழைப்புக்கு திரையரங்கில் எழும் குரல்கல்களும், திரைப்படம் முடிந்து வெளியே வந்தபின்னும் மாறாத முகபாவங்களும், பாராட்டுக்களும் சான்று.
அந்த 'விபத்தை' உருவாக்குவதில் பங்குகொண்ட கலை இயக்குனர் உட்பட்ட அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் C.சத்யா..
இந்தப் படம் வெளிவருவதற்கு முதலே சேவற்கொடியின் கம்பி மத்தாப்பு பாடல் மூலமாகப் பிரபலமாகிய சத்யா, இந்தப் படத்தின் பாடல்கள் மூலமாக இளைஞரிடம் நெருங்கியுள்ளார்.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக கேட்கும்போது ரசித்ததைப் போலவே திரையிலும் ரசனையாக வந்துள்ளன.
சொட்ட சொட்ட நனைய வைத்தாய், கோவிந்தா, மாசமா பாடல்கள் ஒரு நாளில் காலையில் கேட்டால் அன்று நாள் முழுவதும் மனசில் repeatகள் பல தடவை..
இயக்குனர் பாடல்களை உள்வாங்காமல் இவ்வளவு அருமையாகக் காட்சிப்படுத்த முடியாது.
எந்தப் பாடல் பிடித்தது என்று கேட்டால் எல்லாம் என்றே பதில் சொல்லும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே அருமையாக வந்துள்ளன.

மாசமா பாட்டுக்கு தோள் குலுக்கலிலேயே நடன அசைவு கொண்டு வந்திருப்பது இப்ப சிறு குழந்தைகளிடமும் ஹிட் ஆகியிருக்கிறது.
இந்தப் பாட்டுக்கு வரிகள் கொடுத்த இயக்குனர் சரவணன் ரசிக்க வைக்கிறார்.
நா.முத்துக்குமாரின் ஏனைய பாடல்களிலும் சின்னச் சின்ன ரசனைத்தூறல்களில் நனைய வைக்கிறார்.
ஒரு ஒட்டுமொத்த team work படம் முழுக்கவே தெரிகிறது.
ஆரோக்கியமான ஒரு ஆரம்பம்.



படத்தின் நேர்த்தியில் பங்களிப்பை வழங்கியுள்ள தொகுப்பாளர் மற்றும் கலை இயக்குனரின் பங்களிப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரேயொரு சின்ன ஆசை.. இந்தளவு அருமையாக எமக்குத் திருப்தியாக வந்துள்ள படத்தில் இயக்குனர் நினைத்த அதே விதத்தில் ஒளிப்பதிவும், கலய் நுணுக்கமும் வந்துள்ளனவா என்று சரவணனிடம் கேட்கவேண்டும்.

கதிரேசன், மணிமேகலை, அமுதா, கௌதம் என்ற நான்கு பெயர்களும் எங்களோடு சம்பாசிக்கும் சக நண்பர்கள் போல இரு மணிநேரத்தில் ஆகிவிடுகிறார்கள். இது இயக்குனரின் மிக முக்கியமான வெற்றி.
நாளாந்தம் எம் வீடுகளில், வீதிகளில் பார்க்கும் நான்கு சராசரி இளைஞர், யுவதிகள்.


திருச்சியில் ஒரு காதல் ஜோடி..
ஜெய் - அஞ்சலி..
அப்பாவிக் காதலன்.. அடாவடிக் காதலி..
பயம் + மரியாதையுடன் ஜெய்..
அவதானம், அக்கறை அதேவேளை பட்டது பட்டபடி பேசிவிடும் துணிச்சலான அஞ்சலி..
சுவாரஸ்யமான கட்டங்களுடன் காதல்.

அலைய வைத்து பிகு பண்ணும் இடங்களில் ஜெய்க்கு அவர் மீது காதல் வருகிறதோ என்னவோ எனக்கு என்றால் கடுப்பு வருகிறது.
இப்படியா ஒருத்தனை வருக்கிறது? ஆனாலும் அவர் ஏன் அவ்வாறெல்லாம் சோதனை வைக்கிறார் என்பது சுவாரஸ்யம்.
ஆனால் இதையே எல்லா இளம்பெண்களும் பின்பற்ற ஆரம்பித்தால் நம்ம இளைஞர்கள் பாவம்..

இருவருக்குமிடையில் காதல் மலரும் இடமும், ஊடல், கூடல் இடங்களும், பஸ் காட்சிகளும் கலகலப்பும் ரசனையும்..
ஜெய் இப்படியான பாத்திரங்களில் உருக்கி வார்த்தது போல பொருந்துகிறார்.
அவரது வெகுளித்தனமான பாத்திரத்துக்கு பிசிறடிக்கும் குரலும் பொருத்துகிறது.
அஞ்சலி - அழகு.. இப்போது அங்காடித்தெரு அஞ்சலியாக மிளிர்கிறார். கண்கள் பேசும் பாஷைகளில் கலக்குகிறார். கடைசிக் காட்சியில் கலங்க வைக்கிறார்.

அனன்யா - சர்வா காதல் இன்னொரு ரகம், ரசனை..
முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக அனன்யா நம்ப மறுப்பதும், சிடு சிடு என விழுவதும் பின்னர் உருகி மருகுவதும் அழகு..
சீடன் பாத்திரத்தின் தொடர்ச்சி போலவே கிராமிய மணம் வீசுகிறது.
அஞ்சலிக்கு நேரெதிர் பாத்திரம்.. ஆனால் மெளனமாக அடக்கி வைத்துள்ள காதலை வெளிப்படுத்தும் இடம் அழகு.

சர்வா.. படு சாதாரணமாக அலட்டல் இல்லாமல் திரியும் நம் போன்ற இளைஞன். அந்த ஆடை அணியும் நேர்த்தியும் கொஞ்சம் மிடுக்கான நடையும் ஆனால் கண்ணியமான நடத்தையும் கச்சிதமாக உருவாக்கப்பட்ட பாத்திரம்.
தனியொரு ஹீரோவாக நல்ல ஒரு படம் கிடைத்தால் நன்றாக வருவார் என நம்பலாம்.

அனன்யாவின் அக்காவாக வருபவர், அஞ்சலியின் தந்தையாக வரும் போலீஸ் ஏட்டு, ஜெய்யின் நண்பராக வரும் அந்த மன்மதக் குஞ்சு, ஜெய்யின் தாயார், பஸ் பயணிகளான பாத்திரங்கள் என்று பார்த்து பார்த்து இயக்குனர் சரவணன் செதுக்கிய பாத்திரங்கள் உயிர்பெற்று மின்னுகின்றன.
குறிப்பாக வெளிநாட்டில் இருந்து ஐந்து வருடங்களின் பின் வரும் தந்தையும், அவர் (நாமும்)பார்க்கவே பார்க்காத குழந்தையும், பார்த்த பார்வையில் பற்றிக் கொள்ளும் பருவக் காதலர்களும், புது மனைவியை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே வரும் அப்பாவிக் கணவன் கண்முன்னே நிற்கிறார்கள்.

பஸ் பயணங்கள் இரண்டும் எங்கள் வாழ்வில் நடப்பது போல அவ்வளவு தத்ரூபம்..


இயக்குனரிடம் நான் ரசித்த இன்னும் ஒரு விடயம், காட்சிகள் முன்னோக்கி, பின்னோக்கி வந்தாலும் பஸ்சின் பயணத்துடன் தூரம், இடங்கள், ஒவ்வொரு பயனியினதும் கதைகள், மனப் பாரங்கள் என்று மன உணர்ச்சிகளுடன் கலந்திருந்தாலும் குழப்பாமலும், வேகம் குறையாமலும் பார்த்திருப்பது தான்.

படமாக ரசிப்பதோடு எங்கேயும் எப்போதும் பாடமாகத் தந்துள்ள சில விடயங்களையும் பார்க்க வேண்டும்..


காதலிக்க முதலே காதலன்/காதலியின் அனைத்தையும் அறிந்துகொண்டு இறங்கவேண்டும்..
காதலித்தால் அது கல்யாணத்தில் தான் முடியவேண்டும்.
உடல் தானம், இரத்த தான அவசியம்
மனிதாபிமானம், மற்றவருக்கு என்ன நடந்தால் என்ன என்றிருத்தல் வேண்டாம்..
வீதி ஒழுங்குகள், பாதுகாப்பான வாகன செலுத்துகை பற்றிய அக்கறை..

போதனையாக சொல்லாமல் மனதில் பதியும் விதமாக படத்தில் ரசனையோடு சொல்லி இருப்பது வரவேற்க்கக் கூடியது.
ஆனால் முடிவில் மனம் கனக்க வைத்திருப்பது சராசரி ரசிகனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சுப முடிவு இன்னொன்றும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரசித்திருப்போமே..

அஞ்சலி நன்றாக நடிக்கும் நல்ல படங்களின் முடிவுகள் இப்படித் தான் என்று ஏதாவது நியதியோ?

இப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில் நின்று யாழ்ப்பாணத்துக்குப் புறப்படும் பெரிய பஸ்களைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.

இலங்கையிலும் இம்மாதம் முதலாம் திகதி முதல் (சனிக்கிழமை முதல்) வாகனம் ஓட்டுவோர் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
மீறுவோருக்கு அபராதம், தண்டனைகள் காத்திருக்கிறதாம்.
நல்ல விஷயம் நடப்பதாக இருந்தால் வரவேற்கலாமே..
பாதுகாப்பாக ஓடுவோம்,, பத்திரமாக வாழ்வோம்.


எங்கேயும் எப்போதும் - எங்கள் வாழ்க்கையிலும் 

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*