ஏழாம் அறிவில் ஏமாற்றிய ஹரிஸ் ஜெயராஜ்

ARV Loshan
18

எனது உலகம் இசையாலும் தமிழாலும் உறவுகளாலும் நிரப்பப்பட்டது என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு..
வானொலி வாழ்க்கையில் இருப்பதால் இசை என்னைச் சுற்றியே இருக்கும்..
அதிகமாக சினிமா இசை தான்..

அந்தந்தக் காலகட்டத்தில் வருகின்ற பாடல்களில் பிடித்த பாடல்களைப் பற்றி இடுகைகளினூடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.
அண்மைக் காலத்தில் வெளிவந்த பாடல்களை அமர்ந்திருந்து ஆறுதலாகக் கேட்க நேரம் கிடைக்காததால் விடியலின் போதும், வாகன ஓட்டத்தின் போதும் கொஞ்சம் கொஞ்சம் கேட்டதுடன் சரி..

மங்காத்தா, வேலாயுதம் பாடல்களின் பிரம்மாண்டத்துக்கு மத்தியில் அமைதியாக வந்து ரசிக்க வைத்திருக்கும் எங்கேயும் எப்போதும் - இசை - சத்யா , வாகை சூடவா - இசை - கிப்ரான் , யுவன் - ஜோஷ்வா ஸ்ரீதர் ஆகிய திரைப்பாடல்கள் ரசிகர்களால் அமைதியாக ரசிக்கப்படுகின்றன.


ஆனால் இந்த இருவாரங்களுக்குள் அதிகமாக வானொலிகளில் ஒலிக்கின்ற பாடல்களும், ரசிகர்களால் அதிகம் கேட்கப்படும் பாடல்களாகவும் இருக்கின்றவை ஏழாம் அறிவு, மயக்கம் என்ன திரைப்படங்களின் பாடல்கள் தான்.

ஏழாம் அறிவு - மிகப் பெரிய எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பிரம்மாண்டத் தயாரிப்பு.
இசை ஹரிஸ் ஜெயராஜ்.

ஒரு சீன மொழிப் பாடலுடன் (எழுதியவர் மதன் கார்க்கி) மொத்தமாக ஆறு பாடல்கள்.

எனக்கு என்றால் இவற்றுள் மிகப் பிடித்த ஒரு பாடல்
இன்னும் என்ன தோழா - பா.விஜய் எழுதிய வரிகளின் வலிமையையும் பலராமின் அழுத்தமான ஆழமான குரலும் ரசிக்க வைக்கின்றன.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! 


விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

பிசிறில்லாமல், அழுத்தமாக (ஆனால் கம்பீரமில்லாமல்) பலராமின் குரலில் இந்த வரிகள் கேட்கையில் எதோ ஒரு மென்சோகம் மனதுக்குள்.... 

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?


இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!



பா. விஜய் இப்படியான பாடல்கள் கிடைத்தால் வெளுத்து வாங்கிவிடுவார்.  இளைஞன் திரைப்படத்திலும் இப்படியான ஒரு பாடல் இருக்கிறது.

பலராமின் குரலில் நம்பிக்கை தொனித்தாலும் இன்னும் இருக்க வேண்டிய கம்பீரம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஷங்கர் மகாதேவன், திப்பு, ஹரிஹரன் ஆகியோர் யாராவது இந்தப் பாடலைப் பாடியிருக்கலாமோ என்று ஒரு சின்ன ஆதங்கம்.

கூட சேர்ந்து பாடியுள்ள நரேஷ் ஐயர், சுசித் சுரேஷன் ஆகியோரின் குரல்களிலும் வரிகளில் உள்ள எழுச்சியை காண முடியாதது கொஞ்சம் குறையே.

இந்தப் பாடல் மனதுக்கு இன்னும் நெருக்கமாக வந்திருக்கும் ஹரிஸ் இசையில் இன்னும் கொஞ்சம் புதியதை தந்திருந்தால்.

பல முன்னைய பாடல்களின் சாயல் தொனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

A.R.ரஹ்மானின் தேசம் - மழை மேகமே, பம்பாய் - பூவுக்கென்ன பூட்டு மற்றும் மைனா - நீயும் நானும் பாடல்களை கொஞ்சம் மாற்றிப் போட்டால் இந்தப் பாடல் வந்துவிடும்.

ரசித்த ஒரு ரசனையான வரிக் கூட்டம்...

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்



முன்னைய பாடலை எழுதிய பா.விஜய் எழுதிய இன்னொரு பாடல் அவரது வழமையான 'மசாலா' பாடல்..

ஒ ரிங்கா - விசேடம் ஏதும் இல்லை.
A.R.ரஹ்மானின் சர்க்கரைக்கட்டி படப் பாடல் 'டாக்சி'யை சுட்டுத் தன் பாடலாகத் தந்திருக்கிறார் பிரதி மன்னரான ஹரிஸ் ஜெயராஜ்.
ஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய தன் கடுப்பை தகவல் மூலமாகத் தந்துள்ள எனது நேயரான பாலச்சந்திரராஜன் கார்த்திக் எங்கேயும் எப்போதும் - கோவிந்தா பாடலும் இது போலவே என்று ஞாபகப்படுத்தியுள்ளார்.

பா.விஜயை புதிய வாலி என்று சொன்னால் தப்பே இல்லை..

ஒ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் கங்கா 
ஏ பிங்கா பிங்கா
ஹிப் பாப் லா சாங்கா
ஒ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா

என்ன கொடும பா.விஜய் !!!!

முன் அந்திச் சாரல் நீ - முத்துக்குமார் உருகியுள்ள ஒரு அழகான கவிதை.

முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் 
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் 
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஒரு அழகான பெண்ணை எப்படியெல்லாம் உச்சமாக வர்ணிக்க முடியுமோ அப்படியெல்லாம் கவிஞர் உருகியதை இசையை முன்னைய பாடல்களில் இருந்து உருவி, ஒட்டி வீணடித்துள்ளார் ஹரிஸ் ஜெயராஜ்.
அதிலும் கார்த்திக்கின் குரலும் சேர்ந்து எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் இதே ஹரிஸ் இசையமைத்த தொட்டி ஜெயா படப்பாடல் 'உயிரே என்னுயிரே' ஞாபகம் வந்து இந்தப்பாடல் மீதான பிரியத்தைக் குறைத்துவிடுகிறது.

இன்னும் பலர் விண்ணைத் தாண்டி வருவாயா - ஒமணப் பெண்ணே பாடலில் இசைப்புயல் பயன்படுத்தியே அதே வடிவிலான இசை, பாடகரின் குரல் வடிவங்களைப் பயன்படுத்தியதைக் காட்டுகிறார்கள்.

கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ 

கவிதையாக இந்த வரிகளின் சுவையைப் பாடலில் நான் காணவில்லை.
ஆனாலும் கை கொடுங்கள் நா. முத்துக் குமார்.


முத்துக்குமாரின் இன்னொரு பாடல் யெல்லேலமா

ஹரிசின் அடிக்கடி பல பாடல்களில் கேட்கும் அதே விதமான துள்ளல் இசை..
அயன், ஆதவன், வாரணம் ஆயிரம் என்று ஆண்டாண்டு காலமாக ஹரிஸ் தரும் அதே வித இசை.. ஆங்காங்கே கொஞ்சம் மாற்றி 'புதிய' பாடலாகத் தர முயன்றுள்ளார்.

எனக்கு இந்தப் பாடலின் மெட்டமைப்பு + முத்துவின் முத்தான உற்சாக வரிகள் பிடித்திருந்தாலும் கூட ஸ்ருதி ஹாசனின் தமிழ்க்கொலையால் இந்தப் பாடல் கேட்டாலே கடுப்பாகிறது.

உல்லம் துல்லுமா, வெல்லம் அல்லுமா என்று அந்த வரிகள் வரும்போதெல்லாம் உயிரை வாங்குகிறார்.
இசையமைப்பாளர் உட்பட இந்தப் பாடல் உருவாகும் போது இருந்தவர்கள் எல்லாரும் என்னத்தைக் கேட்டார்களோ? ஒருவருக்கும் 'காதுகள்' இருக்கவில்லையா?

அல்லது 'பெரிய' இடத்து மகள் குறை சொல்லக் கூடாது என்று விட்டுவிட்டார்களோ?
ஒரு பாடல் என்பது அல்லவே.. பலமுறை கேட்டு இறுதியாக product ஆக வெளி வருமுன் யாரும் ஒருவரும் கூட இந்த தமிழ்ப்படுகொலையைத் திருத்த முனையவில்லையா?

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க...
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க...

இப்படியான வரிகள் எல்லாம் அந்த சில வழுக்களால் வலுவிழந்து போய்விட்டன..

ஸ்ருதியுடன் சேர்ந்து பாடியுள்ள விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி ஆகியோர் பாடும் இடங்கள் அருமையாகவே உள்ளன.
இவ்வளவுக்கும் அந்தக் கொலைகள் விழும் இடங்களை மட்டும் தான் ஸ்ருதி பாடியிருப்பதாகத் தெரிகிறது.

தோளில் விழாமலே..
கை சிறிதும் படாமலே..
உன் நிழலும் தொடாமலே..
நீ என்னை கொள்ளை இட்டாய்..
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா?
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா..

முத்துக்குமார் மீண்டும் மீண்டும் காதலிக்க வைக்கிறீர்கள்.. தயவு செய்து இந்த வரிகளை மீண்டும் வேறெங்காவது இட்டு தளிர்க்க செய்யுங்கள்.



இறுதியாக,
கவிஞர் கபிலன் எழுதிய 'யம்மா யம்மா' - காதல் சோகப் போடல்..
எவ்வளவு தான் சோகமான வரிகள் இதயத்தை நெருங்க முயற்சித்தாலும், SPBயின் என்றும் இனிக்கும் குரல் மனதைப் பிழிந்தாலும் மெட்டு பல இடங்களில் கேட்டது..

காதல் அழிவதில்லை படத்தில் இதே மெட்டில் இதே SPB பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இசை TR.
அதே போல அன்பே சிவம் படத்தில் வித்யாசாகர் இசையமைத்து படத்தில் வராத "மௌனமே பாஷையாய் பேசிக்கொண்டோம்" பாடலும் இதே மெட்டில்...
அதுவும் SPB பாடியது.

இதைவிட எங்கள் வானொலியின் இசையமைப்பாளர் ஷமீல் சொல்கிறார் வாரணம் ஆயிரம் "அஞ்சல" பாடலைக் கொஞ்சம் ஸ்தானங்களை இழுத்து நீட்டினாலும் இந்தப் பாடலின் மெட்டு வருமாம் என்று..

ஹரிஸ் ஜெயராஜின் சொந்த சரக்குகள் தீர்ந்து விட்டன போலும்..
இனி ஹரிஸ் ஜெயராஜின் இசைப் பயணத்துக்கோ தீர்த்த யாத்திரைக்கோ தான் அவர் சரி...

அவரது பாடல்கள் தான் ஹிட் ஆகின்றனவே என்போர்...
உண்மை தான் .. எந்தவொரு ஜனரஞ்சக மெட்டும் மீண்டும் மீண்டும் வேறு வடிவங்களில் வந்தாலும் நாம் ரசிப்போம் தான்.
அதுக்காக ஒரே மாவை மீண்டும் மீண்டும் தந்தால் எப்படி?

என்னை விட இசை ஞானம் கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் காணப்படும் ஆங்கில, வேற்று மொழிப் பாடல்களின் தாக்கங்கள் உள்ளதா என விரிவாக அலசி சொல்லுங்கள்.
யாரை நம்பினாலும் இந்த கொப்பி மன்னர் ஹரிசை நம்ப முடியாதப்பா..

யம்மா யம்மா வரிகள் அபாரம்.
கபிலன் கவிதைகள் கண்ணீரால் எழுதப்பட்டனவா என்று நினைக்க வைக்கிறார்..

அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே


பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்


வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

இத்தனை ஆண்டுகளில் எத்தனை தடவை SPB இப்படி எமக்காக உருகியிருப்பார்.. இப்போது கபிலனின் வரிகள்.
கொஞ்சம் ஒட்டினாலும் நெஞ்சுக்குள் நிரந்தரமாக இடம்பிடிக்காமல் போகிறது இந்தப் பாடலும்..

ஏழாம் அறிவு இசையில் ஹரிஸ் ஜெயராஜ் ஏமாற்றியே விட்டார்...
முருகதாஸ் அந்தத் தவறை விட மாட்டார் என்று நம்பலாமா?


பி.கு - மயக்கம் என்ன பாடல்கள் பற்றி இங்கே எழுதினால் நீண்டு விடும்.. பிறகு வருகிறேன்.
அதற்கு முதல் நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் பற்றியும் சில விடயங்களைப் பகிரவேண்டும்.. இன்று மீண்டும் சந்திக்கலாம். 

Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*