Boxing Day Tests பார்வை

ARV Loshan
22
நேற்றைய தினம் இந்த வருடத்தின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி நாளாக அமைந்தது. Boxing Day Test போட்டிகளின் இறுதி நாட்களாக அமையவேண்டிய இன்றைய நாளுக்கு முன்பதாகவே முடிந்துபோனதும், இதற்கு முந்தைய போட்டிகளில் வென்ற அணிகள நேற்று சுருண்டு தோற்றதும், போட்டிகளை நடத்திய,ஆடுகளங்களை சாதகமாக அமைக்க வாய்ப்பிருந்த (அமைத்தனவோ, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனவோ அவர்களுக்கே வெளிச்சம்) இரு அணிகளுமே பரிதாபமாகத் தோற்றது ஆச்சரியமான ஒற்றுமைகள்.


மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி ஓரளவு எதிர்பார்த்ததே. பேர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அதிவேகத்தில் தடுமாறித் தோற்றாலும் இங்கிலாந்தின் திட்டமிடலும் ஆடுகளத்தைப் புரிந்து செயற்படும் ராஜதந்திரமும் இத்தொடரில் மட்டுமல்ல, ஸ்ட்ரோஸ்+அன்டி பிளவர் கூட்டணியின் ஆரம்பம் முதலே பல அபார வெற்றிகளைக் கொடுத்துவந்த அம்சங்கள்.

மேல்பேர்னிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை உருட்டி ஓரங்கட்ட முக்கிய காரணங்களாக அமைந்தவை இவை மட்டுமல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.
ஆஸ்திரேலிய அணி என்ற மரத்தின் ஆணிவேர் ரிக்கி பொன்டிங்கின் தொடர்ச்சியான தடுமாற்றம் அவருக்குத் தன்னையும் உற்சாகப்படுத்திக்கொள்ள முடியாது போயுள்ள நேரத்தில், தளர்ந்து போயுள்ள அணியை எவ்வாறு உத்வேகப்படுத்தி வெற்றியைத் தொடர்ச்சியாகப் பெற்றுத் தருவதாக மாற்றமுடியும்?

மைக் ஹசியைப் போல (ஹசியும் மெல்பேர்னில் படுமோசமாக மிகைக் குறைவான ஓட்டப் பெறுதிகளுக்கு ஆட்டமிழந்தது மேலும் அதிர்ச்சி), வொட்சனைப் போல(எப்போது அரைச் சதங்களை சதமாக்கப் போகிறார்???) ஓட்டங்களைக் குவித்து தலைவர் பொன்டிங்கின் பாரத்தை,அழுத்தத்தைக் குறைக்கக் கூட ஒருவருமே இல்லை.
ஆஷஸ் தொடங்க முதலில் அதிகம் பேசப்பட்ட கலும் பெர்குசன், உஸ்மான் கவாஜா ஆகியோர் பற்றித் தேர்வாளர்கள் மறந்துவிட்டார்களா?

யார் இந்த ஸ்டீவ் ஸ்மித்? அணிக்குள் என்ன செய்கிறார் இவர்?
என்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும்.

ரிக்கி பொன்டிங்கைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற அண்மைய கருத்துக்களில் (முன்னைய ஆஷஸ் தோல்விகளின் பின்னரும் இதே போன்ற விமர்சனங்கள் எழுந்த விமர்சனங்களும் இவையே) எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை.ஆனாலும் இப்போது இருக்கும் தடுமாற்றமான இல் பொன்டிங்கினால் இது போன்ற பலமான இங்கிலாந்து அணியை இங்கிலாந்துக்கும் சமபல சாதகமுள்ள ஆடுகளங்களில் ஜெயிக்கவைக்க முடியாது என்பது தெரிகிறது.

ஆனாலும் சிட்னி டெஸ்ட் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பொன்டிங்கைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கி வேறொருவரைத் தலைவராகக் கொண்டுவருவதானது மாபெரும் முட்டாள்தனமாக அமையும்.அத்துடன் புதிய தலைவராக வருபவர் மீது பல மடங்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.
  ஆனால் கிரேக் சப்பெலும் அதிமேதாவித்தனமான ஏனைய தேர்வாளர்களும் முதலில் பதவி விலகவேண்டும்.. அணித்தேர்விலே முதலில் கோட்டைவிட்டுத் தலைவரையே முடமாக்கியதன் முழுப் பொறுப்பையும் இவர்களே ஏற்கவேண்டும்..

இப்படியெல்லாம் நேற்று இரவு வரை எழுத்துக்களைக் கோர்த்துவிட்டு,இன்று காலை வந்த செய்திகளால் அதிர்ச்சியடைந்து போனேன்..

ரிக்கி பொன்டிங் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்..
இடது கை விரல் முறிவு காரணம்..

நம்ப முடியவில்லை. காயம் காரணமாகத் தான் பொன்டிங் விளையாடவில்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. வெளியேற்றுவது எப்படி என்று நினைத்த தேர்வாளருக்கு ஒரு சாட்டு விரல் முறிவு ரூபத்தில் கிடைத்துள்ளது.
பாவம் ரிக்கி பொன்டிங் .... 36 வயதில் மீண்டும் போராடி அணிக்குள் வருவதும் தலைமைப் பதவியை அடுத்த தொடரில் மீட்பதும் ஆஸ்திரேலியக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் மிக சிரமமானதே..

ஆஷஸ் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் பொண்டிங்குக்கு இடம் வழங்கப்படுமா என்பதிலிருந்து ('விரல் முறிவு' குணமடைந்தால்) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பொன்டிங் தலைமை தாங்குவாரா என்பது தெரியும்.

ரிக்கி பொன்டிங்கை விட மனதில் சோர்ந்திருக்கும் formஇல் தளர்ந்திருக்கும் மைக்கேல் கிளார்க் தான் புதிய தலைவராம்..

வாழ்க தேர்வாளர்கள்.. வாழ்த்துக்கள் இங்கிலாந்து..
24 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் உங்கள் கரத்தில் வெற்றியுடன் கிடைக்கப் போகிறது.

மெல்பேர்ன் வெற்றியில் இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரோட், ஜ்மேஸ் அன்டர்சன், ட்ரேம்லெட், மட் ப்ரையர் ஆகியோரின் அசாத்திய தனித் திறமைகளை விட, அதிகூடிய விக்கெட்டுக்களை இத்தொடரில் எடுத்திருந்த ஸ்டீவ் பின்னை அணியிலிருந்து நிறுத்தி அவருக்குப் பதிலாக அழைக்கப்பட்டிருந்த டிம் ப்ரெஸ்னன் காட்டிய முயற்சியும் அபார திறமைகளும் ரசிக்கத் தக்கன.

சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து ஒயின் மோர்கனுக்கு சிலவேளை வாய்ப்பை வழங்கலாம்.. (போல் கொளிங்க்வூடின் சறுக்கல்களுக்கு ஒரு ஓய்வு??)

இங்கிலாந்து முயல்கின்றது, வேகத்துடன் விவேகத்தையும் உறுதியையும் அடித்தளமிட்டு ஆஷசை வசப்படுத்தியுள்ளது.அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமப்படுத்தலாம் ஆனால் ஆஷஸ் கிண்ணம் இங்கிலாந்துக்கு செல்வதைத் தடுக்க முடியாது.

கிளார்க் தலைவர் என்பதால் சமநிலை முடிவைக் கூட நான் எதிர்பார்க்கவில்லை.
நீண்டகாலம் form உடன் காத்திருந்த உஸ்மான் கவாஜா சிட்னியில் தன்னை நிரூபிப்பாரா என்று பார்க்கலாம்.

-----------------------------


சகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்..
முதல் போட்டியில் இன்னிங்சினால் துவண்ட அணி தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் துவைத்து எடுத்துள்ளது.

இந்தியா பதினெட்டு ஆண்டுகளில் தென் ஆபிரிக்காவில் பெற்ற இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது என்பதால் மகத்துவம் பெறுகிறது.
இதன் மூலம் தனது டெஸ்ட் Number One இடத்தை மீண்டும் உறுதிப் படுத்தி இருப்பதோடு, Starting trouble மட்டுமே பிரச்சினை என்று மீண்டும் காட்டியுள்ளது.

சாகிர் கானின் ஆரம்பப் பந்துவீச்சுக் கொடுத்த உளரீதியான உற்சாகமே இந்த மறக்க முடியாத டேர்பன் டெஸ்ட் வெற்றியை வழங்கியிருக்கிறது.

தென் ஆபிரிக்காவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா முன்பு கடைக்கொண்ட, இங்கிலாந்து இடையிடையே பயன்படுத்திய யுக்தி இது.
இறுக்கமான,வியூகம் வகுத்த துல்லியமான பந்துவீச்சும், போராடக் கூடிய துடுப்பாட்டமும்..

சாகிர் கானின் ஆரம்பம் அபாரம் என்றால் ஸ்ரீசாந்தும்,ஹர்பஜனும் காட்டிய விடாமுயற்சியும் கொஞ்சம் குசும்புடன் கூடிய சீண்டி விடும் ஆவேசமும் தென் ஆபிரிக்காவை சுருட்டிவிட்டது.

சாகிர் காட்டிய வேகமும் தென் ஆபிரிக்க வீரர்களை சோதித்து ஆட்டமிழக்கச் செய்த விதமும் மெய் சிலிரிக்கவைத்தவை.

ஸ்ரீசாந்தின் சில பந்துகளில் அப்படியொரு வேகமும் விஷமும்..
குறிப்பாக கலிசை இரண்டாம் இன்னிங்க்சில் ஆட்டமிழக்கச் செய்த விதம்.. அந்தப் பந்துக்கு வேறொன்றும் செய்ய முடியாது.


லக்ஸ்மன் - இந்தியாவின் புதிய இரும்புச் சுவர்.

இந்த வருடம் அம்லாவைப் போலவே இவருக்கும் ராசியான வருடம்.
இந்தவருடத்தில் மட்டும் எத்தனை போட்டிகளை இரண்டாம் இன்னின்க்சின் விடாமுயற்சியுடனான துடுப்பாட்டம் மூலமாக வென்று கொடுத்திருப்பார்..

அவ்வளவு போராடி இந்தியாவைக் கரை சேர்த்த லக்ஸ்மனுக்கு நான்கே நான்கு ஓட்டங்களால் அற்புதமான சதம் ஒன்று தவறிப்போனது அநியாயம்.
(கிடைத்திருந்தால் பிரவீன் அம்ரே பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றதன் பின் பெற்ற ஒரே சதம்)

இந்த டேர்பன் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்குக் கொடுத்த உற்சாகம் முக்கியமான இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமா?
சொல்ல முடியாது..
தென் ஆபிரிக்க ஆடுகளங்களும், இந்தியாவின் நம்பகமில்லாத் தன்மைகளும் அவ்வாறு சொல்ல வைக்கின்றன.

ஆனால் சாகிர்+லக்ஸ்மன் செய்துகாட்டிய வரலாற்றில் சச்சின்,சேவாக்,டிராவிடும் இணைந்தால் புது வருடம் இந்தியாவுக்கு மங்களமாக ஆரம்பிக்கும்..

ஆனால் தென் ஆபிரிக்கா அடிபட்ட புலிகள்.. சீண்டிய பிறகு அடங்கிப் போவதை விட அடிபோடவே விளைவார்கள். அத்துடன் சொந்த மண்ணில் அவமானப்பட அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை.
டேர்பனில் விட்ட தவறுகள் மீண்டும் எழச் செய்யும்.

நிற்க,
டேர்பனில் தென் ஆபிரிக்க வீரர்கள் யாருமே நாற்பது ஓட்டங்களைக் கூடப் பெறவில்லை.
லக்ஸ்மன் பெற்றது மட்டுமே ஒரே அரைச் சதம்...

ஆசியாவில் இப்படியான ஆடுகளங்கள் இருந்திருந்தால் விமர்சன விண்ணர்கள் எப்படிப் பொங்கியிருப்பார்கள் என் நினைத்தேன்...
 வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தால் தான் சிறந்த ஆடுக்கலாமாம்.

------------------

வருடத்தின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த வருடத்தில் அதிகம் பெயர் நாறிப்போன பாகிஸ்தானுக்கு ஒரு ஆறுதல் வெற்றி :)
முதல் இரண்டு போட்டிகளில் அடிவாங்கிய பிறகு ஒரு ஆறுதல் வெற்றி தான்...

ஆனால் மூன்று போட்டிகளிலும் நியூ சீலாந்தின் சிறிய ஆடுகளங்களில் புண்ணியத்தில் சிக்சர் மழைகளை ரசித்தேன்...


புதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்.

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*