முக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் & பேர்த்

ARV Loshan
16
இரண்டு முக்கிய டெஸ்ட் போட்டிகளின் முதல் நாள் நாளை.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் ஒன்று..
முன்னைய முடிசூடா மன்னர்களும் எதிர்கால முதலிட அணியும் உலகின் மிகப் பழைய கிண்ணத்துக்காக மோதும் முக்கிய மோதல் இன்னொன்று

தென் ஆபிரிக்கா - இந்தியா 

நாளை உலகின் இரு முதல் தர (தரப்படுத்தலின் படி) டெஸ்ட் அணிகள் மோதும் முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் நாள்.
வேகத்தினால் தென் ஆபிரிக்கா பலமானதாகவும், துடுப்பாட்ட அனுபவத்தினால் இந்தியா பலமானதாகவும் தெரிகிறது.

பதினெட்டு ஆண்டுகளாக இதுவரை பன்னிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு தடவை மட்டுமே தென் ஆபிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.தொடர் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.
தோனி தலைவராக இருந்து இரண்டு ஆண்டுகளாக (இறுதியாக மென்டிஸ் இலங்கையில் வைத்து உருட்டி இருந்தார் - அப்போது தோனி தலைவருமில்லை;விளையடவுமில்லை. ஓய்வில் இருந்தார்) இந்தியா தொடர் ஒன்றில் தோற்கவில்லை.

தென் ஆபிரிக்காவும் சொந்த மண்ணில் இலகுவாகத் தோற்கடிக்கப்பட முடியாத அணி.
1991இல் சர்வதேச கிரிக்கெட் மீள் வருகைக்குப் பின் தென் ஆபிரிக்க அணி சொந்த மண்ணில் தன் பலத்தை மிக உறுதியாகக் காட்டியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 92 டெஸ்ட் போட்டிகளில் 52ஐ வென்றுள்ள தென் ஆபிரிக்கா 19இல் மட்டுமே தோற்றுள்ளது. ஐந்தே டெஸ்ட் தொடர்கள் மாத்திரம் ஆபிரிக்க மண்ணில் தோல்வியில் முடிந்துள்ளது - இதில் மூன்று (அப்போதைய பலமான) ஆஸ்திரேலிய அணியிடம்.

எனவே தான் இது முக்கியமான தொடராக அமைகிறது.

தென் ஆபிரிக்கா இந்தியாவின் முக்கியமான பலவீனம் அறிந்தே பந்து எகிறி எழும் Bouncy ஆடுகளங்களைத் தயாரித்துள்ளார்கள் என நம்பப்படுகிறது.
உலகில் இப்போது பல அணிகளையும் அச்சுறுத்தும் ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக இருக்கும் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கல் ஆகியோர் தாம் கற்ற வித்தைகள் எல்லாவற்றையும் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்களிடம் காட்டவேண்டி இருக்கும்.
இரு குழல் பீரங்கி 

இந்தியாவின் முதல் ஏழு பேர் மட்டுமன்றி அண்மைக் கால துடுப்பாட்ட ஹீரோ ஹர்பஜனும் கவனிக்கப்படவேண்டியவராகிறார்.

இவர்களில் பவுன்ஸ் பந்துகளால் குறிவைக்கப்படக் கூடியவர்களாக கம்பீர்,ரெய்னா,தோனி ஆகியோரையும் சரியாகக் குறிவைக்கப்பட்டால்(well aimed) மாத்திரம் ஆட்டமிழக்க செய்யப்படக் கூடியவராக அண்மைக் காலமாக Short Pitched பந்துகளுக்கு தடுமாறி வரும் சேவாக்கையும் சொல்லலாம்.

சச்சின்,டிராவிட் , லக்ஸ்மன் ஆகியோரின் துடுப்பாட்டப் பாணியும் அவர்களது பல ஆண்டு அனுபவமும் தென் ஆபிரிக்காவில் கை கொடுக்கும் என்று நம்பினாலும், இவர்களும் கூட அதிக வேகத்துடன் எகிறும் பந்துகளுக்கும், வேகமாக வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளுக்கும் தடுமாறியே வந்துள்ளார்கள்.
Fantastic Four - Will they Fire?

சச்சினின் அண்மைய form + அனுபவம் இங்கே கை கொடுக்கலாம். அதே போல் சேவாகின் அதிரடி அணுகுமுறை தென் ஆபிரிக்காவைத் தடுமாற வைக்கலாம்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையை சரித்திரபூர்வமாக சாதனையுடன் இந்தியாவின் மகத்துவமான வெற்றியுடன் விடை பெற சச்சினுக்கு நல்லதொரு வாய்ப்பு.
மற்றொரு சுவரான லக்ஸ்மன் இதுவரை தென் ஆபிரிக்க மண்ணில் சதம் ஒன்றைத் தானும் பெறவில்லை.

தென் ஆபிரிக்காவின் ஸ்டெய்ன் வேகத்துடன் ஸ்விங்கும் செய்யக் கூடிய ஒருவர்.
தென் ஆபிரிக்காவின் மூன்றாவது வேகப் பந்து வீச்சாளராக வர இருக்கும் இடது கை வேகப் பந்துவீச்சாளர் சொத்சொபே (ஆங்கிலத்தில் Tsotsobe - பெயர் வச்சவன் நாசமாப் போக) மற்ற இருவரும் வலது கையர்களாக இருப்பதால் வித்தியாசத்துக்கான தெரிவாக இருப்பார். அவரது பந்துவீச்சுக் கோணம் டிராவிட்,சச்சின் போன்றவர்களை சோதிப்பதாக அமையலாம்.

தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட வரிசை பலமானது என எல்லோருக்குமே தெரியும்.
தென் ஆபிரிக்க மாபெரும் சுவர்கள் - அம்லா & கலிஸ் 

டுமினியை அணிக்குள் தேவையில்லை எனும் அளவுக்குப் பலமானது. கலிசின் சகலதுரைத் துணையும் இருப்பதால் சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் போதும் என எண்ணி போல் ஹரிசை எடுத்துள்ளார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜொஹான் போதா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருந்திருப்பார்.

இந்தியாவின் பந்துவீச்சு வரிசை தென் ஆபிரிக்காவை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை என்றே சொல்வேன்.
அதிலும் சாகிர் கானின் உபாதை இன்னும் பூரணமாகக் குணமடையவில்லை என்றும் சொல்லப் படும் நிலையில் இருபது விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்று நான் நம்பவில்லை.
தசைப்பிடிப்பு உபாதையினால் சாகிர் கான் நாளை விளையடப்போவதில்லை என்ற பிந்திய செய்தி இந்தியாவுக்கு இடியாக அமைந்துள்ளது.

ஹர்பஜன் வெளிநாட்டு ஆடுகளங்களில் தன்னை நிரூபிக்க இத்தொடரை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.

இஷாந்த் அவருக்கான அதிர்ஷ்ட நாளின் பந்துவீச்சாளர். ஆனால் தென் ஆபிரிக்க Bouncy  ஆடுகளங்கள் சாதகத்தைத் தரலாம்.ஸ்ரீசாந்த் அண்மைக்காலமாக சிறப்பாக முன்னேறி வருகிறார். கடந்த முறை தென் ஆபிரிக்காவில் ஆடிய ப்ரேக் டான்சை மறந்துவிட்டு பந்துவீச்சில் கூடிய கவனம் செலுத்தினால் கலக்கலாம்.

ஸ்மித்தின் அணியே சாதகமுடைய அணியாக நாளை சென்ச்சூரியன் போட்டியில் களமிறங்கினாலும் சரித்திரம் படைக்கக் காத்துள்ள இந்தியாவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் தென் ஆபிரிக்க ஆடுகளங்கள்,வீரர்கள் பற்றி முழுவதுமாக அறிந்த கரி கேர்ஸ்டன் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார்.இப்போதைய அனைத்து அணிகளின் பயிற்றுவிப்பாளர்களிலும் மிகத் துடிப்பானவர் என்றும் அணியை இந்த சில காலப் பகுதியில் போராடக் கூடிய கட்டுப்பாடான அணியாக மாற்றியவர் என்றும் இவரையே சொல்வேன்.
 வழிகாட்டி 

கேர்ஸ்டனுக்கு சொந்த மண்ணில் ஒரு சவால்..
உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து தென் ஆபிரிக்கப் பயிற்றுவிப்பாளராக இவரையே அழைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தன்னை தனது அணிக்கெதிராக வென்று நிரூபிப்பாரா பார்க்கலாம்.

ஆனால் இன்று பெய்த மழையும்,தொடர்ந்துவரும் நாட்களில் நிலவவுள்ளதாக சொல்லப்படும் சீரற்ற காலநிலையும் ஒரு பர பர போட்டியை நமுத்துப் போக செய்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது.


ஆஷஸ் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து @ பெர்த்

நம்பிக்கையும் நடுக்கமும் 

ஆஷஸ் தொடரையும் கிண்ணம் யாரிடம் செல்லும்/தாங்கும் என்பதைத் தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியா வென்றால் அடுத்த இரண்டு போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கிலாந்து வென்றால் கிண்ணம் அவர்களுக்கே..
ஆஸ்திரேலியா வென்றாலோ சமநிலை முடிவோ ஆஷசை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

பெர்த் மைதானத்தின் தன்மை,இந்த மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் என்பது பற்றி அழகாக,விரிவாக அனலிஸ்ட் தம்பி கன்கோன் அக்குவேறு ஆணி வேறாக அலசிவிட்டார்.

பேர்த் போட்டி பற்றிய ஆய்வு


கன்கோனின் அந்தப் பதிவு - நான் இதுவரை வாசித்த,கேள்விப்பட்ட ஆடுகளம் ஒன்றைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு தமிழ் மொழிமூல ஆய்வு/அலசல் கட்டுரை.
அனலிஸ்ட்டின் அந்த ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு நான் ஆடுகளத் தன்மை பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா இன்னும் தங்களை வெற்றி பெறக்கூடிய மன நிலைக்குக் கொண்டுவரவில்லை என்றே நம்புகிறேன்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முற்றுமுழுதாகத் தம்மை மாற்றிக் காட்டுவது அணியில் மட்டுமே என்றால் அது வெற்றிக்கு உதவாது.
நாளைக் காலை முதல் பந்திலிருந்து வெற்றிக்காக விளையாட வேண்டும்.

எனக்கு ஸ்டீவ் ஸ்மித்தை எப்போதும் ஒரு முழுமையான டெஸ்ட் வீரராக நினைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
நாளை அவர் அணியில் விளையாடியே ஆகவேண்டும். (ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்) ஷேன் வோர்ன் சுழல் பந்துவீச்சாளராக இருந்த அணியில் இவரும்.. ஹ்ம்ம்..
ஆனால் யாரென்றே அறியாத மைக்கேல் பியரை விட ஸ்மித் பரவாயில்லைத் தான்.
சிதறியும் வீழ்ந்தும் - ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியா இப்போது நம்பியிருப்பது,ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உள் வரும் பில் ஹியூஸ் பெற்றுத் தரப்போகும் ஓட்டங்கள், தலைவர் ரிக்கி பொன்டிங்கின் போர்முக்கான மீள் திரும்புகை(அண்ணே அடிக்காட்டால் ஆப்பு காத்திருக்கண்ணே),மிட்செல் ஜோன்சனின் பழைய புயல் வேகப் பந்துவீச்சும் விக்கெட் சேகரிப்பும், அவருக்குத் துணையாக விக்கெட்டுக்களை எடுக்கக் கூடிய பந்துவீச்சாளர்கள் - யாராவது...

யார் மூலமாகவாவது வெற்றிக்கான வழிவகை கிடைக்க வேண்டும் என்று தவிக்கிறது ஆஸ்திரேலியா..

பெர்த் டெஸ்ட் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பினாலே ஆஷஸ் கிண்ணத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றக் கூடிய வாய்ப்புக் கிட்டும்.
அத்துடன் தவற விடுமிடத்தில் ஆஷசின் 120 வருட கால வரலாற்றில் மூன்று தடவை ஆஷஸ் கிண்ணத்தை இங்கிலாந்திடம் இழந்த முதலாவது ஆஸ்திரேலிய தலைவர் என்ற அவமானத்தை அடையக் கூடும்.

ஆஸ்திரேலியாவின் அதிகூடிய வெற்றிகளை (டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் இரண்டிலுமே) பெற்றுள்ள தலைவராக இருக்கும் பொன்டிங்குக்கு இப்போது ஒரு வருடமாகப் போதாத காலம்.

ஆச்சரியகரமாக இவரது பெறுபேறுகள் - formமோசமாகத் தொடங்கியதும் சரியாக பேர்த் போட்டி ஆரம்பிக்கும் நாளைய நாளின் ஒரு வருடத்துக்கு முன்பாகத் தான்.(கெமர் ரோச்சின் பந்தில் தாக்கப்பட்டு உபாதைக்கு உள்ளாகியது)
இன்னும் மூன்று டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றால் அதிலும் அரைச் சதம் பெற்றுவிடலாம். ஆனால் விதி விளையாட்டுக் காட்டும் பொன்டிங்கின் வாழ்க்கையைப் பாருங்கள்.வரும் திங்கட்கிழமையுடன் பொன்டிங் 36 வயதைப் பூர்த்தி செய்கிறார்.
இந்த வயது ஆஸ்திரேலிய தேர்வாளர்களால் முதுமையின் ஆரம்பம் எனக் கருதி இளமையைத் தேடும் வயது.

பேர்த் முதல் தொடரும் அடுத்த இரு போட்டிகளில் ஓட்டங்களை குவிக்காவிடில் பொன்டிங் முன்னாள் தலைவராக மட்டுமல்ல,முன்னாள் வீரராகவும் மாறிவிடுவார்.

சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர் என்று எல்லோரும்(சச்சின் உட்பட??) எதிர்பார்த்த உலகின் சிறந்த வீரர் ஒருவரின் தற்போதைய நிலையைப் பாருங்கள்.


இருபது வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இப்படித் தவிக்கிறது.
இங்கிலாந்தின் நிலை உச்சபட்ச ஆரோக்கியமாக இருக்கிறது.

பல விமர்சகர்களும் இங்கிலாந்தை அப்போதைய அசைக்கமுடியாத ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகிறார்கள்.

எனக்கும் ஸ்ட்ரோஸ் தலைமையிலான இங்கிலாந்தைப் பார்க்கையில் மார்க் டெய்லர் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி தான் ஞாபகம் வருகிறது.
அணியின் சமச்சீர்த் தன்மையும் போராட்ட குணமும்,வெற்றிகளைப் பெற்றுத் தரும் வீரர்களும் தோல்வியைத் தவிர்க்கக்கூடிய வீரர்களும் அணியில் பரவிக் கிடக்கிறார்கள்.

கடந்த போட்டியில் ப்ரோட் காயமுற்றிருப்பதால் கூட இங்கிலாந்து பெரிதாகக் கலங்கவில்லை.
ட்ரெம்லெட் என்ற உயரமான வேகப் பந்துவீச்சாளரை கூலாக அழைத்துவிட்டு (ப்ரெஸ்னன்,ஷெசாடை விட என் தெரிவு ட்ரெம்லெட்டே என் தெரிவு) ஏற்கெனவே சிறப்பாகப் பந்துவீசிவரும் அன்டர்சன்,ஸ்வான்,பின் ஆகியோரை துரும்புகளாக வைத்துள்ளது இங்கிலாந்து.
உற்சாக ஓட்டம் தொடரும்?

தோல்வியில் துவழும் ஆஸ்திரேலியாவைக் காக்க மீண்டும் மந்திரவாதி ஷேன் வோர்னை அழைக்க மில்லியன் டாலர்கள் கொட்ட ஆஸ்திரேலியா பணக்காரர்கள் தயார்.ஆனால் வோர்ன் புதிய காதலியைத் தேடி லண்டன் சென்றுவிட்டார்.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கான சாதகத்தன்மை கூடிய மைதானமாக சொல்லப்படும் பெர்த்தில் கூட இங்கிலாந்துக்கே இப்போதிருக்கும் சூழ்நிலையில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என நான் அறுதியாக சொல்கிறேன்.

காரணம் தளம்பும் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வரிசையும் உறுதியாக இருக்கும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையும்.
தனியொருவராகப் போராடிவரும் மைக்கேல் ஹசிக்குத் துணையாக இதுவரை வொட்சன்,ஹடின்,கிளார்க் ஆகியோர் கொஞ்சம் ஓட்டங்கள் பெற்றுள்ளார்கள்.

ஆனால் இங்கிலாந்தில், குக்,ட்ரொட்,பீட்டர்சன் என்று ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் மூவர்,ஸ்ட்ரோஸ்,பெல் ஆகியோரின் சராசரி ஓட்டக் குவிப்புக்கள்,இவற்றோடு அண்மைய விக்டோரிய அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் விக்கெட் காப்பாளர் மட் பிரயரும் சதம் அடித்துக் காட்டியுள்ளார்.

பேர்த்துடன் முடியுமா ஆஸ்திரேலியாவின் கதை?
கூடவே பொன்டிங்கின் கதையும் என்று யோசிக்கும்போதே ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒதுக்கிய டேவிட் ஹசி,பிராட் ஹொட்ஜ்,நேதன் ஹோரிட்ஸ் போன்ற பலர் ஞாபகம் வருகிறார்கள்.

எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.


கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத் தத்துவம் பொருந்தும்..



Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*