பாவம் அப்ரிடி..
June 15, 2010
9
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கிடையில் வழமையான பரபரப்பு எதுவுமின்றி சத்தமில்லாமல் இன்றைய தினம் இலங்கையின் தம்புள்ளையில் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.
என்னைப் போலவே இன்னும் பல கிரிக்கெட் ரசிகர்களும் இம்முறை இந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளை பெரிய ஆர்வத்தோடு நோக்கவில்லை.
அதிகரித்துப் போன கிரிக்கெட் போட்டிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அடிக்கடி இந்த அணிகள் தமக்குள்ளே விளையாடியதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
எனினும் இன்று பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி அனல் பறக்கும் பரபரப்பையும் இறுதிவரை சுவாரஸ்யத்தையும் தந்திருந்தது.
பகல் முழுவதும் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் மாலையில் இருந்த உலகக் கிண்ணத்தின் இன்றைய முதலாவது போட்டி சுவாரஸ்யத்தைத் தராததாலும், இலங்கையின் துடுப்பாட்டத்தின் சில முக்கியமான தருணங்களை நான் தவற விடவில்லை.
அண்மைக் காலத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நான் அவதானிக்கும் ஒரு முக்கியமான அம்சம் தான், என்ஜெலோ மத்தியூசின் அவசியம்.
இன்றும் மத்தியூஸ் தனது இருப்பின் அவசியத்தைத் தெளிவாகவே உணர்த்தி இருக்கிறார்.
ஆரம்பத்தில் டில்ஷான்,தரங்க விரைவாக ஆட்டமிழந்த பிறகு மஹேல,சங்கா இணைப்பாட்டம் ஒன்றின் மூலமாக (83 ஓட்டங்கள்) இலங்கை அணியைக் கட்டியெழுப்பிய பிறகு மீண்டும் வழக்கமான மத்திய வரிசை சறுக்கலை (Middle order slump) இலங்கை எதிர்கொள்ள, ஆபத்பாந்தவராக வந்தார் மத்தியூஸ்..
மீண்டும் ஒரு அரைச் சதம்..
அருமையான ஒரு finisher ஆக மாறி வருகிறார்.
தம்புள்ளையில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு எதிரணியைத் தடுமாற வைக்க ஆகக் குறைந்ததாக அவசியப்படும் 240ஐ இலங்கை தாண்டிய பிறகு பாகிஸ்தான் இன்று வெல்வதாக இருந்தால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தேயாக வேண்டும் என்று நினைத்தேன்..
ஒன்றா இரண்டா எத்தனை அதிசயங்கள்..
மீண்டும் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் திரும்பிய ஷோயிப் அக்தார் நல்ல பிள்ளையாக,அடக்கத்தோடு நடந்து கொண்டார்.
கொஞ்சம் வேகம் குறைந்திருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பாகிஸ்தான் வழக்கத்தை விட சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபட்டது.
முரளியின் பந்துவீச்சுக்கு மரண அடி..
தம்புள்ளையில் கூடுதல் விக்கெட்டுக்களை எடுத்துள்ள முரளி இன்று மைதானத்தின் அத்தனை மூலைகளுக்கும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்.
பத்து ஓவர்களில் 71 ஓட்டங்கள்.
மென்டிஸ் தப்பித்தேண்டா சாமி என்று நிம்மதியாக இருப்பார்.
(மாண்புமிகு MP சனத்துக்குப் பிறகு முரளி அங்கிள் தானோ?)
நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்ரிடி அனாயசமாக தனது அதிரடியை நிகழ்த்தி இருந்தார்.
அடியா அது? ஒவ்வொன்றும் இடி..
அப்ரிடி = அதிரடி
தனித்து நின்று ஒரு சிங்கம் மைதானத்தில் வேட்டையாடியது போல் இருந்தது..
ஏழு சிக்சர்கள். ஒவ்வொன்றும் அனல் பறக்கும் அடிகள்.
எந்த ஒரு பந்துவீச்சாளராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
76 பந்துகளில் அவரது அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையான 109 ஓட்டங்களை இன்று எடுத்தார்.
அத்துடன் இன்று ஒருநாள் போட்டிகளில் அப்ரிடி 6000 ஓட்டங்களையும் கடந்தார்.
தனித்து நின்று போட்டியை வென்றெடுத்து விடுவாரோ என இலங்கை ரசிகர்கள் கவலையுடன் இருக்க வழமையான அவசரமும், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பும் அப்ரிடியை ஆட்டமிழக்க செய்தன.
அதற்குப் பிறகு ரசாக் தானாக துடுப்பாட்டத்தை சுழற்சி அடிப்படையில் தன் வசப்படுத்தி வெற்றிக்கு முயற்சித்திருக்கவேண்டும்.ஆனால் லசித் மாலிங்க பாகிஸ்தானுக்கு எமனாக வந்துவிட்டார்.
வெல்ல வேண்டிய ஒரு போட்டியில் பாகிஸ்தான் தங்கள் தலைவர் அப்ரிடியை ஏமாற்றி விட்டது.
இன்னொரு அதிசயம், சங்கா ஐந்தே பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்.
மீண்டும் தம்புள்ளையில் இலங்கைக்கு ஒரு வெற்றி.
ஆனால் இந்த வெற்றி நிச்சயம் ஒரு முக்கியமான வெற்றி..காரணம் தோற்கும் விளிம்பிலிருந்து மீண்டும் நம்பிக்கையுடன் பெறப்பட்டிருக்கும் வெற்றி.
மாலிங்கவின் பந்து வீச்சு புயல் என்றால்,ஆரம்பத்தில் பாகிஸ்தானிய துடுப்பாட்டத்தை சிதறடித்த குலசேகர,மத்தியூசின் பந்துவீச்சுப் பற்றியும் பாராட்டியே ஆகவேண்டும்.
மாலிங்கவின் இறுதி நேர யோர்க்கர்களும் வேகம் மாற்றிய பந்துகளும் துல்லியம் & அபாரம்.
பாகிஸ்தானியப் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ் தன்னுடைய இளவயதை rewind பண்ணியிருப்பார்.
Marvellous Malinga..
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குள் வந்த மஹ்ரூப் சரமாரியாக அடிவாங்கி ஏமாற்றி விட்டார்.அடுத்த போட்டியில் சுராஜ் ரண்டிவ் அணிக்குள் வரலாம்.
பாகிஸ்தானின் புதிய அறிமுகங்களும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் தொடரும் இலங்கையின் ஆதிக்கமும், பாகிஸ்தானிய சறுக்கல்களும் மாறிலி எனவே தோன்றுகிறது.
இடையிடையே கால்பந்தாட்ட ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன் கோல்கள் இல்லாவிடினும் ஐவரி கோஸ்ட்- போர்ச்சுக்கல் போட்டி விறுவிறுப்பாகவே இருந்தது.
தலைவர்களின் ஆளுமை அந்தப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
ட்ரோக்பா கை முறிவு குணமாகி மீண்டும் இன்று ஆக்ரோஷமாக மோதியது சிறப்பு.
கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இறுதிவரை முயன்றார்.
பலம் வாய்ந்த போர்ச்சுக்கலை மடக்கி சமநிலையில் ஐவரி கோஸ்ட் போட்டியை முடித்தது அபாரம்.
ஆசிய ஆபிரிக்க அணிகள் தம்மாலும் முடியும் எனக் காட்டுகிறார்கள்.
ஆனால் இன்று நள்ளிரவு வட கொரிய அணி பிரேசிலிடம் வாங்கிக் கட்டும் என்றே நினைக்கிறேன்.பிரேசில் பெறப் போகும் கோல்கள் மூன்றா நான்கா என்பதே இப்போது கேள்வி ;)
இந்தப் போட்டிக்குப் பின்னதான உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான வாய்ப்புக்களை இங்கே அவதானியுங்கள்..
தலைவர்கள் தனித்து நின்று தலைவிதிகளை மாற்றக் கூடியவர்கள் தான்..
பல வேளைகளில்..
நாளை தோனியும் ஷகிப் அல் ஹசனும் என்ன செய்வார்கள் பார்க்கலாம்..