கடந்தவாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் எதிர்காலத் தலைவராக 2012 ஆம் ஆண்டில் பொறுப்பேற்பதற்காக முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமரான ஜோன் ஹோவார்ட். இந்தப் பதவி சுழற்சி முறையிலேயே ஒவ்வொரு பிராந்தியத்தவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே தான் 2012 இல் ஆஸ்திரேலிய, நியூ சீலாந்து நாட்டவருக்கு செல்லவேண்டிய பதவிக்காக ஹோவார்ட் வந்துள்ளார். இவர் ஆரம்பத்திலேயே சிக்கலொன்றை எதிர்கொண்டிருந்தார். இவரை விட கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவமுள்ள நியூ சீலாந்தை சேர்ந்த Sir. ஜோன் அண்டர்சனை முந்தியது தொடர்பாக ஒரு சலசலப்பு தோன்றியிருந்தது.
ஹோவார்ட் அரசியல்வாதியாகப் பிரபல்யம் பெற்றிருந்தாலும்,கிரிக்கெட் பிரியராக அறியப்பட்டாலும் அண்டர்சனைப் போல் கிரிக்கெட் நிர்வாகியாக இருந்ததில்லை என்பதே இந்த சலசலப்புக்குக் காரணம்.
ஆஸ்திரேலியாவின் பெரியண்ணன் நடப்பு இதை அடக்கிவிட்டாலும், முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஆசிய எதிர்ப்போன்று எதிர்பாராத கோணத்திலிருந்து இலேசாக வெளிக்கிளம்பி இருக்கிறது.
இலங்கை அல்லது இந்தியா ஆஸ்திரேலியாவின் இந்த நியமனத்தை குறைந்தபட்சம் முணுமுணுப்பின் மூலமாகவாவது எதிர்க்கும் என்று பார்த்தால் ம்ஹூம்.. அமைதி காத்தன.
ஆனால் கொஞ்சமாவாது நாசூக்காக தனது எதிர்ப்பை வெளிக்காட்டியவர் எதிர்கால அரசியல்வாதி எனப் பலராலும் உசுப்பேற்றப்பட்டு, அதில் மாட்டிக்கொள்ளாமல் இன்னும் கிரிக்கெட் வீரராகவே இருக்கும் முத்தைய்யா முரளிதரன்.
ஆனால் கொஞ்சம் அரசியல் சாணக்கியத்தனத்துடனேயே முரளி தன் ஹோவார்ட் எதிர்ப்பைக் காட்டி இருக்கிறார்.
"எதிர்ப்பில்லாமல் ஹோவார்ட் தெரிவு செய்யப்பட்டாலும், ஆசிய நாடுகளின் நம்பிக்கையை அவர் வெல்வதற்கு இன்னும் செயற்பட வேண்டும்" என சொல்லியுள்ளார் முரளி.
இதிலே உள்ள அரசியல் பற்றி உணர்ந்துகொள்ள 2004 ஆம் ஆண்டுக்கு நாம் செல்லவேண்டியுள்ளது.
அப்போது ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஜோன் ஹோவார்ட் ஒரு விருந்து நிகழ்விலே பகிரங்கமாக முரளி பந்தை முறையற்ற விதத்தில் வீசி எறிபவர் (chucker ) எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்ட முரளி, ஒரு பிரதமர் இவ்வாறு தனிப்பட்ட கருத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்தது தவறு என சொல்லியதோடு 2004 ஜூலை இல் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை விஜயம் மேற்கொண்டவேளையில் போக மறுத்துவிட்டார்.
இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஹோவார்ட் பணிந்து முரளியிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
எனினும் அந்தக் கறை முரளியிடம் மனதில் இன்னும் இருக்கிறது என்பதே இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
ஆனால் முரளியோ தகுந்த அரசியல் ஞானத்தோடு "ஹோவார்டோடு எனக்கு எந்தக் கோபமோ,மனக் கசப்போ இப்போது இல்லை. அப்போது அவர் சொன்ன கருத்து எனக்குப் பிழையென்று பட்டத்தால் சொல்லி இருந்தேன்.அவர் மன்னிப்புக் கேட்டார். அது அவ்வளவு தான்" என்று சமாளித்துவிட்டு
"எனினும் ஆசிய நாட்டு கிரிக்கெட் சபைகளை ஹோவார்ட் போன்ற ஒருவர் சரியாகப் புரிந்து நிர்வாகம் செய்யவேண்டியது ஒரு சவாலே.அந்த சவாலை எவ்வாறு சமாளிப்பார் எனப் பார்க்கலாம்" என கொஞ்சம் கிளறி விட்டிருக்கிறார்.
இனி மோடிகள்,ரணதுங்ககள்,பட்கள்,அகமட்கள்,மனோகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
எப்போது அரசியலுக்குள் வருவாரோ தெரியாது.. ஆனால் இப்போதே அரசியலில் பிரகாசிப்பதற்கான அத்தியாவசிய அடிப்படைத் தகுதிகள் தெரிகின்றன.
இந்த வருட இறுதியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அடுத்தவருட உலகக் கிண்ணத்தின் பின் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நிச்சயமாக அறிவித்துள்ள முரளி அரசியலில் திட்டமிட்டுக் குதித்து வெற்றிப் பவனி வரட்டும்.
முரளிக்கும் வளமான அரசியல் எதிர்காலம்..
சுவாரஸ்யமான இன்னும் 5 கிரிக்கெட் விஷயங்கள்..
கொஞ்சம் பார்த்து ரசியுங்களேன்/சிரியுங்களேன்..
லலித் மோடி கடிகள்..
சங்கக்கார ஜோக்..
சுழல்பந்து வீச்சாளருக்கான ஐடியாக்கள்..