டெல்லியில் நடந்த ஆடுகள அவலத்துக்குப் பிறகு மீண்டும் இன்று டாக்கா மிர்ப்பூரில் இலங்கை இந்திய அணிகள் சந்தித்த முக்கோணத் தொடரின் இரண்டாவது போட்டியில் எதிர்பார்த்ததை விட இலகுவாக இலங்கை அணி வெற்றியீட்டி உள்ளது.
நூறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தாண்டிய இரண்டே இரண்டு வீரர்களோடு (சங்கக்கார, தரங்க) களமிறங்கிய அனுபவமற்ற இலங்கை அணி பலம் வாய்ந்த இந்திய அணியைப் பந்தாடியுள்ளது.
இதற்கு
இந்தியப் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடற்ற பந்துவீச்சு (எத்தனை எத்தனை நோ போல்கள்)
மைதானத்தில் இரவு நேரப் பனியின் கோல்மால் விளையாட்டு
நாணய சுழற்சியின் ராசி தொடர்ச்சியான இரண்டாவது நாளாகவும் சங்காவுக்கு சாதகமானமை என்று சில காரணிகளை அடுக்கினாலும்,
இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால், அனுபவம்,பலம் என்ற விஷயங்கள் இந்திய அணியிடம் இருக்கே போன்ற சில காரணங்களையும் அடுக்க வேண்டும்..
இலங்கை அணி ஏற்கெனவே இந்தத் தொடரில் தனது முக்கிய வீரர்கள் இல்லாமல் இறங்கியதுடன்,அண்மைக் காலத்தில் இலங்கை வெற்றிகளின் அத்திவாரமாக விளங்கிய டில்ஷானும் இல்லாமல், அணிக்குள் மீண்டும் வந்த சாமர சில்வாவும் காயம் காரணமாக விலகிவிட மிகப் பலவீனமாகத் தான் இன்று விளையாடக் களம் இறங்கியது.
எனவே ப்ளசும் மைனசும் சரியாப் போச்சு.. ;)
நேற்றைய தினம் பங்களாதேஷ் அணியை இலகுவாக இதே போல வேன்றபின்னரே இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார இரண்டாவதாகப் பந்துவீசும் அணி படும் சிரமம் பற்றிக் குறிப்பிட்டு, போட்டிகளை குறித்த நேரத்துக்கு முன்னரே ஆரம்பிப்பது பற்றி வலியுறுத்தி இருந்தார்..
இன்று இந்திய அணியின் தலைவர் தோனியும் இதுபற்றிக் குறைப்பட்டுள்ளார்..
அடுத்த போட்டிகளிலாவது இதை ஏற்பாட்டாளர்கள் கவனிப்பார்களா?
இந்திய அணியின் துடுப்பாட்டம் இன்று கொஞ்சம் களையிழந்து காணப்பட்டது.. சச்சின் இல்லாவிட்டாலும் சோபிக்கும் அணிக்கு என்னவாயிற்று?
யுவராஜ் சிங் ஒவ்வொருமுறை காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணிக்கு வரும்போதும் அதிரடி ஆட்டத்தோடு தான் வருகிறார்.. இன்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்திய துடுப்பாட்ட வீரர் அவர் தான்.

இரு அபார சிக்சர்களோடு 74 ஓட்டங்கள்..
அனுபவமற்ற இலங்கைப் பந்துவீச்சாளர்களை இந்தியா துவம்சம் செய்யும் என்று பார்த்தால் பெரிதாக விசேஷம் இல்லை..
துஷார (33 ஒரு நாள் போட்டிகள்) தவிர மற்றைய எல்லா இலங்கைப் பந்துவீச்சாளர்கள் விளையாடிய போட்டிகளையும் கூட்டினால் மொத்தம் 23 தான் வருகிறது.
சானக வெலகெடற அருமையாக, துல்லியமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களைப் பெற்றார்..

இலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு இந்திய அணியின் 279 என்ற ஓட்ட எண்ணிக்கையை துரத்தியது.
இன்றைய போட்டியில் அறிமுகமான லஹிரு திரிமன்னே 22 ஓட்டங்களைப் பெற்றாலும் தனது திறமையைக் காட்டிவிட்டார்.. இன்னும் வரும் இவரிடமிருந்து..
சங்கக்கார - சமரவீர இணைப்பாட்டம் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை உடைத்தது. நிதானமாக 122 ஓட்டங்களை சேர்த்தார்கள்.அண்மைக்கால ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஓட்டங்கள் குவித்துவரும் சங்கா இன்று 60 ஓட்டங்கள் பெற்றார்.
தேர்வாளர்கள் இனியாவது திலான் சமரவீர ஒருநாள் அணியில் இருக்கவேண்டியதன் அவசியத்தையும், அவரது திறமை,ஆளுமையையும், மத்திய வரிசையில் அவர் போன்ற ஒருவரின் முக்கியத்துவத்தையும் உணர்வார்களா?
நிதானமான, வேகமான தேவையான ஒரு சதம்.. அவரது இரண்டாவது ஒரு நாள் சதம்..

டெஸ்டில் சாதனைகள் படைத்து நிரந்தர இடம்பிடித்த சமரவீர இனி ஒருநாள் அணியிலும் நிரந்தரமாய் இருக்க வேண்டும்.33 வயதானால் என்ன?அடிக்கிற வரை ஆடி அசத்தட்டுமே..
சனத் 40 வயது வரை விளையாடவில்லையா? சச்சின் 37 வயதிலும் விளையாடவில்லையா?
இன்று சங்கா அவரைப் பந்துவீச அழைத்ததும் மகிழ்ச்சி.. அவர் ஒரு சகலதுறை வீரராகவே அணிக்குள் வந்தார் என்பதையும் சுழல் பந்து வீசக்கூடியவர் என்பதையும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக அடித்தாடக் கூடியவர் என்பதையும் இலங்கை அணித் தலைவர்களும் தேர்வாளர்களும் மறந்து விட்டார்கள் போலும்..
இனி இவற்றையும் கவனிப்பார்களாக..
இந்திய மண்ணில் தனது அறிமுகப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி அனைவரையும் அசத்திய திசர பெரேரா இன்று பந்து வீச்சில் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை (தோனி, யுவராஜ்) வீழ்த்தியதோடு இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு மறக்கமுடியாத மரண அடிகொடுத்தார்..
15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள்.. 6 நான்கு ஓட்டங்களும் ஒரு அபார சிக்சரும்.

அடுத்த அதிரடி சகலதுறை வீரர் தயார்.. இவரை சரியாகப் பராமரித்து வளப்படுத்தவேண்டும்.. அத்துடன் IPLஇனால் இவர் நாசமாகக் கூடாது.
பனியின் ஈரத்தால் வழுக்கிய பந்தையும் நேர்த்தியாகக் கையாண்டு விக்கெட்டுக்கள் மூன்றை சரித்த ஹர்பஜன் பாராட்டுக்குரியவர்.
ஆனால் இந்தியாவின் ஏனைய அனுபவம் வாய்ந்த நோ போல்களையும், வைட் பந்துகளையும், அடிக்கக்கூடிய இலகு பந்துகளையும் வழங்கியதை என்னவென்பது?
இளைய இலங்கை அணிக்குக் கிடைத்த வெற்றி இது..
தேர்வாளர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லலாம்..
உள்ளூரில் பிரகாசித்த திறமையான இளைய வீரர்களுக்கு துணிந்து வாய்ப்பளித்து அவர்கள் மூலமாகவும் வெற்றிகளைப் பெறமுடியும் என்று அவர்களுக்கு துணிவை வழங்கியமைக்கு..
இனி வரும் போட்டிகள் நேரத்துக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றும், நாணய சுழற்சி ராசிகள் போட்டிகளைத் தீர்மானிக்கக் கூடாதென்றும் , இலங்கையின் இளைய வீரர்கள் இனி சாதிக்கப் போகின்ற விடயங்கள் குறித்த எதிர்பார்ப்போடு அடுத்த போட்டிகளுக்காகக் காத்திருப்போம்..