உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.
இலத்திரன் ஊடகங்கள் ,பத்திரிகை என்ற இரண்டுமே இந்தக் காலகட்டத்தில் அநேகமான நாடுகளில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே.
வருடாந்தம் எத்தனை ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்..
எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்..
எத்தனைபேர் சித்திரவதை,மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளார்கள்..
எத்தனை அப்பாவி ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்..
சர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தகவல்களை வெளியிடும் அறியும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இலங்கையில் மட்டும் அண்மைக்காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எத்தனை பேர்? மனதில் பல நல்லவர்கள்,தூய மனம் படைத்த தியாகிகள் வந்து போகின்றனர்..
பல பேர் அங்கவீனர்களாயுள்ளனர்..
எழுதும் கைகள் முறித்துப் போடப்பட்டுள்ளன..
பல பேர் மிரட்டலிலேயே அடங்கி தம் எழுத்துக்கள்,கருத்துக்களை முடமாக்கியுள்ளனர்.
இன்னும் பலர் புலம்பெயர்ந்து விட்டார்கள்..
இப்படியான ஊடகங்களின் மீது,ஊடகவியலாளரின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள்,உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஒரு அமைப்பு தான் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு.Reporters Without Borders (Reporters Sans Frontiers)
இந்த RSF எனப்படும் அமைப்பு எனக்கும் மறக்கமுடியாத அமைப்பு ஒன்று.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கைது செய்யப்பட்ட வேளையில் எனக்காகக் குரல் எழுப்பியதோடு, பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.
நான் விடுவிக்கப்பட்ட பின்னரும் பல உதவிகளை செய்ய முன்வந்திருந்தது.பிரான்ஸ் வருமாறும் அழைத்திருந்தது. எனினும் அவற்றை நன்றிகளோடு நான் மறுத்திருந்தேன்.
பிரான்சில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களிடமும் ஊடகத்துறைப் பிரதிநிதிகளிடமும் எடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.
இதில் புள்ளிகள்,புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளும், ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.
இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஒரே புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ள ஐந்து நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள்.. இவற்றுள் நான்கு பால்கன் நாடுகள்.
டென்மார்க்,பின்லாந்து,அயர்லாந்து, நோர்வே, ஸ்வீடன்.
கடந்த ஆண்டில் முதலாவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இம்முறை ஒன்பதாம் இடத்தில்.
இம்முறை எடுக்கப்பட்ட கணிப்புக்கள் அனைத்தும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
மிக மோசமாக ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள் மிதிக்கப்படும்,நசுக்கப்படும் நாடாக ஆபிரிக்க நாடான எரித்ரியா(175ஆம் இடம் ) காணப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக வட கொரியா, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
அண்மையில் பதவிக்கு மீண்டும் வந்த ஈரான் ஜனாதிபதியான மகுமூது அகமதிநிஜாடின் பிடியில் ஈரான் ஊடகவியாலளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஈரானுக்கு அடுத்த இடத்தை (172)வழங்கியிருக்கின்றன.
தொடர்ந்து மியான்மார், கியூபா, லாவோஸ்,சீனா, யேமென் என்று செல்லும் இந்த வரிசையில் இலங்கைக்கு 162ஆம் இடம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டுகளை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கடந்தமுறை 165ஆம் இடத்திலிருந்தது.
எனினும் தற்போதைய கணிப்பு எடுக்கப்பட்ட காலப் பகுதியில் தான் லசந்த விக்ரமதுங்க கொலை, திஸ்ஸநாயகத்துக்கான தண்டனை, போத்தல ஜயந்த மீதான தாக்குதல், மற்றும் பல ஊடகவியலாளரின் கைதுகள் பல்வேறு செய்தி இணையத் தளங்கள் மூடப்பட்டதும், இடம்பெற்றுள்ளன.பல முக்கிய ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு பிறதேசம் போயிருக்கிறார்கள்.
அப்படியிருந்தும் மூன்று ஸ்தானங்கள் உயர்ந்துள்ளது என்றால் மற்றைய நாடுகளில் இடம்பெறும் ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது.
இன்னும் சில அவதானிப்புக்கள்..
ஒபாமா(அதான் நோபெல் பரிசை இம்முறை பெற்றாரே அவரே தான்) ஜனாதிபதியான பின்னர் நீண்ட காலத்தின் பின் அமேரிக்கா முன்னேற்றம் கண்டு இருபதாம் இடத்துக்குள் வந்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியமும் அதே இடத்தில்..
அதுசரி இரண்டு நாடுகளும் கொள்கை பொதுவாகவே ஒன்று தானே..
இந்தியா 105ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 159ஆம் இடத்திலும், ஈராக் 145ஆம் இடத்திலும் இருக்கின்றன.
என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.
RSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..
இந்தப்பட்டியலை முழுமையாகப் பார்ப்பதற்கு