October 03, 2009

சிக்சர் மழை,வொட்சன் அதிரடி,பொன்டிங்கின் சரவெடி - அவுஸ்திரேலியா இறுதியில்..


சாம்பியன்கள் சாம்பியன்கள் தான்.. ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியர்கள் தான்.. எனது கணிப்பைப் பொய்யாக்காத ஒரே ஒரு அணியான ஆஸ்திரேலியா வாழ்க.. ;)

நேற்றைய ஆஸ்திரேலிய அரையிறுதி வெற்றி அசத்தல்..அதிரடி..அற்புதம்.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
இவ்வாறான தொடர்களில் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிகளுக்கு வராவிட்டால் தான் ஆச்சரியம்..

இங்கிலாந்து அணி இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் அனைவரையும் ஆச்சரியப் படுத்திய அணி.
எல்லாப் போட்டிகளையும் தோற்கும் என்று பலபேரும் கருதிய இங்கிலாந்து, இம்முறை கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்ட இலங்கை மற்றும் தென் ஆபிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகியதே மாபெரும் ஆச்சரியத்தை அனைவருக்கும் கொடுத்தது.

அதிலும் இங்கிலாந்தின் ஒருநாள் போட்டிகளின் ஜாம்பவான்களான அன்றூ பிளின்டோப், கெவின் பீட்டர்சன் இருவரும் இல்லாமலேயே..

இங்கிலாந்து பற்றிய எனது முன் கணிப்பீடு..

இங்கிலாந்து
இவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்?
பிளின்டொப், பீட்டர்சன் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள்?
யுவராஜூம் இந்தியாவும் இந்தப்பிரிவில் இல்லை என்பதில் ஸ்டுவர்ட் புரோட் குழுவினர் நிம்மதியடையலாம். முதல் சுற்றில் ஒரு போட்டியில் வென்றாலே பெரிய அதிசயம்.
ஜோ டென்லி, லூக் ரைட் பிரகாசிக்கலாம்.
####

காரணம் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் ஆஸ்திரேலிய அணியிடம் 6-1 என ஒருநாள் தொடரில் தோற்றிருந்தது.

எனினும் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் நியூ சீலந்தினை வெற்றி கொள்ளும்(அவ்வாறு வென்றிருந்தால் இலங்கை அணி நேற்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு ஆடியிருக்கும்) என்று எதிர்பார்த்தவேளையில் படு மோசமாகத் தோற்று யாரையும் எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது என்று உரத்து சொன்னது.

நேற்று முதலாவது அரையிறுதியிலும் பழைய குருடிக் கதை தான் போல ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் வைத்து வெளுத்து வாங்கியது போல இலகுவாக வென்று இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பரவலாக எதிர்பார்த்தாலும், மைக்கேல் கிளார்க்,நேதன் பிராக்கென் இல்லாததும், இங்கிலாந்து அதிரடி துடுப்பாட்டம், துடிப்பான பந்துவீச்சு என்று புதிதாய் மாறியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியை இங்கிலாந்து கொடுக்கலாம் என்றும் ஒரு எண்ணப்பாட்டை தோற்றுவித்திருந்தது.

ஆனால் இங்கிலாந்தின் தொடரும் ராசியாக நேற்றைய போட்டிக்கு முன் அவர்களது நம்பிக்கை நட்சத்திரம் சகலதுறை வீரர் ஸ்டுவர்ட் ப்ரோடும் காயமடைந்துவிட்டார்.(அதற்கு முதல் அதிரடி துடுப்பெடுத்தாடும் விக்கட் காப்பாளர் மட் ப்ரையர் சுகவீனமடைந்திருந்தார்)

இங்கிலாந்து அணி நேற்று இருபத்தோராவது ஓவரிலேயே ஆறு விக்கெட்டுக்களை (101/6) இழந்த போது ஆஸ்திரேலிய அணி வழக்கம் போல நசுக்கிவிட்டு இறுதிப் போட்டிக்கு போய்விடும் என்று நானும் நினைத்தேன்.

ஆனால் இங்கிலாந்து நம்பிக்கை வைத்து அணிக்குள் வைத்திருந்த இளம் சகலதுறை வீரரான லூக் ரைட்டும், ப்ரோடின் காயம் காரணமாக அணிக்குள் வந்த டிம் ப்ரெஸ்னனும் ஆஸ்திரேலிய அணியைப் பந்தாடி நாற்பதாவது ஓவர் வரை தடுமாற வைத்தனர்.

19 ஓவர்களில் 107 ஓட்ட இணைப்பாட்டம்..ரைட் 48ஓட்டங்கள்,ப்ரெஸ்னன் 80 ஓட்டங்கள்..

ஆஸ்திரேலிய அணித்தலைவர் பொன்டிங் ப்ரெஸ்னனும்,ரைட்டும் அடித்து விரட்டிக் கொண்டிருந்தபோது தடுமாறியதையும், விரக்தியின் விளிம்புக்கே போனதையும் பார்த்தபோது கிண்ணமே இங்கிலாந்து பக்கம் நேற்றே போனது போல தெரிந்தது.

இந்த ப்ரெஸ்னன் தான் போட்டிக்கு முதல்நாள் ட்விட்டரில் ரசிகர் ஒருவரை வசைபாடியதற்கு இங்கிலாந்தின் முகாமைத்துவத்தால் எச்சரிக்கப்பட்டு பின் மன்னிப்பு கோரியவர்.

வொட்சன்,லீ ஆகியோர் சிறப்பாக ஆரம்பத்தில் பந்துவீசியபோதும் பொன்டிங் அவர்களை இந்த இணைப்பாட்டத்தை உடைக்க இடையில் அழைக்காதது ஆச்சரியமே..(ஒருவேளை போட்டி சுவாரஸ்யமாக இருக்கட்டும் என்று கொஞ்சம் அடிக்கவிட்டாரோ என்று போட்டி முடிந்தபிறகே யோசித்தேன்)

இங்கிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது.
போராடக் கூடியது மட்டுமன்றி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறவும் கூடிய ஒரு ஓட்ட எண்ணிக்கையாகவே இதனைக் கருத முடியும்.

எனினும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டம் ஆரம்பித்து முதலாவது விக்கெட்டாக டிம் பெய்ன் ஆறு ஓட்டங்களில் வீழ்த்தப்படும் வரை தான் இங்கிலாந்தின் மகிழ்ச்சி,ஆரவாரம் எல்லாம்..

அதற்குப் பிறகு முழுக்க முழுக்க அவுஸ்திரேலியாவின் போட்டி..

நிதானமாக இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்பி வந்த வொட்சனும் தலைவர் பொன்டிங்கும் படிப்படியாக இங்கிலாந்துக்கு கல்லறையை எழுப்பி முப்பதாவது ஓவரில் வேகமெடுக்க ஆரம்பித்தனர்.

முதல் நூறு ஓட்டங்களைப் பெற இருபது ஓவர்களும், நூற்றைம்பது ஓட்டங்களைப் பெற முப்பது ஓவர்களும் எடுத்த ஆஸ்திரேலிய அணி கடைசியாகப் பெற்ற நூற்று எட்டு ஓட்டங்களையும் பெற எடுத்துக்கொண்டது வெறும் 65 பந்துகளே..

சிக்சர்கள் வொட்சனின் துடுப்பிலிருந்து மழையாகப் பொழிந்தன.. எழு சிக்சர்கள்..பொன்டிங் ஒரு சிக்சர்.அதிலும் கடைசியாக கோல்லிங்க்வூடின் ஒரு ஓவரில் அதிரடியாக மூன்று சிக்சர்கள்.

இருவரும் சதங்கள்(பொன்டிங்கின் 28வது சதம், வொட்சனின் மூன்றாவது) குவிக்க பந்துகள் மீதமிருக்க ஒன்பது விக்கெட்டுக்களால் மிக இலகுவான வெற்றியைப் பெற்று இரண்டாவது சாம்பியன்ஸ் கிண்ணத்தைக் குறிவைத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஆஸ்திரேலியா.

அப்போது நினைத்தேன் இங்கிலாந்து முன்னூறு அடித்திருந்தாலும் துரத்தி அடித்திருப்பார்கள் என்று. என்ன உக்கிரமான ஒரு துடுப்பாட்டம்..

இருவரும் சேர்ந்து குவித்த 252 ஓட்ட இணைப்பாட்டம் ஆஸ்திரேலிய தேசிய சாதனை.. எந்த ஒரு விக்கெட்டுக்காகவும் அவுஸ்திரேலியாவின் மிகச் சிறந்த ஒருநாள் இணைப்பாட்டம் இது தான்..

இதற்கு முதல் பொன்டிங்கும்,சைமண்ட்சும் இலங்கை அணிக்கெதிராக 2006ஆம் ஆண்டு நான்காவது விக்கெட்டுக்காக 237 ஓட்டங்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது.
மேலதிக விபரங்களுக்கு..


பொன்டிங் இத்தொடர் முழுவதும் இங்கிலாந்தில் விட்ட இடத்திலிருந்து அமோகமாகத் தொடர்ந்துள்ளார்.. (நான்கு போட்டிகளில் இரு அரை சதங்கள்,நேற்றைய சதத்துடன் 287 ஓட்டங்கள்)
நேற்றைய ஆட்டத்தின் போது ஒருநாள் போட்டிகளில் பன்னிரெண்டாயிரம் ஓட்டங்களையும் கடந்துள்ளார்.
இந்த மைல்கல்லை சச்சின்,சனத்துக்குப் பிறகு கடந்த மூன்றாமவர் பொன்டிங்.

(யார் யாரோவெல்லாம் ஆஷசுக்குப் பிறகு பொன்டிங் ஓய்வு, விலக்கப் படவேண்டும் என்று கொமேன்டுகள்,சுயசரிதை எல்லாம் எழுதினாங்களே.. இப்ப என்னாச்சு..)

முதல் மூன்று போட்டிகளில் இரு பூஜ்ஜியங்கள் உட்பட 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த வொட்சனின் விஸ்வரூபம் நேற்று வெளிப்பட்டது.. இங்கிலாந்துக்கு அது நாசகாலம் ஆகிவிட்டது..

பந்து வீச்சில் இரு விக்கெட்டுக்கள்.. பின் துடுப்பாட்டத்தில் அதிரடி சதம்..

ஆஸ்திரேலியா பற்றி எனது முன் கணிப்பு.

அவுஸ்திரேலியா
எப்படி இருந்த அணி?...
முன்புபோல Hot Favourites என்று முத்திரை குத்த முடியாவிட்டாலும் இங்கிலாந்தை 6 -1 என்று துவைத்தெடுத்த துணிச்சலோடும் எல்லா வீரர்களும் formக்குத் திரும்பிய மகிழ்ச்சியோடு குதித்திருக்கிறது.
பொன்டிங், கிளார்க், ஜோன்சன், லீ இந்த நான்கு பேரும் வெற்றித் தினவெடுத்து நிற்கின்றனர் என்றால்,
கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட புதியவர்களை விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், கலும் பெர்குசன் மற்றும் புதிய அவதாரமெடுத்துள்ள கமரான் வைட் ஆகியோரும் நம்பிக்கையளிக்கின்றனர்.
ஆடுகளங்களும் சாதகமானவை என்பதனால் அரையிறுதி நிச்சயம் என்றே தோன்றுகின்றது.
பெர்குசன், ஜோன்சன், வைட், ஷேன் வொட்சன், லீ - இந்தப் பஞ்ச பாண்டவரைப் பார்த்திருங்கள்.
########


பாகிஸ்தானிடம் திக்கித் திணறி இறுதிப் பந்தில் வென்று நேற்று தமது பரம வைரியை வதம் செய்துவிட்டு, தரப்படுத்தலில் சிறிது காலம் இழந்திருந்த முதலிடத்தை மீண்டும் உறுதி செய்துவிட்டு நாளை மறுதினம் இடம்பெறும் இறுதிப் போட்டிக்கான தமது போட்டியாளரை எதிர்பார்த்துள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை யார் சந்திக்கப் போகிறார்கள்?

பாகிஸ்தானா? நியூ சீலாந்தா?

இப்போது இரண்டாவது அரையிறுதி ஆரம்பம் ஆகிவிட்டது..

இரண்டில் எது வந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு சரியான சவால் கொடுக்கும் தான்..

ஆனாலும் நியூ சீலாந்து அணி காயங்களால் அவதிப்படுகிறது.பல முக்கிய வீரர்களை(ஓராம்,டபிய்,ரைடர்) இழந்துவிட்டு தடுமாறுகிறது..

நியூ சீலாந்து பற்றி எனது முன் கணிப்பு..

நியூசிலாந்து
என்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன் கிண்ணத்தின் கறுப்புக்குதிரைகள் இவர்கள் தான்!
ஆடுகளங்களின் சாதகமும், இளமைத்துடிப்பும் சில பலமான அணிகளை அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும்.
ஷேன் பொண்ட்டின் மீள்வருகை உற்சாகத்தை அதிகரித்துள்ளது. சகலதுறைவீரர்களே இந்த அணியின் பலம்.
ஜெசி ரைடர், நீல் புரூம், ஷேன் பொண்ட் - கலக்கலாம்.

#############


பாகிஸ்தானோ இங்கிலாந்தைப் போலவே யாருமே எதிர்பாராமல் அசத்தி அரையிறுதி வரை வந்துள்ளது..

பாகிஸ்தான் பற்றி எனது முன் கணிப்பு..

பாகிஸ்தான்
கலைஞரின் அறிக்கைகள் போல, இந்திய அரசியல்போல, கண்டியின் காலநிலைபோல எளிதில் ஊகிக்கமுடியாத அணி!
இலங்கையில் வைத்து கடைசி இரு ஒருநாள் போட்டிகளை வெற்றி கொண்டதைப்போல, தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் பெறுபேறுகள் காட்ட ஏனோ முடியாமலுள்ளது. (இன்னமும் உள் வீட்டு சிக்கல்களா?)
கம்ரன் அக்மல், இம்ரான் நசீர், ஹொயிப் மாலிக், யூனிஸ்கான், யூசுஃப், சயீட் அஃப்ரிடி, மிஸ்பா உல் ஹக், பவாட் அலாம், உமர் அக்மல் என்று நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும், தடுமாறும் பந்து வீச்சும், மோசமான களத்தடுப்பும் பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்லவிடாத காரணிகளாகத் தெரிகின்றன. மொஹமட் ஆசிப், உமர் குல், நவீட் உல் ஹசன் மூவருமே பிரகாசித்தால் வாய்ப்புண்டு.
உமர் அக்மல், உமர் குல் பிரகாசிக்கக்கூடியவர்கள்.

########


தமக்குரிய நாளில் யாராலும் வீழ்த்தப்பட முடியாத மிகப்பலம் பொருந்திய அணியாக எழுச்சி பெரும் பாகிஸ்தான் சில நாட்களில் மண் புழு போல யாரிடமும் நசுங்கிவிடும்..

எனினும் இன்று அரையிறுதியில் விளையாடும் இரு அணிகளிடமும் எனக்குப் பிடித்த குணம் இறுதிவரை போராடும் தன்மை..
ஆஸ்திரேலியாவிடமும் அதே குணம் நிரம்பியிருப்பதால், இறுதிப் போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக அமையும்.

இன்னொரு முக்கிய விஷயம்.. இன்றைய போட்டியில் மழை வரக்கூடிய சாத்தியங்கள் 40 வீதமாக உள்ளதாம்.மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் சுற்றுப் போட்டி விதிகள் படி நியூ சீலாந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகுமாம்..

பி.கு - எனது முன் கணிப்புக்களை எல்லாம் பொய்யாக்கிய இலங்கை,இந்தியா,தென் ஆபிரிக்கா அணிகளையெல்லாம் கண்டமேனிக்கு வசவு பாடி கிழித்தவண்ணம் உள்ளேன்..

அனுசரணையாளர்கள்,ஒழுங்கமைப்பாளர்கள்,விளம்பரதாரர்களும் என்னோடு கூட்டணி சேர்ந்துள்ளனராம்.. ;)

எனது முன் கணிப்புக்கள் முழுமையாக பார்க்க..



15 comments:

Jerry Eshananda said...

வன்னி வதைமுகாமில் "இன்னைக்கு எத்தனை பேர் செத்தாங்க்கன்னு ரேட்டிங் கேட்டு சொல்றீங்களா லோஷன்."

ARV Loshan said...

அதெல்லாம் எழுத முடிந்தால்???
இலங்கை நிலைமை புரியாதா?

ஏன் அதையும் இதையும் போட்டுக் குழப்புகிறீர்கள் ஜெரி?
இந்தப் பதிவு கிரிக்கெட் பற்றித் தான் என்று தெரியாமலா வந்தீங்க?

Subankan said...

இன்றைய போட்டி முடிவுக்காக வெயிட்டிங். அவுஸ்திரேலியாவின் அகங்காரத்திலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா? எனக்கென்னமோ கிண்ணம் அவர்களுக்குத்தான் போலத் தெரிகிறது. ( அப்படி நடக்காவிட்டால் முதலில் மகிழ்வது நானாகத்தான் இருக்கும்)

Anonymous said...

//ஜெரி ஈசானந்தா. said...
வன்னி வதைமுகாமில் "இன்னைக்கு எத்தனை பேர் செத்தாங்க்கன்னு ரேட்டிங் கேட்டு சொல்றீங்களா லோஷன்."//

ஜெரி ஈசானந்தா கருணாநிதியைக் கேளுங்கள் புள்ளிவிபரங்களுடன் சொல்லுவார்.

புல்லட் said...

அப்பாடி .. இந்த கிரிக்கட்டை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான்.. மவனே விக்கட்டை எங்க குத்துவன் எண்டு எனக்கு மட்டும்தான் தெரியும்... இப்பிடியே போனா நானும் உந்த நேரந்தின்னி விளாட்ட பாக்க வெளிக்கிட்டுவனோ எண்டு பயம்ம்மாருக்கு...

ஆதிரை said...

அவுஸ்திரேலியா ஒரு சம்பியன் போல விளையாடிய திருப்தி... திமிர்...
இறுதிப் போட்டி எப்படியும் சூடு பிடிக்கும் மழை குறுக்கிடாவிட்டால்....


@ஜெரி ஈசானந்தா.
//வன்னி வதைமுகாமில் "இன்னைக்கு எத்தனை பேர் செத்தாங்க்கன்னு ரேட்டிங் கேட்டு சொல்றீங்களா லோஷன்."

நக்கீரன் பேப்பர் வாங்கிப் படியுங்கோ...

Bavan said...

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசிப்பந்துவரை பொண்டிங்கின் முகம் போன போக்கை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த கோபம்தான் பொண்டிங்கின் ஆக்ரோசத்துக்கு காரணமாக இருக்கும்.

Bavan said...

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசிப்பந்துவரை பொண்டிங்கின் முகம் போன போக்கை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த கோபம்தான் பொண்டிங்கின் ஆக்ரோசத்துக்கு காரணமாக இருக்கும்.

Unknown said...

// புல்லட் said...

அப்பாடி .. இந்த கிரிக்கட்டை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான்.. மவனே விக்கட்டை எங்க குத்துவன் எண்டு எனக்கு மட்டும்தான் தெரியும்... இப்பிடியே போனா நானும் உந்த நேரந்தின்னி விளாட்ட பாக்க வெளிக்கிட்டுவனோ எண்டு பயம்ம்மாருக்கு... //

ஹி ஹி.... வாங்கோ அண்ணா எங்கட பக்கம்... கிறிக்கெற் ஒர நல்ல விளையாட்டுத் தான்...

அவுஸ்ரேலிய அணியின் (எங்க அணி... வொற்சனும், பொன்டிங்கும் தான்) துடுப்பாட்டத்தில் எனக்குப் பிடித்ததென்னவோ அவர்கள் துடுப்பாடும் வேகத்தை கையாண்ட விதம்.
பவர்பிளேயில் அடித்து நொருக்கினார்கள். பின்னர் ஒன்று, இரண்டு என சுலபமாக பெற்றுக் கொண்டார்கள்.
தங்களால் அடித்தாட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் இடித்து நொருக்கினார்கள் பாருங்கள்... அதுவும் வொற்சனின் Flat and powerful அடிகள்... அருமை...

பொன்டிங் தான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்தார்.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா..

யோ வொய்ஸ் (யோகா) said...

//யார் யாரோவெல்லாம் ஆஷசுக்குப் பிறகு பொன்டிங் ஓய்வு, விலக்கப் படவேண்டும் என்று கொமேன்டுகள்,சுயசரிதை எல்லாம் எழுதினாங்களே.. இப்ப என்னாச்சு..//

பொன்டிங் சுய சரிதை எழுதியது நான் தான், பொன்டிங் ஒரு சிறந்த வீரர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆளுமை மிக்க தலைவராக அவரை ஏற்று கொள்ள முடியாது. அன்றும் இன்றும் என்றும் நான் பார்த்த மிக சிறந்த ஆளுமை மிக்க தலைவர் என்றால் அது மார்க் டெய்லர் தான்.

பொன்டிங், லாரா, அரவிந்த போன்றோர்கள் Class Batsman எனும் பிரிவிற்குள் அடக்கலாம். Form is Temporary, Class is Permanent என கிரிக்கட்டில் உள்ள பழமொழி போல் எப்ப அணிக்கு வேண்டுமானாலும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தரக்கூடியவர்கள். 2 வருடங்களுக்கு முன்னர் டிசெம்பரில் தென்னாபிரிக்காவுககு எதிராக ஒரு டெஸ்ட் போடடியில் இறுதி நாளில் பொன்டிங் விஸ்வரூபம் எடுத்து ஆடியது நினைவுக்கு வருகிறது. அந்த ஆட்டம் மறக்க முடியாதது..

நியுசிலாந்து இறுதிப் போட்டிக்கு வந்து விட்டது. இனி அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக தென்பட்டாலும் எனக்கு அவுஸ்திரேலியா பிடிக்காது. ஆகவே எனது ஆதரவு வெட்டோரி அணியினருக்கு தான்

பொறுத்திருந்து பார்ப்போம்..

Nimalesh said...

poting showed the classic & watto no doubt he is dangerous when he keeps going.....

Nimalesh said...

poting showed the classic & watto no doubt he is dangerous when he keeps going.....

Nirosh said...

நல்லது அண்ணா.... என்னவோ தெரியாது உங்களின் கிரிக்கெட் பதிவுகளை படிப்பது என்றால் எனக்கு அலாதி பிரியம்.... அடுத்த பதிவு எப்போது...?

Anonymous said...

நல்லது அண்ணா.... என்னவோ தெரியாது உங்களின் கிரிக்கெட் பதிவுகளை படிப்பது என்றால் எனக்கு அலாதி பிரியம்.... அடுத்த பதிவு எப்போது...?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner