சனிக்கிழமை பான் கி மூன் ஐயாவை வரவேற்ற பிறகு இன்று தான் மீண்டும் என் வலைத் தளத்துக்கு வரக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது..
அவரை வரவேற்ற ராசியோ என்னவோ வரவே முடியாத அளவு பிசி.
நண்பன் ஒருவனின் திருமணத்துக்காக கண்டி போயிருந்தேன்.. கண்டியில் கண்டவை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.. அது பிறகு..
அதுக்கு முதல் இதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.
சனிக்கிழமை இரவு என்னுடைய அப்பா அம்மா இருவரும் இந்தியாவிலிருந்து வந்ததனால் விமான நிலையம் சென்று அவர்களை அழைத்து வரவேண்டி இருந்தது.
நிகழ்ச்சியிலிருந்து பாதியில் எஸ்கேப் ஆகி, வீடு சென்று மனைவி,மகன்,தம்பியையும் கூட்டிக்கொண்டு விமான நிலையம் நோக்கி விரைந்தேன்.. இரவு நேரம் பெரிதாக போக்குவரத்து நெரிசல் இல்லையென்றால் என் வழமையான வேகத்தில் செல்வதற்கு 45 நிமிடங்கள் எடுக்கும்.
கிட்டத்தட்ட அதேயளவு நேரத்தில் விமான நிலையத்தின் நுழைவாயில் பாதுகாப்பு சோதனை சாவடியில் (முன்பெல்லாம் சோதனையிட்டே சாவடிக்கிற இடம் இது..) நுழைகிற நேரம் பார்த்தால் மிக நீண்ட வாகன வரிசைகள்..
நான்கைந்து வரிசைகள்.. நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. ஆமை வேகத்திலேயே ஒவ்வொன்றும் ஊர்கின்றன..
இதென்னடா இது.. இப்போ தானே யுத்தம் நிறைவடைந்தது என்று அறிவித்தார்கள்.. பிறகேன்? கேள்வியை அப்படியே சிங்கள மொழியில் என் வாகனத்தின் அருகே வந்த போலீஸார் ஒருவரிடம் கேட்டேன்..
அவர் மெலிதாக சிரித்துக் கொண்டே " இது ஒரு விசேட ஏற்பாடு.. பயம் கொள்ளத் தேவேயில்லை" என்று விட்டு விரைந்து போய் விட்டார்.
நாற்பது நிமிட மெதுவான ஊர்தலுக்குப் பிறகு பிரதான நுழைவாயில் அருகேயுள்ள சோதனை சாவடிக்கு போனோம்.
அங்கிருந்த காவலர் அடையாள அட்டை கேட்டார்..
எம்மைக் காக்கும் மிக முக்கிய ஆவணமான ஊடகவியலாளர் அடையாள அட்டையை (அரசினால் வழங்கப்படுவது) எடுத்து நீட்டினேன்.
பொதுவாக எந்தவொரு சோதனை சாவடியில் இதைக் காட்டியவுடன் வேறெந்தக் கேள்வியும் இல்லாமல் போக அனுமதிப்பது வழக்கம்.
ஆனால் அன்றோ கொஞ்சம் முகம் மாறிய அந்தக் காவலர் என்னுடைய வானொலி நிறுவனம் எது என்று கேட்டறிந்த பிறகு சொன்னார் "நீங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை" என்று பணிவாக சிங்களத்தில் சொன்னார்.
ஏன் என்று கேட்டதற்கு, "ஊடகவியலாளர்களை இன்று உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு" என்று பதில் வந்தது.
சிரித்துக் கொண்டே "வழமையாக எம் போன்ற ஊடகவியலாளர்களைத் தானே இலகுவாக உள்ளே அனுமதிப்பீர்கள்.. இன்று என்ன" என்று கேட்டேன்.
எதுவும் பதில் சொல்லாத அவர் நான் உள்ளே செல்லும் காரணம் கேட்டார்.. என்னுடைய பெற்றோர் வரும் விஷயம் சொன்னேன். நான் ஒரு வாகன ஒட்ட்டியாகவேவந்திருக்கும் விஷயத்தை தெளிவாக சிங்களத்தில் புரியச் செய்த பிறகு,
"நீங்கள் வேறு அலுவலாக வரவில்லையே" என்று கேட்டார்..
"அப்படி வருவதாக இருந்தால் மனைவி,பிள்ளையுடன் வந்திருக்க மாட்டேனே.. அதுவும் கட்டைக் காற்சட்டையுடன் (jumpers) வந்திருப்பேனா?" என்று சிரித்துக் கொண்டே நான் கேட்க,
பலமாக சிரித்தபடி ஏன் தேசிய அடையாள அட்டை எண், வாகன இலக்கம் போன்றவற்றைக் குறித்த பின் செல்ல அனுமதித்தார்..
கொஞ்சம் யோசித்துப் பார்த்தபின் எனக்கு சனிக்கிழமை விமான நிலைய பாதுகாப்புக் கேடுபிடிக்கான காரணம் விளங்கியது..
நம்ம பான் கி மூன் ஐயா புறப்படும் விஷயம் தான் எனத் தெரிந்தாலும், இவ்வளவு கெடுபிடி குறிப்பாக ஊடகவியலாளர் மீது என்று சொல்லி அடுத்தடுத்த நாட்களில் தான் தெரிந்தது.
ஐநாவின் செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தடை – குற்றச்சாட்டு அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு தொடர்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்
- இணையத்திலும், பத்திரிகையிலும் வந்த செய்தி
அப்போ இது தானா? வேறு பல விஷயங்கள் சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே..