வியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்

ARV Loshan
20
 நேற்று இரவு.. வெளியே விருந்தொன்றுக்காகப் போய் வீடு திரும்பி, உறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்.வழமையாகவே பதினொரு மணிக்கு முதல் தூங்கவேண்டும் என்று முடிவெடுத்தாலும் எங்கள் குறும்பு கண்ணனின்(என் ஒரு வயதை அண்மிக்கும் மகன்) குழப்படி விளையாட்டுக்கள் காரணமாக எப்படியும் இன்னொரு மணித்தியாலமாவது செல்லும் தூங்குவதற்கு.. இரவு நேரம் என்றால் அவனுக்கு எங்கிருந்து தான் அந்த உற்சாகம் வருகிறதோ.. எனக்கென்றால் அடுத்த நாள் அதிகாலை 4.30க்கு எழுந்தால் தான் வேலைக்கு சரியான நேரத்துக்கு சென்று நிம்மதியாக காலை நிகழ்ச்சியை வானொலியில் ஆரம்பிக்க முடியும்.

அதுவும் நேற்று எங்கள் அப்பாவும் எங்களோடு தங்கியதால் கரைபுரண்ட உற்சாகம் அவனுக்கு,, ஓடி(தவழ்ந்து தான்) விளையாடி வியர்த்து வழிய,கிட்டத் தட்ட குளித்தது போல அவனது உடல் முழுதும் வியர்வை..  எனக்கும் அவன் பின்னாலே ஓடித் திரிந்து களைத்து விட்டது.வியர்த்து வழிய நின்ற போது தான் மின்சாரம் தடைப் பட்டது.

நிறைய வலைத்தளங்கள் பார்க்கும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது தமிழகமும் ஆற்காடு வீராசாமியும் தான்.. ;)

மழை நாட்களில் இதையே ஒரு தடவை மின்சாரம் நின்று பின் வரும்.. அதற்கிடையில் நான் மின்சார சபையின் அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அங்கு இரவு உறங்கத் தயாராக இருக்கும் இரவுக் கடமை ஊழியருக்கு தொல்லை கொடுப்பதுண்டு.நேற்றும் அது போலத் தான்.. பல தடவை எடுத்தும் அந்த இலக்கம் செயல் இழந்தது போலவோ, receiverஐத் தூக்கி வெளியே வைத்தது போலவோ ஒரு tone கேட்டுக் கொண்டிருந்தது.. மனத்துக்குள் அவனைத் திட்டிவிட்டு பால்கனி வழியாக வெளியே பார்த்தேன்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்குமே மின்சாரம் இல்லை என்று தெரிந்தது.ஆனால் கொஞ்சம் தொலைவிலுள்ள கிருலப்பநை காவல் நிலயத்தில் இருந்து வானுக்கு ஒளி வெள்ளம் (para meter light) பாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் எனக்குப் புரிந்தது இது கொஞ்சம் விவகாரமான விஷயம் என்று.. 
 
கொழும்புக்குள்ளே அடையாளம் காணப் படாத விமானம் (புலிகளின் விமானத்துக்கு இவ்வாறு தான் சொல்வார்கள்)  புகுந்து விட்டது என்று புரிந்தது.. (அல்லது வரப் போகிறது என்று பயம் வந்து விட்டது என்று விளங்கியது) ஏற்கெனவே முதல் தடவை இவ்வாறு கொழும்பிலே புலிகளின் விமானத் தாக்குதல் நடந்த போது இலங்கையின் உயரமான கட்டடத்திலே கடமையில் இருந்தேன் நான்.(சூரியனில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஸ்கோர் விபரங்கள் வழங்கிக் கொண்டிருந்தேன்)
 
ஆகா மறுபடியுமா என்று யோசித்தேன்.. எங்கே போடுவார்கள்?? ஜனாதிபதி மாளிகை? இராணுவத் தலைமையகம்?? நாடாளுமன்றக் கட்டடம்?? சப்புகஸ்கந்த எண்ணெய்க் குதம்?? அல்லது வேறு எங்கே??

யோசித்த படியே எங்கள் வெற்றியின் செய்தி ஆசிரியர் பென்சிக்கு அழைப்பெடுத்தேன்.. மன்னார்,தள்ளாடி இராணுவ முகாம் மீது புலிகளின் விமானத் தாக்குதல் நடத்திய விஷயம் சொன்னார்..கொழும்புக்குள்ளும் விமானங்கள் வரலாம் என்ற அச்சத்தினாலேயே மின்சாரம் நிறுத்தப் பட்டதாக சொன்னார் அவர்.. (அது சரி தான் இருட்டுக்குள்ள எப்படி கண்டு பிடிப்பாங்க எங்கே குண்டு போடுவதென்று?) எனக்கொரு சின்ன ஐடியா எங்கெங்கே குண்டு போடுவார்கள் என்று சந்தேகம் இருக்கோ அங்கெல்லாம் மட்டும் மின்சாரம் துண்டிததால் வருகின்ற விமானங்கள் குழம்பி விடுமே.. ஏன் செய்ய மாட்டேங்கிறாங்க?  

சரி இன்று விடிய விடிய மின் விசிறியும் போட முடியாமல் வியர்வையுடன் அவதிப் படவேண்டும் என மனத்தில் திட்டிய படியே பால்கணியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தேன்.. சின்னவனோ வியர்வையுடன் போராடிக் கொண்டிருந்தான்..விளையாடும் போது அவனுக்குப் பிரச்சினையில்லாமல் இருந்த வியர்வை தாயார் தூங்க வைக்கும் போது அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தி இருக்கவேண்டும்.தூங்க மாட்டேன் என்று அடம் பிடித்து அழுதான்.. 

அதற்கிடையில் அலுவலகத்தில் கலையகக் கடமையில் இருந்த சுபாஷ் தொடர்புகொண்டு களனி திஸ்ஸ மின்வழங்கு நிலயத்தில் குண்டு போடப்பட்ட விஷயத்தை சொன்னார்.பாதுகாப்பாக இருக்குமாறு அவரிடம் அறிவுறுதிவிட்டு பென்சியை மறுபடி அழைத்தேன்.. குண்டு போடப்பட்ட இடம் பற்றி எரிவது தெரிவதாக சொன்னார்.. 

கிழிஞ்சு போச்சு.. காலை வரை மின்சாரம் வராது என்று நினைத்தேன்.. மறுபக்கம் அப்பா காலையில் தான் நினைத்திருந்த கதிர்காமம் பிரயாணம் ரத்து தான் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.. 

எனக்கு ஒரு சந்தேகம்(எப்ப தான் வராது?) அது மட்டும் தான் இலக்கா அல்லது இன்னும் வேறெங்காவது போடுவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.. ம்ஹூம் இல்லை.. மயான அமைதி வானெங்கும்.. மொட்டை மாடியில் நின்று பார்த்தால் எதுவுமே தெரியவில்லை.. வியர்வையும் கொஞ்சம் குறைந்தது.. வீட்டுக்குள்ளே என் சின்னவன் ஓடி திரிந்து கொண்டிருந்தான்..
 
நண்பர்கள் மாறி மாறி sms மூலமாக விசாரித்த படி .. தெரிந்தததை சொன்னேன்..
 
அதிகாலை ஒரு மணி போலே மின்சாரம் வந்தது.. அப்பாடா பெரிய நிம்மதி.. காற்று நன்றாகவே மின்சார விசிறி மூலமாக வந்தது.. சின்னவன் தூங்க ஆரம்பித்தான்.நாங்கள் பரவாய் இல்லை.. கொழும்பில் வேறு பல இடங்களுக்கு காலை 5 மணிக்குப் பிறகு தான் மின்சாரம் வந்ததாம்.

காலையில் அப்பா கதிர்காமம் போகத் தயாராகி விட்டார்.வீதிகளில் வழமை போலவே வாகனங்கள்.. எந்த அசாதாரண மாற்றங்களும் இல்லை.. கொழும்பும் விமானத் தாக்குதல்களுக்கு பழகி விட்டது.. 
பற்றி எரிகிறதாமே.. 

தள்ளாடியில் பயங்கர அடியாமே என்ற விஷயங்களை யோசித்துக் கொண்டே அலுவலகம் வந்தால் செய்தி அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் பாதிப்பு எதுவுமே இல்லை; புலிகளின் எண்ணம் பலிக்கவில்லை என்ற பாணியில் சொல்லப் பட்டது.. 

சரி தான்.. டிடீயிலு சொல்லிட்டாங்கையா என்று நினைத்தேன்.. 

இந்த தாக்குதலினால் மின்விநியோக நிலையத்திலிருந்த மின் மாற்றிகளுக்கே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மின்மாற்றியை திருத்தியமைக்கும பணிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

பற்றி எரியும் அளவுக்கு வேறு எதுவுமே தாக்கப் படவில்லையாம்.. அது போல மன்னாரிலும் மூன்று பேர் தான் பலியாம்.. 

அடப் பாவிகளா அப்பா இதுக்காகவா எங்களை வியர்வையில் நனைய விட்டீர்கள் என்று கேட்கலாமோ என்று தோன்றியது...ஆனால் கொழும்பும் கொஞ்சம் விமானம் என்றால் நடுங்கட்டுமே என்று ஒரு சின்னத் திருப்தியும் தான்.. 

எல்லாவற்றையும் பிடித்து விட்டோம் என்றும் வன்னியை நெருங்கி வருகிறோம் என்று சொல்வதெல்லாம்???
விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று சொன்னதெல்லாம்???? 
தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகனைகள் செயல்படுவதாக சொன்னதெல்லாம்???

என்னடா நடக்குதிங்கே..... (அடிக்கடி நிறையக் கேள்வி கேட்கிறேனோ?)

யோசித்தால், கேட்டால் மறுபடி வியர்க்கும்.. எனக்கல்ல..;) 

Post a Comment

20Comments

Please Select Embedded Mode To show the Comment System.*