இப்போதெல்லாம் எனக்கு இணையத் தளங்களிலும்,வலைத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் எதையாவது வாசிக்க தலைவலியாகவும்,பிடிக்காமலே போகிறது.ஏன் எங்கள் வெற்றி FMஇலும் கூட செய்திகளை வாசிப்பதற்கு வெறுப்பாக உள்ளது.
வன்னி மக்கள் அவதி.. நாளாந்தம் பலர் பலி.. கொழும்பில் பலர் கைது.. இனப் பிரச்சினை தீர்வுக்கு இதோ ஒரு புதிய வழி.. பேசுவார்த்தைக்கு வருவார்களா?.. மற்றொரு குண்டு வெடிப்பு.... வன்னிக்குள் இராணுவம்..புலிகள் பதிலடி.. இப்படியான வழமையான இலங்கை பற்றிய செய்திகளோடு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களாக யார் யார் ஈழத் தமிழருக்கு ஆதரவு? யாரெல்லாம் பேரணி,மனித சங்கிலிப் போராடடத்துக்கு வருகின்றனர்? யாரெல்லாம் உண்ணாவிரதத்துக்கு வருவர்? என்பவையே இப்போதெல்லாம் பேசு பொருள்,எழுது பொருள்.
நானும் இது பற்றி பதிந்திருந்தேன்.. தமிழக ஆதரவு அலை எந்தவிதத்திலும் இந்திய மத்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக இல்லை..மன்மோகன் இன்னமும் கூறியதே கூறிக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசுக்கு எல்லா(ஆயுதம் உட்பட)உதவியும் இந்தியா செய்யும் என்று! இப்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் (அவரது சகோதரரும் கூட) பசில் ராஜபக்ஸ இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்க டெல்லி போகிறார்.
மறுமுனையில் வைகோ,திருமாவளவன்,இயக்குநர் அமீர் ஆகியோர் கைது. இவர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்ட இலங்கைத் தமிழர் உண்மையிலேயே கவலைப் பட்டனர்.ஆனால் இவர்கள் ஈழத் தமிழருக்காகப் பேசியதற்காகவன்றி இந்தியப் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவே கைது செய்யப் பட்டதாக கைது செய்யப் பட்டதாக சொல்லப் படுகிறது. இவர்களில் உண்மையாகவா அல்லது பிரபல்யத்துக்கா செய்கின்றார்கள் என்று நான் ஆராயப் போவதில்லை. குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இலங்கையில் தெய்வங்களாகக் கருதப்படும் சிலர் மௌனமாக இருக்க,சிலர் படப் பிடிப்புகளில் பிசியாக இருக்க கொஞ்சம் மனது வைத்துக் கலந்து கொண்டார்களே.. அதனாலும்.. கொட்டும் மழையிலும் நேற்று மனித சங்கிலிகளாக இணைந்து இருந்தார்களே அதற்காகவும். (சிலர் உண்ணாவிரதத்துக்கு வந்தால் போதும் என்று எண்ணியுள்ளார்கள்)
இது பற்றி எழுத நினைத்தாலே எனக்கு வெறுப்பாகவும்,தலைவலியாகவும் இருக்கிறது.. எல்லோரும் எழுதிய இவை பற்றிய பதிவுகளை நான் படித்துவிட்டேன்(சில ஒரே மாதிரியானவை;சில மாற்றுக் கருத்துகள்;ஒரு சில சிலரின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள்) பலதில் பின்னூட்டம் போட்டும் உள்ளேன்..
எதை எழுதுவது எதை விடுவது? ஏன் மனத்தில் பட்டவற்றை இங்கே கொட்டுகிறேன் ..
இந்தியாவில் உள்ளவர்களை கட்டாயம் எமக்காகப் பேசுமாறும் போராடுமாறும் நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியுமா?அவர்களுக்கே இப்போது ஏராளமான பிரச்சினை.. மின்சாரம்,விலைவாசி உயர்வு..2011இல் யார் தமிழக முதல்வர்.. இவ்வாறு பலபல..ஆனால் அவர்களுக்கு உள்ள கடமையின் படி குரல் கொடுக்கவேண்டும்..(எனக்கே குழம்பி விட்டது)
கலைஞருக்கு தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று அழைக்கப்படுவதனால் அந்தக் கடமை உள்ளது என்றும் நான் நம்புகிறேன்..
நடிகர்களுக்கு நிச்சயமாக நன்றி உணர்வு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..அநேகமான நடிகர்கள் இலங்கை வந்து போய் இருக்கிறார்கள்; அவர்களை உயர்த்தவென்றே இங்கே பல தொலைக் காட்சிகள்;வானொலிகள்..புலம் பெயர் இலங்கைத் தமிழர் இவர்களின் படங்கள்,இவர்கள் வரும் கலை நிகழ்ச்சிகளுக்கு தாம் குளிரிலும்,பனியிலும் உழைத்த பணத்தை அள்ளி இறைக்கிறார்களே.. அதற்காகவேனும்(நாங்க பார்க்க சொன்னோமா என்று கேட்கப் படாது)
இன்று காலையில் என்னைத் துயில் எழுப்பியதே அஜித் இப்படி சொல்லிட்டாரே என்று புலம்பிய ஒரு தொலைபேசி அழைப்புத் தான்.. எனக்கு கோபம்,வெறுப்பு வந்ததாயினும் நான் இதை,இது மாதிரி செய்திகளை எதிர் பார்த்தேன்.. யாராவது நாங்கள் ஏன் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் என்று யோசித்தேன்...காரணம் அனுதாபம்,தொப்புள்கொடி உறவு,மனிதாபிமானம்,இலங்கையில் வாழ்வோரும் தமிழரே என்னும் சில காரணங்களைத் தவிர அவர்களை (தமிழகத்தினரை) நாம் எமக்காகக் குரல் கொடுங்கள் என்று கேட்க முடியுமா என்று ஒரு மாற்று மனசாட்சி எனக்குள் குரல் எழுப்புவதுண்டு..
எனது சக நண்பர்களும் இதையே எதிரொலித்தார்கள்..ஆனாலும் நாங்கள் ஒன்றுபட்ட ஒரு கருத்து..ஆரம்பத்திலேயே (80களில்) இயக்கங்களுக்க் ஆதரவு,உதவி செய்து பழக்கி விட்டார்கள்; 1987இல் அமைதி காக்கும் படை (!) வந்து செய்த அட்டூழியங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கடப்பாடு;தமிழினமே இலங்கையில் அழிவதை தடுக்கவேண்டும் என்ற சில காலத்தின் கடப்பாடுகள் இருக்கின்றன..
நம்மவர்க்கு இடையேயே ஒற்றுமை இல்லாத போது வேறு யாரும் உதவி செய்வார் என்று நாம் நம்பி இருக்கலாமா?சில அநானி பின்னூட்டங்களை சில பதிவுகளில் பார்த்தாலே தெரியுமே..
அஜித் சொன்னாரா சொல்லவில்லையா என்று நான் ஆராயமாட்டேன்.. ஆனால் நெருப்பிலாமல் புகையாது என்பது ஒரு பக்கம் இருக்க,ராமேஸ்வரத்தில் வைத்து இயக்குநர் சேரன் விஜயைத் தாக்கிப் பேசியதால் அஜித்தின் புதிய திரைப்படம் ஏகனை ஓட விடாமல் செய்யப் புறப்பட்ட வதந்தி தான் இது என்றும் கருத்து இருக்கிறது.. ஆனால் என் மனத்தில் இருந்து அஜித்தும்,அர்ஜுனும் சரிந்துவிட்டனர்.
அஜித்,அர்ஜுன் ஆகிய இருவரின் படங்களும் இனி இலங்கையிலோ,இலங்கையர் அதிகமாக வாழும் வெளிநாடுகளிலோ திரையிடப் பட்டால் நல்லபடி ஓடுமா என்பது சந்தேகம் தான்..இலங்கையில் இன்று முதல் நாளே ஏகன் திரைப்படத்துக்கு பெரிதாக கூட்டமே இல்லை.அஜித்தை திட்டி,வசை பாடி sms,மின்னஞ்சல்கள்,facebookஇல் தகவல்கள் பரவி வருகின்றன. நாளையே யாராவது திரையரங்கைக் கிழித்தாலும் ஆச்சரியம் இல்லை.
மறுபக்கம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவ்ப் ஹாக்கிம் இந்திய அரசின் தலைய்யீட்டை எதிர்த்தும்,மறுபக்கம் தமிழகத் தமிழர்,குறிப்பாக தமிழக அரசு இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.இலங்கை விஷயத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும் என்று அறிக்கை விட்டுள்ளார் அவர். (அரச விசுவாசம் போலும்.. இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார் என்று நம்ம நண்பர் ஒருவர் கேட்கிறார்)
இரண்டிலும் ஒரு குழப்பம் நிலவி வருவதோடு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தாம் பேசும் பாஷையை வைத்துக் கொண்டே தமது இனத்தை தீர்மானிப்பத்துடன்,இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தம்மை ஒரு மதம் சார்ந்த இனம் என்று கருதப்பட வேண்டும் எனக் கோருவதும்,அவ்வாறே வாழ்வதும் இங்கு வித்தியாசமானது..
இனி முதலாம் திகதி யார் யார் வருவர் என்று நம்மவர்கள் காத்திருப்பர்.. அதற்கு முதல் 28ஆம் திகதி என்ன நடக்கும் என்று நான் பார்த்திருப்பேன்.
ஆனால் தினம் தினம் மாறிவரும் தமிழக ,இந்திய சூழ்நிலையில் நான் யாரையும் எதிர்பார்கப் போவதுமில்லை;இந்தியாவின் அரசை நம்பப் போவதும் இல்லை;என்ன நடந்தாலும் ஆச்சரியப் படப் போவதுமில்லை!