போரொடுங்கும் புகழொடுங்காது!

ARV Loshan
12
2001ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கொழும்பில் இடமெற்ற கம்பன் விழாக் கவியரங்கில் என்ற தலைப்பில் நான் படித்த கவிதை..

கவியரங்கத் தலைமை கவிக்கோ அப்துல் ரகுமான்.

ஓரளவு (!) நன்றாக எனது கவிதை இருந்ததாக சொல்லப் பாத்தாலும்,இதன் பின்னர் எனக்கு கம்பன் விழாக்களில் கவி பாட அழைப்புக்கள் வரவில்லை.. (அரசியலில் எனது வரிகள் கொஞ்சம் அதிகமாகவே விளையாடியதும் ஒரு காரணம் எனப் பின்னர் அறிந்தேன்) எனினும் சொல்லரங்கம் போன்ற சில நிகழ்வுகளில் இணைந்து கொண்டேன்..

இங்கே நான் ராமன் என்று யாரை நினைத்துக் கவி வடித்தேன் என்று இலங்கை,ஈழம் பற்றி அறிந்தோருக்கு நன்றாகவே புரியும் என்று நம்புகிறேன்..அது புரிந்தால் ஏனைய விஷயங்கள் புரிவதில் சிக்கல் இருக்காது! (ராமன் காடாண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

என் கவிதை முடிய, கவிக்கோ "அன்று ராமனுக்கு ஒரு அனுமான் தூதன்; இன்று இவர் சொன்ன ராமனுக்கு யாருமில்லை எஜமான்; எனவே இந்தப் பெருமான் (என்னையே தாங்க) இந்த ரகுமான் மூலமாக பாரதத்துக்கு தூது விட்டுள்ளார்" என்று கை தட்டல் வாங்கிக் கொண்டார்.

அண்மைக் காலத்தில் (2007,2008) அழைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி கம்பவாரிதி அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறேன்.. (என் வாயும் எழுத்தும் சும்மா இருக்காது.. கம்ப ராமாயணம் பற்றி பாட சொன்னாலும் நான் கந்தலாகிப் போன எம்மக்கள் நிலை பற்றித் தான் தொடர்பு படுததுவேன்..ஏன்யா வம்பு? அவருக்கும் சரி.. எனக்கும் சரி.. )


போரொடுங்கும் புகழொடுங்காது!

கவிபாடும் எண்மரில் முதல்வன் யான்!
வரிசையில்,இருக்கையில்
வயதினில் இளையவன்!
வாக்கிலும் இளையவன்!
அரங்கிற்குப் புதியவன்!
அதனால் சிறியவன்!
வார்த்தைகளை வளைத்து
கவி வடிப்பதிலும் இளையவனேயாயினும்
சளைத்தவனல்ல எனக்காட்ட
இக்கம்பன் கவியரங்கு
காட்டவேண்டும் வழி!
கவியரங்கிற்குக் களையூட்ட
எம்மைக் களிப்பூட்டக் காத்திருக்கும்
சக கவித்தோழருக்கு சமர்ப்பித்தேன் என தோழமை வணக்கத்தினை

அரங்கில் அடியேனையேற்றி
வலிந்தழைத்து வாய்ப்பளித்த
ஐயா கம்பவாரிதிக்குக்
கனிவான நன்றிகள்
இக்காற்றலையில் கற்றறியும் கற்றுக்குட்டிக் கவியிடமிருந்து!

கம்பன் புகழ் மேவி
கன்னித் தமிழ் பருக வந்துற்ற சபையவரே
உமக்கும் சக்தி மைந்தனிவன் சாற்றினேன் தமிழ்வணக்கம்!

சினிமா கொத்த சிற்பி வேண்டாமென
சிதையாத கவி சிற்பம் மட்டுமே செதுக்கும்
பாவின் மன்னன்
பால்வீதி படைத்த அண்ணல் !
இலங்கைக்குக் கவிப்பாலம் கட்டும்
கவிதைகளின் மன்னன்
பாரெங்கும் ஒரே கவிக்கோ
இன்று எம் கவியரங்கின் கோ
அண்ணல் அப்துல் ரஹ்மானைப் பணிந்தேன்.

அன்றொரு நாள்!
இன்றைப் போல் அவலங்கள் சூழாத –
அடுத்த பொழுது என்னாகுமோ ஏதாகுமோ என
நெஞ்சு எண்ணிப் பதைக்காத
எவனெவன் இங்கு வந்து
என்னென்ன சொல்வானோ
ஏதேது செய்வானோ என
இன்னலுறாத நாள்

அயோத்தி மாநகர்!
அமைதியின் பிறப்பிடம்!
அருளின் சிறப்பிடம்!
ஆண்மை,அன்பின் தரிப்பிடம்!
தலைமகன் இவனே!
தலைவன் இவனே!
தகைமை இவனுக்கே என
ஒருவரிருவரின்றி ஒட்டு மொத்தப்பேரும்
ஒன்றாக ஏற்றவன் இராமன்!

முடிதரித்து அயோத்தி ராமனாக ஆகும்வேளை,
அந்தணப்பெருந்தகை வசிஷ்டர்
அவன் காதில் ஒதியது
போரொடுங்கும் புகழொடுங்காது!

பலியெடுக்கும் போரை நிறுத்திப்
பகைக்கருள் ராமா,
உன் புகழ் நிலைக்கும்!

அன்றைய வாக்கு அந்தணர் வாக்கு-அறவாக்கு
இன்றைய நாளில் அதே வாக்கு
போரெங்கும் புகழொடுங்காது!

அப்படியே போட்டுப் பார்ப்போம்
அந்தோ பரிதாபம்!
அழகான பாதத்திலே
அளவு பெரிதான
அழுக்கான சப்பாத்தாக
அந்த வார்த்தைகள்!

ஜனகன் மகளை ஜானகியை சிறையெடுத்தோனை
சிதைத்தவன் ராமன்!
அதர்ம வழி சென்றவன்
தர்மத்தினால் வதையுண்டனன்
கதையறிவொம் நாம்.

பத்துத் தலை இருந்தென்ன
பலமான சேனையிருந்தென்ன
பல்லாண்டு தவமிருந்து பெற்ற வரமிருந்தென்ன
பலமான சோதரர்,புதல்வர் இருந்தென்ன!
செல்லும் வழி தவறாயின்
சீர் சிறப்பு எல்லாம் சிதறும்
ராமன் சொன்ன பாடம்!
ராவணன் கற்ற பாடம்! - காலம் கடந்து

அது ராமராவண யுத்தம்!
போர் ஒங்கியதங்கு!
ராமனின் புகழோக்கியதன்று!
அறவழிப்போர் அது!
அதர்மத்தை அழித்த போர் அது!

அன்றந்தப் போர் அடங்கியிருந்தால்,
ஒடுங்கியிருந்தால்
வீரனா ராமன்?
ராமனா வீரன்?
ராமன் வீரனா?
பற்பல தலைப்புகளில்
பலப்பல பட்டிமன்றங்கள்
பரவலாக நடந்திருக்கும்

ராவணவதை நீதியானது;
நிகழ்ந்திருக்க வேண்டியது
ஒத்துக்கொள்வீரோ?
உண்மையை ஏற்பீரோ?

அன்றந்த இராவணன் வதையது
வரலாறானது!

இன்றிங்கு நவீன ராவணரை
ராமர்கள் வதைப்பதை நீவிர் தடுப்பதேனோ?
வாளினாலும் வேலினாலும்
அன்றெம்மவர் வாழ்ந்து காட்டியதை-எமக்கு வாழ்க்கை காட்டியதை
இன்று வாயினால் காட்டுமாறு கேட்டு நிற்றல்
பொருந்துமா? காலப் பொருத்தமா?

நவீன காலம் இது
தட்டினால் தான் எதுவும் நடக்கும்!
தட்டச்சு தட்டு! தாளில் எழுத்து!
கதவு தட்டு! தாள் திறக்கும்!
கணினி தட்டு! வலையில் உலகம்!
முதுகில் தட்டு! முன்னேற்றம் காண்பாய்!
முன்னிற்பவனைத் தட்டு! முன்னணியில் நீயே!
எதிர்ப்பைத் தட்டு! ஏற்றமுண்டு!

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
அன்றைய வார்த்தைகளில்
கொஞ்சம் புதிய குருதி சேர்த்துப்
புதிய சொற்கள் செய்வோம்
உயிரற்றுப் போன உளுத்துப் போன
பழையவற்றுக்குப் புதிய உயர் கொடுப்போம்.
ஆண்டபரம்பரை அன்று மறந்தவற்றை
வேண்டாம் இவையினியென்று
வெறுத்தொதுக்கியவற்றை
மீண்டும் தூசு தட்டி மெருகேற்றுவோம்
இன்றைக்கேற்றபடி இப்பொழுதுகேற்றபடி..

போரொடுக்கும் புகழொடுங்காது
அன்று பொருந்தியது!
அழிவு தந்த அனர்த்தம் நின்று
அமைதி வந்தால்
அன்று மகிழ்ச்சி
இன்றும் தான்!

மண்ணாசை மனதில் கொண்டு
பிறநாட்டின் பொன் மீது மோகம் கொண்டு
பிறன் பெண் மீது மையல் கொண்டு
போர் நடத்தி பேரழிவு உண்டாக்கின்
போர் ஒடுங்கல் பேராண்மை!
பெருநன்மை!
அர்த்தமொன்று இருந்து
அடையாளங்கள்
மரபு அடையாளங்கள் காக்க
யுத்தங்கள் எனின்
போர் ஒடுங்கின் ஒடுங்குவது
போர் மட்டுமல்ல
போர்ப்பரணி பாடி ஊருலகம் முழுதும்
பறைதட்டிய நாம், நம் மண்,நம் மானம்,
நம் இருப்பு,நம் புகழும் தான்.

ஐந்தாண்டு திட்டங்கள் அமுல்படுத்தியவுடனேயே
அடங்குவதுபோல்
அவசரகாலச் சட்டங்கள்
ஆறேழு கைகளோடு அரங்கேறுதல் போல்
அன்றந்தத் தவமுனி
அண்ணல் ராமனுக்கு
அறவோதிய அருள்மாழி
போரொடுங்கும் புகழொங்காது!

பொருத்தமானதே அன்று!
மானமும் வீரமும் அறமும்
அன்று ஒங்கி நின்ற காலம்!
அரசர் செங்கோலாட்சி ஒச்சி நின்ற காலம்!

இன்று
வாழ்க்கையில் சந்தோஷங்களை விட
நாம் சந்திக்கும் தோஷங்களும்
கோஷங்களும் தான் அதிகம்
வாழ்க்கை அதிகமான கேள்விக் குறிகளைத்
தாங்கி நிற்பதால்
அதிகமாக எதிர்ப்பார்ப்பதென்னவோ
ஆச்சரியக் குறிகளைவிட முற்றுப்புள்ளிகளைத்தான்.
கேள்விக் குறிகளாக
வாழ்க்கையின் முதுகுகள் வளைந்து
எதிர்காலங்கள் கொமாவைப் போட்டுக் கொண்டிருப்பதால்
விரைவிலேயே இங்கொரு முற்றுப்புள்ளி
செந்நிற முற்றுப்புள்ளி வேண்டும்

புள்ளி வைக்க யார் வருவர்?
எப்போது வருவர்?
வரும்வரை இங்கிருப்பவை இங்கிருக்குமோ?
சிதைத்தவை - புதைந்தவை
மண்ணோடு மண்ணாகி மக்கி மறைந்தவை
எரித்தழிந்தவை உயிர்பெற்றெழுந்தால்
அவை தம் சாட்சியமும்
விசாரணைக் குழுக்களிடம் சென்று முறையிடும்!
எம் மண்ணில் புதைகுழிகட்டுப் பேச்சு வந்தால்
வசிட்டரிடமே கேட்கும்
"ஐயா இக்காலத்தில் தாங்கள் கூறியது பொருத்தமா?"என!

போர் ஒடுக்கி புகழ் பெருக்க
வாள்வேல் வில்லை ஒருபுறம் வைத்துவிட்டு
இன்றைய ராமன்
அளவளவாவி முடிவு காண
காடு விட்டு
நகர் வந்தானாயின்.....
நாம் சற்றுக்கற்பனையில் சிந்திப்போம்!

காட்டுமிராண்டி ஆட்சி செய்யும் கூட்டத்துக்கு
ராமனைக் காட்டிக் கொடுத்து
கூத்து நடத்தும் நவீன பரதர்களிருக்கும் போது
அரசவையில் அரைவாசி உரிமைகூட அதிகமென்றும்
அடி பிடி தான் உகந்ததென்றும் அடம்பிடிக்கும்
விக்ரம வில்லன்கள் விடாப்பிடியாய் நிற்கும்போது
நீயா நானா என்று முட்டிமோதும்
நீசர் இருக்கும்போது
கேசம் மழித்தும் துவேஷம் மழிக்காத
துறவிகள் பலர் இருக்கும்போது
சாவிகொடுத்து சாவாட்டம் பார்க்கும்
அயல் அரசர் இருக்கும்போது
எங்கிருந்து தீர்வு வரும்?

நம் ராமனுக்கு அவன் மணமகள்
எம் மண்மகள் எப்படிக் கிடைப்பாள்?

இந்தப்போர் ஒடுக்கியும் ஒடுக்க முடியாப்போர்!
ஒடுங்கினால் மடங்கிப் போகும்
எம் மானம்,மரபு!

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

சற்று மாற்றிப்பார்ப்போம்
போர் என்றோ பொசுங்கிப் போகலாம்
போர் புரிவோர் பொடிப் பொடியாகலாம்
விதையாய் வீழ்ந்து வெந்துமடியலாம்
போர் ஒடுங்கிப் பொய்யாய்ப் போகலாம்
ஆயின் உரிமைப் போரிதற்கு உதிர்ந்ததனால்
எமது புகழ் ஒடுங்காது!
ஒங்குமிங்கு!

போரினின்று ஒதுங்காமல்
போரிதனை ஒடுக்காமல்
பதுங்கினாலும் பின் பாய்ந்து
இலக்குகளை எட்டுவதே
இன்றைய எம் முடிவு!
இதனாலேயே கிட்டக்கூடும் நாளைய விடிவு!

நம் நவீன ராமனுக்கு
வசிட்டர் இன்றிருந்தால்
சொல்லியிருப்பார் அதனையே

இனியெல்லாம் அவன் கையில்!
போர் ஒடுங்கும்! புகழ் ஒடுங்காது!

காலங்கடந்தும் கம்பவரி
மீண்டும் மீளவும் தந்து நிற்கும் மிடுக்கு இது!

காலம் மாறினாலும்
கவிக் கோலம் மாறி நின்று
கூறி நிற்கும் பொருளை மீட்டிப் பார்த்தேன்

வழுவிருப்பின் பொறுப்பீர்!
மனதினுள்ளே மறுப்பீர்!

Post a Comment

12Comments

Please Select Embedded Mode To show the Comment System.*