ஜெயச்சந்திரன் காலமானார்...
நேற்றிரவு (9) ஒரு ஆவணக் கடிதம் தட்டச்சும் நேரம் சித்திரை நிலவு பாட்டுக் கேட்கவேண்டும் போல தோன்றியது.
மனைவியிடம் "ரஹ்மான் இழைச்சு இழைச்சு இப்படியொரு பாட்டை இசைமைக்க இந்த ரெண்டும் ஆடும் ஆட்டம்" என்று சத்யராஜ்- சுகன்யாவின் ஆட்டத்தைக் காண்பித்து அந்த tabஇலிருந்து அடுத்ததுக்கு மாறும்போது தான் தற்செயலாக ஓர் இணையப் பக்கத்தில் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தி பார்த்தேன்.
ஒரு கலவையாக..
ராசாத்தி ஒன்ன, கொல்லையிலே, கத்தாழங் காட்டு வழி, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..
இதெல்லாம் தாண்டி சின்ன வயதிலே உருகி உருகி ரசித்த, எம் தலைவனுக்காக பாடப்பட்ட "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" பாட்டையும் பாடியவர் இவர் தான்.
அதனால் மனதில் ஒரு தனி இடம்.
என்ன மனிதர் அய்யா என்று நான் வியந்த கலைஞரில் ஒருவர் இவர் !
அத்தனை எளிமையும் மிக வெளிப்படையும்.
2002இல் சென்னையில் இவரை நானும் நண்பர் பரணியும் சந்தித்த ஒரு குட்டிச்சந்திப்பில், இலங்கையில் இவரை அழைத்து ஒரு நிகழ்ச்சி செய்வதாகக் கேட்கிறோம்.
"அப்போ நான் பாடிய பாட்டை இப்ப கூட கேட்கிறாங்களா?" என்று கொஞ்சம் வேடிக்கையாகக் கேட்டார்.
எப்போதும் மனது மறக்காத பாடல்களை நினைவுபடுத்தியபோது "ஆமால்ல, சிலோன் ரசிகர்களுக்கு இப்படி பாட்டுன்னா போதுமே" என்று சிலாகித்தவர் பின் மௌனமாகி சிந்தனை வயப்பட்டார். சில வினாடி மௌனத்துக்குப் பின் பெருமூச்சோடு
"மேடை நிகழ்ச்சி எல்லாம் வேண்டாமே, நான் அன்போடு கேட்டேன்னு சொல்லுங்க" என்று முடித்துக்கொண்டார்.
அடுத்த நாள் மறவாத நினைவுகளைப் பேட்டியொன்றில் பதிந்துகொண்டேன். (சூரியனில் அந்நாட்களில் ஒலிபரப்பானது)
தனக்கு இரண்டாம் சுற்றை தமிழில் வழங்கிய ரஹ்மான் பற்றி அன்போடு நினைவுபடுத்தியவர், அதன் பின் வேறு பல இசையமைப்பாளர்கள் அழைத்திருந்தாலும் இளையராஜாவின் இசையில் பாடவில்லை என்பதை சின்னச் சிரிப்போடும் ஒரு ஏக்கத்தோடும் சொல்லியிருந்தார்.
(கிழக்குச் சீமையிலேக்குப் பிறகு பொன் விலங்கு படத்தில் மட்டும் பாடியிருந்தார் இளையராஜாவுக்கு)
கொல்லையிலே, சொல்லாமலே யார் பார்த்தது ஆகியன என் பிடித்த பாடல்களில் சில என்று சொல்லவும் "அந்தக் காலத்தில தாஸ் அண்ணா (KJ Yesudas) பாட்டுகள்னு தான் என்னோட பல பாட்டை நினைச்சிருக்கிறாங்க"என்றார் சிரித்துக்கொண்டே.
உண்மை தான், அதனால் தான் தமிழில் வாய்ப்புக்கள் குறைந்தனவோ?ஆனாலும் யேசுதாஸ் அவர்களை விடத் திருத்தமான தமிழும் கொஞ்சம் அதிகமான அழுத்தம் கொண்ட கம்பீரமும் இவர் குரலை எனக்குத் தனியாக அடையாளப்படுத்தித் தந்திருக்கும்.
சித்திரைச் செவ்வானம்
வசந்த கால நதிகளிலே
பொன்னென்ன பூவென்ன
பூவண்ணம் போல மின்னும்
தாலாட்டுதே வானம்
என்று அந்தக் காலம் முதல்
ராசாத்தி ஒன்ன, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், புல்லைக்கூட, பூவ எடுத்து, கஸ்தூரி மான் குட்டியோ, என் மனசப் பறிகொடுத்து என்று விஜயகாந்துக்கு இவர் பாடிய பாடல்கள் எல்லாம் 




அதிலும் ராசாத்தி உன்ன இசைஞானியின் மிகச்சிறந்த முத்துக்களில் ஒன்று.
அதனாலோ என்னவோ வானத்தைப்போல, சொக்கத்தங்கம் என்று விஜயகாந்தின் கடைசிக்காலப் படங்களிலும் பாட அழைக்கப்பட்டார் போலும்.
பலரும் அரிதாக ரசிக்கும் ஜெயச்சந்திரனின் சில பாடல்கள் என் play listகளில் தனியிடத்தைப் பிடித்தவை
கேட்டுப்பாருங்கள்..
ஏகாந்தத்தில் ரசிக்க எந்தக் காலத்திலும் தனியானவை.
இவை எல்லாவற்றிலும் இருக்கும் ஒற்றுமை - ஜெயச்சந்திரனின் குரல் கொடுக்கும் தனித்துவம்.
தமிழ் இவரோடு சேர்ந்து உலா வரும் தனிச்சுவை.
சொல்லாமலே யார் பார்த்தது
கொல்லையிலே தென்னை வைத்து - இது பற்றிக் கதை கதையாகச் சொல்லலாம்
பூவனத்தில் - தம்பி
கனவெல்லாம் பலிக்குதே - கிரீடம்
கடலம்மா - நிலாவே வா (சித்திரச் செவ்வானம் பாட்டில் கொஞ்சம் எடுத்ததாக வித்யாசாகர் சொல்லியிருந்தார்)
என் மேல் விழுந்த
ஊரெல்லாம் சாமியாக
ராசாத்தி உன்ன
புல்லைக் கூட
காத்திருந்து
ஞாபகம் வந்தவை இவை.
இவற்றோடு இன்று மட்டும் பல தடவை கேட்டுவிட்ட “பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே, மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே”
80 வயதுவரை நிறைவாக வாழ்ந்து, இன்னும் இசையால் நிறைந்திருப்பீர்கள் ஐயா.
பதிவிடப்பட்டது - ஜனவரி 11 இரவு