லிங்கா - Lingaa

ARV Loshan
3

ரஜினிக்கு எனது அப்பாவின் வயது..

அப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு). 

வீட்டில் வந்து படி படியாக ​ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில்.



இப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார்.

இளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது இப்போது அப்பாவால் முடியாது.

நாம் இப்போது பார்க்கும் T20 கிரிக்கெட் போட்டிகள் அப்பாவின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை.



IPL போட்டிகள், இப்போதைய கால்பந்து போட்டிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை.

கேட்டால் "too many matches, too many players, too many changes.. all way too much" என்பார்.



சின்ன வயதில் நான் வாசித்த மாயாவி கொமிக்ஸ் இப்போது பழசு. கதைகள் பழசு. ஆனால் இப்போதும் மாயாவி புதுசா கதையா வந்தாலும் மாயாவி அப்படியே தான் இருக்கப் போகிறார்.



Spider Man போன்ற சாகசப் பாத்திரங்களுக்கும் அதே மாதிரி நிலை தான்.



இதைத் தான் லிங்கா படத்தில் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்கச் சொல்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் / பக்தர்கள்.



அப்படி பார்த்தால் கோச்சடையான் (அது குறைப் பிரசவம்.. அல்ல அதைவிட மோசமான கொடும் அவஸ்தை படைப்பு)போல தான் ரஜினியின் இனி வரும் எல்லாப் படங்களும் வரவேண்டும்.



ரஜினியின் ஸ்டைலும் அந்த charismaவும் இன்னொருவருக்கு வராது..
என்றும் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்ற வாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் பெரிதாக பேசப்படுவதற்கு என்ன காரணம் என்பது பாபா தோல்வி முதல் ஆராயப்படவேண்டியவை.


ரஜினி என்ற மாபெரும் பிம்பம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் புஸ் தான் என்பதை பாபாவும் காட்டியது, பின்னர் அண்மையில் கோச்சடையானும் அதே கதை தான்.

லிங்கா பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோதே, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் ஏற்பட்டமைக்கான காரணங்கள்...
4 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் ரஜினியாக நடிக்கிறார் (ரா வன் - சிட்டி, கோச்சடையான் கார்ட்டூன் என்பதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தீனியே அல்ல)
ரஜினியின் மிகப்பெரிய இரு படங்களைத் தந்த K.S.ரவிக்குமார் இயக்குகிறார் எனும்போது குறி தப்பாது.
ரவிக்குமாரைப் போல விரைவாகவும், விறுவிறுப்பாகவும் பெரிய ஸ்டார்களை வைத்து திரைப்படங்களைத் தரக்கூடியவர்கள் பெரியளவில் யாரும் கிடையாது.

இத்தனை எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் படத்தை இயக்கிய K.S.ரவிக்குமார், நடித்த ரஜினி ஆகிய இருவருமே கதை, திரைக்கதை படமாக்கல் என்று சகல விஷயங்களிலும் பொறுப்பாக இருந்திருக்க வேண்டாமா?

ரஜினிக்காக படம் பார்க்க வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் எதை, எப்படி கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்று ஒரு மிதப்பு எண்ணம்? அல்லது ரஜினி என்ற மாபெரும் கவர்ச்சிக் காந்தம் இருப்பதால் கதை என்ற வஸ்து ஒரு பொருட்டேயல்ல என்ற ஒரு நினைப்பா?

எந்தவொரு புதுமையும் இல்லாத, 'கத்தி' பாணி கதை..
கத்தி கோபியின் கதை கூட பரவாயில்லை, கொஞ்சம் திருப்பம், தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை என்று கொஞ்சம் புதுசாய்ப் பேசியிருந்தது.
லிங்காவிலே அணை கட்டும் கதை.
இரண்டாவது ரஜினி இல்லாமலேயே லிங்கேஸ்வரரைக் கொண்டே கட்டி முடித்திருக்கலாம்.
ரஜினி என்பதால் இரண்டாவது லிங்கா தேவைப்பட்டிருக்கிறார்.

முத்து, அருணாச்சலம், சிவாஜி போலவே பணத்தையும் சொத்தையும் மக்களுக்காகவே தானம் செய்து தியாகம் செய்யும் ரஜினி.

நல்லவனாக, மிக நல்லவனாக இருந்து கெட்ட பெயர் வாங்கி, சுட்டாலும் சங்கு வெண்மை தான் என்று லேட்டா மக்களுக்குத் தெரியவரும் ரொம்ப.... நல்லவரு பாத்திரம்.

எத்தனை படங்களில் ரஜினி இப்படியே மாறாத டெம்பிளேட்டில் நடித்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுவாங்களாம்.
ரஜினியை விட ரொம்பபபப நல்லவங்கப்பா நாங்க என்று நினைத்திருக்கிறார் KSR.

அணையைப் போலவே ரொம்பப் பழசான, எங்கேயும் திருப்பங்கள் என்று இல்லாத, இலகுவாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை.
ரஜினிக்கு இருக்கிற மாஸ், சந்தானத்தின் கலகலா, வழமையான ரவிக்குமார் டச்சுகள் ஆக்கியவற்றை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று ஒரு அசாத்திய நம்பிக்கையோடு ஆரம்பித்த K.S.ரவிக்குமார், வழமையை விட அவசரமாக படமாக்கிய விதத்தில் தான் தனது வழமையான ரஜினி பாணி வெற்றியிலிருந்து சறுக்கிவிட்டார் என்று கருதுகிறேன்.

(வசூலில் கோடி என்று வருமானம் பற்றி பேசி, ரஜினி மாஸ் என்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ரஜினி பக்தர்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் ஒரு மொத்த package ஆக லிங்கா நல்லா இருக்கு என்று.)



ரஜினியின் வயதும் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மீண்டவர் என்பதாலும் அவரை நோகாமல் நொங்கு எடுக்கப் பார்த்து அதுவே படத்தைப் பங்கம் பண்ணியதோ?

ஆனால் தன் மீது தயாரிப்பாளர், ரசிகர், இயக்குனர் என்று அனைவரும் வைத்த நம்பிக்கையைக் குறைவிடாமல் முதல் காட்சி அறிமுகத்தின் கலக்கல், பிரம்மாண்ட அறிமுகம் முதல், ஒவ்வொரு பிரேமில்வரும் தனக்கேயான ஸ்டைல்களில் கலக்கி 
"யென்னடா ராஸ்கல்ஸ், சூப்பர் ஸ்டார் எப்பவும் நான் தாண்டா.. ஹா ஹா ஹா " என்று ஆணி அடித்து நிற்கிறார் இந்த 64 வயது youngster.
(இப்ப சொல்லுங்கடா - அதான் சூப்பர் ஸ்டார் கெத்து )

ஓ நண்பா, மோனா பாடல்களிலும், ராஜாவாக, கலெக்டராக வரும் காட்சிகளிலும் பொருத்தமான ஆடைகள், கம்பீரம் என்று ஸ்டைல் அபாரம்.

இளைய ரஜினி, சந்தானம், கருணாகரன் குழுவோடு திரிகையிலும், அனுஷ்காவோடு லூட்டி அடிக்கையிலும் வயசு உறுத்துவதோடு ஏதோ  பொருந்தவில்லை.

அதிலும் ரஜினி - அனுஷ்கா நெக்லஸ் கொள்ளை காட்சிகளில் இரட்டை அர்த்த உரையாடல்கள் வேறு.
ஐயா ரஜினி இது தான் பெரிய ஆபாசம் ஐயா. அடுக்குமா?
(இங்கே நான் சொல்லவேண்டி இருக்கு - எட்டாம் எட்டு இப்போது நீங்கள்)

ரஜினியின் பாட்ஷா இன்று வரை ரஜினியின் the Best என்று நாம் சொல்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வில்லன் ரகுவரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
பாட்ஷா ஞாபகம் வந்தால் மார்க் ஆண்டனியும் ஞாபகம் வந்தே ஆகணுமே..

அதேபோல படையப்பா - நீலாம்பரி, சிவாஜி - ஆதிகேசவன் , எந்திரன் (எந்திரன் படமாக என்னைத் திருப்தி செய்யாவிட்டாலும் 'மே....' சொல்லும் வில்லன் ரஜினி சொல்லி வேலையில்லை)

லிங்காவில் இது(வும்) மிஸ்ஸிங்.
உப்புச்சப்பற்ற இரு வில்லன்கள். இந்த இருவரையும் சமாளிக்க சந்தானமும் இளவரசுவும் போதுமே..
ஜெகபதி பாபுவும் அந்த வெள்ளைக்காரனும் முன்னைய MGR, சிவாஜி பட வில்லன்களின் நம்பியார்களை, அசோகன்களை ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறார்கள்.

ரஜினியைப் போலவே இந்தப் படத்தைக் கொஞ்சமாவது தாங்கும் இன்னொருவர் சந்தானம் மட்டுமே.

ரஜினியும் சந்தானமும் கலக்கல் இணைப்பு.
சிவாஜியில் விவேக், சந்திரமுகியில் வடிவேலுவுக்குப் 
ரஜினி, ரவிக்குமார் முதல் அத்தனை பேருக்குமே நெத்தியடி நக்கல்.
எப்பவுமே படங்களின் கடைசியில் வந்து கலகலத்து செல்லும் இயக்குனர் K.S.ரவிக்குமாருக்கே "finishing குமார்" என்று பஞ்ச் வைக்குமிடம் கலக்கல்.

ரஜினி தலை கோதும் ஸ்டைலையும் அடிக்கடி வாரிவிடுகிறார்.
கலாய்க்கும் இடங்களிலும் முத்துமுதல் KSR செய்துவரும் ரஜினிக்கான அரசியல் தூவல்கள் ஆங்காங்கே..

"நீ வேணாம் வேணாம்னாலும் ஜனங்க விடமாட்டாங்க போல இருக்கே.. ஊரே மரியாதை கொடுக்குதே"
ஒரு சாம்பிள்.

"பறக்காஸ்" சந்தானத்தின் புண்ணியத்தில் இப்போது செம ஹிட்.
Byeக்குப் பதிலாக இனி 'பறக்காஸ்' பரவலாகப் பயன்படுத்தப்படும்.
ஆனால் இதை வைத்தே 'லிங்கா'வை கலாய்க்கும் கூட்டமும் அதிகம்.

ஆரம்பத்திலேயே "ஜெயிலுக்குப் போறதுன்னா எங்களையும் கூட்டிட்டு வந்திர்றே, ஜெர்மனி போறதுன்னா மட்டும் தனியாவே போயிடுறே" என்று ஆரம்பிக்கும் சந்தானம், வயது இடைவெளியினால் "நன்பேண்டா" என்பதில் டா வை சொல்லாமல் நிறுத்த, ரஜினி அதை சொல்வது கலகலப்பு.

இயக்குனர் சறுக்கும் இன்னும் ஒரு முக்கிய இடம் கதாநாயகிகள்.
வயதேறிய ரஜினி என்பதால் இந்தத் தெரிவுகள் என்று தெரியும்.
ஆனால் ரஜினியை விட வயது கூடியவராக அனுஷ்கா தெரிகிறார்.
(இந்த இடத்தில் அதான் நம்ம தலைவர் என்று கோரஸ் வரவேண்டும்)
அனுஷ்காவுக்கு ரஜினி மேல் காதல் வரும் காட்சிகள் சந்தானத்தின் காமெடியை விட காமெடி.
பயங்கர நாடகத் தன்மை.

இதை விட தாத்தா ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாட்டி காதல் பண்டைய கால மன்னர் பாணி லவ்வு.
ஆனால் சோனாக்ஷிக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

உருக வைக்க, ரஜினி பற்றி உருக, போற்றிப் புகழ, புலம்ப என்று ஏராளம் நட்சத்திரங்கள்.. எல்லாம் கிழடு கட்டைகள்..
மீண்டும் 'கத்தி' ஞாபகம்.
விஜயகுமார், ராதாரவி,சுந்தர்ராஜன்,இளவரசு, மனோபாலா இவர்கள் எல்லாம் போதாமல் பாவம் அந்த அற்புத இயக்குனர் K.விஸ்வநாதன் வேறு..
ஒருவேளை ரஜினியின் வயசை இளமையாகக் காட்ட இப்படியொரு ஐடியாவோ?


லிங்காவிலே இருக்கும் குறைகளுக்கும் அரைகுறைத் தன்மைக்கும் என்ன தான் இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுப்புக் கூறுகின்ற அவஸ்தை இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டம், முக்கியமாக அணைக்கட்டு அமைக்கப்படும் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.

அதிலும் இத்தனை விரைவாக படமாக்கியதும் இந்த விடயத்தில் பாராட்டப்படவேண்டியது தான்.

அணை கட்டும் பாடல் ரஹ்மானாலும் ரவியினாலும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவிலும் நிற்கிறது.

A.R.ரஹ்மானையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் படம் முழுதும் தேடவேண்டி இருக்கிறது.
இயக்குனர் ரவிக்குமாரின் அவசர உழைப்பு இசைப்புயலின் நிதானமான பின்னணி இசையை இல்லாமல் செய்துவிட, அவசரமாக அடித்து அப்படி இப்படி போட்டிருக்கிறார்.

அணை கட்ட வரும் சவால்கள்,அணை கட்டிய பிறகு வரும் துன்பங்களெல்லாம் ஒரு நாடகப் பாணியில் சவசவ என்று இழுக்க, கட்டிய அணை திறந்து, தாத்தா ரஜினியை நல்லவர் என்று ஊரும் ஏற்று கோவிலும் திறந்தபிறகு இனி என்னடா படத்தில் இருக்கு என்று நாம் கேட்போம் என்று தான் ஆரம்பத்திலேயே வைத்தார் இயக்குனர் ட்விஸ்ட்டு (என்னமோ போங்க KSR )

பற்றைகளும் இருளும் சேர்ந்து கிடக்கும் அந்தப் பழைய கோவிலில் ஒரு இத்தனூண்டு உருத்திராட்சக் கொட்டையை எடுக்க சூப்பர் ஸ்டாரால் தான் முடியும்.
(இங்கே மீண்டும் தலைவர்டா , ரஜினி rocks வேண்டும்)

கடைசியாக ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வந்த அதே மாதிரி ஒரு சப்பை கிளைமாக்ஸ்.
கதாநாயகியை வில்லன் கடத்துவான், வெடிகுண்டை சேர்த்துக் கட்டுவான், கடைசி செக்கனில் குண்டை இலக்கு மாற்றி ஹீரோ ஊரையும் (கொஞ்சம் பெரிய படமென்றால் நாட்டையும்) கதாநாயகியையும் சேர்த்துக் காப்பாற்றுவார்.

அனைவருமே கிழித்து தொங்கப்போட்ட பலூன், மோட்டர் பைக் சாகசம்.
ஸ்ஸப்பா...

ரஜினியின் பாபா பட்டம் magic , ரவியின் ஆதவன் ஹெலி சாகசம் இரண்டையும் மிஞ்சி இருவரும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் நிகழ்த்தவேண்டும் என்று முடிவு கட்டியிருப்பார்கள் போலும்.

லிங்குசாமியும் கண்ணுக்கு முன்னால் வந்து போனார்.

பரவாயில்லை K.S.ரவிக்குமாருக்கும் திருஷ்டிப்பொட்டு வேண்டும் தானே?

முதலில் S.P.முத்துராமன், பின்னர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னர் K.S.ரவிக்குமார், இப்போது ஷங்கர் இப்படி ரஜினியை அந்தந்தக் கால trendகளுக்கு ஏற்றது போல பயன்படுத்துவதும் இந்த 'லிங்கா' சறுக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.

லிங்கா ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தியுள்ளது என்று ரஜினி பக்தர்கள்/ வெறியர்கள் (மட்டும்) சொல்வார்கள்.
நம்பாதீர்கள்.
ரஜினியை ரஜினியாக ரசிக்க ரஜினி ரசிகராக இல்லாத என் போன்றோருக்கும் பிடிக்கும்..
இதனால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் வரும்போதும், ரஜினியின் பஞ்ச் ஸ்டைலாக வரும்போதும் நாமும் விசில் அடிக்காத குறையாக குதூகலிக்கிறோம்.
எனவே ரஜினி கலக்கல்,மாஸ்.. படம் மட்டும் வாய்க்கவில்லை என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு.

அவர்கள் பாவம், இப்போது இளைய தளபதி மற்றும் தல ரசிகர்களையும் சமாளித்து மோதவேண்டி இருக்கிறதே..
இப்படித் தான் சொல்லவேண்டிய ஒரு கட்டாயம்.
ஆனால், அடி மனதில் அழுது கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.

நமக்கு ரொம்ப நெருங்கிய ரஜினி ரசிகர்கள் சிலரின் புலம்பல்கள் இதற்கு மிக ஆணித்தரமான சாட்சி.

ரஜினியால் அவர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கலாம்; ஆனால் ஒரு total package ஆக படம் failure.
இந்தியா தோல்வி; கோளி சதம் என்பது போல தான் இது..
கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ள மட்டுமே..

அடுத்த ரஜினி படம் வரும்வரை (இனியும் நடித்தால் - ரஜினியின் மாஸ் போனதென்று பொங்கவேண்டாம் ரஜினி வால்ஸ்... அவரது வயதும் உடல் இயக்கமும் அப்படி) காத்திருக்கட்டும் ரசிகர்கள்..

நூறு கோடி வசூல் என்பதால் படம் சூப்பர் என்று சொல்வதும் சிரிப்பைத் தரும் ஒரு வாதமாகும்.
'ரஜினி' படம் என்பதால் இதெல்லாம் படத்துக்கு முன்னதான வியாபாரம் & எப்படித் தான் படம் இருந்தாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்லும் கூட்டத்துக்காக டிக்கெட்டுக்கள் இன்னும் விற்கும்.
இன்னும் கோடிகள் புரளலாம்.
அதே போல கோடிகளைக் கொட்டிப் பார்த்த கோடிக் கணக்கானோர் "குப்பை, மொக்கை, அறுவை. பிளேடு, சப்பா" என்று  சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும்,WHATS APP Chatsஇலும் கரித்துக்கொட்டப் போகிறார்கள் என்பதும் உறுதியே.


லிங்கா - சூப்பர் ஸ்டார் கட்டிய அணை KSR பலூனில் வெடிச்சுப் போச்சு 

----------------------------------------
ரஜினி பற்றிய சில பதிவுகள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Special சூரிய ராகங்கள் 2013.

சூப்பர் ஸ்டார் சூரிய ராகங்கள் - Super Star Rajini Birthday Special Sooriya Raagangal 2014






Post a Comment

3Comments

Please Select Embedded Mode To show the Comment System.*