சிறுவயதிலிருந்து வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு.. அதிலும் பாடசாலைக் காலத்தில் ராணி கொமிக்ஸ், முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ் என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை.. முகமூடி மாயாவி, ஜேம்ஸ் பொன்ட் , இரும்புக்கை மாயாவி, டெக்ஸ் வில்லர் இவர்கள் எல்லாரும் எனக்கான கற்பனை உலகத்தின் நாயகர்கள்..
ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத காலத்தில் இவர்கள் கொமிக்ஸ் புத்தகங்கள் மூலமாக தமிழ் பேசுவது எனக்குத் தந்த பரவசம் தனியானது.
பின்னர் ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்கள், படங்கள், இணையம் மூலமான கொமிக்ஸ் வாசிப்பு, இதர வாசிப்புக்கள் என்று வயதுக்கும் வசதிக்கும் ஏற்ப வாசிப்பு ரசனை கொஞ்சம் மாற்றம் கண்டுகொண்டே இருந்தாலும், இன்றும் கொமிக்ஸ் புத்தகங்களை எங்கேயாவது கண்டால் விலையைப் பார்க்காமல் வாங்கிக்குவிப்பதும் எப்படியாவது நேரத்தை எடுத்து வாசிப்பதும் தொடர்கிறது..
ஆனால் அண்மைக்கால தமிழ் கொமிக்ஸ் புத்தகங்களின் வருகை குறைந்தது மிக மனவருத்தமே..
அப்படியும் கிடைக்கிற பழைய கொமிக்ஸ் புத்தகங்கள் (வாசித்த பழைய புத்தகங்களை வாங்கி ,விற்கும் கடைகளில்), இல்லாவிட்டால் ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை வெளிவரும் கொமிக்ஸ் புத்தகங்கங்களைக் கட்டாக வாங்கிக்கொண்டு போய் வீட்டில் குவித்து விடுவேன்.
இப்படித்தான் அண்மையில் வெள்ளவத்தையில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தவேளையில் தற்செயலாகக் கண்ணில் பளபளவென்று அகப்பட்ட ஒரு புத்தகம் வாங்கு வாங்கு என்று என்னைக் கூப்பிட்டது..
'தலைவாங்கிக் குரங்கு'
அட முன்பு இதை வாசித்திருக்கிறேனே என்று நினைத்தபோது உள்ளே தட்டிப் பார்த்தால் மீண்டும் முன்னைய பிரபலமான டெக்ஸ் வில்லர் மற்றும் இதர சாகச ஹீரோக்களின் கொமிக்ஸ் கதைகளை வெளியிடப் போவதான அறிவிப்போடும் பளபள பக்கங்களோடும் வெளிவந்திருந்த தலைவாங்கிக் குரங்கு என் மனம் வாங்கிக்கொண்டது.
நான் அதை வாங்கிக்கொண்டேன்.
அதை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும், நீண்ட காலத்தின் பின்னர் நம்ம டெக்ஸ் வில்லரை சந்திக்கொன்றோம் என்ற த்ரில்லும் மட்டுமே அந்த நேரம் இருந்ததால் எவ்வளவு பணம் கொடுத்தேன்; எவ்வளவு மீதி தந்தார்கள் என்றெல்லாம் கவனிக்கவே இல்லை.
வீட்டுக்கு வந்து ஒரே மூச்சாக வாசித்து முடித்து விட்டு, ஆசிரியரின் முன்னுரை, பின்னே சில பக்கங்கள் நீண்டிருந்த இனி வரும் இதழ்கள் பற்றிய விளம்பரங்கள் எல்லாம் வாசித்துவிட்டுத் தான் விலையைப் பார்த்தேன்..
இலங்கை விலை 350 ரூபாயாம்.. அம்மாடி..
பளபள அட்டை, தரமான பக்கங்கள் இதற்குத் தான் அந்த விலை என்று புரிகிறது. (அத்தோடு இந்திய சஞ்சிகைகள், புத்தகங்களுக்கு இலங்கையில் ஏற்றப்பட்ட வரிகளும் சேர்ந்து இருக்கு)
ஆனால் விலையை நினைத்து வயிறு எரியாத அளவுக்கு 'தலை வாங்கிக் குரங்கு' சுவாரஸ்யமாக இருந்தது.
முன்பிருந்தே டெக்ஸ் வில்லர் எனக்கு மிகப்பிடித்த ஒரு Cowboy ஹீரோ. இதனால் இன்னும் ஒரு விசேடம் இந்தக் கதையில்.. தமிழில் வெளிவந்த டெக்ஸின் முதல் கொமிக்ஸ் இது தானாம்.
மர்மக் கொலைகள்.. குதிரையில் வரும் கொலைகார மனிதக் குரங்கு.. வெறியோடு அலையும் வேற்று இனப் பெண்..
துணிச்சலோடு துப்பறியும் நம்ம ஹீரோ டெக்ஸ்.. இவை போதாதா?
துணிச்சலோடு துப்பறியும் நம்ம ஹீரோ டெக்ஸ்.. இவை போதாதா?
ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை விட
அதிக விறுவிறுப்பைத் தருகிறது - தலை வாங்கிக் குரங்கு
வசனப் பிரயோகங்கள் சிறுவயதில் ரசித்தவற்றை ஞாபகப்படுத்தின..
படங்களிலும் மாற்றமில்லை என்பதால் அப்படியே எங்களை
சிறுவயதுக்கு அழைத்துச் செல்கிறது த.வா.கு.
சிறுவயதுக்கு அழைத்துச் செல்கிறது த.வா.கு.
இலங்கையில் அநேகமான புத்தகக் கடைகளில் இதனை இப்போது வாங்கலாம் என்று என்னைப் போலவே கொமிக்ஸ் பிரியர்களான நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.
பெயரே எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது..