இலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற்றியும் விருதும்

ARV Loshan
20

நேற்றைய நாள் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
இந்த ஆண்டின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே நான் ஆதரிக்கும் அணிகளுக்கு வெற்றியாக முடிந்தது தான் இந்த மகிழ்ச்சிக்கான காரணம்.

முதலில் ஆஸ்திரேலியா இந்தியாவை உருட்டித் தள்ளியது. அடுத்து இலங்கை தென் ஆபிரிக்காவை சுருட்டி எடுத்தது. இரண்டுமே ஒரு நாள் மீதம் இருக்கப் பெற்ற வெற்றிகள்.

நேற்று இலங்கைக்கு தென் ஆபிரிக்க மண்ணில் முதலாவது டெஸ்ட் வெற்றி..



இது உண்மையில் இந்த வருடத்தின் இறுதி நாட்களில் உலக கிரிக்கெட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு முடிவு என்று சொன்னால் யாருமே மறுப்பதற்கில்லை.
2011 முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் அடி வாங்கிவந்த இலங்கை அணிக்கு பிறக்க இருக்கின்ற புதிய வருடத்துக்கான நம்பிக்கையை நேற்றைய டேர்பன் டெஸ்ட் வெற்றி வழங்கி இருக்கின்றது.

ஒரு விறுவிறுப்பான படத்தில் முக்கிய கட்டத்தில் ஒரே பாட்டில் ஒரு ஹீரோ ஏழையாக இருந்து பணக்காரனாக மாறுவாரே அதே போல தான் இலங்கை கிரிக்கெட்டின் நிலையம்.....

முரளிதரனின் டெஸ்ட் ஓய்வின் பிறகு பதினைந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை சுவைக்க முடியாமல் (இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளிலும் கூட என்பது மேலதிக பரிதாப அம்சம்) தவித்து வாத இலங்கை அணிக்கு முரளியின் பிரதியீடாக ஓரளவாவது நம்பிக்கை தந்த ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சு (போட்டியில் 128 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள்) வெற்றியைத் தந்திருப்பது இன்னொரு விசேட அம்சம்.

தொடர்ச்சியான டெஸ்ட் தோல்விகள், உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் இறுதிப் போட்டித் தோல்வி, அதைத் தொடர்ந்த முரளிதரன், லசித் மாலிங்கவின் ஓய்வுகள், குமார் சங்கக்காரவின் தலைமைப் பதவி விலகல், இடைக்கால கிரிக்கெட் சபையின் நிர்வாக சிக்கல்கள், இழுபறி, உஅகக் கிண்ணத்தை நடத்திய பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு, நஷ்டங்கள், கடன் தொல்லைகள், கிரிக்கெட் வீரர்களுக்கே எட்டு மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலை, தேர்வுக் குழப்பங்கள் என்று தொட்டதெல்லாம் துரதிர்ஷ்டம் என்ற நிலையில் தான் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி எழ முடியாத அளவுக்கு மரண அடி வாங்கி இருந்தது.


இலங்கை அணியினால் இப்போதைக்கு ஒரு டெஸ்ட் வெற்றியைப் பற்றி அதுவும் வெளிநாட்டு மண்ணில் அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், யோசிக்கவே முடியாத நிலையில் தென்னாபிரிக்க அணியைப் பந்தாடி நான்கு நாட்களுக்குள் உருட்டுவது என்றால் பெரிய விஷயம் தானே?

இலங்கை அணியின் தற்போதைய பலவீனமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு விக்கெட்டுக்களை எடுத்து ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது நடக்கிற காரியமா என்று கண்ணை மூடிக் கொண்டு இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிப்பவரும் சந்தேகப்பட்ட நிலையில் இலங்கையின் பந்துவீச்சாளர்களால் இந்த வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது முக்கியமானது.



என்ன தான் சமரவீர, சங்கக்கார ஆகியோர் சதங்களைஅடித்து இருந்தாலும், சந்திமால் தனது அறிமுகப் போட்டியில் இரட்டை அரைச் சதங்களைப் பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையோடும், திட்டத்தோடும் செயற்பட்டது தான் நேற்றைய அபாரமான டெஸ்ட் வெற்றி.

ஹேரத்தின் 9 விக்கெட்டுக்கள், வெலகேதரவின் முதலாம் இன்னிங்க்ஸ் ஐந்து விக்கெட் பெறுதி இவை மட்டுமல்லாமல் தேவையான நேரங்களில் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பவுன்சர் பந்துகளால் மிரட்டியதும் முக்கியமானது.

ஒரு மாதிரியாக சரித்திரம் படித்தாயிற்று.. பல சாதனைகளும் வேறு..

ஆனால் இப்போது கேள்வி, இந்த உத்வேகத்தை அடுத்த டெஸ்ட் போட்டிக்கும் கொண்டு செல்ல முடியுமா? ஒரு அரிய தொடர் வெற்றியைத் தமதாக்க முடியுமா?

ரொம்ப ஓவரான ஆசைன்னு யாரும் நினைக்கப்படாது.. காரணம் தென் ஆபிரிக்காவே இப்படித்தான்..  முதல் போட்டியில் அபாரமாக வெல்வதும் அடுத்த போட்டியில் மரண அடி வாங்குவதும்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இப்படித் தானே நடந்தது?  மிக விறுவிறுப்பான அத்தொடரில் மூன்றாவது போட்டி இடம்பெறாமல் போனது அநியாயம்.

தரப்படுத்தலில் மிகக் கீழே வீழ்ந்துள்ள ஒரு அணியான இலங்கையிடம் கிடைத்த தோல்வியை அடுத்து தென் ஆபிரிக்க முகாமுக்குள்ளே பெரிய குழப்பங்கள் +
கொஞ்ச நாளாகத் தொடர்ந்து தடுமாறி வரும் சில வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்த அழுத்தங்களை இலங்கை அணி பயன்படுத்திக் கொண்டால் தொடரும் வசமாகும்.

இலங்கை அணியின் நேற்றைய வெற்றிகள் பல புதிய சாதனைகளையும் மைல் கற்களையும் உருவாக்கியுள்ளது.

இது தென் ஆபிரிக்க மண்ணில் இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றி.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் பெறப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் வெற்றி.
வெளிநாடுகளில் இலங்கை பெற்ற ஒன்பதாவது டெஸ்ட் வெற்றி. (இதில் மூன்று சிம்பாப்வேயில்)

முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஐந்து தோல்விகளும், பத்து வெற்றி தோல்வியற்ற முடிவுகளுமே இலங்கைக்குக் கிடைத்திருந்தன.

தென் ஆபிரிக்காவுக்கு இந்த டேர்பன் மைதானம் மிகப் பேரும் துரதிர்ஷ்டம் வாய்ந்தது. இது இந்த மைதானத்தில் கண்ட நான்காவது தொடர்ச்சியான தோல்வி.
அத்துடன் சொந்த நாட்டில் நடைபெற்ற Boxing day டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி.


ரங்கன ஹேரத் இலங்கையின் தற்போதைய முதல் தர சுழல் பந்துவீச்சுத் தெரிவு. இதை அடிக்கடி நன் சொல்லி வந்திருக்கிறேன்.
மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.
தென் ஆபிரிக்காவில் இலங்கையர் ஒருவர் பெற்ற இரண்டாவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இது.
முதலாவது முரளி என்பதை சொல்லவும் வேண்டுமா?

அத்துடன் ஹெரத்தின் மிகச் சிறந்த போட்டிப் பெறுதியும் இதுவே.
இந்த சிறப்பான பந்துவீச்சோடு ஹேரத் தனது மிகச் சிறந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளார். இப்போது உலக டெஸ்ட் வரிசையில் ஏழாவது இடம்.

சமரவீர பெற்ற சதம் நீண்ட கால இடைவேளையின் பின் தென் ஆபிரிக்காவில் இலங்கையர் ஒருவர் பெற்ற சதம். ஹஷான் திலகரத்னவுக்குப் பின்.. (இலங்கையை அழைத்தால் தானே?)
சங்கக்காரவும் அந்தப் பட்டியலில் அடுத்த இன்னிங்க்சிலேயே சேர்ந்துகொண்டார்.

இதன் மூலம் சங்கா தனது டெஸ்ட் தரப்படுத்தல் முதலிடத்தைத் தொடர்ந்து தன் வசப்படுத்தி அடுத்த வருடத்தில் நுழைகிறார்.
ஆனால் இரண்டாம் இடத்தில் இருந்த ஜாக்ஸ் கல்லிஸ் இரு இன்னிங்க்சிலும் பெற்ற பூச்சியங்களோடு, நான்காம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளார்.

இது கல்லிசின் 149 டெஸ்ட் வரலாற்றில் முதல் இரட்டைப் பூச்சியங்கள் (pair).
சங்காவுடைய இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு முதல் இன்னிங்சில் பூச்சியமும், இரண்டாம் இன்னிங்சில் சதமும் பெற்றமை.
இலங்கையர் ஒருவர் இவ்வாறு பூச்சியமும் சதமும் பெற்ற எட்டாவது சந்தர்ப்பம் இது.

சமரவீரவும் இப்போது தரப்படுத்தலில் 13ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதலிலேயே இவரைத் தெரிவு செய்யாமல் விட்ட தேர்வாளர்களின் முகங்களில் டேர்பன் கரி ;)
இதேவேளை இன்னொரு விடயத்தையும் இங்கே சொல்லவேண்டும்...

வெற்றி டிவி யில் புது வருடத்தை முன்னிட்டு இடம்பெறும் பல விசேட தொகுப்பு, மீள் பார்வை நிகழ்ச்சிகளில் நானும் விளையாட்டுத் தொகுப்பு ஒன்றை வழங்குகிறேன்.

அதில் நான் குறிப்பிட்ட விடயம் - 2011ஆம் ஆண்டு புதிய, அறிமுக வீரர்களுக்கான ஆண்டு என்று,,

இந்த ஆண்டில் மட்டும் எட்டு வீரர்கள் தங்கள் அறிமுகப்போட்டியில் ஐந்து விக்கெட் பெறுதிகளைப் பெற்றிருந்தார்கள்.
வருடத்தின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் மேர்ஷன்ட் டீ லங்கேயும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்.

மற்றோர் அறிமுகம் தினேஷ் சந்திமால் இரட்டை அரைச் சதங்களுடன் தனது வருகையை அறிவித்துள்ளார். பாவம் பிரசன்னா ஜெயவர்த்தன. வயதும் காரணமாக இனி அமைய இளையவர் சந்திமால் இனி நிரந்தரமாகிவிடுவர்,
புதிய வருடம் இலங்கை அணிக்கு வெற்றிகரமான வருடமாகட்டும்.
ஆனால் அதற்கு தலைவர் டில்ஷான் துடுப்பாட்ட வீரராகவும் தன்னை வெளிப்படுத்தவேண்டும்.

-----------------
 மெல்பேர்னில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஒரு அடி கொடுத்து நிதர்சனத்தை மீண்டும் காட்டியுள்ளது.



இந்தியா எவ்வளவு தான் அனுபவம் வாய்ந்த, பலமான, பயங்கரமான இப்படி இத்யாதி இத்யாதி புகழ்பெற்ற துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டின் ஆடுகளங்களில் அப்பாவிப் பூனைக்குட்டிகள் போல சுருண்டுவிடும் என்பது வரலாறு..

மீண்டும் மெல்பேர்னில் இது நிரூபணம்.

சச்சினின் நூறாவது சதத்துக்கான தடுமாற்றத்துடனான தேடல் தொடர்கிறது. இரு இன்னின்க்சிலுமே வேகமாகவும், நம்பிக்கையாகவும் ஆரம்பித்து தடுமாறி சிடிலின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலாவது சச்சின் தனது சாதனையை நிகழ்த்துவாரா என்று..

மறுபக்கம் அழுத்தத்துக்குள்ளாகி இருந்த ரிக்கி பொன்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் பொறுப்பான இரு ஆட்டங்கள் மூலமாகத் தம் கிரிக்கெட் ஆயுளை நீடித்துக் கொண்டுள்ளார்கள்.

நான் ட்விட்டரில் அடிக்கடி வலியுறுத்தி வந்த எட் கொவான் அறிமுகமாகி அதில் சிறப்பாக அரைச் சதமும் பெற்றுள்ளார்; மகிழ்ச்சி.
ஜேம்ஸ் பட்டின்சன் தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வருவதுடன் சகலதுறை வீரருக்கான சில கூறுகளையும் காட்டி வருகிறார். நம்பிக்கை தருகிறார்.

காயமுற்றுள்ள ஷேன் வொட்சன், ரயன் ஹரிஸ் ஆகியோரும் மீண்டும் திரும்பி வர ஆஸ்திரேலியா மீண்டும் மிடுக்காக எழும் :)

-------------------------
வெற்றி FM வானொலியில் நாளைய வருட இறுதி அவதாரம் இந்த 2011ஆம் வருடத்தின் முக்கிய சர்வதேச விளையாட்டுக்கள் அத்தனையையும் மீள்பார்வையாகத் தரவுள்ள்ளது.
அதேவேளை முதலாம் திகதி, புத்தாண்டு தினத்தில் வெற்றி டிவி யில் இரவு 8.30க்கு விளையாட்டு சிறப்புத் தொகுப்பையும் வழங்கவுள்ளேன்.

--------------------
வெற்றி கிரிக்கெட் விருதுகள்....

ஜனவரி ஏழாம் திகதி அவதாரம் நிகழ்ச்சியில் கடந்த வருடம் கிரிக்கெட்டில் சிறப்பாகப் பிரகாசித்த நட்சத்திரங்களுக்கான விருதுகளை வழங்க இருக்கிறோம்..
விபரங்களை இங்கே அறிந்துகொள்வதொடு உங்கள் வாக்குகளையும் வழங்குமாறு கோருகிறேன்.

https://www.facebook.com/VettriFMOfficial?sk=app_190322544333196


Vettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்



--------------------

அனைத்து நண்பர்கள், வாசகர்கள், ரசிகர்களுக்கும் என் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்....


பிறக்கும் வருடம் 2012 உங்கள் அனைவரது மனதுக்கும் நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும், எதையும் வெல்லும் திடத்தையும் மற்றவருக்கு நலத்தையே நினைக்கும் வல்லமையையும் வழங்கட்டும்.
நல் வாழ்த்துக்கள்....


Post a Comment

20Comments

Please Select Embedded Mode To show the Comment System.*