மயக்கம் என்ன பாடல்களைக் கேட்ட முதலாவதாக மனதில் தோன்றிய எண்ணம் - இதென்ன இழவெடுத்து ஒப்பாரி பாடி இருக்கிறாங்கள்..
அப்போது கேட்ட பாடல்கள் மூன்று..
ஹரிஷ் ராகவேந்திரா பாடும் - என்னென்ன செய்தோம்.. ஒரு தோத்திரம் மாதிரி
மற்றும் சகோதரர்கள் பாடியுள்ள ஓட ஓட & காதல் என் காதல்....
உடனடியாக Twitterஇல் நான் இட்டது -
தனுஷும் அவரின் அண்ணன் செல்வராகவனும் பாடிப் படுத்தி எடுக்கிறாங்கள். ஏண்டா நீங்க இப்படி? தெரிஞ்ச வேலைய மட்டும் பார்க்கலாமே.. #மயக்கம்என்ன
அதற்கு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து எதிர்ப்பும் வந்தது..
நான் "ரசனை - Taste Differs" என்ற ஒரே பதிலில் விட்டுவிட்டேன்.. இது செப்டம்பர் மாதத்தின் கடைசி வார நிலை.
ஆனால் எனது மகா பிசியான நாட்கள் முடிந்து மீண்டும் விடியலுடன் நான் இணைந்து கொள்ளும் நேரத்தில் மயக்கம் என்ன பாடல்கள் இளைஞர் மத்தியில் ஹிட் ஆகி விட்டன.
நானும் முழுப் பாடல்களையும் முழுமையாகப் பல தடவை கேட்டுவிட்டேன்.
பிறை தேடும் இரவிலே உயிரே மனதில் உட்கார்ந்து ரம்மியமாக இசை மீட்டுகிறது.
நான் சொன்னதும் மழை பாடல் மனசுக்குள் மழை வரச் செய்கிறது.
ஓட ஓட பாடலும் என் காதல் பாடலும் புலம்பல்கள் தான், நான் சொன்னது போல ஒப்பாரிகள் தான்.. ஆனால் கேட்க கேட்க வரிகளில் ஓர் ஈர்ப்பும் இளைஞர்களுக்கு பிடித்த அந்த சுவாரஸ்ய kick + Jolly வரிகளும் ரசிக்கவே வைக்கின்றன.
இந்த ரசனை/மனமாற்றத்தையும் சுருக்கமாக ட்விட்டரில் பகிர்ந்துவைத்தேன்.
நான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:)
ஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன
ரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் ..
ஐந்து பாடல்கள்..
இசை G.V.பிரகாஷ் குமார்
அத்தனை பாடல்களையும் செல்வராகவன், தனுஷ் சகோதரர்களே எழுதியுள்ளார்கள்.
இதில் இரண்டை இவர்கள் பாடியும் உள்ளார்கள்..
இன்னும் இசையமைக்காதது தான் மிச்சம்.. பழகிட்டு அதிலயும் குதிக்கப் போறீங்களா பிரதர்ஸ்?
தொலைக்காட்சி பேட்டியொன்றில் தாங்கள் பாடல் எழுதியதற்கு சகோதரர்கள் சொன்ன காரணம் - பாடல்கள் எளிமையாக வரவேண்டும், இளைஞருக்கு raw ஆக போய்ச் சேரவேண்டும் என்று விரும்பினோம்.. சும்மா வந்த வேகத்தில் எழுதினோம்...
அந்த 'இரண்டு' பாட்டுக்கு விரும்பினால் இது சரியாக இருக்கலாம்..
ஆனால் மற்ற மூன்று மெலடி பாடல்களின் வரிகளும்.. அருமை, அற்புதம், அழகு என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம்..
முடிவு பண்ணிக் களம் இறங்கி விட்டார்கள். தொடரும் படங்களிலும் இவர்களேயா? வைரமுத்துவும், முத்துக்குமாரும் தேவையில்லையா?
காரணம் ஐந்து பாடல்களிலும் அநேகமான தமிழ் சினிமாப் பாடல் வகைகளைத் தொட்டுவிட்டார்கள் இவர்கள்.
வழமையாக செல்வராகவனின் திரைப்படங்களுக்கு என்று ஒரு இசைக் கோலம்.. ஒரு இசை வடிவம் இருக்கும்..
ஒரு வித்தியாசமான TONE.
ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே அதிலிருந்து மாறுபட்டிருந்தது. G.V.பிரகாஷும் செல்வாவும் சேர்ந்த முதல் படம் என்ற காரணமோ, கதைக்களம் தான் காரணமோ தெரியவில்லை.
ஆனால் இந்த மயக்கம் என்னவில் அந்த யுவன் வழமையாகக் கொடுத்து வந்த அதே tone + feel ஐ, அதே விதப் பாணியை GV கொடுத்துள்ளார்.
காட்சிகளுடன் பார்க்கும்போது தான் இதன் தாக்கங்கள் புரியும்.
ஐந்து பாடல்களில் எனக்கு மிகப் பிடித்தது - பிறை தேடும் இரவிலே உயிரே
இதமான உருக்கமான இசைப் பின்னணியில் மனதை மயிலிறகாய் வருடுவதாக சைந்தவியின் குரலும், அவருடன் உறுத்தாமல் இணைந்து கொள்ளும் அவரது வாழ்க்கைத்துணை பிரகாஷ்குமாரின் குரலும் ஒரு கனவு லோகத்துக்கு அழைத்துச் செல்லும்..
பிரகாஷுக்கு பொறாமை தரக் கூடிய ஒரு விடயமா சொல்லவா?
எனக்கு சைந்தவியின் குரலில் முன்பிருந்தே ஒரு கிறக்கம், மயக்கம் உள்ளது.
அமைதியாகப் பயணிக்கும் இசையில் உருகவைக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் 'கவிஞர்' தனுஷ்..
பாராட்டியே ஆகவேண்டும்..
அசத்தியிருக்கிறார்..
ஒவ்வொரு தடவை கேட்கையிலும் உயிர் உருகுகிறது.
பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவு என்ற தொடர் மூலமாக சொல்லவருவது என்னவென்று அறிந்துகோலும் ஆர்வம் உண்டு..
காரணம் பாத்திரங்கள் இரண்டும் இஸ்லாமியர் இல்லை..
பிறை தேடுவது அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்ட்டது அன்றோ....
அழுதால் உன் பார்வையும்
அலைந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என்ற வரிகள் பெண் குரலிலும்
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
என்ற வரிகள் ஆண்குரலிலும் வரும்போது ஒரு தடவை எமக்கே அந்த ஏகாந்த தருணங்கள் மனதுக்குள்ளே காட்சிகளாக..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
என்ற வரிகள் புதுமையானவையாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் விதத்தில் பாடலின் மெல்லிய நீரோட்டம் போன்ற இசையுடன் பயணிப்பது சுகானுபவம்.
இன்றும் ஐந்து தடவைகள் இதுவரை கேட்டுவிட்டேன்.
GVயின் Master pieceகளில் ஒன்று இது.
------------------
அண்ணனும் தம்பியும் சேர்ந்து வரிகள் எழுதி தம்பி தனுஷ் பாடிய "ஓட ஓட" ஒரு சுய கழிவிரக்கப் பாடல்..
இன்றைய இளைஞர் பலரின் தேசிய கீதமாகிப் போனது..
மிக எளிதான இசையுடன் கமெரா க்ளிக்கையும் இசைக்குள் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் GV.
சும்மா பேசும்போது பயன்படுத்தும் மொழிகள்,வரிகளையும் கோர்த்து பாடல் வசன கோர்வையாகப் பயணிக்கிறது.
உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
பாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே…
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…
கேட்ட உடனே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிம்பிளான வரிகள்..
கவிதைத் தனமான வரிகளும் உள்ளன.
மீனா நீந்துறேன் நீந்துறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்
---------------------------
நான் சொன்னதும் மழை வந்துச்சா...
நரேஷ் ஐயர், சைந்தவி பாடும் கிராமிய வாசம் கொஞ்சம் வீசும் ஒரு மயக்கும் பாடல்...
செல்வராகவனின் Director Touch இங்கே தெரியுது..
உருகியிருக்கிறார் வரிகளில்..
இசையிலும் கிறக்கம்..
நரேஷ் ஐயரின் குரலில் லயிப்புடன் கூடிய தவிப்பு..
ஆனால் பின்னணியில் தொனிக்கும் ஆங்கில வரிகள் தேவையற்ற திணிப்பு.. (வழமையான GVயின் பாணி??!!)
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது
இந்த வரிகள் தவிப்பு என்றால்....
ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ...களவாணி..
இந்த வரிகள் காரமான காதல் அழைப்பு....
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ....வரியாடி...
இதைவிட Raw ஆன காதலைக் காட்ட முடியுமா? காட்சிக்காக வெயிட்டிங்.
---------------------
தனுஷ் எழுதி, தமையன் செல்வாவுடன் இணைந்து பாடிய பாடல் "காதல் என் காதல்"
இதிலே தான் அந்த சரித்திரபூர்வமான "அடிடா அவள .. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல.."
வரிகள் உள்ளன..
இந்த வரிகளும் பீரும் மோரும் சேர்ந்து எனக்குப் பாடலைப் பிடிக்காமல் செய்திருந்தன..
போதாக்குறைக்கு தனுஷின் இழுவை, சோம்பல் குரல்..
பாடுவது போல இல்லாமல் ஒப்பாரி போலவே தெரிந்தன..
ஆனாலும் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க எதோ ஒரு ஈர்ப்பு..
வாரணம் ஆயிரம் - அஞ்சல போல ஒரு தாங்க முடியாக் காதல் சோகப் புலம்பல்..
எல்லா தேவதாசுகளுக்கும் பிடித்துவிட்டது.
தேன் ஊறுன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
Friends\'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
Figure வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்டா
இப்படியான வரிகள் போதுமே...
போத்தலைத் திறக்காமலேயே போதை ஆகிவிடுகிறார்கள் நாம சிங்கங்கள்...
காட்சியமைப்பும் கலக்கலாக இருந்தால் மற்றொரு 'அஞ்சல'
-----------------
ஹரிஷ் ராகவேந்திரா பாடியுள்ள ஒரு உருக்கமான 'தோத்திரப் பாடல்' செல்வராகவன் எழுதிய 'என்னென்ன செய்தோம்'...
சித்தாந்தம், வேதாந்தம், தத்துவம் எல்லாம் பேசுகின்ற வரிகள்..
இறைவனிடம் இறைஞ்சும் இந்த வரிகள் எனக்குப் பெரிதாக ஈர்ப்பைத் தரவில்லை.
ஆனால் இந்த வரிகள் பிடித்துக்கொண்டன.. எனது சிந்தனைப் பரப்போடு ஓரளவு ஒத்துப் போவதனாலோ தெரியவில்லை..
உள்ளிருக்கும் உன்னைத் தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா... நீ?
கடல்... அலையா?
மலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
எம்மில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகின்றோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெரும் தாயின் கருணை மறக்கிறோம்
பாவ மன்னிப்புப் பாடலோ?
செல்வராகவன், தனுஷ் கவிஞர்களாகவும் ஜெயித்துவிட்டார்கள்.
பாடகராக தனுஷ் ஓகே.. செல்வா கோஷ்டியில் கோவிந்தா தான்...
GV கலக்கி இருக்கிறார்.
இனி மீதி திரையில் தருகின்ற திருப்தியில் தங்கியுள்ளது.
கேட்க கேட்க கேட்க பாட்டு பிடிச்சுதே
எழுத எழுத எழுத பதிவும் நீண்டதே
இனியும் எழுதப் போனா நாளையாகுமே
ஆகையாலே இப்ப முடிக்கிறேன் ;)