வந்தான் வென்றான்

ARV Loshan
16

நேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை.
நேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது.
ஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சினி வேர்ல்ட் உரிமையாளர் எனது நேயர் என்பதால் அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.

முன்னைய செல்லமகால் திரையரங்கு இருந்த இடத்துக்கு முன்னால் ஒடுங்கிய ஒரு கட்டடமாக ஆனால் ஏழு அடுக்கு மாடியாக உயர்ந்து நிற்கிறது இந்தப் புதிய Multiplex. மூன்று வெவ்வேறு திரையரங்குகள்.
சொகுசான இருக்கைகளும், குளிரான ஏசியும், நேர்த்தியான திரையும் மட்டுமல்ல.. இந்த சினி வேர்ல்டில் ஸ்பெஷல் அருமையான ஒலித்தெளிவு.. Digital Dolby sound system கலக்குகிறது.



ரௌத்திரத்துக்குப் பிறகு வருகிறது என்பதால் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதே ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது.
கதாநாயகி டாப்சி என்பது பார்க்க முதலே கடுப்பாக்கி இருந்தது.. (பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)
தமனின் இசையில் மனம் கவர்ந்த பாடல்களும், இதற்கு முந்தைய தன் இரு படங்களிலும் (ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் ) இவரிடம் கொஞ்சமாவது எதோ விஷயம் இருக்கு என்று எதிர்பார்க்க வைத்த இயக்குனர் கண்ணனும் 'வந்தான் வென்றான்' பார்க்கக் கூடியதாக இருக்குமென்று எண்ண வைத்தது.

சகோதர பாசத்தின் மீது தாதாயிசமும் காதலும் மோதலும் சேர்த்துக் கலக்கப்பட்ட கதை. (மீதிக் கதைய படம் பார்த்தே அறிக)
தாதா என்று சொன்னால் மும்பாயும், மும்பாய் என்று தமிழ்ப் படங்களில் வந்தால் கொஞ்சம் ஹிந்தியும் நிறையத் தமிழும் பேசும் இடம் என்றும் காட்டுவது தமிழ் சினிமா ஆச்சே.இங்கேயும் அவ்வாறே.

ஈரம் படத்தில் வில்லனாகக் காட்டப்பட்ட பிறகு, அட இனி ஒரு வித்தியாச வலம் வருவார் என்று எதிர்பார்த்துக் காணாமல் போயிருந்த நந்தா கொஞ்சம் கலக்குகிறார்.
ஆனால் தாதாவுக்கான மிரட்டல் மிதப்பைத் தாண்டி ஒரு மென்மையான அழகு தெரிகிறது.

டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.
பாவம் ஜீவா.

வெள்ளாவி வச்சு வெளுத்ததெல்லாம் சரி.. ஆனால் ஓவர் வெளுப்பு.
அதிலும் 'காக்க காக்கவில்' ஜோதிகாவுக்கு 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாடல் போல இந்த வெள்ளைப் பிசாசுக்கும் ஒரு பாடல்.. இதையெல்லாம் கேட்க யாருமே இல்லையா?

சந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்.
டிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்.
சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்.

ஜீவா - பாவம். நம்பி நடித்திருப்பார். ஆனால் எதுவுமே இல்லையே. பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள், ஒரு சில அக்ஷன் காட்சிகள் மட்டும் போதுமா? கோ தந்த வெற்றியைக் கோட்டை விட்டிருக்கிறார் அடுத்து வந்த இரு படங்களிலும்..

நந்தாவுடன் மோதும் காட்சிகள் ரசிக்கக் கூடியவை.
கேரளா காட்சிகள் + குத்துச் சண்டைப் பயிற்றுவிப்பாளராக வரும் ஜோன் விஜயுடன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கக் கூடியவை.
ஆனால் கதாநாயகன் புத்தி சாதுரியத்துடன் எதிரியைக் கட்டம் கட்டி மடக்குவதை இதை விட ரசனையாக வேறு இயக்குனர்கள் காட்டிவிட்டதால் இயக்குனர் மீது மட்டுமல்லாமல், ஜீவா மீதும் கடுப்பாகிறது.

அழகம்பெருமாள், ரகுமான்(இன்னும் அப்படியே இருக்கிறாரே.. எப்படி?), நிழல்கள் ரவி போன்றோருக்கெல்லாம் சிறிய வேடங்கள்.

கண்ணன் இன்னும் தான் முதல் இரு படங்களில் விட்ட தவறுகளைத் திருத்தவில்லை.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் இரண்டிலும் ரசனையான பெயர்கள், ரசிக்கத் தக்க கதையோட்டம், திடீர் திருப்பங்கள் என்றிருந்தபோதும், சொல்லிய விதம், வேகம் போன்றவற்றில் விட்ட குளறுபடிகள் காரணமாக சொதப்பி இருந்தன.

Flashback, கற்பனை, மாற்றாந்தாய் / தகப்பன் சகோதரப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள் (என்று இயக்குனர் நம்புகின்ற விஷயங்கள்) அனைத்தையும் நேர்த்தியாக வைத்து நல்லபடியாகத் தராமல் மூன்றாவது தடவையாகக் குழம்பி இருக்கிறார்.
கண்ணனின் காதல் Flashback மீது தானோ? வந்தான் வென்றானிலும் நிறைந்தே இருக்கிறது.



பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் நச் என்று இருக்கின்றன. சில இடங்களில் கொஞ்சம் ஓவரோ என்றும் தோன்றுகின்றன..
காதல் பற்றி எதிர்மறையாக டாப்சியும், காதலின் மகத்துவம் பற்றி ஜீவாவும் சொல்லும் இடங்கள் ஒலிப்பதிவின் குளுமையோடும் சேர்ந்து அழகாயிருக்கின்றன.

ஒளிப்பதிவு: பி.ஜி முத்தையா. கேரளாக் காட்சிகளும், மும்பையின் சில முக்கியமான இடங்களையும் அழகாக காட்டுகிறார்.
பாடல் காட்சிகளில் முடியுமானளவு முயன்றிருக்கிறார்.
காட்சிகள் அழகாயிருந்து என்ன பயன்?
டாப்சியும், பொருத்தமற்ற இடங்களும் சேர்ந்து கேட்கையில் ரசித்த பாடல்களைக் கொத்தி ரணமாக்குகின்றன.

அதிலும் வரிகளுக்காக ரசித்த 'முடிவில்லா மழையோடு' படத்தில் தேவையே அற்ற இடத்தில் வந்து செத்துப் போகிறது.

ஆரம்ப கட்ட சகோதர மோதல்கள் வந்தபோதே இடைவேளையின் போது கதை புரிந்துவிடுகிறதே..
அதற்கும் பிறகு சில இழுவைகளா? சப்பா..
அதிலும் ஒரு பரபர, பயங்கர (!) தாதா யாரோ ஒருவனின் காதல் flashbackஐப் பொறுமையாக இருந்து கேட்கிறாராம்.
ஹய்யோ..
கேரளாவில் பஸ் பயணத்தில் கதாநாயகனின் மடியில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்காத நாயகியாம்.. இவருக்குப் பாட்டு..
ஹய்யோ 2

இப்படி நிறையக் கண்ணைக் கட்டும் காட்சிகள் நிறைந்த கலர்புல் திரைப்படம்..
கண்ணன் வாழ்க.

சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது...

வந்தான் வென்றான் - வழுக்கி விழுந்தான் 


Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*