காவலன்

ARV Loshan
26


சிறுத்தை, ஆடுகளம் வந்தாச்சு.. காவலன் எங்கே? என்று ஏராளமான மின்னஞ்சல் மற்றும் பேஸ் புக் கேள்விகள்.. விஜய் ஒரு நல்ல படம் நடிச்சா விமர்சனம் எழுத மனம் வராதே என்று நக்கல் சாடல்கள் வேறு..
எதற்கும் நேரம் வர வேண்டாமோ?
காவலன் நான் பார்த்து ஒரு வாரத்தின் பின் தான் இந்தப் பதிவுபோடக் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது.

மற்றொரு மலையாள இறக்குமதி. ஆனாலும் தமிழுக்கேற்ற மாற்றத்தோடு விஜய்க்கேற்ற வித்தியாசங்களோடு வந்திருக்கிறது. வித்தியாசம் விஜயிடம் வேண்டும்..வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்த ரசிகர்களின் ஆசைகள் ஒருவாறாக நிறைவேறி இருக்கின்றன.

நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் ஒரு லவ் டுடே, காதலுக்கு மரியாதையை, பூவே உனக்காக விஜய்.. கையிலே துப்பாக்கி,கத்தி இல்லாத, பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி, எதிரிகளுக்கு சவால் விட்டு தனியொருவராக நூறு நூற்றைம்பது பேரைப் பூண்டோடு அழிக்கும் Super Human பவர் இல்லாத எம்மைப் போல் ஒரு சாதாரண இளைஞராக ஆனால் இளமைத் துடிப்போடு Fresh ஆன விஜய்.

தொலைபேசிக் காதல்  தமிழ் சினிமாவில் முக்கிய இடம்பிடித்திருந்த காதல் கோட்டை காலத்துக்கான கதை. இல்லையேல் செல்பேசிகளின் பாவனையில் Caller Id அறிமுகம் ஆகாதபோது வந்திருக்கவேண்டியது.ஆனால் Blackberryயின் புண்ணியத்தால் காவலனின் கண்ணால் காணாத ஆள்மாறாட்டக் காதலை உருக்கமாக்க உதவியிருக்கிறது.

சிம்பிளான ஒருவரிக் கதை சித்திக்கின் இயக்கத்தில் சுவாரஸ்யங்கள்,சென்டிமென்ட்கள்,வடிவேலு +விஜய் சிரிப்புக்கள் கலந்து ரசிக்க வைத்திருக்கிறது.

ஊரில் பெரும் மரியாதை பெற்ற ஒருவரின் மெய்ப்பாது'காவலன்' ஆக வருபவன் அந்தப்பெரியவரின் மகளின் காதலனாக மாறுவதும் ஆனால் ஆள் அடையாளக் குழப்பங்களினால் 'ஹெலோ' (குரல்)மட்டுமே அடையாளமாகப் போவதும் இதனால் காதலா கடமையா என்ற நிலை வந்து கண்கலங்க வைத்துப் பின் சுபம் இடுவதுமே கதை.

ஆனால் இந்தக் காலத்துக்கு ஏற்ற விதத்திலும் விஜய் ரசிகர்கள் ஏற்கும் விதத்திலும் தந்திருப்பதிலும் தான் சித்தீக் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆரம்பக் காட்சிகளின் அலம்பல்களும் இறுதிக் காட்சியில் தளம்பல்களும் கொஞ்சம் சீராக்கப்பட்டிருந்தால் காவலன் இன்னும் கலக்கியிருப்பான்.
விஜயின் பில்ட் அப் காட்சியாக நண்பனுக்காகத் தாய்லாந்து சென்று Kick Boxingபோட்டியில் ஜெயித்துவரும் காட்சியும், விண்ணைக் காப்பான் பாடலும் காவலன் போன்ற மாறுபட்ட படத்திலும் தவிர்க்க முடியாத விஷயங்கள் ஆகிவிட்டன.

பிரபல தாதா ராஜ்கிரணினால் பெயர் வைக்கப்பட்டதால் அடிதடிகளில் இறங்கிவிடுவாரோ என்று பயந்து திருந்திவாழும் அந்தப் பெரியவரிடமே அவருக்கு ஆபத்து என்று பொய் கூறி அனுப்பிவைக்கப்படுகிறார் விஜய்.
அசின் அந்தப்பெரியவரின் மகள் என்று சொல்லவும் வேண்டுமா?
அதே வீட்டில் இருக்கும் இன்னொரு அழகான பெண் மித்ரா.
பொறுப்பான உண்மையான காவலன் பூமிநாதனுக்கு(ராஜ்கிரண் வைத்த பெயர என்றால் இப்படித் தானே இருக்கும்?) அந்த வீட்டு இளவரசிகள் இருவர் மீதும் காதல் வராது.
ஆனால் அசினுக்கு விஜயின் பொறுப்புணர்வு,நல்ல குணம் பார்த்துக் காதல் வருகிறது.

விஜய்க்கோ தொலைபேசியில் பேசும் அசின் மீது மட்டும் காதல் வருகிறது.
(குழம்புபவர்கள் இன்றே காவலன் பார்த்துத் தெளிவாகவும்)

தொடர்ந்து சறுக்கி தன் திரைப்பாதையில் மாற்றத்தையும் ஒரு மாறுதலாக வெற்றியையும் எதிர்பார்த்த இளைய தளபதியைக் காப்பாற்றியவன் காவலன் எனலாம்.
ஆனாலும் திரைப்படம் வெளிவர முதல் அவர் தனியாக எதிர்கொண்ட அழுத்தங்கள் காட்சிகளின் கல கல தன்மையை மீறி விஜயின் முகத்தில் ஒரு அழுத்தமான இறுக்கத்தைக் காட்டுவதை அவதானிக்கலாம்.

காவலனாகத் துணிவோடு இறங்குவதிலும், இரு அழகிய பெண்களுக்கு சீருடை அணிந்து கல்லூரிக் காவலனாக செல்லும் போது நகைச்சுவையிலும்,காதலனாக தன் தொலைபேசித் தேவதையைத் தேடி உருகுவதிலும் விஜய் மிளிர்கிறார்.

அசினோடு வரும் காட்சிகளில் தெரியும் அந்தக் காதல் கெமிஸ்ட்ரி, வடிவேலுவுடன் கலக்கும் நகைச்சுவைக் காத்சிகளிலும் வேறுவிதமாக ஜொலிக்கிறது.

சித்தீக் விஜய்க்கென்றே அளவேடுத்துத் தைத்த சட்டை.

சீருடையில் விஜயின் கம்பீரமான உடலமைப்பைப் பார்க்கையில் போலீஸ் உடையில் மட்டும் ஏன் இவர் பொருந்துகிறார் இல்லை என்று சந்தேகம் வருகிறது.
ஆடம்பரம் இல்லாத அழகான டீஷேர்ட்களில் அழகாக இருக்கிறார்.
ஆனால் பாடல் காட்சிகள் மூன்றில் சகிக்க முடியாத சிகை,உடை அலங்காரங்கள்.இதையெல்லாம் இயக்குனர்,விஜய் வேறு யாராவது கவனிக்க மாட்டார்களா? அல்லது திருஷ்டியாகவா?
கடைசிக் காட்சி நடுத்தர வயதுக் கண்ணாடி பொருந்தினாலும் தலைமுடி அலங்காரம் உறுத்தித் தெரிகிறது.
கெட் அப் மாற்றுவதற்கும் விஜய்க்கும் நீண்ட தூரம் போல..

அசின் - இது அந்த அழகான அசின் தானா?கண்களில் தெரியும் அந்தக் காதல் வழியும் அழகு வேறு எதிலுமே இல்லை. ஹிந்தியுலகு அழகான அசினை அசிங்கமாக்கி அனுப்பி இருக்கிறது.
(ஒருவேளை இலங்கைக்கு வந்து போன பிறகுதான் சபிக்கப்பட்டவராகிப் போனாரா??)
க்ளோஸ் அப் காட்சிகளில் மேக் அப் பல கோட்டிங் அடித்தும் பயமாகவே இருக்கிறது;பாவமாகவும்.
காவலனுடன் கொஞ்சம் குறும்பாக மோதும்போதும் இடைவேளைக்குப் பின்னர் காதல் வயப்பட்டு உருகிவழியும்போதும் இறுதிக் காட்சிகளில் பரிதாபத்துக்குரியவராகத் தெரியும்போதும் மட்டும் கவர்கிறார்.

விஜயும் அசினும் மட்டுமே பிரதானமாக நிறைந்துகொள்வதால் ஏனையோருக்கு கிடைத்த இடங்களை பொருத்தி,அடைத்துக்கொள்ளும் வேலை மட்டுமே.
ராஜ்கிரண் - கம்பீரமாகத் தனித்துத் தெரிகிறார்.

வடிவேலு - விஜயுடன் இவர் இணைந்தாலே சிரிப்பு வெடிகள் தான் என்பது முன்பே நிரூபிக்கப்பட்ட விஷயம் தான்.விஜயை பாஸ் என்று அழைத்துக்கொண்டே வடிவேலு அடிக்கும் காமெடி லூட்டிகள் சில வெடி சிரிப்பு ரகம்.
அதிலும் தன்பாட்டுக்கு போற போக்கில் ஏதாவது பொன்மொழிகள்,தத்துபித்துவங்களை உதிர்த்துவிட்டு பாரதியார் சொன்னதா பாரதிராஜா சொன்னதா என்று சொல்லுமிடங்கள் கலகல.

இவருக்கு ஜோடியாக இப்போது சின்னத்திரையில் கலக்கிவரும் நீபா.. பாவம்பா.. ஆனாலும் பாவாடை சட்டையில் நீபா.. யப்பா.. ;)
மலையாள இறக்குமதி மித்ரா ஈர்க்கிறார்.முகத்தில் மட்டும் கொஞ்சம் முதிர்ச்சி.தனியாகவும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் வரக்கூடும்.

ரோஜா அசினின் அம்மா.. காலம்.
மகாதேவன்,நிழல்கள் ரவி,டெல்லி கணேஷ்,லிவிங்ஸ்டன் ஒவ்வொரு,இவ்விரு காட்சிகளுடன் பரிதாபமாகக் காணாமல் போகிறார்கள்.
M.S.பாஸ்கர் அடிக்கடி தூங்கி விழுந்து சிரிக்கவைக்க முனைகிறார்.

பாடல்கள் படம் வெளிவரும் முதலே ஓரளவு மக்களை ஈர்த்திருந்தன.. படம் வந்த பிறகு யாரது பாடல் நிறையப் பேரை ரசிக்க வைத்துள்ளது.
பின்னணியிலும் பல முக்கிய காட்சிகளில் வித்யாசாகர் ரசிக்க வைக்கிறார்.

காவலன் தான் பொங்கல் திரைப்படங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இலங்கையில் சிறுத்தைக்கு அடுத்தபடியாகத் தான் காவலன் என்று வசூல் அடிப்படையில் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் விஜயின் படங்களில் இரு வாரங்களுக்குப் பின் கூடுதல் வசூல் காவலனுக்குத் தானாம்.

படம் சிறப்போ இல்லையோ என்ற கேள்வியை விட காவலன் எனக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டால்.. ஆம் என்பேன்.

கலகல,காதல், நீண்ட நாளுக்குப் பின் லவர் போய் விஜயின் துள்ளல்,என்னதான் இருந்தாலும் 'நம்ம' அசின் இருப்பதால் இருக்கும் பெரிய லொஜிக் ஓட்டைகளை நான் கவனிக்கவில்லை.

ஆனால் சில காட்சிகள் ஒட்டியும் ஒட்டாமலும் திணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சித்தீக் இன்னும் கொஞ்சம் மினக்கெட்டிருக்கலாமோ எனத் தோன்றியது.
அண்மைய நான்கு விஜய் படங்களை விட ரசிக்க வைத்ததாயினும் பூரண திருப்தியைக் காவலன் தரவில்லை.


காவலன் - விஜயைக் காப்பான்;விஜய் காத்தான் 


Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*