Latest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்கள்

ARV Loshan
31
வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு நாளை இடம்பெறுவது அனைவரும் அறிந்த விடயமே.
அதற்கு முன்னதாக இன்று முதல் தடவையாக(இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டுக் கொள்ளுங்கள்) ஒழுங்குசெய்யப்பட்ட பதிவர் கிரிக்கெட் திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

சனிக்கிழமை பலருக்கு வேலை நாள் எனவே பங்குபற்றுதலை நாம் பெரிதாக எதிர்பார்த்திருக்கவில்லை.ஆனாலும் யாழ்ப்பாணம்,கண்டி,மட்டக்களப்பு,திருகோணமலை என்று பல இடங்களிலும் இருந்து ஆர்வத்துடன் கிட்டத்தட்ட முப்பது பேர் வந்திருந்தமை எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்திருந்தது.

நேற்றிரவு பெய்த மழை போட்டி பற்றிய சந்தேகங்களை எழுப்பி இருந்தது, மது வேறு போட்டியை நேரலை செய்யப்போவதாக சொன்னதால் மழை பெய்வதே பரவாயில்லை என நினைத்தேன்.
ஆனால் இன்று காலையிலிருந்து எங்கள் பதிவர்களின் முகங்கள் போலவே பிரகாசமான வெயில்.
வெள்ளவத்தையில் இருக்கும் முருகன் பிளேஸ்,பாடசாலை மைதானம் அப்படியொரு அழகு..

உருண்டு விழுந்து களத்தடுப்பு செய்தாலும் காயம்படாத அளவுக்கு புல் நிறைந்தது.
(ஆனால் நான்,கன்கோன்,நிருஜா(மாலவன்) ஆகியோர் விழாமல் இருப்பதை மைதானப் பாதுகாவலர் ஒருவர் கண்காணித்துக்கொண்டே இருந்தது பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லாத விஷயம் இங்கே)

நேரலையாக இணையம் வழியே ஒளிபரப்பும் பணியை மதுவும் அவரது நண்பரும் செவ்வனே சிரமேற்கொண்டு கலக்கினார்கள்.இணையம் வழியாகவும் எம் செல்பேசிகள் மூலமாகவும் வந்து ஊக்கப்படுத்திய சர்வதேசப் பதிவர்களுக்கு நன்றிகள்.(பலர் எதிர்பார்த்த 'முக்கியமான' ஒருவர் மட்டும் வரவில்லை.)

இரண்டு அணிகளாகப் பிரித்து ஆட்டம் ஆரம்பித்தது.

பதிவர் சந்திப்பு ஏற்பாட்டாளர்களான மாலவனும் அனுத்தினனுமே அணிகளுக்குத் தலைமை தாங்கினார். IPLக்கு சவால் விடுவது போல அணி வீரர்களை ஏலம் எடுத்தனர் இரு தலைவர்களும்.
யார்ரா இது என்னை உடனே எடுத்தது என்று நம்பவே முடியல. அட நம்ம நிரூஜா(வந்தி மாமா கோவிக்கப் போறார்).

இரு தலைவர்களும் கிட்டத்தட்ட சமபலனான அணிகளைத் தெரிவு செய்து விளையாட நாணய சுழற்சியில் ஈடுபட்டனர்.

முதலாவது நாணய சுழற்சியில் வென்ற அனுத்திணன் தன் அணி துடுப்பெடுத்தாடும் என்று அறிவித்தார்.
சரி போகட்டும் என நாம் விட்டு விட்டோம்.

மாலவன் அணியின் ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் கோபிநாத்தும்,மருதமூரானும்(பிரவீன்) மிக சிறப்பாக பந்துவீசினார்கள்.
மருதமூரானின் இடது கைப் பந்துவீச்சு பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் யாழ்ப்பானத்திலிருந்து வந்த களைப்பு கொஞ்சம் கூடத் தெரியாமல் ஜனா அதிரடியாட்டம் ஆட ஆரம்பித்தார்.
அப்போது தான் பந்துவீச வந்திருந்த அப்பாவி லோஷன் ஒரு விக்கெட்டை எடுத்த சந்தோசம் தீர முன்னரே ஜனாவினால் ஆறு ஓட்டத்துக்காக வெளுக்கப்பட்டார்.
மூன்று ஓவர்களிலும் ஜனா ஒவ்வொரு ஆறுகளை அடித்தாலும் லோஷனின் மித வேகம்,வேகம் குறைந்த பந்துகளில் மற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
நான்கு விக்கெட்டுக்களை லோஷன் கைப்பற்றினார்.

நிதர்ஷன் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்.

ஜனாவின் அதிரடி ஆட்டம் தந்த மகிழ்வை ஏனைய அனு அணி வீரர்கள் வழங்கவில்லை. ஜனா அடித்த நான்கு சிக்சர்களும் அற்புதமானவை.
மாலவன் அணியும் பதிவர்களுக்கிடையிலான அன்னியோன்னியத்தைக் காட்டும் வகையில் வகை,தொகை இல்லாமல் பிடிகளை விட்டு நட்பின் பெருமையைக் காட்டினார்கள்.

93 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆட ஆரம்பித்த மாலவன் அணிக்கு பால்குடி என்று பதிவர்களால் அறியப்படும் தனஞ்செயன் நல்ல அதிரடி ஆரம்பத்தைக் கொடுத்தார். ஒரு சிக்சரும் ஒரு நான்கு ஓட்டமும், ஆனாலும் அனு அணியின் ஐந்து பந்துவீச்சாளருமே வியூகம் வகுத்துத் துல்லியமாகப் பந்துவீசியிருந்தனர்.
குறிப்பாக நிரூஜன் மூன்று விக்கெட்டுக்களை எடுத்து அச்சுறுத்தலாக இருந்தார்.

லோஷன், தலைவர் நிரூஜாவை ரன் அவுட்டாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.(உள் வீட்டுத் தகராறு எல்லாம் இல்லப்பா) விக்கெட்டுக்கள் போய்க் கொண்டிருக்க கண்டியில் இருந்து வந்த அரிவாள் யோகா வந்தார்..
அந்த நேரம் தானா பலிக்காடா போல அணித் தலைவர் அனுத்தினன் பந்துவீச வரவேண்டும்?
தனது அரிவாள் கட்டுக்களால் அடுத்தடுத்து சிக்சர் மழை பொழிந்தார் யோகா.

அனுத்தினன் அவரை சமாளித்து ஆட்டமிழக்க செய்ய அடுத்து கோபிநாத் நுழைந்தார்.
அவரது அதிரடி மற்றும் கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களைப் பாதுகாத்து ஆடிய ஆட்டம் மாலவன் அணிக்கு வெற்றியைத் தந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்க, வியூகம் வகுத்து அனுத்தினன் அணி கடைசி விக்கெட்டுக்களை உடைத்து வெற்றியை ஐந்து ஓட்டங்களால் பெற்றது.
தலைவர் அனுத்தினன் தனது பந்துவீச்சால் எதிரணியைத் தடுமாற வைத்திருந்தார். நான்கு விக்கெட்டுக்கள்.

வெயில் நடு மண்டையில் நர்த்தனமாடும் நேரம் இரண்டாவது போட்டியை சூட்டோடு சூட்டாக வைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
இடைவேளையில் ஜனா தன் அன்பால் குளிர்பானங்கள் வாங்கித் தந்து எம்மையெல்லாம் குளிர்வித்தார்.
சேது அய்யாவும் மகிழுந்தில் வந்து தன் கமெராவால் எங்களை சுட்டுவிட்டு ப்ரெசென்ட் போட்டுவிட்டுப் போனார்.

இரண்டாவது போட்டியிலும் வெற்றிகரமாக மாலவன் நாணய சுழற்சியில் கோட்டை விட்டார்.
அனுத்தினன் அணி யோசித்து மீண்டும் துடுப்பெடுத்தாட இறங்கியது.
ஆனால் இம்முறை நினைத்தது போல துடுப்பாட்டம் இலகுவாக அமையவில்லை.

மாலவன் அணியின் பந்துவீச்சு அவ்வளவு இறுக்கமாக இருந்தது. ஆனால் களத்தடுப்பு பாகிஸ்தான் அணி கூடத் தோற்றுப் போகும் அளவுக்கு.
பால் குடி,யோகா ஆகியோரின் இரு அபாரமான பிடிகளுடன் வதீசின் ஒரு பிடியும் அற்புதம்.ஆனால் விட்ட பிடிகள் ஓட்ட எண்ணிக்கையுடன் போட்டி போடும்.

அனுத்தினன் அணியின் துடுப்பாட்டத்தில் மைந்தன்,துஷி ஆகியோர் மட்டுமே பத்து ஓட்டங்களை விடக் கூடுதலாகப் பெற்றவர்கள்.
ஜனா ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததும் (முதல் போட்டியில் கன்கோன் கோபியின் Golden Duck போல) முக்கியமானது(என்னைப் பொறுத்தவரையில் ஸ்பெஷல் :))

லோஷன் இம்முறை வழக்கத்துக்கு மாறாக முதல் இரு ஓவர்களில் சிக்சர் எதையும் கொடுக்காமல் விக்கெட்டுக்களை சரித்துக் கொண்டிருந்தார்.
(என்னுடைய வேகம் குறைவான பந்துகள் சரியான நீளத்தில் விழுந்த போது அடிக்க சென்று ஆட்டமிழந்தவர்களே அநேகர்.. இதுக்காக இலங்கையின் உலகக் கிண்ண அணியில் என்னைத் தெரிவு செய்யாவிட்டால் கொடிபிடிப்போம்,கோஷம் போடுவோம் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர் ரசிகர்மாறே)
மூன்றாவது ஓவரில் ஒரு சிக்சரைக் கொடுத்தாலும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி மொத்தமாக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திக் கொண்டார்.

மறுபக்கம் மருதமூரான்,கோபிநாத் ஆகியோரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தி அனு அணியை மடக்கி சுருட்டினர்.

இதற்கிடையில் நான்கு சிக்சர்கள் என்று எங்களால் 'புகழப்படும்' அனுத்தினன் (எடுத்த சிக்சர்கள் அல்ல ;))தனக்கும் பந்துவீச மூன்று ஓவர்கள் தரப்பட்டால் தானும் ஐந்து விக்கெட்டுக்களை எடுப்பேன் என்று ஒரு மெகா குளிர்பானத்துக்காக பந்தயம் பிடித்த சிறு பரபரப்பை ஏற்படுத்தப் பார்த்தார்.

ஆனால் அவரது இரண்டாவது ஓவர் பந்துவீசப்படும் போதே மாலவன் அணி போட்டியை முடித்தது வேறு கதை.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக இறங்கிய கோபிநாத்தும் மாலவனும் நல்ல இணைப்பாட்டத்தை வழங்கி வெற்றியின் பாதையை இலகுபடுத்தினர்.
இடையிடையே விக்கெட்டுக்கள் மூன்று போனாலும் கோபிநாத்தின் அபாரமான அதிரடி அரைச் சதத்துடன் வெற்றி இலக்கு நான்கு ஓவர்கள் மீதமிருக்கையில் அடையப்பட்டது.
அய்யாவும் வெற்றியைப் பெறுகையில் ஆடுகளத்தில் கோபியுடன் இணைப்பாட்டம் புரிந்தது ஸ்பெஷல்.



ஸ்கோர் விபரங்கள்.. சுருக்கமாக..

முதலாம் போட்டி 

அனுத்தினன் அணி 15 ஓவர்களில் 92 ஓட்டங்கள்
ஜனா 33
கார்த்தி 11
ஜனகன் 10

பந்து வீச்சில்
லோஷன் 4 விக்கெட்டுக்கள்
நிதர்ஷன் 3
மருதமூரான் 2

மாலவன் அணி 15 ஓவர்களில் 87 ஓட்டங்கள்
யோகா 32
கோபிநாத் 27
தனஞ்செயன் 11


இரண்டாவது போட்டி

மாலவன் அணி 15 ஓவர்களில் 78 ஓட்டங்கள்
மைந்தன் 11
துஷி 10

பந்துவீச்சில்
லோஷன் 5 விக்கெட்டுக்கள்
மருதமூரான் & கோபிநாத் 2 விகெட்டுக்கள்

மாலவன் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்கள்
கோபிநாத் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்கள்

யாருக்கும் மனம் நோகாமல் இரு பக்கமும் தலா ஒவ்வொரு வெற்றிகள் பெற்றதோடு போட்டிகளை முடித்துக்கொண்டோம்.
இன்னும் கொஞ்ச நேரம் நின்றாலும் தோல்கள் பொசுங்கி இருக்கும்.போட்டிகள் முடிந்த மணிக்கு அப்படியொரு கடும் வெயில்.

கிண்ணங்கள்,பரிசுப் பணத்தொகை,மதிய போசனம் தராத ஏற்பாட்டுக் குழுவுக்குக் கண்டனங்கள்.
அதைவிட விளையாடிக் களைத்த வீரர்களை உற்சாகப்படுத்த எந்தவொரு Cheer leadersஐயும் கூப்பிடாததற்கு அணிகளின் வீரர்கள் எல்லோர் சார்பாகவும் கண்டனங்கள்.

படங்கள் போட நேரமில்லை. சுபாங்கனின் தரங்கம்,லோஷன்,கா.சேது ஐயா,வரோவின் பேஸ்புக் பார்க்கவும்.

நாளை பதிவர் சந்திப்பில் சந்திக்கலாம்..
வெளிநாடுகளில் இருப்போர்,வர முடியாதோர் லைவ் ஸ்ட்ரீம் பார்க்க..

  http://www.livestream.com/srilankantamilbloggers





Post a Comment

31Comments

Please Select Embedded Mode To show the Comment System.*