ரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு

ARV Loshan
30
சந்திப்பில் கலந்துகொண்டவருக்கு இது ஒரு ஞாபக மீட்டல்; சந்திப்பைத் தவறவிட்டவருக்கு என்னால் முடிந்த முக்கிய விடயங்களின் தொகுப்பு.


ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.. இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு..

மீண்டும் கொழும்பில்.. அதாவது அதிகார மையத்தில் .. ;) (என்ன கொடும சார், என்ன கொடும சார்- இது அவர் முகமூடி, இந்த சக்திவாய்ந்த சொல்லைக் காமெடியாக்கிட்டீன்களே)

முதல் நாள் கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக ஒழுங்கு செய்த அதே இளமைத் துடிப்புள்ள இளைஞர் கூட்டணி அதை விடப் பெரியதாக,சிறப்பாக,நேர்த்தியாக சந்திப்பையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிரூஜா எனப்படும் மாலவன், வதீஸ், பவன், அனுதினன், வரோ, அஷ்வின்  ஆகிய ஆறு துடிப்பான இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வெள்ளவத்தை, தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி அரங்கில் காலை 9.30க்கு ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
நான் கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழையும் நேரம், யாழ்ப்பானத்திலிருந்து முதல் நாளே எங்களுடன் கிரிக்கெட்டில் கலக்கிய ஜனா,கூல் போய், ஜி ஆகியோரும், அஷோக்பரனும் வாசலில் புன்முறுவலுடனும் என்னுடன் இணைய,நாம் உள்ளே நுழைய, நிரூஜா ஒலிவாங்கியை இயக்கி, வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிக்க சரியாக இருந்தது.


அதிகார மையமே தாமதமாக வந்தால் எப்படி என்று கன்கோன் அனுப்பியிருந்த smsஐ வாசித்துக் கொண்டே ஆசனத்தில் அமர்ந்து, அசோக்கின் தொப்பை பற்றித் தான் 'மையம்' என சொல்லி இருக்கிறான் என்று சிசிர்த்துக்கொண்டேன். (எப்படியெல்லாம் மொக்கை போடுறாங்க)

வணக்கம்+அறிமுகத்தைத் தொடர்ந்து, பதிவர்கள் தத்தமாய் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
பல புதியவர்கள் (எமக்கும்,பதிவுலகுக்கும்), பல பழையவர்கள்(வயதில்,பதிவுலகில்),இடையில் ஓய்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் சில சிரேஷ்டர்கள் என்று பலரும் வந்திருந்தார்கள்.
பெண் பதிவர்கள் என்று தேடிப்பார்த்தால் ஐந்தே ஐந்து பேர் தான்.. (ஆனாலும் எழுத்துக்களில் ஆண்,பெண் பேதம் வேண்டாமே..அனைவரும் பதிவர் என்று ஒன்றுபட்டவர்கள் எனப் பின்னர் சகோதரி நிலா சொன்னதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்)

அடுத்து, இலங்கைப் பதிவர் எல்லாரையும் ஒன்றிணைக்கும் கூகிள் குழுமம் பற்றிக் கலந்துரையாடல் ஆரம்பித்தது.

இலங்கையின் அனேக தமிழ்ப் பதிவர்கள் தங்கள் புதிய பதிவுகளை இணைக்கவும், தொழிநுட்ப, இதர சந்தேகங்களைத் தீர்க்கவும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், அறிவித்தல்களை வெளியிடவும் பயன்படுகிற இந்தக் குழுமத்தை எவ்வாறும் மேலும் வினைத்திறனுடையதாகப் பயன்படுத்தலாம் என்று குழுமத்தின் மட்டறுப்பாளர்களில் ஒருவராக இருக்கின்ற 'நா' கவ் போய் மது உரையாற்றினார். சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

http://groups.google.com/group/srilankantamilbloggers

கா.சேது அய்யா பேஸ் புக் நண்பர்களால் பகிரப்படும் Notesஐயும் புதிய பதிவுகளாக சேர்க்கலாமா என்ற யோசனையைக் கொண்டுவதார்.எனினும் நண்பர்களாக சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் பார்வையிடலாம் என்ற Privacy settings பிரச்சினைகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மு.மயூரன் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது - பதிவுலகின் பொற்காலம் முடிந்துவிட்டது. முன்பெல்லாம் தங்கள் எண்ணக் கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக இருந்த வலைப்பதிவுகள் மாறி, இப்போதெல்லாம் கருத்துவெளிப்பாட்டுக் களங்களாக Facebookஉம் Twitterஉம் மாறிவிட்டன.
சிந்தித்துப் பார்த்தால் உண்மை தான். நீட்டி முழக்கி சில கருத்துக்களை வலைப்பதிவில் இடுகை இடுவதை விட காலச் சுருக்கத்தைக் கருதி 140 எழுத்துக்களை Twitterஇலோ, அல்லது கொஞ்சம் நீளமாக Facebookஇலோ இட்டுவிட முடிகிறது.


எங்களின் கும்மி,இதர விஷயங்களால் நட்புக்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக குழுமத்தின் மட்டுறுப்பாளராக சிறப்பாக,நேர்த்தியாக செயற்பட்டு வந்த மது, இடையில் விலகிக்கொண்டார். மது வந்து 'சக பதிவரே' என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே கும்மியைக் கட்டுப்படுத்தியும் சரியான திரிகளில் மட்டுமே இடுகைகள்,வாழ்த்துக்களை சேர்த்தும் பதிவர்கள் பொறுப்பாக நடந்து வந்தனர்.

மு.மயூரன்,நிமல் ஆகியோரும் மட்டுறுப்பாளராக இருந்துவந்தாலும் மதுவின் பின்னர் யாரும் இந்தப்பணியை செய்யவில்லை.

எனவே மீண்டும் மதுவையே மட்டறுப்பாளராகக் கொண்டுவருதல் குழுமத்தின் வினைத்திறனுக்கு நன்மைஎன்பதால் நான் அதை முன்வைத்தேன்.
வேறு யாராவது முன்வந்தால் அவர்களிடம் கையளிக்கலாம் என்று மது அழைப்பு விடுத்தாலும் பொருத்தமான யாரும் முன்வராததால், மதுவை  எல்லோரும் ஏகமனதாகத் தெரிவு செய்தோம்.

யாராவது மதுவை மீண்டும் குழுமத்தில் சேர்த்துவிடுங்கப்பா.. :)



முதலாவது சந்திப்பிலே ஆரம்பிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி நிறைவடையாமல் நிறுத்தப்பட்ட விடயம் மீண்டும் இங்கே கலந்துரையாடலுக்கு விடப்பட்டது..

எழுத்துருக்கள்,தட்டச்சும் முறை, விசைப்பலகை பற்றிய கலந்துரையாடல்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கொட்டாவி வரவைக்கும் விடயம் இது...
எனக்கு இலகுவான வழியில் நான் விரல்களால்,என்னிடம் இருக்கும் கணினி,அல்லது மடிக் கணினியில் உள்ள விசைப்பலகையில் இப்போது கூகிளின் உதவியுடன் Phonetic முறையில் தட்டச்சுகிறேன்..

முக்கியமாக கா.சேது அய்யா, எழில்வேந்தன் அண்ணா, மு.மயூரன் ஆகியோர் சில முக்கியமான விடயங்களை முன்வைத்தனர்.
அவர்களில் மயூரன் முன்பே இது பற்றி விளக்கமாகப் பதிவொன்று இட்டுள்ளார்.



பின்னர் எந்த முறையை அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் என்று வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

பாமினி அதிகமானவர்களாலும், phonetic அடுத்தபடியாகப் பலராலும் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.

பயனுள்ள விவாதங்கள்,கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, கொஞ்சம் தொழிநுட்ப விஷயங்கள் அதிகமாக வந்ததால் புதியவர்கள் கொஞ்சம் உற்சாகம் இழந்ததை அவதானித்த நிரூஜா சுருக்கி முடித்து இடைவெளியை அறிவித்தார்..

அப்பாடா என்று கிடைத்தவற்றை வெளுத்துவாங்கலாம் என்று பரிமாறும் பையன்களை எதிர்பார்க்கவும் நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் ஆரம்பித்தோம்.
இடைவேளையில் பரிமாறப்படும் பதார்த்தங்கள் பற்றி இலங்கைப் பதிவுலகத்தில் பெரீய எதிர்பார்ப்பு இருந்தது..
காரணம் அஷ்வின் ஏற்கெனவே பக்கோடா பற்றிக் கதையைக் கசிய விட்டிருந்ததும், கிரிக்கெட் போட்டி முடிந்த அன்று மாலை அனுத்திணன் வீட்டில் ஏற்பாட்டுக் குழுவும் இன்னும் சிலரும் ஒன்றுகூடி பலகாரம் சுடுவதில் ஈடுபட்டிருந்ததும்.

பக்கெட்டில் அடைக்கப்பட்ட பக்கோடா, அனுத்தினனின் அம்மாவின் கைவண்ணத்தில் ரோல்ஸ் (இதில் கிழங்குக்குத் தோல் உரித்த கன்கோன்,அனுத்தினன் தங்கள் பெயர்களை மறக்காமல் பொறித்துவிட சொன்னார்கள்) நிரூஜாவின் அம்மாவின் கைவண்ணத்தில் கேசரி + அன்னாசிப் பானம் ஆகியன அமிர்தமாக இனித்தன..

(அன்னாசிப் பானத்தை அளவு கணக்கில்லாமல் குடித்து அவதிப்படும் கன்கோனுக்கு ஏற்பாட்டாளர்கள் சிகிச்சைக்கான நஷ்ட ஈடு கொடுப்பார்களா என்பதே இன்றைய முக்கிய கேள்வி)

சபைக்கு அடக்கமாக ஒவ்வொரு ரோல்ஸ்,கேசரியுடன் முடித்துக் கொண்டு மீண்டும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்தாலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரோல்சையும் கேசரியையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்று நான் மட்டுமில்லை,பலர் குறிவைத்திருந்ததை முகக்குறிப்புக்களில் அறியக் கூடியதாக இருந்தது. (கடைசியில் ரோல்ஸ் பரபரப்பாக முடிய கிடைத்த கேசரியை வெளுத்து வாங்கிவிட்டு 'ரோல்ஸ் போச்சே' என்று பலர் புலம்பியது சோகக் கதை)

வசூல் ராஜா குஞ்சு பவன் .... 
கணக்குக் காட்டுங்க ராஜா.. 
டீ சேர்ட் வாசகங்களைக் கவனிக்கவும்.

பதிவர்கள் பதிவுலகம் தாண்டி மேலும் பயனுள்ள என்னென்ன விடயங்களில் ஈடுபடலாம் என்பது குறித்தான கலந்துரையாடல் அடுத்து..

இடம்பெற்ற கலந்துரையாடல்களில் அதிகம் பயனுள்ளதும் பரபரப்பானதும் பல பயனுள்ள சிந்தனைகளுக்கும் வழிவகுத்த கலந்துரையாடல் இது..

அருண் - விக்கிலீக்ஸ் பற்றி விவரமாகப் பேசி பதிவர்களும் சமூக அக்கறையுடன் பல விஷயங்களை மக்களுடன் பகிரலாம்;பகிர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் பின்னர், மு.மயூரன், கா. சேது, கோபிநாத், மன்னார் அமுதன், அஷோக்பரன், ஜனா என்று பலரும் பல முக்கியமான விடயங்களை விவாதித்தனர். முன் வைத்தனர்.

பதிவர்களின் பதிவுகளில் சிலதைத் தெரிந்து நூலாக வெளியிடலாம் என்ற எண்ணக்கருவுக்கு வடிவம் கொடுக்க எழில்வேந்தன் அவர்கள் முன்வந்தார். தன்னால் தொகுத்து அச்சுப்பதிக்க முடியும்;ஆனால் பொருளாதார சிக்கலை அனைவரும் பங்கெடுத்து தீர்க்கலாம் என்பது அவரது கருத்து.

ஒரு அமைப்பாக செயற்படலாம்.. பல இடங்களிலும் கல்வித் தேவைகள்,சிரமதானங்களை நிகழ்த்தலாம் என்பது மன்னார் அமுதன் சொன்ன விஷயமாக இருந்தது.

எனினும் அமைப்பாக இருந்தால் பதவி சிக்கல்கள்,பிரிவுகள் வரலாம் என்று மறுதலித்தார் அஷோக்பரன்.
தானே தான் அமைப்புக் கதையை இரண்டு வருடங்களுக்கு முன்னால் முன் வைத்ததாகவும் இப்போது கருத்தியல் மாற்றத்துக்குள்ளான கதையைப் பகிர்ந்தார் அவர்.

சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு மு.மயூரன் சொன்ன ' ஒவ்வொரு பணிகள்/செயற் திட்டங்கங்களுக்கும் ஒரு குழு அமைப்பது' என்ற எண்ணக்கருவுக்கு பலத்த வரவேற்புக் கிடைத்தது.

பதிவுகள்/இடுகைகள் - எப்படிப்பட்டவையாக இருக்கவேண்டும்,யாருக்காக எழுதப்படவேண்டும் என்ற கருத்துக்களும் பலரால் பல விதமாக விவாதிக்கப்பட்டன.
அவை எப்படியும் இருக்கலாம்;யாருக்காகவும் எழுதப்படலாம்; பதிவை இடுபவருக்காகவும் கூட என்ற எனது தனிப்பட்ட எண்ணக்கருத்து பலரின் கருத்தாக இருந்தது மகிழ்ச்சி.

ஆனால் கோபிநாத் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே பதிந்து வைக்க ஆசைப்படுகிறேன் - எப்படியும் எழுதுங்கள்;எதையும் எழுதுங்கள்;ஆனால் நாம் இருக்கும் நிலையில்,நம் சமூகத்துக்காகவும் கொஞ்சமாவது எழுதுங்கள்.

சில நண்பர்கள் நான் அதிகமாகப் பேசவில்லை என்று குறைப்பட்டு/ஆச்சரியப்பட்டிருந்தார்கள் - பயனுள்ளதாக எல்லோரும் பேசுகையில் அவதானிப்பதே சாலச் சிறந்தது. தேவையான போது தேவையானதை சொன்னேன் தானே?

மது நேரலையாக சந்திப்பு மூன்றாவது தடவையாக வெற்றிகரமாக உலகம் முழுதும் செல்ல தன்னை அர்ப்பணித்திருந்தார்.
பல பதிவர்களும்,ஆர்வலர்களும் இணைந்திருந்ததில் மகிழ்ச்சி.



இவர்கள் தான் என்றால் காவல்துறையும் கூட..
என்ன நடக்குதென்று விசாரிக்க மூன்று பேர் வந்திருந்தார்கள். (சந்திப்புக்கு வந்த பெரும்பாலானோருக்கு இதை நாம் அப்போது சொல்லி இருக்கவில்லை)
நானும் சேது அய்யாவும் கோபிநாத்தும் சென்று சிங்களத்தில் நடப்பதை விளங்கப்படுத்தி,இது புரட்சிக்கான கூட்டம் எதுவுமல்ல;இணையத்தில் எழுதுவோர் சந்தித்துள்ளோம். வெறும் ஒன்றுகூடல் மட்டுமே இது என்று புரியப்பண்ணி கைலாகு கொடுத்து அனுப்பிவைத்தோம்.

நண்பர்களே நாங்கள் கவனிக்கப்படுகிறோம்.. சந்தோஷப்படுங்கள். அதற்காக உங்களுக்கு மீண்டும்/மேலும் கவசம் போட்டிடாதீர்கள்.

ஜனா சொன்ன சில விஷயங்களும் நான் எனது ஐந்நூறாவது பதிவில் சொன்ன விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வலைப்பதிவோடு இயங்கும் அவரை சந்தித்தது இந்த சந்திப்பு தந்த இனிய தருணங்களில் ஒன்று.

ஓய்வில் இருப்பதாக அறிவித்த புல்லட்,அடிக்கடி சந்திக்கும் ஏனைய பதிவர்கள், பல புதிய நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியையும் இம்முறை சந்திப்பு மீண்டும் தந்தது.


முன்னைய இரண்டாம் சந்திப்பின் தொகுப்பை என்று எழுதியது போல இதையும் பதிவர் சந்திப்பும் பக்கொடாவும் என்று பதிவிட்டிருக்கலாம். ஆனால் பக்கோடாவை விட அன்று விரைவாகத் தீர்ந்ததும் பலர் தேடியதும் ரோல்ஸ் தான்..
அடுத்தபடியாக அன்னாசி பானம் கரைத்தவாறு இப்போது கன்கோன்,அஷோக் உட்படப் பலர் தேடுவதாகத் தகவல்.

சந்திப்பு முடிந்தபின்னர் சிலபேர் நாம் நின்று அரட்டை அடித்துக்கொண்டு நின்றவேளை அனைவரும் ஒன்றுபட்டு பேசிய ஒரு விஷயம் - அடுத்த சந்திப்பு கொழும்பைத் தாண்டி வெளியூர் ஒன்றில் வைப்பது என்று.

அது குளு குளு மலையகத்தில் என்றால் எனக்கு மகிழ்ச்சி.. (யோகா கவனிக்க)
கடற்கரையோர நகர் எதாவதேன்றாலும் பலருக்கு மகிழ்ச்சி.. (யாழ்,திருகோணமலை,மட்டக்களப்பு பதிவர்களும் கவனத்தில் எடுக்கலாம்)

அதிகாரமையம் இடம் மாறுவது கண்டு சிலருக்கு சந்தோஷமாக இருக்குமே.. பதிவர்கள் பதிவுலகம் கடந்து ஒன்றிப்பதற்கும் கிரிக்கேட்டோடு சேர்ந்து ஒருமித்ததாக ஒரு சிரமதானம்,சுற்றுலா,கல்வி கற்பித்தல் முகாம் என்று பயனிப்பதற்கும் வெளியூர் சந்திப்பு எதுவாக அமையும்.
எதோ யோசிச்சு செய்யுங்கப்பா...



மூன்று சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட திருப்தி இருக்கிறது. அதுபோல ஒரு சில சிறு சிறு உரசல்கள்,அரசல் புரசலான சர்ச்சைகள் வந்தபோதிலும் இலங்கைப் பதிவர்களிடையே காணப்படும் ஒற்றுமையும்.புரிந்துணர்வும்,சிநேகபூர்வ செயற்பாடுகளும் தொடர்ந்தும் நீடிப்பதும் வளர்ந்துவருவதும் ஆரோக்கியமான உணர்வுகளைத் தோற்றுவிப்பதோடு எதிர்காலத்தில் பதிவுலகத்தால் மேலும் நல்ல விஷயங்கள் நல்ல முறையில் நடப்பதற்கு வழி சமைக்கும் என்ற நம்பிக்கையையும் புதியவர்கள்,இளையவர்கள் பலர் பதிவுலகில் நுழைவார்கள் என்ற நம்பிக்கையையும் தருகிறது.

நேரலையில் பார்த்திராதவர்கள் முழுமையாகப் பார்த்து ரசிக்க,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 3 இன் காணொளிகள்...





நான் மறந்த/தவற விட்ட விடயங்களையும் பார்த்து அறிந்திடுங்கள்....




Post a Comment

30Comments

Please Select Embedded Mode To show the Comment System.*