அபாசிபா - ஞாயிறு மசாலா

ARV Loshan
22
நேற்றைய எனது 500வது பதிவுக்கு வாழ்த்துத் தெரிவித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

ரசியல் 

இலங்கை அரசியலில் பலரும் எதிர்பார்த்த, சிலராவது விரும்பிய, தமிழ் மக்களுக்கு ஓரளவாவது ஆறுதல் தரக்கூடிய நிகழ்வுகள் கடந்த இரு தினங்களில் நடந்துள்ளன.
ஒன்று தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட சமர்ப்பில் நடுவு நிலைமை வகித்தது (இது பற்றி பலர் துரோகத்தனம், காட்டிக்கொடுப்பு என்று விமர்சிக்கப் புறப்பட்டாலும், இப்போதைய நிலையில் எதிர்ப்பரசியலால் ஆகப்போவது எதுவுமல்ல என்பதுவும் சேர்ந்து செயற்பட்டு சில காலம் நடப்பதைப் பார்க்கலாம் என்பதுவும் இங்கே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது)

இரண்டு - பிரிந்து செயற்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்(அதிக உறுப்பினர்கள் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள்) தமிழ்க் கட்சிகளின் அரங்கமும்(அரசாங்க சார்பு நிலை எடுக்கும் தமிழ்க் கட்சிகளின் அமைப்பு) சந்தித்துப் பேசி இருப்பதும், இரு பிரிவும் ஒரே குரலில் அரசிடம் தீர்வுத் திட்டம் குறித்து ஒரே குரலில் கேட்கவுள்ளதும் வரவேற்க்கக் கூடிய ஒரு விடயம்.

கேட்பதை உரக்க,தெளிவாக,அதிகமாகக் கேளுங்கள். கூடக் கேட்டால் தான் வெட்டுக் கொத்துக்கள்,கழிவுகளுக்குப் பிறகு ஓரளவாவது கிடைக்கும்.
த.தே.கூ அரசாங்கத்துடன் இணங்கிப் போகின்ற நேரம் அரசு பரிசாக ஏதாவது கொடுக்கக் கூடும்.


பாரதி


நேற்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள்.
ஆனால் தமிழர்களில் அதுவும் கவிஞர்களில் எத்தனை பேருக்கு இது ஞாபகம் இருக்கிறது.வேதனையான விஷயம் நாம் தமிழர் முக்கியமானவர்களை மறந்துவிடுகிறோம்.
அனல் கவிதைகளை அழகு தமிழில் தந்த அந்தக் கவிஞன் தமிழின் மிக சிறந்த கவிஞர்களில் முக்கியமானவன்.
தமிழை எளிமைப்படுத்துவதிலும் தெளிவுபடுத்துவதிலும் பாரதியை யாரும் தவிர்த்துவிட முடிவதில்லை.

பாரதியார் பற்றி மாற்று விமர்சனங்கள் எதிர்க் கருத்துக்கள் வந்த போதிலும் சிறு வயது முதல் அந்த மீசைக் கவியின் கவிதைகள் என் மனதில் தந்த ஆழ்ந்த பாதிப்பு சினிமாப் பாடல்களை நாள் தோறும் உச்சரிக்கும் இந்தக் காலகட்டத்திலும் இருக்கிறது.இன்றும் நான் எனது நிகழ்ச்சிகளின் இடையே பாரதி பாடல்கள் ஒலிபரப்பத் தவறுவதில்லை.

அடிக்கடி நான் எனக்குள்ளே சொல்லிக் கொள்வதும், ஒலிபரப்புவதுமான வரிகள்...

பிறர் வாடப் பல செயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போல -
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? 




மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைவரவேண்டும்



 சிக்கு புக்கு



அண்மையில் வந்த புதிய திரைப்படங்கள் எவற்றையும் உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அலுவலக கூட்டங்கள்,அவசர புதிய ஒழுங்குகள் என்று தூங்குகின்ற நேரத்துக்கு வீடு வருகையில் எவ்வாறு இது சாத்தியமாகும்?

நேற்றும் நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தாலும் இரவு நிகழ்ச்சிக்குப் பிறகு சிக்கு புக்குப் பார்க்கப் போவதாக முடிவெடுத்தோம்.
ரத்த சரித்திரம் கடும் வன்முறை என்று கேள்விப்பட்டதால் தனியே பின்னர் போவதாக முடிவு.
கேப்டனின் விருதகிரி -- பின்னர் யோசிக்கலாம்.
மைனா இங்கே ஓடி முடிந்துவிட்டதால் DVDக்காக வெயிட்டிங்.

சிக்குபுக்கு பார்க்கப் போனதில் பிடித்த சில விஷயங்கள்....

1.தூறல் நின்றாலும் பாடல்.. காட்சியும் உருக்கமாகவே இருந்தது.
2.படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வந்த அழகான இயற்கைக் காட்சிகள்
3.பிளாஷ் பாக்கில் வந்த ஆர்யாவின் அறிமுக ஜோடி நாயகி ப்ரீத்திகா. சில காட்சிகளில் ரசிக்கக் கூடிய ரசனையான அழகோடு இருந்தார்.

4.இடைவெளியின் போது கொறித்த மரவள்ளி சிப்ஸ்
5.படம் முடிந்து வீடு திரும்பும்போது வந்த வேகம். சனிக்கிழமை இரவு நேரம் வீதியில் ஆச்சரியகரமாக வாகனங்கள் மிகக் குறைவு.கேட்டுக்கொண்டு வந்த வெற்றி வானொலியின் இசை ராஜாங்கம் நிகழ்ச்சியின் இரு பாடல்கள் ஒலித்து முடிவதற்குள் வீட்டில் நாம்.

இதுவரை நான் பதிந்த மிகச் சிறிய திரைப்பட விமர்சனங்களில் ஒன்று இது.


பாசில்

இயக்குனர் பாசிலின் திரைப்படங்கள் எப்போதுமே நான் ரசித்தவை.
இவரது கண்ணுக்குள் நிலவு தவிர ஏனைய அத்தனை படங்களையும் ஒவ்வொரு காட்சிகளாக ரசித்திருக்கிறேன்.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பூவிழி வாசலிலே
வருஷம் 16
காதலுக்கு மரியாதை என்பன மிக ரசித்தவை.

அண்மையில் வீட்டில் ஓய்வாக இருந்த சில மணி நேரங்களில் ராஜ் டிவி இல் ஒளிபரப்பான பாசில் திரைப்படங்களைக் கொஞ்ச நேரமாவது பார்க்கக் கிடைத்தது.
எ.பொ.அம்மாவுக்கு
இதுவரை நான் பார்க்கத் தவறியிருந்த கிளிப் பேச்சுக் கேட்கவா
(மம்மூட்டி இயல்பாக கலக்கியிருப்பார்.பாசிலுக்கே உரித்தான எளிமையான,கதை விலகாத நடை.கதையோடு செல்லும் நகைச்சுவை,உருக்கமான முடிவு)


மம்முட்டியும் எனது மனதுக்குப் பிடித்த ஒரு நடிகர்.அண்மையில் தான் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மம்மூட்டியின் படங்கள் ஐந்து அடங்கிய DVDகள் இரண்டு வாங்கியிருக்கிறேன்.பார்க்கத் தான் நேரமில்லை.

பல தடவை என் பதின்ம வயதுகளிலிருந்து பார்த்து ரசித்து இன்னும் அலுக்காமலிருக்கும் வருஷம் 16 நேற்று ஜெயா டிவியில் பகல் ஒளிபரப்பானது.கடமைக்கு செல்லுமுன் விளம்பரத் தொல்லைகளோடு ரகுவரன் வரும் காட்சிவரை பார்த்துவிட்டுத் தான் போனேன்.

பாசில் பாணித் தமிழ்ப் படங்கள் மனதுக்கு மிக நெருக்கமானவை.

இதைப் பதிவிடும் நேரம் கே டிவியில் தளபதி போய்க் கொண்டிருக்கிறது.
இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள்.
அவரது மைல்கல் திரைப்படங்களில் ஒன்று.. பொருத்தமாகத் தெரிவு செய்துள்ளார்கள்.
ரஜினிக்கும் ரசிகருக்கும் வாழ்த்துக்கள்.

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*