சீ சீ சீ-சமயம்-சச்சின்-சர்ச்சை - சில விளக்கங்கள்

ARV Loshan
16
என்னுடைய சீ சீ சீ பதிவு சில சர்ச்சைகளைத் தோற்றுவித்திருப்பது தெரிகிறது.
சர்ச்சைகள் உருவாவது நல்ல விளக்கத்தையும் தெளிவையும் தருமென்றால் அது மகிழ்ச்சியே.
நான் எந்தவொரு விடயத்தையும் பொதுமைப்படுத்தி நோக்குவதில்லை என்று ஆணித்தரமாக 
சீ சீ சீ பதிவின் பின்னூட்டங்களுக்கான பதிலில் குறிப்பிட்டிருந்தேன்.


பதிவில் நான் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுமே பல பேரின் மனதின் மெல்லிய உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை தான்.
என் மனதிலும் இந்த மூன்று சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பைத் தான் பதிவாகக் கொட்டி இருந்தேன்.

வானொலியில் நான் பேசும்போது ஒரு நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதால் மிக மிக அவதானமாக நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சொற்களின் மீதும் கவனம் செலுத்தியே நிகழ்ச்சிகளில் பேசுவதுண்டு. 


உணர்ச்சிவசப்படாமை ஒலிபரப்பாளனைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு விடயம்.


எனினும் நான் ஒரு சாதாரண மனிதனாக ரத்தமும் சதையுமுள்ள லோஷனாக இருக்கும் என் வலைத்தளத்தில் எனது தனிப்பட்ட உணர்வுகளை மனதில் நினைப்பதுபடியே கொட்டிவருகிறேன்.
ஆனால் அதிலும் கூடுமானவரை யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்கிறேன்.


அதற்காக யாரும் மனம் நோவார்களோ என்றெண்ணி எனது கருத்தை சொல்லாமலும் இருக்கமுடியாது தானே?
எனது பதிவுகள் நான் என் பதிவைப் பற்றி சொல்லி இருக்கும் அறிமுகம் போல "என்னைப் பற்றியும் என் உணர்வுகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாகவே " இருக்கின்றன.


மனதில் அந்த நிமிடத்தில் தோன்றும் எண்ணங்கள் எழுத்தாக வந்து விழவேண்டும்.
போலி வார்த்தை சாயங்கள் பூசிய பின் அந்த எழுத்துக்களின் வலிமை அற்றுப் போய் விடுகிறது என்றே நான் நினைக்கிறன்.


இதனால் தான் எனது பதிவுகள் மூலமாக அதிகளவான நண்பர்களும் சில விரல் விட்டு எண்ணக் கூடிய எதிர்க் கருத்துடையவர்களும்(எதிரிகள் என்ற சொல்லில் உடன்பாடு கிடையாது.. நான் என்ன ஹீரோ அவர்கள் வில்லன்களா? எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னை நேசிக்க ஆரம்பிக்கலாம்..நானாக யாரையும் எதிரிகளாக்கிக் கொள்வது கிடையாது) எனக்குக் கிடைத்துள்ளார்கள்.


விரைவும் மனதில் பட்டதைப் பட்டபடி எழுதவேண்டும் என்ற எண்ணமும் என் பதிவுகளின் சில சொற்றொடர்களில் மயக்கங்களையும் பிறழ்வு பட்ட கருத்தையும் வாசிப்போர் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றன போலும்.


நல்ல நண்பர்கள் சிலர் விளக்கமாக விளங்கிக் கொண்டாலும் ஒரு சிலர் கருத்துப் பிறழ்வு கொண்டிருப்பதனாலேயே இந்தப் பதிவு..
முக்கிய விடயம் - தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கே இது.. வேண்டுமென்றே விஷமத்தனமாகப் பொருள்கொண்டு விதண்டாவாதம் புரிவோருக்கு இந்தப் பதிவென்ன,இனி ஆயிரம் பதிவிட்டாலும் புரியாது.


முதல் விடயம்..
அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.


அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?இதில் வந்த உல்லாச அரபுக்கள் என்ற சொற்பதத்தைப் சிலர் பொதுமைப் படுத்தி விளங்கிக் கொண்டு விட்டார்கள்.


எல்லா அரபுக்களையும் நான் சொல்லவில்லை என்பது முழுவதுமாக அந்த விடயத்தை வாசித்திருந்தால் விளங்கியிருக்கும்.


மார்க்கம் அன்பைப் போதிக்கிறது என்று நான் இஸ்லாம் மார்க்கத்தை அன்பு மார்க்கமாகத் தான் சொல்லி இருக்கிறேன் என்பதையும் காணுங்கள்.


இரண்டாவது விடயம்
காளி கோயில் மிருகபலியைப் பற்றி குறிப்பிட்ட இடத்தில் நான் இட்ட படங்கள்..
தீவிர சமய பக்தி உள்ள ஒரு நண்பர் நான் இட்ட படங்கள் இந்து சமயத்தை மட்டும் தாக்குவதாக தானும் இன்னும் ஒரு சிலரும் கருதுவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.


சமயம் என்பதை நான் ஏற்கிறேன்/ஏற்கவில்லை என்பது ஒரு புறமிருக்க,இப்படியான பலிகள் மூலம் இளைஞர்கள்,எதிர்கால சமுதாயம் சமயங்கள் மீது நம்பிக்கை கொள்ளுமா என்பதை நான் கொஞ்சம் கோபத்துடன் கேட்பதற்கே அந்தப் படங்களை குறியீடுகளாகப் பயன்படுத்தினேன்.


கடவுள் மறுப்பு/மூட நம்பிக்கை மறுப்பு/சமய மறுப்பு என்பவற்றுள் நூறு சதவீதம் இல்லாவிடினும் முட்டாள் தனமானது என்று நான் நினைக்கும் விடயத்தை என் பதிவு ஒன்றினூடாக நான் சொல்ல நினைத்ததே அது!


சமய நம்பிக்கையே பெரிதாக இல்லாத நான் சமயம் பற்றி எது சொன்னாலும் அவரவர் தங்கள் சமயங்களைத் தான் தாக்குவதாக வரிந்து கட்டிக் கொண்டு வாராங்களே...


கடவுளே காப்பாத்து !!!!!
மூன்றாவது விடயம்..


இது இவ்வளவு சீரியசாக எடுக்கப்படும் என்று நான் நினைக்கவேயில்லை.


எனக்கு இலங்கை,ஆஸ்திரேலிய அணிகளை கிரிக்கெட்டில் மிகப் பிடிக்கும் என்பதை நான் எப்போதும் மறைத்ததில்லை.
போலி நடுநிலைவாதியாக என்னைக் காட்டிக்கொண்டதுமில்லை.
ஆனால் எதிரணிகளின் திறமைகள் வெளிப்படும்போது எப்போதும் மனம் திறந்து பாராட்டத் தவறியதுமில்லை.


அதேபோல சில உலகத் தரம் வாய்ந்த சில வீரர்கள் என் விருப்பப் பட்டியலில் இல்லாவிட்டாலும் அவர்கள் மேல் வெறுப்பு வந்ததில்லை.
மதிப்புடன் அவர்களை சிலாகித்து பதிவிட நான் தவறியதுமில்லை.


சச்சின் பற்றிய பதிவுகள்,அனில் கும்ப்ளே,சௌரவ் கங்குலி,தோனி, ஏன் கெவின் பீட்டர்சன் பற்றிய பதிவுகளையும் பார்க்கலாம்..


இப்படியிருக்க சீ சீ சீ பதிவில்...


//
இந்த Spot betting எனப்படும் கிரிக்கெட் சூதாட்டமானது போட்டிகளின் முடிவுகளை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது எனினும் இதுவும் கிரிக்கெட்டுக்கு ஏற்படுத்தும் துரோகம் தான்.
போட்டியின் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்கெனவே பேசி வைத்தது போல பணம் வாங்கிக் கொண்டு செயற்பட இந்தப் புதிய பையன் ஆமிரினால் மட்டுமல்ல,உலக சாதனையாளர்
 சச்சின் டெண்டுல்கரினாலும் முடியும்.
யாரின் சந்தேகப் பார்வையும் படாது.. // 


இந்தப் பந்தி தான் சிலருக்கு-வெகு சிலருக்கு ஆதங்கத்தை அளித்திருக்கிறது.


அவர்கள் விளங்கிக் கொண்ட நேரடி அர்த்தம் சச்சின்/சச்சினும் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டங்களை நிர்ணயிக்கிறார் என்று நான் சொல்கிறேன்..
அல்லது சச்சின் பணம் வாங்கிக் கொண்டு மோசடியாக ஆடினால் யாருக்கும் தெரியாது;சந்தேகப்படமாட்டார்கள்.


ஆனால் நான் சச்சின் என்ற சிகரத்தை இந்த ஒப்பீட்டில் இடக் காரணம்- யாருடனும் ஒப்பிடப்பட முடியாத ஒருவர் கூட இவ்வாறு Spot bettingஇல் ஈடுபடலாம் என்று கட்டுவதற்காகவே.


சச்சின் டெண்டுல்கராலும் முடியும் என்பது உண்மையில் சச்சினை மற்றவர்களிடமிருந்து ஒருவகையில் பிரிக்கிறது. சச்சின் உயர்ந்தவர் என்ற அர்த்தம் வருகிறது.


நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகளில் நேரேதிர்ப் பொருட்களை ஒப்பீடு செய்வோமே..


மலையும் மடுவும்,பச்சிளங் குழந்தை முதல் பல்லுப் போன பாட்டா வரை என்றெல்லாம்.. 
அதே போலத் தான் இப்போது விளையாட ஆரம்பித்த ஆமீரையும் இப்போதிருக்கும் வீரர்களில் சிரேஷ்டரான சச்சினையும் வசனப் பிரயோகத்தில் கொண்டுவந்தேன்.


சச்சினை நான் எப்போதுமே மதித்தே வந்திருக்கிறேன்.மற்றவர்கள் சகட்டுமேனிக்கு சச்சின் பற்றி விமர்சித்தபோதும் சச்சின் ன் favourite இல்லாவிட்டாலும் என்றுமே Sachin is great என்பதை நான் மறுத்ததில்லை.
(இது சச்சினுக்கும் தெரியும் என்று சொல்ல ஆசைதான்.. ஹீ ஹீ)


ஆகவே நண்பர்ஸ்.. புரிந்துகொள்ளுங்கள்..
No misunderstanding please..


ஒன்றை மட்டும் இந்த சிக்கல்களில் இருந்து புரிந்துகொண்டேன்.. வாசிக்கும் பலருக்கு இன்னும் புரியக் கூடியவிதத்திலும் மயக்கம் தராத விதத்திலும் பதிவுகளை எழுத நான் கற்றுக்கொள்ள வேண்டும் :)Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*