தேர்தல் ஆணையாளரால் வெற்றியாளருக்கு வாழ்த்து..
நல்லா சிரிக்கிறாங்கப்பா..
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தது.
மீண்டும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார்.
வடக்குத் தமிழர்கள் புறக்கணித்த 2005 தேர்தலில் மிக சொற்ப வாக்குகளால் வென்றவர். இம்முறை (வடக்குத் தமிழர்கள் பலபேர் பலவிதமாக வாக்களிக்க மறுக்கப்பட்ட நிலையிலும்) 19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரு வெற்றியீட்டியுள்ளார்.
அரசுக்கு எதிரான – பொன்சேகா ஆதரவு அலை மிக வலுவாக வீசுகிறது என்று பரவலாக நம்பப்பட்டு, அரச தரப்பு அமைச்சர்களே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையிலும் தப்பித்தவறி மகிந்த மீண்டும் வென்றாலும் அது மிக சொற்ப சதவீதத்தாலோ அல்லது மீள் எண்ணுகையாலோ மட்டுமே சாத்தியம் எனக்கருதப்பட்ட நிலையில் இந்தப் பாரிய வெற்றி அனைவருக்குமே ஆச்சரியம் தந்துள்ளது.
புல்லட்டின் பதிவிலிருந்து சுட்டபடம்..
புல்லட்டின் நச் கமென்ட்
பச்சை பொன்சேகா வென்ற இடங்கள் .. நீலம் மஹிந்த வென்ற இடங்கள்..
பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது... :P
எந்தவித மோசடிகளுமில்லாத வாக்களிப்பு எனச்சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையாளரும் நீதியும் சுதந்திரமுமான தேர்தல் என்றுள்ளார். ஜனாதிபதியையும் அரசையும் கடுமையாக விமர்சித்து வந்த பல ஊடகங்களும் மிகச்சொற்ப முனுமுனுப்புக்களோடு அமைதியாகிவிட்டன.
மகிந்த அரசின் மீது எப்போதுமே எதிர்ப்பு, திருப்தியின்மை காட்டி வரும் தமிழ் பேசும் பிரதேசங்களில் படுதோல்வி கண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ (வடகிழக்கு மட்டுமல்ல, நுவர எலிய, கொழும்பில் தமிழ் பேசும் பிரதேசங்களிலும் தான்) மற்றைய இடங்களிலெல்லாம் அதற்கெல்லாம் பலமடங்கு வாக்குகளை குவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளும், தோற்றுப்போன ஜெனரல் சரத் பொன்சேகாவும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்றும் கூக்குரல் எழுப்புவதைத் தோற்றுப்போனவர்களில் ஏமாற்றப் புலம்பல் என்று இலகுவாகத் தட்டிக்கழித்துவிட்டாலும்
சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
இப்போது ஒவ்வொரு பக்கத்தால் கிளம்பும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இன்னும் பல சந்தேகங்களை எழுப்பலாம்
1.தேர்தலுக்கு முந்திய வாரம் வரை வந்த சகல கருத்துக்கணிப்புக்களும் தலைகீழாகப் பொய்த்துப் போனது எவ்வாறு?
2. ரணில் விக்ரமசிங்க 2005இல் பெற்றதைவிட, அவரைவிட அதிகளவு ஆதரவும், வரவேற்பும் பெற்றவராகக் கருதப்பட்ட, சரத் பொன்சேகா இம்முறை குறைவாக வாக்குகள் பெற்றது எப்படி?
3. தேர்தலுக்கு முதல்நாள் கூட அரச ஆதரவு ஊடகங்கள், அரசாங்கம், அரச ஆதரவுக் கட்சிகள் முறைகேடாக நடப்பதாகவும், நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முடியாது தடையாக இருப்பதாகவும், தான் பொறுமையை இழந்துவிட்டதாகவும் கடுமையாகக் கவலை தெரிவித்து, இந்தக்காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு - இது நீதியாகவும் சுதந்திரமாகவும் நடந்த தேர்தல் என அமைதியாகவும் கூறியது ஏன்?
4.அப்படியிருந்தும் அவர் இன்னும் பதவி விலகும் முடிவை மாற்றாததும், அதற்காக அவர் குறிப்பிட்ட காரணங்களை இன்னும் மாற்றாமைக்கும் என்ன காரணம்?
5.தேர்தல் ஆணையாளர் பற்றி இடை நடுவே எழுந்த பல்வேறு பரபரப்புக்கள்,அவரது கையெழுத்துக் குழப்பம் பற்றி இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லையே?
6.இம்முறை தேர்தல் முடிவுகளை வெளியிட்ட முறை மாற்றப்பட்டது ஏன்?
7.அதிகாலையிலேயே வெளியிட்டிருக்கப்படக்கூடிய பல முடிவுகள் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்பட்டமைக்கான காரணம் எது?
வழமையாக ஆளும் தரப்புக்கு சாதகமான முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் ஆளும் தரப்பு தோல்வியுற்ற முடிவுகள் வெளியிடப்படுவது வழமை தானெனினும் இம்முறை பல குழப்பங்களை இது ஏற்படுத்தியது.
தேர்தல்கள் செயலகத்தால் அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு ஒன்று
8.தமிழர்கள் ஒருவரேனும் இருப்பது சந்தேகமான பிபிலை, மொனராகலை, மஹியங்கனை, தென் மாகாணத்தின்,சபரகமுவா மாகாணத்தின் பல இடங்களில் சிவாஜிலிங்கத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது எப்படி? சிங்களவர் இனபேதம் மறந்து சிவாஜியாரைத் தெரிவு செய்தனரா?
9.வன்னி மாவட்டம், யாழ்ப்பாண மாவட்டம் போன்ற சிங்களவர் அரிதான மிக அரிதான இடங்களில் கூட சீலரத்ன தேரருக்கும், மகிமன் ரஞ்சித், அச்சல சுரவீர போன்றோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்தது எப்படி?
10.அத்துடன் தபால் வாக்குகள் தவிர ஏனைய எல்லா வாக்குப் பதிவுகளிலும் ஒரு வேட்பாளருக்கும் ஒரு வாக்கேனும் கிடைக்காமல் போகவில்லையே? அது எப்படி?
11.இம்முறை சரத் போன்செக்காவுக்கு தேர்தலில் கிடைத்த வாக்குகள்
மகிந்த அரசுக்கு எதிரான வாக்குகளா?
பொன்சேகாவுக்கு ஆதரவான வாக்குகளா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,முஸ்லிம் காங்கிரசும் கேட்டதற்காக மக்கள் அவர்களைத் தம் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொடுத்த வாக்குகளா?
12.கணினிமயப்படுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுற்றம் சுமத்துவது போல செய்ய இயலுமா? அவ்வாறு செய்யப்பட்ட மோசடி நிரூபிக்கப்பட்டால் (எப்படி நிரூபிக்கலாம் என்பது இன்னொரு சந்தேகம்) மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா அல்லது உண்மையான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியில் மாற்றம் வருமா?
13.மறுபக்கம் தமிழ்பேசும் மக்களின் வாக்குகள் பெரியளவில் இல்லாமலேயே மீண்டும் அசுர பலத்தோடு பதவியேற்கும் ஜனாதிபதி தமிழ் பேசுவோரைக் கவர நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தமிழில் பேசுவதை இனிக் குறைத்து தமக்கு வாக்களித்தோரை மட்டும் கவனிக்கப் போகிறாரா?
14.நேற்று இந்தியாவின் NDTV தொலைக்க்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி ஒரு விஷயம் சொன்னார் " தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வு என்னிட்ம் இருக்கிறது. எனினும் அதை பெரும்பான்மையானவர்களான சிங்களவரின் சம்மதத்துடனேயே வழங்கவேண்டும். எனவே பெரும்பான்மையினரின் சார்பாக சிந்தித்தே அது பற்றி நடவடிக்கை உள்ளேன்" .. அப்படியானால் 13வது திருத்த சட்டத்துக்கு மேலாக எதுவுமே நடக்காதோ?
15.தன்னுடன் சேர்ந்திருக்கும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள்,கட்சிகள் பெற்றுத் தராத சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதற்காக அதிக மக்கள் ஆதரவு பெற்ற ஏனைய சிறுபான்மைக் கட்சிகளை ஜனாதிபதி நாடுவாரா?
இதெல்லாம் அரசியலில் அப்பாவியான எனக்கு வந்த சந்தேகங்கள்..
உங்களையெல்லாம் விட்டால் யார் உள்ளார்கள்? தெரிந்தவர்கள்,தெளிந்தவர்கள் (தீர்த்துக்கட்டாமல்) தீர்த்துவைக்கலாம்..