January 23, 2010

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்? - மீண்டும்

முதலில் இட்ட இடுகையை வாசிப்பதில் பலர் சிக்கலை எதிர்நோக்கியதால் மீளவும் பிரசுரிக்கிறேன்... எந்தவொரு மாற்றமும் செய்யாமல்..

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 4 நாட்கள் இருக்கின்றன.
எப்போதோ எழுதவேண்டும் என நினைத்திருந்தாலும் அலுவலக வேலைகளும், சில பல முக்கிய கடமைகளும் இன்றுவரை இழுக்கவைத்து விட்டன.
ஒவ்வொரு நாளும் கட்சித் தாவல்களுக்கும், குற்றச் சாட்டுக்களுக்கும், அடிதடிகள்,வன்முறைகளுக்கும் குறைவேயில்லாமல் நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
தேர்தல் ஆணையாளர் ஒருபக்கம் நியாயமான தேர்தல்,நீதியான அணுகுமுறை எனக் கூவிக் கொண்டே இருக்கிறார்..
கட் அவுட்டுகள்,சுவரொட்டிகளைக் கழற்றுமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டும்,பின்னர் கோரிக்கை முன்வைத்தும், அதன் பின் இப்போது கெஞ்சிக்கேட்டும் பயனில்லை..
இன்னமும் வீதிக்கு வீதி ஜனாதிபதி சிரிக்கிறார்..
ஏதோ போனால் போகட்டும் என்று 23ஆம் திகதிக்குப் பின்னர் எல்லா சுவரொட்டிகளும்,பதாதைகளும் கழற்றப்படும் எனப் போலீஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் பெரியவரின் ஆளுயர,ராட்சத கட் அவுட்ட்க்கள் அகற்றப்படுவதை ஆதரவாளர்கள் எதிர்த்ததையும் போலீஸ் வாய்மூடி மௌனிகளானதையும், போலீஸ் நிலையங்களருகேயே அமைக்கப்பட்ட இத்தகைய கட் அவுட்டுகள் அப்படியே இருப்பதையும் நானே கண்டுள்ளேன்.
பொறுமையின் எல்லையை மீறிவிட்ட தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க மிக விரக்தியுடன் இந்தத் தேர்தல்களின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை எவ்வளவு தூரம் இந்தத் தேர்தல் வன்முறைகள் நிறைந்தது என்பதையும், சட்டவிதிகளை மீறியது என்பதையும் காட்டுவதாக உள்ளது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை எனவும், நீதியாக தேர்தலை நடத்த தான் எடுக்கின்ற முயற்சிகளை அரசியல் கட்சிகள்,குறிப்பாக ஆளும் தரப்பு மீறிவருவதாகவும் தேர்தல் ஆணையாளர் சொல்லி இருப்பது இலங்கை அரசின் மீது வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கறுப்புப் புள்ளியாகும்.
ஏற்கெனவே அரச ஊடகங்கள் ஜனாதிபதிக்கு பக்கசார்பாக செயற்படுகின்றன என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருந்த தேர்தல் ஆணையாளர், அரச ஊடகங்களைக் கண்காணிக்க தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரையும் நியமித்திருந்தார்.
அந்த அதிகாரி விடுக்கின்ற கோரிக்கைகளை(கவனிக்க உத்தரவுகளை அல்ல)யும் அரச ஊடகங்கள் செவிமடுக்காமல், ஜனாதிபதியின் புகழ் மட்டுமே பாடியும், எதிரணி வேட்பாளர் மீது சேறுபூசுவதுமாக இருக்கையில் அதிகாரியின் நியமனம் பயனில்லை என அவரை விலக்கியும்விட்டார்.
அரச ஊடகங்களின் இந்த செயற்பாடு முழுக்க முழுக்க சட்டவிரோதமானது என அனைவருக்குமே தெரிந்தும் வாய்மூடித் தான் இருக்கவேண்டியுள்ளது.
இன்னொருபக்கம் வன்முறைகளின் அளவு இம்முறை தேர்தலில் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு உக்கிரமாகியுள்ளது.
வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை 3 கொலைகள்;800 க்கு மேற்பட்ட வன்முறை சம்பவங்கள்..
போலீஸ் என்ன செய்கிறது என்ற கேள்விக்கு எம்மைப் போலவே தேர்தல் ஆணையாளராலும் பதில் சொல்ல முடியாது.
இந்த நிலை அரசுக்கு எதிரான மக்கள் அதிருப்தியாகவும் மாறலாம்..அதேநேரம் வாக்களித்தும் என்ன பயன் என்ற விரக்தி நிலைக்கு அவர்களை ஆளாக்கி வாக்குகளின் மூலமாக தம் விருப்பத்தை சொல்லவிடாமலும் செய்யலாம்.
கட் அவுட்டுகள்,பதாதைகள்,சுவரொட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சரத் பொன்சேகாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பதை இலங்கையில் உள்ளோர் மிக நன்கறிவர்.
அரச வளங்களை எவ்வளவு உச்சபட்சமாகப் பயன்படுத்தலாமோ அவ்வளவுக்குப் பயன்படுத்தி உச்சப்பலனைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி மற்றும் குழுவினர் முயல்கின்றனர்.
22 பேர் போட்டியிடும் இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையில் இருவருக்கிடையிலான தேர்தல் தான் என்பது அனைவருக்குமே தெரியும். மற்ற இருபதுபேரும் தமக்கே தாம் போடுவரா என்பதே பெரிய சந்தேகம்.
மூன்றாமிடத்தைப் பெறுவதோடு கட்டுப்பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள சிவாஜிலிங்கமும், விக்ரமபாகு கருணாரத்னவும் போட்டிபோடக் கூடும்.
பிடித்த வேட்பாளரோ, கொள்கையில் நல்லவரோ என்பதைவிட வெற்றி பெறுபவராகவும் இதன் மூலம் இயல்பான,சகஜ வாழ்க்கைக்கான நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளத் தமது வாக்கைப் பயன்படுத்தவேண்டும் என்பதை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்காளர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் என்பது மகிந்த-சரத் போட்டியின் முக்கியத்துவத்தில் தெரிகிறது.
ஜனாதிபதியா ஜெனரலா என்ற மிக முக்கியமான கேள்விக்கு யாராலும் அவ்வளவு இலகுவாக விடைகூற முடியாத நிலை இப்போதும் நிலவுகிறது. 26 ஆம் திகதி வாக்களிப்புக்குப் பிறகு இறுதி முடிவுகள் வரைகூட இந்த நிலை தொடரலாம்.
அந்தளவுக்கு மிக நெருக்கமான விறுவிறுப்பான ஒரு தேர்தலாக இது மாறியுள்ளது.
மகிந்த ராஜபக்ச - பிரகாசமான எதிர்காலம்
பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரம்
ஒவ்வொரு நாளுமே காட்சிகளும்,பலம் பலவீனங்களும் மாறிக் கொண்டுள்ளன.
கடைசி நேரங்களில் கட்சி தாவுவோரும், தளம்பல் நிலை வாக்காளர்களும் இதனால் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
பிரசாரங்களில் யுத்த வெற்றியே பிரதானப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த வெற்றியின் பிரதான காரணம் யார் என்பதை முன்னிறுத்தியே இரு பிரதான வேட்பாளர்களும் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், பொருளாதாரம், இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் திட்டங்கள் என்பன பற்றியும் வாக்காளர்கள் சிந்திக்காமலில்லை.
இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் தீர்வுத் திட்டம் பற்றி இருவருமே எதையும் தெளிவாக தமது விஞ்ஞாபனத்தில் கூறாவிட்டாலும் கூட, தமிழரைப் பொறுத்தவரை இதுவரை பதவியிலிருந்து எதுவும் செய்யாதவருக்கு சந்தர்ப்பம் கொடுத்தாயிற்று.. எனவே இம்முறை மாற்றலாம் எனத் தெளிவாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
சரத் பொன்சேக்கா - நம்பிக்கைக்குரிய மாற்றம்
பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரம்
எனினும் தமிழரின் இந்த ஒட்டுமொத்த தெளிவும்(மொத்தமாகவா என்பது முடிவுகளில் தான் தெரியும்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் போன்செக்காவுக்கே தங்கள் ஆதரவு என்று தெரிவித்தபின்பும்,அமுங்கியிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக பொன்சேக்கா - சம்பந்தன் ஒப்பந்தம், ஹக்கீம்-பொன்சேக்கா ஒப்பந்தம் என்று ஜனாதிபதியின் பிரசார மேடைகளில் இனவாதம் கக்கப்படுவது, சிங்களக் கிராமிய மக்களின் வாக்கைக் குறிவைத்து என்பதும்,சிங்களப் பேரினவாத அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்தவும் என்று புரிகிறது.
ஜனாதிபதி தொடர்ந்து தமிழ்மக்கள் கூடும் மேடைகளில் தமிழில் பெசிவந்தும் கூட இன்னமும் அவருடன் கூட இருப்பவர்கள் தமிழ் மக்களை, தமிழ்பேசும் மக்களை நெருங்கி வரமுடியாமல் உள்ளது அவரது வெற்றிக்கு மிகப் பாதகமாக அமையலாம்.
இன்னொரு உறுத்தலான,கேவலமான விடயம்.. ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை,இந்தியா போன்ற நாடுகளின் தேர்தல்களுக்கான சாபம்.. சேறுபூசும் குற்றச்சாட்டல் பிரசாரம்.
மாறி மாறி எதிரிகள் மீது அள்ளி இறைக்கப்படும் குற்றச்சாட்டு சேறுகளுக்கு அளவில்லை.
இவற்றுள் பல அடிப்படை இல்லாதவை என்றபோதிலும், இலங்கையின் வாக்காளர்களில் 47 வீதமான கிராமப்புற வாக்காளர்கள் இவற்றை நம்பி, இவற்றையே ஆதாரமாகக் கொண்டு தம் வாக்குகளை வழங்கும் கொடுமையும் உள்ளது.
பொன்சேக்கா இராணுவப் பின்னணி கொண்டவராக இருப்பதால் அவரது ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்ற வகைப் பிரசாரங்கள் நகைச்சுவைக்கு மட்டுமே உதவுகின்றன.
அதுபோல அவர் மீது சுமத்தப்படுகின்ற பல குற்றச்சாட்டுக்களுக்காக ஏன் அவரைக் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழாமலும் இல்லை.
சரத் பொன்சேக்கா - நம்பிக்கைக்குரிய மாற்றம் என்று தம்பக்கம் சேர்ந்துள்ள பலதரப்பட்ட கட்சிகளையும் அரவணைத்துப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.கறை(ஊழல்) படியாத கரம் என்பதும்,மாற்றம் ஒன்று வேண்டும் நினைப்பவர்களது ஒரே தெரிவு என்பதும் இவருக்கான பலங்கள்..
தமிழர்களின் அதிக வாக்குகளைத் தீர்மானிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (இப்போதும் கூட இவர்களைத் தான் முன்னணி தமிழ் பிரதிநிதித்துவமாகக் கருதவேண்டியுள்ளது) முஸ்லிம்களின் வாக்குவங்கிகளை அதிகம் தமதாக்கியுள்ள முஸ்லிம் காங்கிரசும் இருப்பது பெரும் பலம்.
கொள்கையளவில் எதிரிகளான JVPஉம், ஐக்கிய தேசியக் கட்சியுமே ஒன்றாக இணைந்து பொன்செக்காவுக்கான பிரசாரத்தை மேற்கொள்வது மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.
இன்னொரு சுவாரஸ்ய விடயம், மகிந்த ராஜபக்சவைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட மங்கள சமரவீர+JVP கூட்டணி இம்முறை அவரை அகற்றப் பாடுபடுவது. இவர்களின் தீவிர,அதிரடி பிரசாரங்கள் கடந்தமுறை ஏராளமானோரைக் கவர்ந்திருந்தன.
இம்முறை ???
இவர்கள் எடுத்துள்ள பிரதான ஆயுதமாக ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்கள் கொள்ளைகள் அமைந்துள்ளன.
மறுபக்கம் பதவியிலுள்ள ஜனாதிபதி மீண்டும் அதைத் தக்கவைக்கப் படும்பாட்டை சில மாதங்களுக்கு முன்னர் அவரே நினைத்திருக்கமாட்டார்.
புலிகளுக்கெதிரான யுத்தவெற்றி என்ற ஆயுதம் அவருக்கு எதிராகவே மாறியுள்ளது.
மகிந்த சிந்தனை 2 என அவர் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் தமிழரைத் திருப்திப்படுத்தும் விடயங்கள் இல்லை. எனினும் அவசர அவசரமாக கொடுத்து வரும் சலுகைகள்,தனது ஆளுமை, கோடிக்கணக்கான விளம்பரங்கள் மூலமாக சிங்கள மக்களின் வாக்குவங்கியைக் குறிவைத்துள்ளார்.
எனினும் அதன் பின்னருள்ள பல ஊழல்கள்,சொத்துக் குவிப்புக்கள் போன்றவை தான் மக்களை சிந்திக்க வைக்கின்றன.
மலையகத்தின் இருபெரும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களின் பல்வேறு பிரதிநிதிகள்(இவர்களில் அநேகர் மகிந்தரின் குயுக்தி,யுக்தியினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்) ஆகியோர் மூலமாக கிடைக்கும் வாக்குகளும் பிரதானமானவை.
ஜனாதிபதி தனது சாணக்கியத்தினால் உடைத்து எடுத்தோரைவிட அதிக அங்கீகாரத்தை அந்தந்த மக்களிடம் பெற்றவர்களின் முக்கியத்துவத்தை இன்னும் உணராமை இம்முறை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
இலங்கையின் சில இடங்களில் துரித அபிவிருத்திக்கான சில முன்னெடுப்புக்களும், வீதிகளின் விஸ்தரிப்புக்களும் ஜனாதிபதியின் சாதனைகளாக சொல்லப்பட்டாலும் யுத்தவெற்றியும், இலங்கை வெளிநாடுகளுக்கு அடிபணியாத ஒன்று எனக் காட்டப்படும் வீரப்பிரதாபங்களுமே சிங்களமக்கள் முன்னிலையில் பெரிதாக்கப்பட்டு 'பிரகாசமான எதிர்காலம்' என பிரசாரப்படுத்தப்படுகிறது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் அசைக்கமுடியாதவராகக் காணப்பட்ட ஜனாதிபதியின் செல்வாக்கு சரிவு அவரால் முன்னெடுக்கப்படாத பல வாக்குறுதிகளையும் இப்போது ஞாபகப்படுத்தி இருக்கும்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என அவர் வகுத்த வியூகம் எல்லாம் சரி. ஆனால் தொடர் தோல்விகளால் சுருண்டுகிடந்த ரணில் விக்ரமசிங்க தான் இறங்காமல் பொதுவேட்பாளராக இராணுவ யுத்த வெற்றியினால் மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறிய ஜெனரல் சரத் பொன்சேக்காவை இறக்கிய அதிரடி தான் எல்லாக் கணிப்புக்களையும் உடைத்துப் போட்டது.
இந்திய,அமெரிக்க அவதானிப்புக்கள்,திரைமறைவு திட்டங்களும் ஓரளவு முக்கிய பங்குகளை இம்முறை தேர்தலில் வகிக்கின்றமை தெளிவாகவே தெரிகிறது.
மக்களுக்கும் பல விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன..
கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுசெல்லும் நோக்கில் தளர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணத்தின் கொடுக்கல்-வாங்கல் சட்டம்
பொருட்களின் விலைகள் குறைக்கப்பாடல்
அவசர அதிரடி சலுகைகள்
பாதை திறந்தது
யாருமே எதிர்பாராத ஊடகவியலாளர் திசைநாயக்த்தின் பினைவிடுதலை
இப்படி பல விஷயங்கள்..
எனினும் திட்டமிட்ட பல விஷயங்களும் நடைபெறாமல் இல்லை.
பலருக்கு வாக்காளர் அட்டைகள் இன்னும் கிட்டவில்லை.
வடபகுதியில் பலருக்கு இன்னும் வாக்காளர் அட்டைகளும் இல்லை;அடையாள அட்டைகளும் இல்லை. அவர்களது வாக்குகள் அவ்வளவு தான்.
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும் எமக்கு (ஊடகங்களுக்கு) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேவையற்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்துள்ள நடவடிக்கையாம்.
இறுதி முடிவுகளை (மொத்த எண்ணிக்கை) அரச ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கியபிறகே தனியார் ஊடகங்கள் வெளியிடமுடியுமாம்.
இருவருக்கிடையில் பின்னணியான முக்கியமான அந்த ஒருவர் !
இப்போது பிரசாரங்கள் நிறைவு பெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இரண்டு பேரிடம் இருந்தும் அதிரடியான கடைசி நேர மர்ம அஸ்திரங்களை எதிர்பார்க்கலாம்.
நேற்று ஜனாதிபதி திறந்துவைத்த ஹோமாகம ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கு போல திட்டமிட்ட மறைமுகப் பிரசாரங்களும், அதிரடி சலுகைகளும் வரலாம்.
மறுபக்கம் பொன்சேக்கா தரப்பில் அதிரடியாக சிலர் மேடைஎரலாம் என ஊகிக்கப்படுகிறது.
பொன்சேக்கா பக்கம் உள்ள முன்னால் நீதியரசர் சரத் என்.சில்வா(இவர் தான் முதலில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் என ஊடகங்களால் ஊகிக்கப்பட்டவர்) போல இன்னும் சிலரின் அதிரடிப் பிரவேசம் ஜனாதிபதிக்கு சரிவை வழங்கலாம்.
வாக்களிப்பில் அனைத்துக் கணிப்புக்கள் கட்சிகளின் வாக்குத் தளங்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இம்முறையும் சிறுபான்மை வாக்காளரின் வாக்குகள் தான் தீர்மானமிக்க பங்கை வகிக்கப்போகின்றன.
ஒருமுறை பட்டது போதும் என்ற நிலையில் உள்ள வாக்காளர்கள் இப்போதே தீர்மானம் எடுத்திருப்பார்கள்.
எனினும் மாற்றம் என்ற ஒன்றினால் எல்லாமே மாறிவிடும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள் தனம் என்பது அனைவருக்குமே தெரிந்தாலும், இப்படியான தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில் சில குறுகியகால நோக்கம் கொண்ட நீண்ட காலத் திட்டங்களுக்கான அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கும். இதற்கு எமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தை நாம் உணரவேண்டும்.
நடந்தவை,நடக்கின்றவை,நடக்க இருப்பவை பற்றி நன்றாக சிந்தித்து வாக்களிப்போம்.. நல்லவர் யாரோ அவரைத் தெரிவு செய்வோம்..
இதுவே குறைந்தபட்ச தற்காலிக நிம்மதி,இருப்பு,எதிர்காலத்துக்கான ஒரே வழி.
26ஆம் திகதி வருவதற்கிடையில் இன்னும் அரசியலரங்கு கொண்டுவரபோகும் அதிரடிகள்,ஆச்சரியங்களுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

4 comments:

Unknown said...

wera, yaru, SF thaan, Nam ellorum awarukkahathan

கன்கொன் || Kangon said...

பொன்னர் வெல்வாரா?
ஆனால் முன்பைய காலங்களை விட இம்முறை தான் மோசமான பிரச்சாரங்கள் உச்சமாக உள்ளன....
இணையத்தளங்கள் முட்டி வழிகின்றன...

அரச ஊடகங்கள் மடடுமல்ல, இலங்கையின் முன்னணி அலைபேசி வழங்குனர் மூலமாகவும் சட்டத்திற்குப் புறம்பாக விளம்பரம் செய்யப்படுகிறது...

இந்தளவு பயப்படும் அளவுக்குப் போட்டி இருக்கிறது என்று நினைக்கையில் முடிவுகளை எதிர்வுகூற முடியாமல் இருப்பது இன்னும் எதிர்பார்ப்புக்களை தருகிறது...

நல்ல அலசல் அண்ணா.....

தனா said...

-ஜோக் ----------------------------------------------
X- நீங்க யாருக்கு Vote போட்டிங்க???****************************
Y- நான் Voted for change.*********
X-அப்ப சரத் பொன்சேகா தானே???*****************
Y-இல்லை ஒரு change வேணும் எண்டு 22 பேருக்கும் போட்டன்.
X- ahhhhhhhhhhhhhhh.................

யோ வொய்ஸ் (யோகா) said...

வாசித்து முடிக்கையில் 2 தேநீர் குடித்து விட்டேன்.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிரிரிரிரிரிய பதிவு...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner