3 Idiots - 3 இடியட்ஸ் - All is well.

ARV Loshan
28

அமீர்கானின் 3 Idiots ஹிந்திப்படம் வந்து வசூலில் வரலாறு காணாத சாதனை படைத்த பிறகு(இப்போதைக்கு மொத்தவசூல் இந்திய ரூபாயில் முன்னூறு கோடியை அண்மித்துள்ளதாம்.) Idiot என்ற வார்த்தையே மிகவுயர்ந்த வார்த்தையாகிவிட்டது.

பெயரைப்பார்த்து வழமையான அக்ஷய் குமார், சல்மான் கான் வகையறாக்களின் நகைச்சுவை கலாட்டா மசாலாக்களில் ஒன்று என்று பார்க்காமல் தவிர்க்கவிருந்த என்னை 3 Idiots பார்க்கத்தூண்டிய சகபதிவர் – நண்பர் ஹிஷாமுக்கும், லிபேர்ட்டி திரையரங்குக்கும் நன்றிகள்!

'3 Idiots நல்ல படம் சார்... கட்டாயம் பாருங்க' என்று ஒரே நாளில் பத்து, பதினைந்து தரம் விடாப்பிடியாக அனுப்பியவர் ஹிஷாம். (சார் – 'சரோஜா' டைப்பில் சும்மா செல்ல மரியாதைக்காக மட்டுமே) நாங்களும் குருவி, 1977, வில்லு, ஆதவனுக்கு இப்படித்தான் யாம் பெற்ற இன்பம் என்று பலரையும் அனுப்பி வைத்தவர்கள் என்பதால் நம்பிக்கையீனத்திலேயே போனேன்.

புதன்கிழமை ஏதாவது ஒரு படம் பார்க்கவேண்டும் என்று வெறியோடு இருந்த எமது முதல் தெரிவாக இருந்தது அவதார் தான். எனினும் அது திரையிடப்பட்ட லிபர்ட்டி திரையரங்கில் பகல் காட்சி நேரம் 3 மணி என்பதாலேயே ஹிஷாமின் ஆலோசனையின் படி மஜெஸ்டிக் போனோம் 3 idiots பார்க்க, நாங்கள் 4 idiots.(இருவர் எனது அலுவலக சகாக்கள், ஒருவர் சக பதிவர் )

முதல் காட்சியிலிருந்து மனதில் ஒட்டிவிட்டது படம்.. கொஞ்சமும் போரடிக்காத கதையோட்டம்.

இந்தப் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் முன்னைய படங்களையும் (முன்னா பாய், லகோ ரகோ முன்னா பாய்)ரசித்துள்ளதொடு, அமீர் கானின் முயற்சிகளையும் ரசிப்பவனாதலால் ஒரு சில நிமிடங்களிலேயே இந்தப் படம் something special எனப் புரிந்தது.

அமீர் கான் அழகாக இருக்கிறார். கஜினியில் பார்த்ததை விட வயதில் இளையவராகவும், துறு துறு துடிப்பாகவும் தெரிகிறார்.
தமிழில் சரியாகப் பயன்படுத்தப்படாத மாதவனுக்கு ஹிந்தியில் தொடர்ந்தும் எப்படிப்பட்ட அருமையான வாய்ப்புக்கள் வருகின்றன..
அமீர்கானை விட மாதவன் காட்சிகளில் நிறைகிறார்.. மாதவனின் குரலிலேயே காட்சிகள் நகர்கின்றன..

வன்முறைகள், அடிதடி, ஆபாசம் இல்லாமல் யதார்த்த வாழ்க்கையை ஹிந்திக்கே உரிய கனவுத்தன்மை (fantasy), செழுமையோடு, வாய்விட்டு சிரிக்க வைக்கும் படம்தான் 3 Idiots.

பத்துவருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் 2 கல்லூரி நண்பர்கள் (மாதவன், சர்மான் ஜோஷி)- தங்கள் கல்லூரியில் காலத்தில் மற்றொரு சகாவுடன் (ஓமி வைத்யா) சேர்ந்து – தங்களது வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைத்து வாழ்வில் வெற்றியையும் பெற்றுத்தந்த தம் ஜீனியஸ் நண்பனான ரஞ்சோ என்கின்ற ரஞ்சோட் தான் ஷ்யாமள்தாஸ் சஞ்சய் (அமீர்கான்)ஐத் தேடிச் செல்லும் நெடிய நீண்ட சுவாரஸ்யப் பயணத்துடன் ஆரம்பமாகிறது திரைப்படம்.

சிம்லா, மனாலி, லடாக் என்று அழகான இடங்களினூடாக இவர்களோடு எம்மையும் பயணிக்கவைப்பதோடு, நண்பர்களின் மலரும் நினைவுகளால் மகிழ்ச்சியோடு விரிகிறது கலகல கல்லூரிக் கதை.

இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரியொன்றில் ஒரு மினி ஹிட்லராக உலாவரும் Virus என்று மாணவர்களால் அழைக்கப்படும் தலைமை நிர்வாகி விரு சகஸ்ரபுத்தே (பொமன் இரானி)யினைத் திருத்தப்பாடுபடும் கூலான ஜீனியஸ் தான் ரஞ்சோ – அமீர்கான்.

ஆசியாவின் பொதுவான கல்வித்திட்டங்கள், பரீட்சை நடைமுறையின் ஒருவழித்தன்மையான குருட்டுப்போக்கு போன்றவற்றைப் பற்றி யதார்த்தக்கிண்டல்களைக் காட்சிகளில் தந்து அமீர்கான் மூலமாகப் பாடம் எடுக்க சென்றிருக்கிறார் இயக்குனர் ஹிரானி.

இந்தப்படம் 5 Point someone என்ற சேட்டன் பகத்தின் நாவலிருந்து தழுவப்பட்டது. எனினும் திரைக்கதை ஓட்டத்தை வேகமாகவும் கலகலப்பாகவும் எழுதியிருப்பதற்கு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கும், அபிஜீத் ஜோஷிக்கும் பாராட்டுக்கள்.

படம் வெளிவந்து இதுவரை ஹிந்தித் திரையுலகத்தில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை முறியடித்த பின் எழுத்தாளர் vs இயக்குனர் & தயாரிப்பாளருக்குமிடையில் முறுகல், சர்ச்சை தோன்றியிருக்கிறது.

எங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளே திரைக்கதையின் பாகங்களாகின்றன.

வாழ்க்கையின் லட்சியங்கள், பெற்றோரின் விருப்பத்துக்காகத் தெரிவுசெய்யும் கல்வித்துறைகள், பரீட்சையில் வெல்வதற்கான, முதலிடம் பெறுவதற்கான பிரபந்தனங்கள், அழுத்தங்கள், வாழ்க்கை நோக்கிய பயம், அறிவைப்பெருக்காமல் தகுதிச் சான்றிதழ்களுக்கான கல்வி என்று யதார்த்த விஷயங்கள் தான் பேசப்பட்டுள்ளன.

ஒரு அறிவுஜீவியாக ஆனால் எதையுமே மிகச் சுலபமாக, சாவதானமாக எடுத்து 'All is well' என்ற தனது கூலான take it easy, Be practical, Live ur life அணுகுமுறையோடு எல்லைகளற்ற சிந்தனையுடைய, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் கவலைகளற்ற கலகலப்பான இளைஞனாக அமீர்கான்.

All is well..
அமீர்கான் இதை சொல்லும் விதமே தனி,.. ஒரு இழுவையோடு Aal izz wel.. :)



தினந்தோறும் வீதிகளில் நாம் பார்க்கும் ஒரு சாதாரண இளைஞனாய் பொருந்திப்போகிறார். ரசிக்க வைக்கிறார். பெண்கள் ஏன் இவர் மேல் பைத்தியம் என்று புரிகிறதுளூ எரிச்சலும் கொஞ்சம் வருகிறது.

மாதவன், ஷர்மான் ஆகியோரும் முன்பே அமீரோடு ரங் தே பசந்தியில் நடித்தவர்கள் என்பதால் இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அவ்வளவு இயல்பாகவும், ரசனைமிக்கனவாகவும் இருக்கின்றன.

மாதவனுக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புக்கள். குறிப்பாகத் தந்தையிடம் தனக்குப் பிடித்த வேலையைத் தெரிவு செய்யக் கெஞ்சி, சமாதானப்படுத்தும் இடம் அற்புதம்.

தனது வாயுக்கோளாறால் பலரையும் தொல்லைப்படுத்துவதால் Silencer என்ற பட்டப்பெயரோடு அலையும், பட்டம்பெறுவதே நோக்காகக்கொண்ட, சக மாணவர்களை எரிச்சலேற்படுத்தும் சத்துர்ராமலிங்கமாக வரும் ஓமி வைத்யாவுக்கு இது முதல்படமாம். நம்பமுடியவில்லை!
அற்புதமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் வரக்கூடிய ஒரு பாத்திரம்.

அமீர்கானுக்கு இணையான இன்னொருபாத்திரம் வைரஸ் - பேராசிரியர். போமன் இரானிக்கு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த பாத்திரம். இரக்கமேயில்லாத பேராசிரியர். நேரத்தை வீணாக்காத அவர் தன்மை, தனது கொள்கைகளில் பிடிவாதம், அவரது மனரிசங்கள் என்று மனிதர் அசத்துகிறார்.

தன் மாணவன் எதிரி அமீர்கானிடம் தோற்றபின் மனமுடைவதும் - 'You are not always right' என NASA பேனா – பென்சில் விஷயத்தி;ல் தளுதளுப்பது அருமை.

கரீனா கபூர் ஒப்பீட்டளவில் குறைந்தளவு நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார். அமீரை விட உயரமும், பருமனாகவும் இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. சூபி ரூபி பாடலில் கொஞ்சம் கவர்ச்சி விருந்தும் படைக்கிறார்...

மனதில் நிற்கும் இன்னொரு பாத்திரம் - மில்லிமீட்டர்.குறும்புக்கார சிறுவன் பின்னுகிறான்.

3 Idiots இன் சில காட்சிகள் கண்கலங்கி நெகிழ வைக்கின்றன; சில காட்சிகள் கண்ணில் நீர் வரும் வரை சிரிக்க வைக்கின்றன.

ஆரம்பத்தில் கல்லூரி ராகிங், சைலன்சர் கல்லூரி தின விழாவில் பேசும்போது 'சமத்கார்' - புலமை, அறிவு என்ற வார்த்தையை 'பலாத்கார்' - பாலியல் பலாத்காரம் என்று அமீர்கான் மாற்றிவிடும் இடம், பியா(கரீனா)வின் அக்காவின் திருமணத்தில் நிகழும் கூத்துக்கள், ஷர்மானின் தந்தையை அமீர்கானும் கரீனாவும் ஸ்கூட்டியில் வைத்தியசாலை கொண்டு செல்வது என்று பல இடங்கள் வயிறு குலுங்க வைத்தாலும் அநேகமன இடங்கள் எம்மை மறந்து சிரிக்க வைக்கின்றன..

ஆங்கில உபதலைப்போடு பார்த்தே இவ்வளவு தூரம் என்னை மறந்து ரசித்துள்ளேன் என்றால் ஹிந்தி புரிந்து பார்த்தவர்கள் எவ்வளவு ரசித்துள்ளார்கள் என்று புரிகிறது..

நெகிழச் செய்கிற பல இடங்களும் உண்டு..
அமீர் கான் இடைவேளையின்போது மர்மமாவது தரும் ஆச்சர்யம், அதன்பின்னணி கொஞ்சமா கலங்கச் செய்வது, மாதவனின் வீட்டு நிலை, ஷர்மானின் தற்கொலை முயற்சி, கரீனாவின் அக்காவின் பிரசவம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் அமீர்கானின் திறமை காட்டப்படவே புகுத்தப்பட்டுள்ளது .. அதன் பின் வரும் வைரசும் அமீரும் சந்திக்கும் காட்சி நெகிழ்ச்சி..


கலக்கல்,கலகல,நகைச்சுவை, வேடிக்கை,fantasy,அறிவுரை,அழகு,காதலின் மேன்மை என்று பல விடயங்களிநூடு இயக்குனர் ஹிரானி தனது முன்னைய படங்களைப் போலவே மனிதம் பற்றியே பேசமுனைந்துள்ளார்..

ஒளிப்பதிவாளர் முரளீதரன்(தமிழரா இவர்?) எங்கள் கண்களையும் மனதையும் தன கமெராக் கண்களால் நிறைக்கறார்.. வெளிக்காட்சிகளில் அழகும், உட்புறக் காட்சிகளில் நேர்த்தியும் .. சபாஷ்..

இசை.. படத்துக்குக் கச்சிதம்.. சாந்தனு மொய்த்ராவின் மெல்லிய இசை படத்துடன் ஒன்றிச் செல்கிறது.. உறுத்தவில்லை.. பாடல்கள் படத்தோடு பார்க்கையில் ஆகா அற்புதம் என்றே சொல்லவைக்கின்றன.. வரிகள் அழகு (ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நன்றி)
உடனேயே வீடு சென்று மூன்று பாடல்களை தரவிறக்கி விட்டேன்..

All is well is my favourite.

இளைஞர்கள் அடிக்கடி இனி All is well.. சொல்வதைக் கேட்கலாம்.. பின்பற்றுவார்களா என்பது வேறு கதை..

ஆனால் அதனை மிக சீரியசாக சொல்லி எங்களை சோதிக்காமல் படம் பார்த்தபின் வீடு செல்லும் பொது மன நிறைவாக,மகிழ்ச்சியாக செல்ல செய்துள்ளார்..

தமிழில் எப்போதாவது வரும் இப்படியான முயற்சிகள் ஹிந்தியில் அடிக்கடி நிகழ்கின்றனவே என்று ஏக்கமாக உள்ளது..
மசாலாத் தனமான தனிமனித வழிபாட்டை எடுக்காமல், அல்லது யதார்த்தமாக எடுக்கிறோம் என்று அதீத வன்முறைகளைக் கொட்டாமல் மனதை இலேசாக்கும் இதுபோன்ற வாழ்க்கை பற்றிய படங்களையும் தரலாமே..
அப்படி வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்..

3 IDIOTS - ALL IS WELL....

Post a Comment

28Comments

Please Select Embedded Mode To show the Comment System.*