January 09, 2010

3 Idiots - 3 இடியட்ஸ் - All is well.


அமீர்கானின் 3 Idiots ஹிந்திப்படம் வந்து வசூலில் வரலாறு காணாத சாதனை படைத்த பிறகு(இப்போதைக்கு மொத்தவசூல் இந்திய ரூபாயில் முன்னூறு கோடியை அண்மித்துள்ளதாம்.) Idiot என்ற வார்த்தையே மிகவுயர்ந்த வார்த்தையாகிவிட்டது.

பெயரைப்பார்த்து வழமையான அக்ஷய் குமார், சல்மான் கான் வகையறாக்களின் நகைச்சுவை கலாட்டா மசாலாக்களில் ஒன்று என்று பார்க்காமல் தவிர்க்கவிருந்த என்னை 3 Idiots பார்க்கத்தூண்டிய சகபதிவர் – நண்பர் ஹிஷாமுக்கும், லிபேர்ட்டி திரையரங்குக்கும் நன்றிகள்!

'3 Idiots நல்ல படம் சார்... கட்டாயம் பாருங்க' என்று ஒரே நாளில் பத்து, பதினைந்து தரம் விடாப்பிடியாக அனுப்பியவர் ஹிஷாம். (சார் – 'சரோஜா' டைப்பில் சும்மா செல்ல மரியாதைக்காக மட்டுமே) நாங்களும் குருவி, 1977, வில்லு, ஆதவனுக்கு இப்படித்தான் யாம் பெற்ற இன்பம் என்று பலரையும் அனுப்பி வைத்தவர்கள் என்பதால் நம்பிக்கையீனத்திலேயே போனேன்.

புதன்கிழமை ஏதாவது ஒரு படம் பார்க்கவேண்டும் என்று வெறியோடு இருந்த எமது முதல் தெரிவாக இருந்தது அவதார் தான். எனினும் அது திரையிடப்பட்ட லிபர்ட்டி திரையரங்கில் பகல் காட்சி நேரம் 3 மணி என்பதாலேயே ஹிஷாமின் ஆலோசனையின் படி மஜெஸ்டிக் போனோம் 3 idiots பார்க்க, நாங்கள் 4 idiots.(இருவர் எனது அலுவலக சகாக்கள், ஒருவர் சக பதிவர் )

முதல் காட்சியிலிருந்து மனதில் ஒட்டிவிட்டது படம்.. கொஞ்சமும் போரடிக்காத கதையோட்டம்.

இந்தப் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் முன்னைய படங்களையும் (முன்னா பாய், லகோ ரகோ முன்னா பாய்)ரசித்துள்ளதொடு, அமீர் கானின் முயற்சிகளையும் ரசிப்பவனாதலால் ஒரு சில நிமிடங்களிலேயே இந்தப் படம் something special எனப் புரிந்தது.

அமீர் கான் அழகாக இருக்கிறார். கஜினியில் பார்த்ததை விட வயதில் இளையவராகவும், துறு துறு துடிப்பாகவும் தெரிகிறார்.
தமிழில் சரியாகப் பயன்படுத்தப்படாத மாதவனுக்கு ஹிந்தியில் தொடர்ந்தும் எப்படிப்பட்ட அருமையான வாய்ப்புக்கள் வருகின்றன..
அமீர்கானை விட மாதவன் காட்சிகளில் நிறைகிறார்.. மாதவனின் குரலிலேயே காட்சிகள் நகர்கின்றன..

வன்முறைகள், அடிதடி, ஆபாசம் இல்லாமல் யதார்த்த வாழ்க்கையை ஹிந்திக்கே உரிய கனவுத்தன்மை (fantasy), செழுமையோடு, வாய்விட்டு சிரிக்க வைக்கும் படம்தான் 3 Idiots.

பத்துவருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் 2 கல்லூரி நண்பர்கள் (மாதவன், சர்மான் ஜோஷி)- தங்கள் கல்லூரியில் காலத்தில் மற்றொரு சகாவுடன் (ஓமி வைத்யா) சேர்ந்து – தங்களது வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைத்து வாழ்வில் வெற்றியையும் பெற்றுத்தந்த தம் ஜீனியஸ் நண்பனான ரஞ்சோ என்கின்ற ரஞ்சோட் தான் ஷ்யாமள்தாஸ் சஞ்சய் (அமீர்கான்)ஐத் தேடிச் செல்லும் நெடிய நீண்ட சுவாரஸ்யப் பயணத்துடன் ஆரம்பமாகிறது திரைப்படம்.

சிம்லா, மனாலி, லடாக் என்று அழகான இடங்களினூடாக இவர்களோடு எம்மையும் பயணிக்கவைப்பதோடு, நண்பர்களின் மலரும் நினைவுகளால் மகிழ்ச்சியோடு விரிகிறது கலகல கல்லூரிக் கதை.

இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரியொன்றில் ஒரு மினி ஹிட்லராக உலாவரும் Virus என்று மாணவர்களால் அழைக்கப்படும் தலைமை நிர்வாகி விரு சகஸ்ரபுத்தே (பொமன் இரானி)யினைத் திருத்தப்பாடுபடும் கூலான ஜீனியஸ் தான் ரஞ்சோ – அமீர்கான்.

ஆசியாவின் பொதுவான கல்வித்திட்டங்கள், பரீட்சை நடைமுறையின் ஒருவழித்தன்மையான குருட்டுப்போக்கு போன்றவற்றைப் பற்றி யதார்த்தக்கிண்டல்களைக் காட்சிகளில் தந்து அமீர்கான் மூலமாகப் பாடம் எடுக்க சென்றிருக்கிறார் இயக்குனர் ஹிரானி.

இந்தப்படம் 5 Point someone என்ற சேட்டன் பகத்தின் நாவலிருந்து தழுவப்பட்டது. எனினும் திரைக்கதை ஓட்டத்தை வேகமாகவும் கலகலப்பாகவும் எழுதியிருப்பதற்கு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கும், அபிஜீத் ஜோஷிக்கும் பாராட்டுக்கள்.

படம் வெளிவந்து இதுவரை ஹிந்தித் திரையுலகத்தில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை முறியடித்த பின் எழுத்தாளர் vs இயக்குனர் & தயாரிப்பாளருக்குமிடையில் முறுகல், சர்ச்சை தோன்றியிருக்கிறது.

எங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளே திரைக்கதையின் பாகங்களாகின்றன.

வாழ்க்கையின் லட்சியங்கள், பெற்றோரின் விருப்பத்துக்காகத் தெரிவுசெய்யும் கல்வித்துறைகள், பரீட்சையில் வெல்வதற்கான, முதலிடம் பெறுவதற்கான பிரபந்தனங்கள், அழுத்தங்கள், வாழ்க்கை நோக்கிய பயம், அறிவைப்பெருக்காமல் தகுதிச் சான்றிதழ்களுக்கான கல்வி என்று யதார்த்த விஷயங்கள் தான் பேசப்பட்டுள்ளன.

ஒரு அறிவுஜீவியாக ஆனால் எதையுமே மிகச் சுலபமாக, சாவதானமாக எடுத்து 'All is well' என்ற தனது கூலான take it easy, Be practical, Live ur life அணுகுமுறையோடு எல்லைகளற்ற சிந்தனையுடைய, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் கவலைகளற்ற கலகலப்பான இளைஞனாக அமீர்கான்.

All is well..
அமீர்கான் இதை சொல்லும் விதமே தனி,.. ஒரு இழுவையோடு Aal izz wel.. :)



தினந்தோறும் வீதிகளில் நாம் பார்க்கும் ஒரு சாதாரண இளைஞனாய் பொருந்திப்போகிறார். ரசிக்க வைக்கிறார். பெண்கள் ஏன் இவர் மேல் பைத்தியம் என்று புரிகிறதுளூ எரிச்சலும் கொஞ்சம் வருகிறது.

மாதவன், ஷர்மான் ஆகியோரும் முன்பே அமீரோடு ரங் தே பசந்தியில் நடித்தவர்கள் என்பதால் இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அவ்வளவு இயல்பாகவும், ரசனைமிக்கனவாகவும் இருக்கின்றன.

மாதவனுக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புக்கள். குறிப்பாகத் தந்தையிடம் தனக்குப் பிடித்த வேலையைத் தெரிவு செய்யக் கெஞ்சி, சமாதானப்படுத்தும் இடம் அற்புதம்.

தனது வாயுக்கோளாறால் பலரையும் தொல்லைப்படுத்துவதால் Silencer என்ற பட்டப்பெயரோடு அலையும், பட்டம்பெறுவதே நோக்காகக்கொண்ட, சக மாணவர்களை எரிச்சலேற்படுத்தும் சத்துர்ராமலிங்கமாக வரும் ஓமி வைத்யாவுக்கு இது முதல்படமாம். நம்பமுடியவில்லை!
அற்புதமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் வரக்கூடிய ஒரு பாத்திரம்.

அமீர்கானுக்கு இணையான இன்னொருபாத்திரம் வைரஸ் - பேராசிரியர். போமன் இரானிக்கு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த பாத்திரம். இரக்கமேயில்லாத பேராசிரியர். நேரத்தை வீணாக்காத அவர் தன்மை, தனது கொள்கைகளில் பிடிவாதம், அவரது மனரிசங்கள் என்று மனிதர் அசத்துகிறார்.

தன் மாணவன் எதிரி அமீர்கானிடம் தோற்றபின் மனமுடைவதும் - 'You are not always right' என NASA பேனா – பென்சில் விஷயத்தி;ல் தளுதளுப்பது அருமை.

கரீனா கபூர் ஒப்பீட்டளவில் குறைந்தளவு நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார். அமீரை விட உயரமும், பருமனாகவும் இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. சூபி ரூபி பாடலில் கொஞ்சம் கவர்ச்சி விருந்தும் படைக்கிறார்...

மனதில் நிற்கும் இன்னொரு பாத்திரம் - மில்லிமீட்டர்.குறும்புக்கார சிறுவன் பின்னுகிறான்.

3 Idiots இன் சில காட்சிகள் கண்கலங்கி நெகிழ வைக்கின்றன; சில காட்சிகள் கண்ணில் நீர் வரும் வரை சிரிக்க வைக்கின்றன.

ஆரம்பத்தில் கல்லூரி ராகிங், சைலன்சர் கல்லூரி தின விழாவில் பேசும்போது 'சமத்கார்' - புலமை, அறிவு என்ற வார்த்தையை 'பலாத்கார்' - பாலியல் பலாத்காரம் என்று அமீர்கான் மாற்றிவிடும் இடம், பியா(கரீனா)வின் அக்காவின் திருமணத்தில் நிகழும் கூத்துக்கள், ஷர்மானின் தந்தையை அமீர்கானும் கரீனாவும் ஸ்கூட்டியில் வைத்தியசாலை கொண்டு செல்வது என்று பல இடங்கள் வயிறு குலுங்க வைத்தாலும் அநேகமன இடங்கள் எம்மை மறந்து சிரிக்க வைக்கின்றன..

ஆங்கில உபதலைப்போடு பார்த்தே இவ்வளவு தூரம் என்னை மறந்து ரசித்துள்ளேன் என்றால் ஹிந்தி புரிந்து பார்த்தவர்கள் எவ்வளவு ரசித்துள்ளார்கள் என்று புரிகிறது..

நெகிழச் செய்கிற பல இடங்களும் உண்டு..
அமீர் கான் இடைவேளையின்போது மர்மமாவது தரும் ஆச்சர்யம், அதன்பின்னணி கொஞ்சமா கலங்கச் செய்வது, மாதவனின் வீட்டு நிலை, ஷர்மானின் தற்கொலை முயற்சி, கரீனாவின் அக்காவின் பிரசவம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் அமீர்கானின் திறமை காட்டப்படவே புகுத்தப்பட்டுள்ளது .. அதன் பின் வரும் வைரசும் அமீரும் சந்திக்கும் காட்சி நெகிழ்ச்சி..


கலக்கல்,கலகல,நகைச்சுவை, வேடிக்கை,fantasy,அறிவுரை,அழகு,காதலின் மேன்மை என்று பல விடயங்களிநூடு இயக்குனர் ஹிரானி தனது முன்னைய படங்களைப் போலவே மனிதம் பற்றியே பேசமுனைந்துள்ளார்..

ஒளிப்பதிவாளர் முரளீதரன்(தமிழரா இவர்?) எங்கள் கண்களையும் மனதையும் தன கமெராக் கண்களால் நிறைக்கறார்.. வெளிக்காட்சிகளில் அழகும், உட்புறக் காட்சிகளில் நேர்த்தியும் .. சபாஷ்..

இசை.. படத்துக்குக் கச்சிதம்.. சாந்தனு மொய்த்ராவின் மெல்லிய இசை படத்துடன் ஒன்றிச் செல்கிறது.. உறுத்தவில்லை.. பாடல்கள் படத்தோடு பார்க்கையில் ஆகா அற்புதம் என்றே சொல்லவைக்கின்றன.. வரிகள் அழகு (ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நன்றி)
உடனேயே வீடு சென்று மூன்று பாடல்களை தரவிறக்கி விட்டேன்..

All is well is my favourite.

இளைஞர்கள் அடிக்கடி இனி All is well.. சொல்வதைக் கேட்கலாம்.. பின்பற்றுவார்களா என்பது வேறு கதை..

ஆனால் அதனை மிக சீரியசாக சொல்லி எங்களை சோதிக்காமல் படம் பார்த்தபின் வீடு செல்லும் பொது மன நிறைவாக,மகிழ்ச்சியாக செல்ல செய்துள்ளார்..

தமிழில் எப்போதாவது வரும் இப்படியான முயற்சிகள் ஹிந்தியில் அடிக்கடி நிகழ்கின்றனவே என்று ஏக்கமாக உள்ளது..
மசாலாத் தனமான தனிமனித வழிபாட்டை எடுக்காமல், அல்லது யதார்த்தமாக எடுக்கிறோம் என்று அதீத வன்முறைகளைக் கொட்டாமல் மனதை இலேசாக்கும் இதுபோன்ற வாழ்க்கை பற்றிய படங்களையும் தரலாமே..
அப்படி வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்..

3 IDIOTS - ALL IS WELL....

28 comments:

EKSAAR said...

ஹிந்தி தெரியாமல் கதையம்சம் மிக்க அல்லது நகைச்சுவை ஹிந்தி படத்தை எப்படி பார்ப்பது?

கவர்ச்சி படம் என்றால் பரவாயில்லை.. அது மொழிகளை தாண்டியதுதானே.. :

ARV Loshan said...

@என்ன கொடும சார்

அது தான் சொல்லி இருக்கேனே ஆங்கில உப தலைப்புக்களோடு பார்த்தேன் என்று..
முழுமையா வாசியுங்க..

(எனக்கு ஹிந்தி தெரிந்தும் இருக்கலாம் இல்லையா?)

EKSAAR said...

உபதலைப்பு வாசிக்கபோனால் படத்தின் காட்சிகளை பார்க்க இன்னொரு நாள் போகவேண்டும்.. :D :D

Unknown said...

பாக்கோணும் பாக்கோணும்.....

கிட்டடியில பாக்கோணும்....

விமர்சனம் அழகா இருக்கு...

அதுவும்,
//கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும். //

அருமை அண்ணா.

All is well. All is well. All is well.....

maruthamooran said...

‘3 இடியட்ஸ்’ பார்த்த பின்னர் அதனைப் பற்றி முழுமையாக எழுதவேண்டும் என்று ஆவல் இருந்தது. ஆனாலும், சில ஆணி அடித்தல்களினால் (எல்லோரும் புடுங்கும் ஆணிகளை நான் அடிக்கிறேன்) முழுமையாக எழுதாமல், இரு அமீர்கள் தொடர்பில் நேற்று பதிவிட்டிருந்தேன்.

பொலிவ+ட் என்கிற ஆடம்பரமும், அதியுச்ச கனவுகளையும் வெளிப்படுத்துகிற ஹிந்தி சினிமாவுலகில் அண்மைக்காலத்தில் நல்ல படங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. அதற்கு அமீர்கான் பங்களிப்பு அதிகம்.

லகான், ரங்தே டி பஷந்தி, தரே ஷமின் பர், 3 இடியட்ஸ் என்று அவரின் மீது மரியாதை அதிகரித்து செல்கிறது. ஆனால், அவர் 3 மணித்தியாலங்களுக்கு படத்தை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

யதார்த்தமான படங்களை கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒளிவட்டங்களை ஏந்தி நிற்கிற தமிழ் சினிமாவுக்கு, பொலிவூட் சினிமா அவ்வப்போது நல்ல படங்களை இப்படியும் எடுக்கலாம் என்று சொல்லுகிறது.

‘பா’ மற்றும் ‘3 இடியட்ஸ்’ அண்மையில் நான் பார்த்து ரசித்த படங்கள். அந்த தருணங்களிலேயே வேட்டைக்காரனும், இன்னும் சில தமிழ் படங்களும் பார்த்தேன். நினைத்துப் பார்க்கவும் தமிழ் படங்கள் மீது எவ்வளவு ஆத்திரம் வந்திருக்குமென்று. நல்ல காலம் ‘யோகி’ இன்னும் பார்க்கவில்லை. பார்க்க போவதுமில்லை.

‘3 இடியட்சின்’ ஒளிப்பதிவாளர் முரளிதரன் தொடர்பில் படம் பார்த்த அடுத்த தினம் இணையத்தில் சல்லடை போட்டும் பெரிதாக விபரங்கள் இல்லை. நான் நினைக்கிறேன் தென்னக சினிமா தந்த நல்ல ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவரென்று.

ரவி கே சந்திரன், சந்தோஷ் சிவன், பி.சி.சிறிராம், மணிகண்டன், நிரவ்ஷா, திரு என்று பல நல்ல தென்னக ஒளிப்பதிவாளர்களை அழகாக பயன்படுத்துவதென்னவோ பொலிவூட் சினிமாவே.

balavasakan said...

அமீர்கானை பாரத்து மற்றைய நடிகர்கள் திருந்த வேண்டும் ... மனுசன் என்னமா பண்ணுது ....
இன்னிக்கு வகுப்பில உளவியல் நிபுணர் ஒருவர் தாரே சமீன் பார் பாக்க சொல்லி அட்வைஸ் பண்ணினார் அவருக்கு நாளைக்கு நான் போய் இந்த படத்தை பாக்க சொல்லி அடவைஸ் பண்ண வேணும்

Subankan said...

பாக்கோணும், பாத்துடுவம் :)

Atchuthan Srirangan said...

நல்ல விமர்சனம் அண்ணா

Atchuthan Srirangan said...

//கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்..//

அதை சரியாக உபயோகிக்க வக்கில்லாதவர்கள் அதை எடுக்காமல் இருப்பதே நலம்.

Unknown said...

ஏற்கனவே பாக்கணும் எண்டு இருந்த எனக்கு உங்க விமர்சனத்த பார்க்க கட்டாயம் பார்க்கணும் போல இருக்கு .

K. Sethu | கா. சேது said...

//கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்..//

ஆனால் கோடம்பாக்கத்தினர் விட்டு வைக்கமாட்டார்கள் எனத் தெரிகிறது. நேற்று ஒரு தமிழக (செய்மதி வழி) தொலைக்காட்சியின் பின்மாலை நேரச் செய்தியில் என் காதில் விழுந்தது - ஒரு தயாரிப்பாளர் எப்படியாவது விஜய் (!), சூர்யா, மாதவன் ஆகியோரை சம்மதிக்க வைத்து தமிழில் ஆக்க முனைந்துள்ளாராம் !

3 வேடத்திலும் கமல் என்று யாரும் எடுத்து விடாமல் இருந்தாலே போதும்.

~சேது

Vijayakanth said...

ஜெமினி பில்ம்ஸ் இந்த படத்தோட remake உரிமைய வாங்கிட்டதாகவும் சூர்யா ஒரு கதாபாத்திரத்துல நடிக்கப்போறதாவும் அண்மையில் ஒரு சினிமா பக்கத்தில வாசிச்ச ஞாபகம்.... ஏன் அண்ணா இங்கிலீஷ் தெரியாத ஜனங்களுக்கு தமிழ் remake எடுக்கிறது தப்பா? உங்க எண்ணம் புரியுது.... தமிழ் ரசனைக்கு ஏற்ற மாதிரி மாத்துறேன்னு அத இல்லாமல் ஆக்கிடுவாங்கன்னு தானே கவலை படுறீங்க......! என்னோட கவலை என்னான்னா தமிழில 3 heros சேர்ந்து நடிக்க சம்மதிப்பாங்களாங்கிறது தான்.

Unknown said...

///பொலிவ+ட் என்கிற ஆடம்பரமும், அதியுச்ச கனவுகளையும் வெளிப்படுத்துகிற ஹிந்தி சினிமாவுலகில் அண்மைக்காலத்தில் நல்ல படங்களின் வரவு அதிகரித்திருக்கிறது///
அப்படி என்றில்லை மருதமூரான்.... மசாலாப் படங்களைப் பார்த்து போரடித்துப்போய் ரசிகர்கள் கொஞ்சம் கதையம்சம் உள்ள படங்களை வெல்ல வைக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி மோசமான மசாலாப்படங்கள் இன்னும் இந்தியில் வந்தபடி இருக்கின்றன.

அடுத்தது யதார்த்த சினிமா பற்றிய புரிந்துணர்வு இன்னும் எங்களிடம் இல்லை என்றும் சொல்லலாம். உதாரணத்துக்கு சசிக்குமாரை இன்றைக்கு யதார்த்தங்களின் உச்சமாகச் சொல்கிறார்கள். அவர் சம்பந்தப்பட்ட சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் மூன்றுமே முழுமையான யதார்த்தமான படங்கள் அல்ல. கொஞ்சம் நல்ல திரைக்கதை உள்ள படங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சினிமாவில் யதார்த்தம் 70% ஐயும், கற்பனை 30%ஐயும் கடக்காமல் பார்த்துக்கொண்டால், மக்களால் வரவேற்கப்படும் என்பது என்னுடைய கருத்து.

லோஷன் அண்ணாவுக்கு...
வழமைபோலவே விரிவான விமர்சனம். (அதுசரி உண்மைத் தமிழனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை. அந்தாளுக்குப் போட்டியாகக் களமிறங்கி இருக்கிறீர்களோ...lol)

வந்தியத்தேவன் said...

சிறப்பான அலசல்.
லோஷன் சில நாட்களாக நண்பர் உண்மைத்தமிழனின் பாணியில் எழுதுகின்றார். இருவரும் நீளமாக எழுதினாலும் சுவாரசியமாக எழுதுவதால் வாசிக்கமுடிகின்றது.

//3 idiots பார்க்க, நாங்கள் 4 idioட்ச்.(//

படத்தில் இடியட்ஸை அறிவாளிகளாகக் காட்டியிருப்பதால் உங்களையும் உங்கள் நண்பர்களையும் இந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றீர்களோ? அப்படியென்றால் யார் அமீர்கான்? ஹிஹிஹி #பகிடி

அமீர்கானை வட இந்தியாவின் கமல் என அழைக்கலாம். மனிதர் வித்தியாசமான முயற்சிகளில் அடிக்கடி ஈடுபடுகின்றார்.

கரீனா அண்மைக்காலங்களாக சதை போட்டு குண்டாகிவிட்டார். அம்மணி உடற்பயிற்சி செய்தால் அவருக்கும் அவரைப் பார்க்கும் ஏனையவர்களுக்கும் நலம்.

பலாத்கார் சமத்கார் தமிழில் மொழிமாற்றம் செய்தால் எப்படி மாற்றுவார்கள்?

புல்லட் said...

அருமை யான படம் அண்ணா! சும்மா சிரிசிரி எண்டு சிரிச்சதில வயிறெல்லாம் அப்செட்.. எப்பிடி கோத்திருக்காங்க நிகழ்வுகள.. சின்ன சின்ன விடயங்கள் கூட உதாரணத்துக்கு டிரண்டு பேரும் ஓபிஸ் கீயை எறியிறது.. கிளைமாக்சில வங்குடு பெயருக்கு ஒரு ட்விஸ்ட் , உப்படி எத்தனயோ எல்லாரும் கை தட்டி ரசித்தார்கள்..

எக்சாம் பே்பபர் கொமெடி முன்ன எங்கேுயோ பாத்திருக்ுகேன்.. அந்த ஓல் இஸ் வெல் எண்டு சொல்லி பி்ள்ளைய எழுப்புறது பசங்க படத்த ஒத்த பிழையான ஒரு இடம்..


ஆனா படம் முழுக்க நான் சிரிச்சு சிரிச்சு சீட்டில இருக்குவே கஷ்டப்பட்டேன்.. மொத்தத்தில ஒரு சூப்பர் டூப்பர் படம்

மாதேவி said...

பார்க்க வேண்டுமென நினைத்த படம்.

நல்ல விமர்சனம் லோஷன்.

படம் பார்க்கிறேன்.

வாகீசன் said...

எல்லாரும் உங்கள் //கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்.. // என்ற கருத்தோடு ஒத்துப்போவது தமிழ் சினிமாவை எவ்வளவுதூரம் புரிந்துவைத்துள்ளனர் என்று தெரிகின்றது.

Unknown said...

loshan anna...i had just watched the film an hour before read your comments..After watching the film it was a fantasic experience which i had never felt..thanks for your sharing of "3 idiots".

ஆதிரை said...

//அமீர்கானை வட இந்தியாவின் கமல் என அழைக்கலாம்.//

ஹா... ஹா...
வில்லத்தனம் மிகுந்த பின்னூட்டம்... :P

Nimalesh said...

i watch it 3 times n majestic city so fa gud movie in twenty10..

Vijayakanth said...

ஒரு சின்ன சந்தேகம்....அந்த படத்துல பகிடிவதை காட்சி வரும்போது அமீர் அந்த சீனியருக்கு கரண்டியில ஷாக் வைப்பாரே அது சாத்தியமா??

யோ வொய்ஸ் (யோகா) said...

///கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்.. ///

செம பஞ்ச் இதுதான்

வாகீசன் said...

//அந்த படத்துல பகிடிவதை காட்சி வரும்போது அமீர் அந்த சீனியருக்கு கரண்டியில ஷாக் வைப்பாரே அது சாத்தியமா??//
வேண்டுமெண்டால் நீங்கள் ஒரு 9V பற்றி வைச்சு செய்து பாருங்கோவேன்? அடிச்சாலும் சின்னதாத்தான் அடிக்கும்.

ஜெகதீபன் said...

<>
அமீரின் இடத்துக்கு சூரியா, மாதவன் அதே மாதவனாக என்றால் அப்போ விஜய் கிட்டத்தட்ட காமடியனான அந்த மூன்றாவது பாத்திரத்தில்..... அட பரவாயில்லையே இப்பவெல்லாம் தயாரிப்பாளர்கள் பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களைத்தான் தெரிவு செய்யினம் .... ஹி ஹி !!! (சும்மா ஒரு தமாசுக்கு... இருந்தாலும் பாயிண்ட பிடிச்சம் இல்ல.......)

//கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்.. //

மிகச்சரி அண்ணா (அது கமலாக இருந்தாலும் கூட)....
மொழிதாண்டி அனைவரையும் ரசிக்க வைத்த ஒரு அருமையான படம்...!!! என்ன இருந்தாலும் அமீர்.... அமீர் தான் !!!

Vijayakanth said...

அமீருக்கு 44 வயசென்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்....நம்பமுடியவில்லை.....அவ்வளவு இளமை....மாதவனை விட இளமை தோற்றம் அமீருக்கு. தங்கபஸ்பம் சாப்பிடுறாரோ?.... கேரளா போய் மூலிகை வைத்தியம் செய்யிறாரோ??? கேட்டு வைச்சா லோஷன்அண்ணாக்கும் வசதியா இருக்குமேன்னு சொன்னேன்....:P

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

Hey @ஜெகதீபன்,

mind your words wen u comment about vijay .... bull shit !!!!

Anonymous said...

//கோடம்பாக்கத்தில் யாரும் இதை மீள எடுக்காமல் இருப்பதே இந்த அருமையான படத்துக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்.. //

லோஷன் அவர்களே இன்று கோடம்பாக்கம் இல்லா விட்டால் தமிழர்களுக்கு பார்பதற்கு படங்களே கிடையாது, உங்களைப் போன்ற ஒரு சில ஆட்களால் மட்டும் தான் படம் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும், கோடம் பாக்கத்திலும் கமல் போன்ற மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் இருக்குத்தான் செய்கிறார்கள் அவர்களாலும் இதை விட நல்ல படங்கள் வெளிவந்த காலங்களும் இருக்கத்தான் செய்கிறது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner