இளைய நட்சத்திரங்களை எதிர்காலத்துக்கு தந்த Champions League

ARV Loshan
5

அப்பாடா.. ஒரு வழியாக சாம்பியன்ஸ் லீக் முடிவுக்கு வந்துவிட்டது..
முக்கிய நட்சத்திரங்கள் பல பேர் இல்லாததோ என்னவோ எனக்கென்றால் இந்த கிரிக்கெட் திருவிழா பெரிதாக ஆர்வமூட்டுவதாக இருக்கவில்லை.

பார்த்தால் எனது நண்பர்கள் பல பேருக்கும் கூட போட்டிகளைப் பார்ப்பதிலோ,முடிவுகளை அறிவதிலோ கூட ஆர்வமிருக்கவில்லை..
அறிமுகமில்லாத பல வீரர்கள் விளையாடியதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம்..

இலங்கையில் சாம்பியன்ஸ் லீக் பெரிதாக வரவேற்கப்படாதமைக்கு பிரதானமான காரணங்கள் மூன்று என நான் நினைக்கிறேன்..
இலங்கையில் எந்தவொரு தொலைக்காட்சியும் போட்டிகளை ஒளிபரப்பாமை.
டில்ஷான் தவிர வேறு எந்த இலங்கை வீரரும் வயம்ப தவிர்ந்த வேறு அணிகளில் இடம்பெறாமை.
இலங்கையிலிருந்து சென்ற ஒரே அணியும் முதல் சுற்றோடு வெளியேறியமை.

இந்தத் தொடர் ஆரம்பிக்கு முன்னரே நான் நினைத்திருந்தேன் அவுஸ்திரேலியாவின் தேசிய ட்வென்டி ட்வென்டி சாம்பியனான நியூ சவுத் வேல்ஸ் அணியே சாம்பியனாகும் என்று. அது போலவே நடந்தது.

ஆனால் ட்ரினிடாட் & டொபாகோ அணி இறுதி வரை வரும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.



நியூ சவுத் வேல்ஸ் அணியைப் பொறுத்தவரை தேசிய அணியில் விளையாடும்,விளையாடிய ஒன்பது வீரர்களும்,இளமையும் அனுபவமும் அவர்களின் பெரும் பலமாக அமைந்தது.

எனினும் ட்ரினிடாட் & டொபாகோ அணியைப் பார்த்தோமானால் அணி ஒற்றுமையும் இளமைத் துடிப்பும்,பயமில்லா துணிகரமுமே இறுதிப் போட்டிவரை தோல்வியில்லாமல் பயணித்தமைக்கான காரணங்கள்.

ஆரம்ப கட்டப் போட்டிகள் விறுவிறுப்பை தராத போதும் அரை இறுதிகளையும் இறுதிப் போட்டியையும் நான் தவற விடவில்லை.

குறிப்பாக பிரெட் லீ மீண்டும் இளமை திரும்பியவராக தனித்து நின்று இறுதிப் போட்டியை வென்று காட்டி 'நானும் ஒரு சகலதுறை வீரர் தானுங்கோ' என்று காட்டியது simply superb.

இம்முறை சாம்பியன்ஸ் லீக்கில் ட்வென்டி ட்வென்டி போட்டிகளை தோற்றுவித்த இங்கிலாந்தின் இரு அணிகளுமே அரையிறுதி காணாமல் வெளியேறியதும், போட்டிகளை நடாத்திய இந்தியாவின் மூன்று அணிகளும் இரு சுற்றுக்களோடு பெட்டிப் பாம்புகளாக சுருண்டதும் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட.

முதல் சுற்றுக்களில் பெங்களுர் ரோயல் சல்லேன்ஜெர்ஸ் அணியின் ரொஸ் டெய்லரும், டெல்லி அணியின் சேவாக்கும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தும் அவ்விரு அணிகளுமே அரையிறுதியை எட்டிப் பார்க்கவில்லை.
தென் ஆபிரிக்காவின் J.P.டுமினி தான் அதிக ஓட்டங்கள் குவித்தவர்.

இவர்கள் தவிர அதிக ஓட்டங்கள் குவித்த முதல் பத்துப் பேரில் ஏனைய அனைவருமே சர்வதேசப் போட்டிகளில் புதியவர்கள் அல்லது எமக்குப் பெரியளவில் அறிமுகமில்லாதவர்களே.

இரண்டாவது,மூன்றாவது அதிக ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர்களான டேவிட் வோர்னர், பில் ஹியூஸ் ஆகியோரும் கூட ஒப்பீட்டளவில் சர்வதேச மட்டத்தில் புதியவர்களே.

பந்துவீச்சில் அதிக விக்கெட் எடுத்தவர் மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் ட்வெய்ன் பிராவோ..

கூடிய விக்கெட் எடுத்த முதல் பத்துப் பேரில் ஸ்டுவார்ட் கிளார்க், டேர்க் நன்னேஸ் (இவர் கூட கடந்த IPL மூலம் தான் வெளியுலகத்துக்கு தெரியவந்தார்), பிரெட் லீ தவிர ஏனைய அனைவருமே புதியவர்கள்/இளையவர்கள்.

சாம்பியன்ஸ் லீக்கை நடாத்தியவர்கள் தெரிவு செய்துள்ள நட்சத்திர அணியிலும் பலர் இளையவர்களே..

ACLT20 All Star XI
Hughes, Warner, Duminy, Taylor, Katich, Pollard, Ramdin, DJ Bravo, Henriques, Lee, McKay

எதிர்பார்த்த பிரபல வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை என்பது ஏமாற்றமே..
ஹெர்ஷல் கிப்ஸ், டேவிட் ஹசி, ஜஸ்டின் லங்கர், கௌதம் கம்பீர், டில்ஷான், மக்க்ரா, டிராவிட், மென்டிஸ், கும்ப்ளே, கில்க்ரிஸ்ட், சைமண்ட்ஸ், ரோகித் ஷர்மா என்று சொதப்பிய பிரபலங்களின் வரிசை பெரியது.

எனினும் யாரும் அறியாமல் வந்து அனைவரையும் யார்ரா இது என்று தேடச் செய்து செல்லும் இளைய வீரர்களின் வரிசையும் நீண்டதே.

இவர்களில் பலர் இன்னும் சிறிது காலத்தில் அடிக்கடி பேசப்படலாம்; புகழப்படலாம்;
அடுத்த ட்வென்டி ட்வென்டி உலகக் கிண்ணப்போட்டிகளில் தத்தம் தேசிய அணிகளுக்காக விளையாடலாம்.

அந்த இளைய புதிய நட்சத்திரங்கள் சிலரை அறிமுகப் படுத்துவதே இந்தப் பதிவு.

சகலதுறை வீரராக தனது முத்திரையைப் பதித்த வின் கீரன் பொல்லார்ட் மேற்கிந்தியத் தீவுகளின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.
தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலமோ, துல்லியமான பந்துவீச்சின் மூலமோ ஒரு போட்டியை தனித்து வென்று கொடுக்கக் கூடியவர். நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக பந்துகளில் ஓட்டங்கள் பெற்று அதிர்ச்சி கொடுத்தது சான்று.IPL 2010இல் இவரை தமது அணியில் சேர்க்க இப்போதே பல அணிகள் துரத்துகின்றன.

கேப் கோப்ராஸ் அணியின் ஹென்றி டேவிட்ஸ்.. துடுப்பாட்ட பாணியில் கிப்ப்சை ஞாபகப்படுத்தும் டேவிட்ஸ் தகுந்த வாய்ப்பு ஒன்று தென் ஆபிரிக்க அணி மூலம் கிடைக்கும் பட்சத்தில் பட்டை கிளப்புவார் என்பது உறுதி.

கேப் கோப்ராஸ் அணியின் தலைவர் அன்றூ பட்டிக்.
நிதானமான ஒரு தலைவராகவும் போட்டிகளின் தன்மைக்கேற்ப அணிக்காக ஆடும் ஒருவராகத் தன்னை நிரூபித்த ஒருவர், தென் ஆபிரிக்க தேசிய அணிக்குள் நுழைய பல தடவை கதவுகளைத் தட்டியிருக்கிறார்.

எனினும் தென் ஆபிரிக்க அணியின் தலைவரான ஸ்மித்தும் இதே அணி என்பதே இவருக்கு பெரிய தடையான விஷயம்.
ஒரே உறைக்குள் இரு வாளா?

ட்ரினிடாட் டொபாகோ அணியின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான வில்லியம் பெர்கின்ஸ், அட்ரியன் பரத் ஆகியோர் தமது துணிகரத் துடுப்பாட்டம் மூலம் பலரையும் வியக்க வைத்தவர்கள்.

இவர்களுள் பரத் முன்னர் ப்ரயன் லாராவின் பாராட்டுக்கள்,வாழ்த்துக்களைப் பெற்றவர்.துடுப்பெடுத்தாடும் பொது பார்த்தால் லாரா வலது கையால் அடித்தாடுவது போலவே இருக்கும்.நேர்த்தி,நிதானம் என்பவற்றோடு அழகு,ஆற்றல்,அதிரடியும் கொண்ட துடுப்பாட்டம்.
வெகு விரைவில் மேற்கிந்தியத் தீவுகள் தேசிய அணியில் பரத் விளையாடுவார் என்பது உறுதி.

இந்த அணியின் மற்றுமொரு துடிப்பான வீரர் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஒரு சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள லெண்டில் சிம்மொன்ஸ்.
அதிரடி துடுப்பாட்டம், புத்தி சாதுரியமான மித வேகப் பந்துவீச்சு, மின்னல் வேகக் களத்தடுப்பு என்று அனைத்து திறமைகளும் சரியாகக் கலந்த ஒரு கலவை.இவரை சரியாகப் பராமரித்து கையாள வேண்டியது மேற்கிந்தியத் தீவுகளின் கடமை.

டயமன்ட் ஈகிள்ஸ் அணி அரையிறுதிக்கு வராவிட்டாலும் அந்த அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரீலி ரொஸ்ஸொவின் துடுப்பாட்டம் பலபேரையும் கவர்ந்தது.

வெகு விரைவில் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ரொஸ்ஸொ வாய்ப்புப் பெறவேண்டும் என்று கூறியிருக்கிறார் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அல்லன் டொனால்ட்.இதோ இன்னொரு அதிரடி வீரர் தயார்.

விக்டோரியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிளின்டன் மக்கே.
ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்கேற்ற நிதானமான பந்துவீச்சாளர்.அடுத்த IPLக்கு வாய்ப்புக்கள் இவர் கதவைத் தட்டும் எனத் தெரிகிறது.
இந்தத் தொடரில் பிராவோவுக்கு அடுத்தபடியாக கூடுதலான (10) விக்கட்டுக்கள் எடுத்த இருவரில் ஒருவர் மக்கே.

பத்து விக்கெட்டுக்கள் எடுத்த மற்றவரான மொய்சஸ் ஹென்ரிக்கேய்ஸ் முன்னாள் அவுஸ்திரேலியா வயதுக்குட்பட்ட அணியின் அணியின் தலைவர். தேசிய அணியிலும் ஒரு சில வாய்ப்புக்கள் பெற்றவர்.

இம்முறை சாம்பியன்ஸ் லீக்கில் தனது உச்சபட்ச சகலதுறைத் திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.நான் நினைத்தேன் இவருக்கே தொடரின் நாயகன் விருது கிடைக்கும் என்று.

ஆனால் எதிர்கால அவுஸ்திரேலியா அணிக்கு நம்பகமான ஒரு சகலதுறை வீரர் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு சகலதுறை வீரரான அன்றூ மக்டோனால்ட் அண்மைக் காலத்தில் அவுஸ்திரேலியா அணிக்கு தேர்வானவர்.நெருக்கடியான நேரங்களில் கட்டுப்பாடாக பந்துவீசியதொடு விக்கெட்டுக்களை சரித்தவர். துடுப்பாட்டத்திலும் சிக்சர்களை அனாயசமாக விளாசுகிறார்.

இதே போல விக்கெட்டுகளை வீழ்த்தியோரில் முன்னணி பெற்ற நேதன் ஹோரித்ஸ் இப்போது இந்திய மண்ணில் அவுஸ்திரேலியா அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.இன்று விளையாடிய முதல் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.


சமர்செட் அணியின் அல்போன்சோ தோமசும், விக்டோரியாவின் ஷேன் ஹார்வூடும் சர்வதேசப் போட்டிகளில் இனி அறிமுகம் பெறுவதற்கான வயதெல்லையைத் தாண்டி விட்டாலும் IPL போன்ற போட்டிகளில் இடம்பிடிக்கலாம்.

இந்தப் பதிவிலே நான் காட்டிய இளைய நட்சத்திரங்கள் நாளை மேலும் புகழ்பெறும் பட்சத்தில் நம்மளையும் கொஞ்சம் நினைச்சுக்கோங்க. ;)


Post a Comment

5Comments

Please Select Embedded Mode To show the Comment System.*