சூரியன் எப் எம்இல் நான் பணியாற்றிய போது நடந்த இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்!
இந்தக் குறிப்பிட்ட அறிவிப்பாளர் சூரியனின் பகுதிநேரமாகப் பணியாற்றி வந்தவர். இப்போது வெளிநாடொன்றில் இருக்கிறார். அடிக்கடி கூட்டமாக நாம் சேர்ந்து இவரைக் கலாய்த்து கும்மியடிப்போம். அந்த வேளையில் எதுவும் சொல்லாவிட்டாலும் பின்னர் தனியாக வந்து என்னிடம் ஏன் எல்லாரும் இப்பிடி என்னையே குறிவைக்கிறீங்கள்? 'நெஞ்சு நோவுது' என்று சீரியஸாகப் புலம்புவார் அதுவுமே கொமடியாக இருக்கும்!
இவரது பணி நேரமும் நள்ளிரவு முதல் காலை 6மணிவரை நேரமே!வாரத்தில் ஒருநாள் மட்டுமே வேலை இவருக்கு! எனினும் பற்றித் தெரிந்தால் 12மணிக்கு நிகழ்ச்சி செய்யும் நண்பர் இவருக்கு 6மணிவரை என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும் என்று மீள ஞாபகப்படுத்திவிட்டுத் தான் போவார். அப்படியிருந்தும் அடிக்கடி வெற்றிகரமாக சொதப்புவார் நம்ம ஹீரோ!
அதிலும் இவர் அடிக்கடி சொதப்புவது அதிகாலை 5.45அளவில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பி வந்த
அருணோதயம் என்ற பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தான்..
பாடல்கள் தேடிப் பிடித்து இவர் ஒலிபரப்பினாலும், விஷ்ணு கோவில் ஐயரின் குரலில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பி வந்த இன்றைய தினம் என்ற அன்றைய நாளின் சிறப்புகளை சொல்கிற பகுதியைத் தான் அடிக்கடி தின்று தள்ளி விடுவார்.
ஒன்றில் ஒலிபரப்ப மறந்துவிடுவார்;இல்லையேல்,திகதி மாறி ஒலிபரப்பி விடுவார். இதற்காக அடிக்கடி என்னிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.
புதன்கிழமையாக இருக்கும்;ஆனால் செவ்வாய்க்கிழமை பற்றி ஐயர் சொல்லிக் கொண்டிருப்பார்.
இதே போல ஒரு நாள் இவர் வழமைபோல சனிக்கிழமை அதிகாலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார்..இன்றைய தினம் பகுதி ஆரம்பிக்கிறது..
"வணக்கம்.இன்று வெள்ளிக்கிழமை........" என்று ஐயர் சொல்லிக் கொண்டு போக,நம்ம ஹீரோ இடையில் குறுக்கிட்டு,"ஐயா,இன்று சனிக்கிழமை..நீங்கள் தவறாக வெள்ளி என்கிறீர்கள்" என்று சமாளித்தார்..
எல்லாவற்றிலும் பெரிய நகைச்சுவை,ஐயர் அந்தப் பகுதியை முடிக்கும்போதும்,இன்று வெள்ளிக் கிழமை என்று முடிக்க, "என்னைய்யா மறுபடி பிழை விடுறீங்களே"என்று நம்மவர் திருத்தியது தான்..
இந்த சம்பவத்துக்குப் பிறகு சனிக்கிழமைகளில் மட்டும் ஐயர் நேரடியாகவே தொலைபேசியில் 'இன்றையதினம்' சொல்ல ஆரம்பித்தது வேறுகதை.