ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வந்த நேரம் எல்லா ஊடகங்களும் கேலி பேசிய,குறி வைத்த ஒருவர் ஆஸ்திரேலியா அணியின் தலைவர் பொன்டிங்.காரணம் அவர் பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்திருந்தாலும் கூட,இந்தியாவிலே அவரது ஓட்டங்களும்,சராசரியும் படு மோசம்.(14இன்னிங்சில் 12.28என்ற சராசரியில் வெறுமனே 172 ஓட்டங்கள்.ஒரே ஒரு அரைச் சதம்.)
அத்துடன் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் பொண்டிங்கை எட்டுத் தடவைகள் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.அணியில் வேறு சிரேஷ்ட நட்சத்திரங்கள் இல்லை;பொன்டிங் கூட காயம் அடைந்திருந்து மீண்டும் அணிக்குள் இப்போது தான் திரும்பி இருக்கிறார்.
இப்படி ஏகப்பட்ட அழுத்தங்கள்..
ஆனால் ஊடகவியலாளர் சந்திப்பில் பொன்டிங்,மிகுந்த தன்னம்பிக்கையோடு சொன்னார்.
"உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணி என்ற பெயரோடு வந்திருக்கிறோம்.அதே பெயரோடே செல்ல விரும்புகிறோம்.இந்திய மண்ணில் நான் இதுவரைக்கும் சதம் அடிக்கவில்லை;என்னுடைய பெறுபேறுகளும் மோசமாகவே இருக்கின்றன.இம்முறை அந்தக் குறைகளையும் நீக்கிக் கொண்டே செல்ல விரும்புகிறேன்."
நேற்று நாணய சுழற்சியில் வென்றது பொண்டிங்கின் முதலாவது அதிர்ஷ்டம்.எனினும் மூன்றாவது பந்திலேயே ஹெய்டன் ஆட்டமிழக்க,ஆஸ்திரேலியா இந்தியாவிடம் மடங்கப் போகிறதா என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருக்க,ஆடுகளம் புகுந்தார் பொன்டிங்.நிதானமாக ஆரம்பித்து,ஒவ்வொரு பந்தாக தடுத்தாடி,அடித்தாடி தன்னை ஸ்திரப்படுத்தி,அணியின் நிலையையும் உறுதி ஆக்குகிறார்.ஒரு தலைவருக்கே உரிய கம்பீரம்,நம்பிக்கை,உறுதி,ஒரு போராட்ட வீரனுக்குரிய ஆவேசத்தோடு ஆடி நேற்று பொன்டிங் பெற்ற சதம் அவரது 36ஆவது டெஸ்ட் சதம்.(சச்சினின் சாதனையை நெருங்கி வருகிறார்- சச்சின் டெண்டுல்கர் பெற்றிருப்பது சதங்கள் )
நேற்றைய சதம் இந்திய மண்ணில் அவர் பெற்ற முதல் டெஸ்ட் சதம்.
இந்த சதம் அணித் தலைவராக அவர் பெற்ற 16ஆவது சதம்.இதுவரை அணித்தலைவராக இருந்து கூடுதலான சதங்கள் பெற்றவர்கள் மற்றும் இரு ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் வோ,அலன் போர்டர் ஆகியோரே.(15 சதங்கள்)
ஆனால் ஒன்று, நேற்று பொன்டிங் 123 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தது மீண்டும் அவரது எதிரி ஹர்பஜனின் பந்துவீச்சில் தான்..இது ஒன்பதாவது தடவை.(பொண்டிங்கின் விக்கெட்டை யாரும் அதிகமாகக் கைப்பற்றியதில்லை)
2001இல் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா வந்தபோது,ஐந்து தடவைகளுமே ஹர்பஜனின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்திருந்தார்.(5 இன்னிங்சிலும் பெற்றது மொத்தமாக 17 ஓட்டங்கள் மட்டுமே)
ஆனால் நேற்று ஆட்டமிழக்க முதல் ஹர்பஜன் பொண்டிங்குக்கு வீசிய 46 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பொன்டிங் பெற்றிருந்தார்.
சொன்னதை செய்திருக்கிறார் பொன்டிங்..சதம் அடித்ததோடு ஆஸ்திரேலியா அணியை இன்றுவரை (இரண்டாவது நாள்) முன்னணியில் வைத்திருக்கிறார்.கடந்த முறை (2004) நடந்தது போல் இம்முறையும் தொடர் வெற்றி ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தால் அதன் முழுப் பெருமையும் பொன்டிங்குக்கே..